தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

கந்துகூரி வீரேசலிங்கம் பந்தலு

பொதுவாக நம்பப்படுவது போல் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆக்கிரமிப்பானது இந்தியாவுக்கு தணிக்கவியலாத பேரழிவு என்று சொல்லிவிட முடியாது. உலகின் சாளரத்தை நோக்கி இந்தியாவை அது முடுக்கிவிட்டது எனலாம். ஐரோப்பிய நிலத்தினின்று உதிர்த்த சிந்தனைகளும், படைப்பாக்கமும் புத்தம்புது தென்றலாய் இந்திய நிலத்தை கமழச்செய்தது. அது இந்தியாவில் ஒட்டடையாகப் படிந்திருந்த மரபையும் பழமையான சிந்தனை முறைகளையும் துடைத்தெடுத்தது.

ஆங்கில இலக்கியத்தின் அறிமுகம், குறிப்பாக ஷேக்ஸ்பியர் மற்றும் கற்பனாவாதக் கவிஞர்களின் அறிமுகமானது சமூகத்தில் தனிமனிதனின் முதன்மைத்துவம், சுதந்திரம் போன்ற கருத்துருக்களை நம் இள உள்ளங்களில் விதைத்தது. இது இந்திய அறிவியக்கச் சிந்தனையில் புரட்சியை ஏற்படுத்தியது. சமயம் மற்றும் சமூக சீர்திருத்தத் துறையிலும், கற்பனாவாதக் கவிதை மற்றும் நாவலின் மலர்ச்சியிலும் ஒரே நேரத்தில் அது வெளிப்பட்டது. வங்கம் புனைவியக்கத்தின் முன்னோடியாக அமைந்தது. அதன் முதன்மை வழிகாட்டிகளாக ராஜா ராம் மோகன் ராய், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ரவீந்திர நாத் தாகூர் அமைந்து முன்னெடுத்துச் சென்றனர்.

கிருஷ்ண சாஸ்திரி

ஆந்திராவில் இந்திய புனைவியக்கத்தின் சீர்திருத்த அம்சம் வீரேசலிங்கம் பந்துலுவால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதே சமயம் படைப்பாற்றல் அம்சம் குரசாடா அப்பாராவால் அற்புதமாக வார்த்தெடுக்கப்பட்டது. அவர் தெலுங்கு கவிதையின் செவ்வியல் வடிவத்திற்கு எதிராக வினையாற்றினார். கவிதையின் அடிப்படைக் கருப்பொருள் மற்றும் மொழி நடைகளில் மாற்றங்களைக் கொணர்ந்தார்.

தெலுங்கு செவ்வியல் கிரந்த  அகராதியானது, அன்றாட புழக்க மொழிக்கு ஏற்றாற் போல இலகுவாக்கப்பட்டது. இறுக்கமான செவ்வியல் அளவைகள் மெல்லிய புழக்கத்திற்கேற்ற நாட்டுப்புற ஒலியியலாக/ரிதம்களாக மாற்றப்பட்டன. அதிகாலையின் புதுப்பனியைப்போல அவர் தேர்ந்தெடுத்த மொழியின் அடிப்படைக் கருப்பொருள் புதுமையாக அமைந்தது. இவ்வாறு தெலுங்கின் அடுத்தடுத்த தலைமுறை கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டினார்.

குரஜாடா அப்பாராவ்

தெலுங்கு ரொமாண்டிசஸித்தில் தன் உட்பொதிந்த நுண்மையாலும் மெய்யான வேட்கையாலும் கிருஷ்ண சாஸ்திரி (கிருஷ்ண பக்ஷம்) தனித்து நிற்கிறார். அவருடைய அந்த நுண்மை கலையிலும் வாழ்க்கையிலும் ஊடுருவி அவை இரண்டிற்குமிடையேயுள்ள எல்லையை அழித்து நெருங்கச் செய்கிறது. அவருக்கு கவிதை என்பது வாழ்வின் ஒரு முக்கிய அனுபவமாக இருந்தது. அது மேலும் அவரின் வாழ்க்கையை  தீவிரமாக்கியது.

