விஷ்ணுபுரம் விழா, ஒரு கடிதம்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள், விஷ்ணுபுரம் விருது பற்றிய நினைவுகள் எல்லாமே சேர்ந்து ஒரு விழா மனநிலையை உருவாக்கிவிட்டன. நான் விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி கேள்விப்பட்டது 2010ல் .அதுதான் முதல் விழா என நினைக்கிறேன். அப்போது வெளிநாட்டில் இருந்தேன். அந்த விழாவைப் பற்றிய நையாண்டிகள், பழிப்புக் காட்டல்கள் இணையத்தில் நிறைந்திருந்தன. அதை நீங்கள் உங்களை முன்னிறுத்தும் பொருட்டு செய்கிறீர்கள் என்று சீனியர் எழுத்தாளர்களே எழுதினார்கள். பல சிறு எழுத்தாளர்கள் வசைகளை எழுதியிருந்தார்கள்.

அதையெல்லாம் வாசித்துவிட்டு 2010ல் நானே உங்களுக்கு ஒரு மோசமான கடிதம் எழுதியிருந்தேன். எனக்கே அன்று இலக்கியம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது. ஆனாலும் சீரிய இலக்கியம் மீது பெரிய ஆர்வம் கொண்டவனைப்போல எழுதியிருந்தேன். இலக்கியத்தை அழிக்கவேண்டாம் என்றெல்லாம் உங்களிடம் மன்றாடி அதை எழுதினேன். நீங்கள் ஒரு புன்னகை அடையாளம் மட்டும் பதிலுக்கு அனுப்பினீர்கள். எனக்கு அன்றைக்கு எரிச்சல். ஆனால் நான் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அன்றைக்கு இணையத்தில் நானும் நாலைந்து பதிவு எழுதினேன். இந்த விருதை தடுக்கவேண்டும் என்றெல்லாம் எழுதினேன்.

அதன்பிறகு இன்றைக்கு நான் நிறையவே வாசித்துவிட்டேன். வெண்முரசு முடிக்கும் நிலையில் இருக்கிறேன். இன்றைக்கு வாசிக்கும்போது ஒரு பெரிய வருத்தம் ஏற்படுகிறது. விஷ்ணுபுரம் விருது பற்றிய குறிப்புகளுடன் வரும் சுட்டிகளைப் பார்க்கும்போது எவ்வளவு பெரிய நிகழ்வு என்ற வியப்பு ஏற்படுகிறது. நான் இதைப்பற்றி ஒரு அமெரிக்க நண்பரிடம் பேசியபோது இப்படி ஓர் எழுத்தாளரே ஒருங்கமைக்கும் இலக்கியவிழா, அதுவும் பிற எழுத்தாளர்களுக்காக, உலகிலேயே இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னார். டெல்லியில் ஓர் எழுத்தாளரிடம் சொன்னபோது அவரும் அப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை என்றார்.

எத்தனை நிகழ்வுகள், எத்தனை எழுத்தாளர்கள். தொடர்ச்சியாகப் பன்னிரண்டு ஆண்டுகளாக இது நடைபெறுகிறது. எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. எவ்வளவு புதிய எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நீங்கள் எங்கும் உங்களை முன்னிறுத்தாமலேயே செய்தவை. வாசகர்களாக வந்தவர்களெல்லாம் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.முழுக்க முழுக்க வாசகர்களின் கொடையாலும் உங்கள் சொந்தப்பணத்தாலும் நடைபெறுகிறது.  இந்த நிகழ்வைப் பற்றி நான் எழுதியது எனக்கே அருவருப்பாக இருக்கிறது. ஆகவேதான் இதை எழுதுகிறேன்.

ஆனால் அன்றைக்கு நக்கலும் நையாண்டியும் செய்தவர்கள் எவரும் இன்றைக்கும்கூட அதற்காக வெட்கப்படவில்லை. ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அதை நினைக்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவெளியில் தொடர்ச்சியாக தெரிந்துகொண்டே இருப்பதனால் நாம் சிலரை பெரியமனிதர்கள், முக்கியமானவர்கள் என நினைக்கிறோம். அவர்களுக்கு அவர்களின் மதிப்பு தெரியும். அது அவர்களை கஷ்டப்படுத்துகிறது. ஆகவேதான் அந்தச் சில்லறைப்புத்தியை காட்டிக்கொள்கிறார்கள். அந்தச் சிறுமையில் இருந்து அவர்களால் வெளிவரவும் முடிவதில்லை.

