விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

அன்புள்ள ஜெ,

தற்போதய தெலுங்கு கவிதைகள் என்றாலே ஓங்கி ஒலிக்கும் பெயர்கள் இரண்டு… ஆந்திரத்தில் பாப்பினேனி சிவசங்கர், தெலுங்கானாவில் சிவாரெட்டி. இருவரும் கவிதைத் தொகுப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றவர்கள்… பேராசியர்களாக ஒய்வு பெற்றவர்கள். கவிஞர்களாகவும் பெரும் புகழ்வாய்ந்தர்வர்கள்.

இருவரையும் ஆழமாக படித்தவன் அல்ல நான். ஆனால், படித்த சிலவற்றில் சிவசங்கரில் எனக்கு மூளை விளையாட்டுதான் மேலோங்கி தெரிந்தது… ஒரு மேதா விலாசம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சிவாரெட்டி தெலுங்கானா முற்போக்கு கவிஞர்களில் ஒருவர். இப்பொழுது அந்த பிரச்சார நெடி இல்லைதான்… என்றாலும் அவரின் புகழுக்கு தக்கவாறு எனக்கு அவைகள் படவில்லை. சரி… இவர்களின் கவிதைகள் எல்லாமே மேற்படி நான் முத்திரையிட்ட படிதான் இருக்குமா என்றால்… இல்லைதான்.  அவைகளையும் தாண்டி, எனக்கு சின்ன வீரபத்ருடு கவிதைகள்தான் நெருக்கமாக இருக்கின்றன.

என்னால் அதை சரியாக விளக்கமுடியுமா என்று தெரியவில்லை. கவிதையாக்கம் மிக மென்மையாக இருக்கும். அதில் சொல்லும் சந்தர்பங்களும் மிகவும் சாதாரணமானவை தான். ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கும் சந்தம் இருக்காது.ஆனாள், கவிதயினுள் ஒரு அடர்த்தி, செறிவு, ஆழம் நம்மை படித்த பிறகு பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். தமிழில் பிரமிள், தேவதச்சன், ஞானக்கூத்தனின் வரிசையில் வைக்கலாம என்று படுகிறது.

தெலுங்கில் 1980 களின் நடுவில் இயக்கம் அல்லாத இயக்கம் ஒன்று தொடங்கியது. ஓங்கி சொல்லாதே, குறைவாக பேசி நிறைய அர்த்தம் பதிய வை, வாசகர்களுக்கு ஒரு தேடுதலை அளி… இதுதான் அவர்களின் அறிவிக்காத பிரகடனம். 1940-களில் ஸ்ரீ ஸ்ரீ தொடங்கிவைத்த புரட்சி கவிதைகளுக்கும், கிருஷ்ண சாஸ்திரியின் ‘ஃபாவ’ கவிதைகளுக்கும், 1980ல் ஒரு பெரும் வெடிப்பாக வந்த ‘திகம்பர’ கவிதைகளுக்கும் மாற்றாக தங்களை இவர்கள் முன்வைத்தார்கள். இஸ்மாயில் இதனுடைய தொடக்கம். அஜந்தா, எல்லோரா அவர்களை தொடர்ந்தவர்கள். பைராகி… இவர்களில் உச்சம்.

பைராகி மீது பெரும் பித்துக்கொண்டவர் சின்ன வீரபத்ரூடு. அவரின் கவிதைகளும் அந்த வரிசையை சார்ந்தவையே. இது என்னுடைய ஊகமாகவும் இருக்கலாம். முழக்க என்னுடைய ரசனை சார்ந்தது என்பதால்… ஒரு குறையாகவும் கருதலாம். ஆனால், இந்த ரசனை உங்களுடனான இந்த பத்து வருடகால பயணத்தில் உருவானது. உங்களின் கருத்துக்களால் செறிவூட்டப்பட்டது. அதனின் தெரிவு அவ்வளவு மேம்போக்காக இருக்காது என்றே நினைக்கிறேன்.