அவரது ஊர்வசி (1928) என்பது இலட்சிய காதலிக்கான தேடலாகும். கடைசியாக அவர் தனது படைப்பாற்றலில் அவளைக் கண்டு கொண்டார்.  காதல் மற்றும் வேட்கை, பிரிவாற்றல் மற்றும் ஒன்றுதல், வலி ​​மற்றும் இன்பம் போன்ற வாழ்க்கையின் முரண்பாடுகளை அவள் அவருக்காக இணங்கச் செய்தாள்.

ராயப்ரோலு சுப்பாராவ்

தெலுங்கு கற்பனாவாதம் ‘பெட்ராச்சன் சொனெட்’ (Petrarchan kind) வகையிலான எய்தாக் காதலைக் கொண்டாடியது.  அவர்களைப் பொறுத்தவரை அன்புக்குரிய காதலி என்பவள் என்றென்றும் அடைய முடியாத ஒரு கனவு-உருவம். தூரத்திலிருந்து மட்டுமே வணங்கப்பட வேண்டியவள்.  குறிப்பிடத்தக்க தெலுங்கு காதல் கவிஞர்களில் ராயப்ரோலு சுப்பாராவ், அப்பூரி ராமகிருஷ்ணராவ், நந்தூரி சுப்பாராவ், வெதுலா சத்தியநாராயண சாஸ்திரி மற்றும் நயனி சுப்பாராவ் ஆகியோர் அடங்குவர்.

நயனி சுப்பாராவ்

1930களில் காதல் கவிதைகளுக்கு எதிராக தவிர்க்க முடியாத எதிர்வினை ஏற்பட்டது.  அதன் முன்னணித் தலைமையாக ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் (ஸ்ரீ ஸ்ரீ) என்ற ஆளுமை இருந்தார்.  ஒரு கலை அதன் உச்சத்தை எட்டியவுடன், அது நலிவடைந்து, படைப்பாற்றலுக்கு இடையூறு விளைவிக்கும். ஸ்ரீ ஸ்ரீ கற்பனாவாதப் பாணியில் முதலில் எழுதத் தொடங்கினார். ஆனால்  இந்த முன்னைய முறையைப் பின்பற்றுவது இப்போது அவர் சொல்ல வேண்டியதற்குப் போதுமானதாக இல்லை என்பதை விரைவில் உணர்ந்தார். ஏனெனில் முன்னையவர்களின் படைப்பாக்க அனுபங்களும், லட்சியங்களும் தன்னுடைய அனுபவங்களினின்று வேறொன்றாய் இருந்தது. எனவே அவருடைய கவிதையின் ஒட்டுமொத்த வரையறை/இலக்கணத்தை மாற்றினால் தான் தன் உள மற்றும் சமூக அனுபவத்தை கவிதைகளில் கொணர முடியும் என நினைத்தார்.

ஸ்ரீஸ்ரீ,

அவர் மீமெய்யியல் மற்றும் பொதுவுடைமை ஆகிய இரண்டாலும் அதிகம் ஈர்க்கப்பட்டார். மீமெய்யியல் முறையில் சில சோதனைகளைச் செய்து பார்த்த பிறகு, அதைக் அப்படியே கைவிட்டு, கம்யூனிச இயக்கத்தின் சேவையில் தனது படைப்புத் திறனை அர்ப்பணித்தார். அவரது சிறந்த படைப்புகள் 30 கள் மற்றும் 40 களில் எழுதப்பட்டவை. அதன் பிறகு அவரது அரசியல் பிரவேசம் கவிதை புனையும் திறனை மழுங்காகவைத்தது. அவரது சிறந்த கவிதைகளைக் கொண்ட அவரது மகா பிரஸ்தானம் 1948 இல் வெளியிடப்பட்டது.அதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கவிஞரான நாராயண பாபு.மீமெய்யியலால் திறந்துவிடப்பட்ட கட்டற்ற கற்பனையை அற்புதமாகப் பயன்படுத்தினார்.

