சுஷீல்குமார் பற்றி…

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

1

ஒழுகினசேரி பாலர் பள்ளியைத் தொட்டுள்ள வீட்டில் என் சித்தி ஒரு இரண்டு மாதம் வாடகைக்கு இருந்தார். பாலர் பள்ளியினுள் மேலாங்கோட்டு நீலி,  வங்காரமாடன்,  ஈனாப்பேச்சி யின் புடைப்புகள் வழிபாட்டிற்குண்டு. பாலர் பள்ளி பொழிந்து அவர்களின் வழிபாடும் முற்றிலுமாக நின்று விட்டிருந்த சமயம். அங்கு சிதல் வளர்ந்து இடிபாடுகளுக்கிடையில் அத்தெய்வங்கள் அமைதியற்றுக் கிடந்திருக்கக் கூடும்.

வீடு மாறியதிலிருந்தே சித்திக்கு உறக்கமில்லை.  சித்தப்பா கட்டிங் விட்டுக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பார். எப்பொழுதும் கூந்தல் கருகும் நெடி,  ஆள் அணக்கம் சலசலக்கும் காலடி சப்தங்கள். பூனை ஒன்று சித்தியின் கை விரலைக் கடித்தது. இரவில் பெருச்சாளி கால் பெருவிரலைப் பறண்டியது. அவள் ஒன்றும் புரியாமல் வெறிக்க வெறிக்க இரவைக் கடப்பாள். ஒரு மாதம் இப்படியே சென்றது. வள்ளியமாடத்து இசக்கியின் தாயத்தைக் கட்டினாள். விடுமாடனுக்கு சிறப்பு செய்தாள். எதுவும் மாறாது தினமும் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மாறுவது வரை அவளால் உறங்கியிருக்க முடியவில்லை. ஏன்? எதற்காக இத்தெய்வங்கள் இவ்வளவு வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உக்கிரத்தின் அருளையே அவை நமக்கு வழங்குகின்றனவா எனும் கேள்வி அப்படியே தொக்கி நின்றது.

சுசீலின் மரம்போல்வர்,  சுவர்மாடன்,  பச்சைப்பட்டு கதைகளின் வழியே அவர் அத்தெய்வங்களிடம் மல்லுக்கு நிற்கும் இல்லையேல் மண்டியிடும் தருணங்களைக் காண்கிறேன். அருள் தரும் தெய்வங்களே சமருக்கும் நிற்கிறது. அங்கே உருவாகும் பதைபதைப்பை கதையாக்குகிறார். அதற்கான தீர்வுகளை சடங்குகள் மூலம் சரி செய்ய முயல்கையில் அது அதற்கப்பால் வெறித்து நிற்கிறது. எளிய உயிர்கள் மறுதலிக்கவே முடியாத அதன் எல்லைக்குள் விட்டில்கள் போல துடிதுடிக்கின்றன.

2

படைப்பு மனம் அதன் பிளற்வு அது சந்துக்கும் புள்ளிகள்,  பிரியும் புள்ளிகளை மையமாகக் கொண்ட கதைகள் மூங்கில், நங்கையின் நாராயணன்,  சிலை கதைகளை சொல்லலாம்.

பித்தின் உக்கிரத்தில் நாம் உருவாக்கிய படைப்புடன் நாம் பிணைந்து கொள்வது. அதிலிருந்து வெளி வர வழி தெரியாமை,  வெளி வர விரும்பாமை மூலமாய் அதை தன்னுடைய சந்ததிக்கும் பரப்புதல். ஒரு புறம் அதன் வன்மம் மறுபுறம் அதன் தீர்க்கமும் சாந்தமும். அதே  நேரம் அது பிரியும் தளங்கள்,  அது கை வரப்பெறாமையின் ஆற்றாமை. அதைப் பிடித்து வைக்க முடியாத ஏக்கத்தின் கோபம் நம்மைப் பிறழ்க்கிறது நம்மை சார்ந்தவர்களை முற்றிலுமாக மறுதலிக்கிறது சபிக்கிறது விரட்டுகிறது. அதிலிருந்து மீள விரும்பாமையும் தான். அது மேலும் மேலும் ஒரு சுழல் போல ஆகிறது. அது தன் மேலான படைப்புகளின் வழி, இல்லையேல் நமக்கு கிட்டாத இன்னும் முழுமையடையாத,  முழுமையடைய முடியாத ஒன்றிடம் முற்றிலுமாக தாழிட்டுக் கொள்கிறது. அதிலிருந்து வெளி வர முயலும் அனைத்தையும் அடைக்கிறது. சொந்த உடலை அரிந்து திங்கும் மிருகம் போல அதை உணர்கிறேன். சிலை  கதையிலும் மாதவன்குட்டி தன் அப்பாவை உணரும் தருணம் அதுதான் என்று நினைக்கிறேன்.