கவிதைகள்போக, வீரபத்ருடு மிகச்சிறந்த விமர்சகர். மேற்கு, கிழக்கு நாடுகளின் தத்துவங்கள், இலக்கியங்களில் ரசனை அடிப்படையில் ஆழ்ந்த அறிவுக்கொண்டவர். அதுதான், சங்கத் தமிழ் இலக்கியத்துக்கு அவரை இழுத்து வந்ததென்று சொல்லலாம். ஒரு விமர்சகராக உங்களுக்கு பக்கத்தில் வைப்பேன் அவரை நான். இருவரின் கருத்துக்களும் ஒன்று கலந்த சந்தர்பன்களை பார்த்து ஒரு வாசகனாக எத்தனையோ முறை வியந்துள்ளேன். முக்கியமாக ‘எது நாவல்?’ என்ற கருதுகோள் இருவருக்கும் ஒன்றுதான். அதன் அடிப்படையில் 1986ல் வந்த ‘அனுக்ஷணிகம்'(vaddera chandidoss எழுதியது) தான் தெலுங்கில் வந்த கடைசி நாவல் என்று பத்ருடு சொல்வார். அதற்க்கு பிறகு நாவலே வரவில்லையாம்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘நீலா’ என்ற பெரிய நாவலுக்கு இவர் முன்னுரை எழுதுகையில்… ‘ஒரு நல்ல நாவலுக்கான பாதையில் ஒரு சிறந்த முயற்சி என்றுதான் சொல்லவேண்டும்’ என்றார். இத்தனைக்கும் அது அவார்டெல்லாம் வாங்கிய நாவல்!
சரி… நீங்கள் ஒரு ‘விஷ்ணுபுரம்’ அளித்து ‘நாவல் என்றால் என்ன?’ என்று நிரூபித்த மாதிரி இவரும் ஒன்று எழுதலாமே என்றுதான் எனக்கு கேள்வி எழும். பத்ருடுவின் பிரச்சினையே இதுதான்…

அவரின் பணி ஒரு நல்ல நாவலுக்கான உழைப்பை கொடுக்க வாய்ப்பு அளிக்காது என்றே சொல்லவேண்டும். தற்போது அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஆந்திர மாநிலத்தின் கல்வி துறை கமிஷனர். இதுவரையில், விசாகப்பட்டினம் மலைக்காடுகளில் உள்ள மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கு இயற்றியவர். ஸ்ரீ சைலம் நல்லமலை பகுதிகளில் ஆட்சிசெய்யும் ITDA யின் பிரதான அதிகாரியாக தன் பணிகளுக்காக புகழ் பெற்றவர்.  தன் களப்பணிகளை பற்றி  அவர் எழுதிய ‘கொன்னி கலலு… கொன்னி மெலக்குவலு'(சில கனவுகளும்… சில மெய்ப்புகளும்) என்ற புத்தகம் பிரபலமானது. இத்தனை இருந்தும்,  இந்த பணிகள் எல்லாம்… தன்னுடைய பிழைப்புக்காக மட்டும்தான்  என்பார். தன் ஆன்மா இலக்கியத்துக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது என்பார். இலக்கியத்தில் தனது அதிகாரத்தை நுழையவிடாத  மிகச்சிலரில் ஒருவர்.

அதுமட்டுமல்ல, அவரும் காந்தியத்தின் மேல்… லட்சியவாதத்தின் மேல் பெரும் பற்று உள்ளவர். இன்றைய காந்தி போல் தலை  சிறந்த புத்தகத்தை எழுதவில்லை என்றாலும்… தன் கண்ணில் பட்ட காந்தியர்களை கட்டுரைகளில் எழுதிக்கொண்டே இருப்பார். ‘காந்தி இல்லை, இனி யார் நமக்கு’ என்ற புகழ் பெற்ற ஹிந்தி புத்தகத்தை மொழிபெயர்த்தார். காந்தியின் மகன் ஹரிலால் பற்றிய சந்துலால் பாகுபாயின் மராத்திய புத்தகமும் கொண்டு வந்தார். கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் மொழிபெயர்ப்பு தான் பத்ருடுவை மாணவர்களின் மத்தியில் அறியவைத்தது. இந்த மொழியாக்கத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

அவரை பற்றி மேலும் எழுதுகிறேன்

ராஜு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
அடுத்த கட்டுரைதெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்