1950கள் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உச்ச அலையைக் கண்டது. கம்யூனிச சித்தாந்தத்தை மொழியும் கவிஞர்களை அது உருவாக்கியது. அவர்கள் ‘முற்போக்கு எழுத்தாளர்கள்’ என்ற பெயரிலும் பாணியிலும் ஒன்றிணைந்து, ஸ்ரீஸ்ரீ பயன்படுத்திய சாயல்களைக் கொண்டு நீர்த்துப்போன, சலித்துப்போன கவிதைகளை எழுதினர். இந்த கவிதைக் கொள்கைகளை வெற்றிகரமாக இந்த மண்ணின் அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ள வைத்தனர். அது இரண்டு தசாப்தங்களாக, 50 மற்றும் 60 களில், ஆந்திர மண்ணில் மதிக்கத்தக்க எந்த கவிதையும் முளைக்காத நிலைக்கு ஆளாக்கியது.

நக்னமுனி

இவற்றை எதிர்ப்பதற்கான நேரம் கனிந்தது. இருப்பினும் வன்முறையும் வெறித்தனமுமே அதைத் தொடர்ந்து எழுந்து கவிதையை முடக்கியது. அவர்கள் தங்களை திகம்பர கவிகள் என அழைத்தனர். அது ஓர் இயக்கமாக இருந்தது. திகம்பரக் கவிஞர்களின் நோக்கம்,  தங்கள் வாசகர்களை அவர்களின் சமூக அக்கறையின்மை மற்றும் தனிப்பட்ட சீரழிவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டும்பொருட்டு அவர்களை தாக்கி அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும். இதற்காக மிகவும் வன்மமான மற்றும் பழிக்கும் மொழியை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் தங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றி அடைந்தார்கள் என்றும் கூறலாம்.

மஹாஸ்வப்னா

அவர்களின் கவிதை என்பது ஒரு விரிவான மேடைநிகழ்ச்சியின் ஒரு பகுதி அல்லது நிகழ்வுகளின் பகுதியாக அமைந்தது. எல்லாவிதமான விளம்பர உத்திகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் பயன்படுத்தினர். உதாரணமாக ரிக்ஷா இழுப்பவரைக்கொண்டு தங்கள் கவிதைப் புத்தகத்தை வெளியிடுவது போன்ற நாடகீயத்தனங்கள். ஆறு திகம்பர கவிஞர்களில் மஹாஸ்வப்னா மற்றும் நக்னமுனி ஆகிய இருவர் மட்டுமே அவர்களின் படைப்பு பங்களிப்புக்காக தனித்து நிற்கிறார்கள்.

விஸ்வநாத சத்யநாராயணா

முக்கிய நீரோட்டத்தில் இல்லாத சில கவிஞர்களை இங்கே குறிப்பிட வேண்டும்.  “விஸ்வநாத சத்யநாராயணா”, தனது ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் பாதையில் பயணித்தாலும், சுபாவத்தால்  அப்படிப்பட்டவர் அல்ல.  அவர் ஒரு செவ்வியல்வாதி. அவரின் புலமை மற்றும் கலைத்திறன் மூலம் ஒரு பெரிய வாசகர்வட்டத்தை ஈர்த்தார்.

“ஆருத்ரா” தனது முந்தைய கவிதைகளில் (“பைலா பச்சிசு”) ஒரு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ஆனால் பின்னர் அவரது திறமைகள் வரலாற்று புலமையின் மந்தமான மணலில் திசைதிருப்பப்பட்டன.  மற்றொரு குறிப்பிடத்தக்க கவிஞர் பைராகி, அவரது கவிதைகள் இருத்தலியல் சார்ந்த மன உலைச்சலை வெளிப்படுத்தின.

ஆருத்ரா

இலக்கியத் துறையில் முத்திரை பதித்த இரு சிறந்த கவிஞர்களை இங்கு குறிப்பிட வேண்டும்.  “பாலகங்காதர திலகர்” ரொமான்டிக் மற்றும் சமூக அக்கறைக்கான மனப்பான்மை இரண்டையும் தன்னுள் பொதிந்து இலகுவான மற்றும் கட்டற்ற ஒழுக்கு கொண்ட வசனங்களை உருவாக்கினார். அது அவருக்கு பரந்துபட்ட வாசகப்பரப்பை உருவாக்கித் தந்தது. மற்றொரு கவிஞர் “அஜந்தா”. அவரின் கவிதைகள் இருத்தலியல் அபத்தத்தின் அயன்மையின்  கோர முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

நாராயண ரெட்டியும், தாசரதியும் கல்வித்துறை வட்டாரங்களில் புகழ்மிக்கவர்கள்.  செவ்வியலின் எளிமையையும், காதலுடன் அதன் நல்லிணக்கத்தையும் இணைத்த பெருமை அவர்களையே சாரும். இங்கே  குந்துருட்டி மற்றும் பாபு ரெட்டி ஆகியோரையும் குறிப்பிட வேண்டும், அவர்கள் இருவருமே திறமையான கவிஞர்கள். கட்டற்ற வசன இலக்கியத்தின் (verse libre) வெற்றி கண்டவர்கள் எனலாம்.