3

ஸ்ரீஇந்திரம் எனும் கோவிலும் அதன் தொன்மமும் அதை சுற்றி நிகழும் கதைகளும். முழுக்க முழுக்க கோவிலின் கதை மாந்தர்கள், திருவிழாக்கள் வழி உருவாகும் புனைவும் அவதானிப்பும். தோடுடையாள் தேவதாசிகளின் கதை மூலம் உமையம்மை தன் சந்ததிக்கு கடத்த  முயலும் அதே கலை வேறுவிதமாய். கலை, படைப்பு,  படைப்பு மனம்,  அது நழுவும் காலம்,  அதன் கைவரப்பெறாமை அங்கிருந்து காலம் நகர்ந்து தன் பிள்ளையிடம் அதைக் கடத்தி விட முயலும் திண்மம் என்பதே அடிப்படை உசாவல்களாக இருக்கிறது.

4

லட்சிய ஆசிரியரை உருவாக்கும் ஏக்கம். அந்த தேடலில் காமம் எனும் அடிப்படை உணர்வின் அலைக்கழிதல்  ஒருபுறம் மறுபுறம் சிறார்களின் மீதான பாலியல் வன்முறை. ஒரு ஆசிரியன் அங்கு எந்த இடத்தில் வைக்கப்படுகிறான். அந்த லட்சிய ஆசிரியனின் பிறழ்வும்,  அங்கிருந்து மேலெழும்ப முடியாத அந்த தடைப்பட்ட மனமும் அதன் சமூகக் கேள்விகள். சமூகப் பார்வையிலிருந்து தனிமனிதனிற்குள்ளும்,  தனிமனிதனிலிருந்து சமூகத்திற்குள்ளும் என்று அலையாடுகிறது. இதெற்கெல்லாம் அப்பால் குழந்தைமையின் கண்களில் எல்லாம் தலைகீழாக்கப்படுவதையும் காண்கிறேன்.

முக்கியமாக நாஞ்சில் எழுத்தாளர்களுக்கு இரு பண்பாட்டுத்தன்மையின் அனுகூலம். ஏற்கனவே நம்முடைய முன்னோடிகளால் ஸ்திரமாக்கப்பட்ட வட்டார வழக்கும்,  அதன் மாந்தர்களும். அபரிவிதமான மொழியாடலும் கிடைக்கிறது. ஆனால் அதிலிருந்து மேலெழும்,  கடக்கும் இல்லையேல் அதனினுள் கரையும் வாய்ப்புகள் உள்ளன.

விதை கதையில் வரும் தாத்தாவை நான் நிஜமாகவே பார்த்திருக்கிறேன். ஆனால் நாஞ்சிலில் இல்லை. கொள்ளிடத்தில். அதில் இருக்கும் பொதுத்தன்மையின் மூலம் நாம் இணைகிறோம். புனைவு ஒரு சொந்த அனுபவமாகிறது. எங்கெல்லாம் புனைவின் வழி நம் வாழ்க்கையின் கதையாடல்கள் நம்முடையதாகிறது  எனும் புள்ளிகளையே தேடினேன்.

முக்கியமாக அப்பா கதாபாத்திரங்கள் ஒரே நேரம் கனிவும் குழைவும் பின் கோபமும் வன்மமும் பிறழ்வும் கொண்டு நிற்பதை. அவர்கள் வேறு யாருமல்ல சுவர் ஓட்டை வழி நம்மை சதா வெறித்துக் கொண்டே இருக்கும் அதே சுவர்மாடன்கள் தான்  போல.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார் 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 45
அடுத்த கட்டுரைசின்ன வீரபத்ருடு கவிதைகள்-1