ஜா.தீபா கடிதங்கள்-2

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

-குறள் 1062

 

அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும் உள்ளே உறைகிறது. அது வணங்கி படைப்பனவற்றை மட்டுமே ஏற்றுகொள்கிறது.

-இருட்கனி

 

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருந்தினரான ஜா.தீபா அவர்களின் ஒற்றை சம்பவம் கதையை இன்று தளத்தில் தாங்கள் பரிந்துரைத்த பின் சென்று படித்தேன். கதை வாசித்து முடித்து அசைபோடுகையில் மேலுள்ள குறளும் தற்போது படிக்கும் இருட்கனி வரிகளும் தான் நினைவுக்கு வந்தன.

ஆணும் பெணும் கொள்ளும் ஆடலின் சித்திரம் மாற்றுதிறனாளி பெண்ணான மணிமாலாவின் தன்மதிப்பில் முனைகொள்கிறது. அது தான் இந்த கதையை தனித்துவமாக்குகிறது என நினைக்கிறேன். ஒருவகையில் என் நேர்வாழ்க்கையில் நானும் அவளை போன்றவன் என்பதால் எனக்கு அணுக்கமானவளும் கூட.

மணிமாலாவின் இயலாமை என்னும் விரிசலில் நாதனின் ஆணவம் என்னும் ஆப்பு இறங்கியதன் முறிவே அவனது தற்கொலை என கூறலாம். அண்மையில் எஸ்ரா உடன் ஒருநாள் நிகழ்விற்கு சென்றிருந்த போது ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பாவிடம், “நடக்க மட்டுந்தானா ? இல்லை மூளை வளர்ச்சியுமா ?” என கேட்டார். எனக்கு சுருக்கென்று பற்றி கொண்டு வந்தது. அப்பா வாய்த்திறப்பதற்குள், “இல்லை, நடக்க மட்டுந்தான் முடியாது.” என்று அழுத்தமாக கூறினேன்.

மணிமாலாவை போன்ற ஒருவரின் சீற்றம் என்பது அங்கிருந்து தான் தொடங்குகிறது. அவள் வார்த்தையில்,”விருதுகள் எனக்கல்ல… இழந்த என் கண்களுக்கானவை.”,”இழந்த என் கண்கள் அச்சமயத்தில் எனக்கு அவமானத்தை தருகின்றன” அவள் தன்னை பற்றி கூறி கொள்ளும் போது தான் மனிதர்களின் மனோ மர்மங்களை அறிந்து கொள்ளும் திறனும் ஆவலும் கொண்டவள் என்கிறாள். அந்த போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அதிலென்ன தப்பு என கேட்டவுடன் அவள் கொள்ளும் மௌனமே அவளது நுண்ணுணர்வை நமக்கு காட்டிவிடுகிறது.

அவள் கேட்பது உங்களில் ஒருவருக்கு காலோ கையோ உடைந்திருந்தால் செய்யும் உதவியை போல ஏன் எனக்கு செய்வதை எடுத்து கொள்ள மறுக்கிறீர்கள். எத்தனை தூரம் திறன் கொண்டிருந்தாலும் நீ உன்னுடைய இழப்பு மட்டுந்தான். அந்த இழப்பினால் மட்டுந்தான் நீ இத்திறனை பெற்றிருக்கிறாய் என கூறுவது அந்நபரின் தன்மதிப்பை அவமானப்படுத்தும் செயலே தான். இவர்கள் இப்படி செய்வது பெரிய ஆளுமைகளை கேலி செய்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளும் செயலை போன்றது தான். இம்மாதிரி இழப்புள்ளவர்கள் எழுந்து வருகையில் மிகச் சிறிய அளவிலேனும் சுற்றியுள்ளவர்களை தங்கள் திறனால் தாழ்மையுணர்ச்சி கொள்ள செய்கிறார்கள்.

அதன் பொருட்டு மணிமாலா மேடையேறி கூவ வேண்டும். கண்ணில்லாத நானே செய்கிறேன், உங்களுக்கென்ன என்று. இந்த சொற்கள் அவளை போல நுண்ணுணர்வுள்ள பெண்ணுக்கு, உங்களிலும் தாழ்ந்த நானே என்ற பொருளை தான் அளிக்கின்றன. அவளுக்கும் ஒருவகையில் அம்மேடையில் நிற்பது ஊர் நடுவே உள்ள மாமரம் கல்லடிப்படுவதற்கு ஒப்பானது.

அது எங்கிருந்து தொடங்குகிறது என்றால் வீட்டிலிருந்து குறிப்பாக நாதனிடமிருந்து. அவனை பொருத்தவரை தான் வலிய சென்று திருமணம் செய்து கொண்டதாலேயே அவள் தனக்கு முழு உரிமையானவள். என் நோக்கில் அந்த முதலிரவில் அவள் சொல்லும் இந்த வார்த்தைகள் தான் ஒற்றை சம்பவம்,”உணர்வுகளுக்கு நிறமிருக்கு… அது எனக்கு புரியும்னு சொன்னேன்… அவரு எனக்கு புரியாதுன்னு முடிவு பண்ணிட்டாரு.. நான் அதுக்கப்புறம் கேக்குறதே இல்லை.” கணவன்-மனைவி உறவில் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஊடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒருவர் இன்னொருவரை பார்த்து உனக்கு ஆளுமையே இல்லை என்று சொல்கையில் தான் மெய்யான விரிசல் தொடங்குகிறது என நினைக்கிறேன். அந்த முதலிரவின் ஒற்றை சம்பவம் தான் வெவ்வேறு வகையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இறுதியில் அவளுக்கு மூச்சு மூட்டி ஓடிவிடுகையில் உறவு நீர்க்குமிழியாகி விடுகிறது.

ஆனால் அவளது இந்த தன்மதிப்பின் வெளிப்பாட்டை ஏற்றுகொள்ள இங்கு வெளியில் ஆட்களே இல்லை. அவளை போன்ற ஒருவர் எங்கோ ஓரிடத்தில் தன் தரப்பை சொல்ல துடித்து கொண்டிருப்பது வெளிப்பாட்டு வடிவமே சப் இன்ஸ்பெக்டரிடரிடம் சொல்வது. எனினும் சப் இன்ஸ்பெக்டர் கேட்க தொடங்குவதோ ஓர் பரிதாப உணர்ச்சியினால் தான். ஆனாலும் அவளும் அறியாது தலையாட்டுவது அந்த தெய்வம் கேட்டது என்பதால் தான்.

அன்புடன்

சக்திவேல்

ஒற்றை சம்பவம்- ஜா தீபா சிறுகதை

 

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-3, ஜெயமோகன்
அடுத்த கட்டுரைகாலைத்தொடுவேன் – அ.முத்துலிங்கம்