சிவசாகர்

 

60 களில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அது அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியது.  ஆழமான சாயல் கொண்டவர்கள் ஸ்ரீ ஸ்ரீ தலைமையில் இணைந்து ‘புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.  இருப்பினும், இது அவர்களின் வசனத்தின் தரத்தை மேம்படுத்தவில்லை, முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தியது அவர்களிடமிருந்தது கடுமையான தொனி மற்றும் வன்முறையை ஆதரிப்பது மட்டுமே.

இவர்களில் தனிச்சிறப்பு வாய்ந்த கவிஞர்கள் சிவா ரெட்டி மற்றும் சிவசாகர் மட்டுமே.  சிவாரெட்டி பாப்லோ நெருடாவால் பாதிக்கப்பட்டவர். அவரது கொதித்தெரியும் உணர்வுகளை வெளிப்படுத்த உயிர்ப்புள்ள கற்பனைகளைப் பயன்படுத்தினார்.  சிவசாகர் பிரபலமான நாட்டுப்புற முறைகளைப் பயன்படுத்தி மலைவாழ் மக்களைப் பற்றிய பாடல்களை இயற்றினர்.

ஸ்ரீகாந்த் சர்மா

மூன்று தசாப்தகாலமாக  மீண்டும் மீண்டும் வரும்  மூர்க்கமான மற்றும் அரசியல் கவிதைகளுக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்வினை நிறைவாக 60 களின் இறுதியில் வந்தது. அது அனுபூதி கவித்வம் அல்லது அனுபவக் கவிதை என்று முதலில் அழைக்கப்பட்டது.  ஸ்ரீகாந்த சர்மா, மோகன் பிரசாத் மற்றும் இஸ்மாயில் இந்த இயக்கத்தின் முன்னெடுப்பாளர்களாக இருந்தனர். இது ஒரு இயக்கம் அல்ல. மாறாக பலதரப்பட்ட வழிகளினின்று திரண்டெழுந்த இணையான முன்னேற்றம் எனலாம். அவர்களைப் பொறுத்தவரை, வார்த்தைகளுக்கும் அனுபவத்திற்கும் இடையேயான வெற்றிடத்தை இட்டு நிரப்பும் உணர்வும் அறிவுமே கவிதை என்பது.

மோகன் பிரசாத்

ஸ்ரீகாந்த சர்மா, சமஸ்கிருத மாணவர். அவர் நவீன உணர்வை கிளாசிக்கல் சமநிலையுடன் இணைத்தார்.  மோகன் பிரசாத் உலகின் பல வகையான தோற்றப் பதிவுகளுக்கு இலகுவான உணர்வுகளுடன்  எழுதினார். இருத்தலியல் மனச்சோர்வின் சாயல் அவரது கவிதைகளில் பரவுகிறது.  அவரது பிற்காலக் கவிதைகள்  சுயத்தை முன்னிலைப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும்,  ஆழ்மனதின் ஆழத்தில் பயணிப்பவையாகவும் அமைந்தன.

இஸ்மாயில் மிகவும் தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் பார்க்கும் விடயங்கள் மற்றும் அதன் அறிதல்கள், துன்பங்கள் மற்றும் பிரியங்கள்,  அதற்கான அவருடைய எதிர்வினைகள், உறவு சார்ந்த விடயங்கள், வாழ்வின் உச்சமான தருணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது அவரின் எழுத்துலகம். மனித அனுபவத்தின் சில உண்மைகளை விளக்குவதற்காக ஒரு கவிதையின் மையச் சித்திரமாக – ஒரு மரம், ஒரு பறவை அல்லது ஒரு மலர் – என அன்றாட இயற்கையின் சில பொருட்களை அவர் கையாள்கிறார்.