இந்த விழா பற்றி நான் இலக்கியம் வாசிக்கும் சிலருடன் பேசினேன். அவர்களில் நாலைந்துபேர் இந்த விழாவுக்கு வருவதற்கு தயங்கினார்கள். என்ன என்று கேட்டேன். அரசியல்ரீதியாக இந்த விழாவை முத்திரைகுத்துபவர்களைக் கண்டு பயம். அரசியல் முத்திரை விழுந்துவிடும் என்றார்கள். சிலர் இலக்கியக் குழு முத்திரை விழுந்துவிடும் என்றார்கள்.

நான் சொன்னேன்,  ‘உங்களைவிட தெளிவான முற்போக்கு அரசியல் பேசிவருபவர்கள் எல்லாம் அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா முக்கியமான இலக்கியத்தரப்புகளும் கலந்துகொள்கின்றனர். வம்புபேசிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றும் சாதிக்காத வெறும் முகநூல் வம்புக்கும்பல்கள். அவர்களை பொருட்டாக நினைத்து நீங்கள் இந்தவகையான ஒரு முக்கியமான நிகழ்வை தவிர்த்தால் நஷ்டம் உங்களுக்குத்தான்’.

இன்றைக்கும் இணையத்தில் அதே பழிப்புக்காட்டல்கள் உள்ளன. அவர்களுக்கு ஒன்றும் புரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் கட்சிகட்டும் அரசியலும் கூச்சலும்தான். ஆனால் இன்றைக்கு பழைய பதிவுகளைப் பார்க்கும்போது முக்கியமான எழுத்தாளர்கள் அத்தனைபேரும் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதை காண்கிறேன். முக்கியமானவர்கள் அவர்கள் மட்டும்தான். சத்தம்போடுபவர்கள் அதற்கு மட்டும்தான் லாயக்குப்படுவார்கள்.

இந்த விழா எனக்கெல்லாம் முக்கியமான பாடம். நீங்கள் அனுப்பிய அந்தப் புன்னகைக்குறி எனக்கு ஒரு சூட்டுத்தழும்பு மாதிரி மனதில் இருக்கிறது. சத்தம்போடும் அற்பர்கள் எப்போதும் இருப்பார்கள். சாதனை செய்பவர்களுக்கு அவர்கள் செய்யவேண்டியவை என்ன என்று தெரியும். எப்படிச் செய்வதென்றும் தெரியும். அதைச் செய்துகொண்டு கடந்துசென்றபடியே இருப்பார்கள். அந்தப் புன்னகையை நான் மற்றவர்களுக்கு இன்றைக்கு அளிக்கிறேன். நான் என் துறையில் சொல்லும்படி சிலவற்றை இன்று செய்திருக்கிறேன்.

இந்த விழாவும் இதையொட்டி வெளியிடப்படும் நூல்களும் பேசப்படும் பேச்சுக்களும் எல்லாமே மிகமிக முக்கியமான இலக்கியநிகழ்வுகள். இந்த விழாவில் பங்கெடுக்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

எஸ்.சந்திரமௌலி

அன்புள்ள சந்திரமௌலி,

அன்றைக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏராளமான கிண்டல்கள், நக்கல்கள், வசைகள், அவதூறுகள் வந்தன. பொதுவாக அரசியல் – சாதியக் காழ்ப்பு கொண்டவர்கள் அவற்றை எழுதினர். இலக்கியச்சிறுமதியாளர்களும் அற்ப எழுத்தாளர்களும் இணைந்துகொண்டனர். நான் எவருக்கும் பதில் சொல்லவில்லை. முழுமையாகவே உதாசீனம் செய்தேன். அவர்கள் இன்றும் அப்படியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் ஊழ்.

அவற்றை வாசித்து எனக்கு எழுதிய அனைவருக்கும் உங்களுக்கு அனுப்பிய அதே :)) அடையாளத்தையே அனுப்பியிருக்கிறேன். அதன்பொருள் இன்று உங்களுக்குப் புரிந்திருப்பதில் மகிழ்ச்சி. ஒருவன் அடையும் நிமிர்வென்பது எதிர்ப்பவர் அளவுக்கு இறங்குவதில் இல்லை, அவர்களை சிறிதாக்கி மேலெழுவதில் உள்ளது. தன் இலக்கை அறிந்து செய்யப்படும் செயலே அதற்கான வழி.

ஜெ

விஷ்ணுபுரம் விருது, விழா 2010 கடிதங்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு

வாசகர்ளுடனான சந்திப்பு

விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்1

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்

முந்தைய கட்டுரைகருமையின் அழகு-அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்