சேஷேந்திர சர்மா

70 களில் ஒரு முத்திரையை பதித்த மற்றொரு கவிஞர் சேஷேந்திர சர்மா. தான் கற்ற செவ்வியலில் நுண் திறன்களை உட்புகுத்தி அதில் புதிய குறியீடுகளைக் கண்டடைந்தார். அதன் மூலம் தான் கூற விரும்பிய சமூக உணர்வுகளைக் கடத்தினார்.

நவீன தெலுங்குக் கவிதை இலக்கியத்தில் இன்னொரு இழையைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். 20 மற்றும் 30 களில் விஸ்வநாத சத்தியநாராயணனால்  இந்து உணர்வு மற்றும் பாரம்பரியம் ஆகியவை வெற்றிகரமாக முன்வைக்கப்பட்டது. இது 70 மற்றும் 80 களில் இரண்டு திறமையான கவிஞர்களான சுப்ரசன்னசாய்ரா மற்றும் ஜனகநாதம் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துவரப் பெற்றது.

அஜந்தா

1980 களில் புது வெளிச்சம் கொண்டு மின்னலென கவிதையின் ஒரு புதிய வெள்ளம் வந்தது. அதன் அடிநாதமாக  மூன்று  விடயங்கள் திகழ்ந்தன.  ஒன்று ‘அஜந்தா’ வெளிப்படுத்தும் விரக்தி மற்றும் ஒழுங்கின்மை. இரண்டாவது மோகன் பிரசாத்தின் உள்ளியல்புத்தன்மை மற்றும் மனச்சோர்வு. மூன்றாவது உணர்வும் படிமமும் இணைந்து வார்த்தைகளுக்கும் அனுபவத்திற்கும் இடையிலான  இடைவெளியை இலகுவாக்கும் இஸ்மாயிலின் கவிதை.  ஒவ்வொரு கவிஞரின் படைப்பிலும் இந்த மூன்று இழைகள் வெவ்வேறு அளவுகளிலும் படலங்களிலும் பின்னிப்பிணைந்திருப்பதைக் காணலாம்.

பதஞ்சலி சாஸ்திரி

சில திறமையான இளம் கவிஞர்களை இங்கே பட்டியலிடலாம். ‘புன்னகை’ நம்மில் மெல்லுணர்வுகளையும் ஆச்சரியத்தையும் கலக்கவிடுகிறது. கோதாவரி சர்மா எழுச்சிமிகு வாழ்வைக் கொண்ட ஒரு திறமையான கலைஞர் ஆவார். ரவூப் மற்றும் சிகாமணி ஆகியோர் நேர்த்தியான புலனுணர்வு கொண்ட இரண்டு நம்பிக்கைக்குரிய கவிஞர்கள். வசிரா மற்றும் நசரா ரெட்டியும் அப்படித்தான்.  சின்ன வீரபத்ருதுவின் கவிதைகள் இருத்தலியல் மனஉளைச்சலை வெளிப்படுத்துகின்றன.

அஃப்சர்ஸ்ரீனிவாஸ்யாகூப் மற்றும் பென்னா ஆகியோர் ஏற்கனவே ஒரு முத்திரை பதித்துள்ளனர். இரண்டு நிர்மலாக்கள், கொண்டேபுடி மற்றும் கன்டாசாலா ஆகியோர் பெண்ணிய உணர்வைக் கொண்ட இரண்டு துடிப்பான கவிஞர்கள்.  நன்றாக வார்க்கப்பட்ட மற்றொரு கவிஞர் பதஞ்சலி சாஸ்திரி.  சந்தன் ராவ், கந்தலை, உதய் பாஸ்கர் மற்றும் குடிஹாலம் ஆகியோரிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்மாயில்

கம்யூனிசப் பிரச்சாரவாதிகளின் வலையத்திலிருந்து தப்பித்து கட்டற்ற சிந்தனைகள் மற்றும் கற்பனையின் புதிய வெளியை தெலுங்குக் கவிதைகள் வந்தடைந்திருப்பது உண்மையில் மகிழ்வளிக்கும் விடயம் ஆகும்.

நவம்பர் 1990

மொழியாக்கம் இரம்யா

Sixty Years of Telugu Poetry : A telugu retrospective

https://telugudiaries.blogspot.com/2012/04/great-telugu-poets-and-literature.html

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 45