அன்புள்ள ஜெ
இந்த கேள்வியை பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாலும் தொடர்ந்து இதுகுறித்து சிந்தனை வந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் இக்கடிதம்.
முன்பு ஒருமுறை இலக்கியத்தின் வழி ஒருவர் செல்லாத நிலங்களை காணவியலுமா என கேட்டிருந்தேன். அதற்கு தளத்தில் இலக்கியத்தில் நிலக்காட்சிகளை காணுதல் என்ற தலைப்பில் மிக நீண்ட பதிலொன்றை அளித்தீர்கள். அதன் பிறகு தான் என் ஐயம் நீங்கியது. ஆனால் வேறொரு கேள்வி முளைத்திருக்கிறது.
இலக்கியம் ஒரு வாசகனுக்கு, அவன் கண்டிராத நிலங்களை, வாழ்க்கை சூழலை, உச்ச தருணங்களை, மெய்மைகளை கற்பனையில் சமைத்த வாழ்வின் மூலம் வழங்குகிறது. கற்பனையின் வழி அது சாத்தியம் என்பதே இலக்கியம் என்னும் கலையின் அடித்தளம். இன்று ஒரு வாசனாக என் அறிதல்களில் ஒன்றானது என்று இதை என்னால் முன்வைக்க இயலும்.
நான் அதிகமாக அறிந்த ஒரேயொரு பெருநாவலாசிரியர் தாங்கள் தான். உங்கள் சொற்களின் வழி சென்று பிற ஆசிரியர்களை அறிய சென்று கொண்டிருப்பவன். தாங்கள் பெரும் வாசகரும் கூட. அத்தோடு பெரும் பயணியும்.
ஒரு இலக்கிய வாசகன் கட்டாயம் பயண செய்தாக வேண்டும் என்பது இலக்கியத்தை மறுப்பதாக சென்று முடியும். ஆனால் பெரும் நாவல்களின் ஆசிரியன் கட்டாயம் பயணம் செய்பவனாக தான் இருக்க வேண்டுமா ? குறிப்பாக மானுடர்களை அவர்களின் நிலத்தில், வரலாற்றின் பெருங்களத்தில் வைத்து நோக்கும் ஆசிரியன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி சொல்லும் போதே தஸ்தாயெவ்ஸ்கி நினைவிற்கு வருகிறார். அவரோ பனித்துளியின் வழி சூரியனை நோக்குபவர். மிகச்சிறு கால அளவையும் நில எல்லையையும் உருபெருக்கி மானுடத்தின் என்றுள்ள வினாக்களான தகிக்கும் சூரியனை ஆராய்கிறார். இன்னும் டால்ஸ்டாயை வாசிக்காததால் அவர்குறித்து தெரியவில்லை.
இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் எனக்கு தோன்றுவது, இலக்கிய வாசகன் சொற்களில் இருந்து காட்சிகளை கனவுகளை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் நாவலாசிரியர் காட்சிகள் இல்லாது எப்படி சொல்லோவியம் தீட்ட முடியும் ? அதன் பொருட்டு தான் பயணங்கள் மேற்கொள்கிறார்களா ? ஒருவேளை இந்த கேள்விகள் எல்லாம் பிழையாக கூட இருக்கலாம். என் புரிதலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. இது பதிலளிக்க தகுதியானது தான் என்றால் விடை சொல்லவும் ஜெ.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
இலக்கியத்திற்கு நிபந்தனைகள், விதிமுறைகள், வகுக்கப்பட்ட வழிகள் ஏதுமில்லை. வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்துகொண்டிருந்த இலக்கியமேதைகள் உண்டு. வாழ்நாள் முழுக்க ஒரே ஊரிலேயே வாழ்ந்த மேதைகளும் உண்டு. அந்த படைப்பாளியின் இயல்பு, அவர் அடைந்த வாழ்க்கையனுபவங்கள் சார்ந்தது அது.
இப்படிச் சொல்லலாம். எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் இருந்து அவனுள் செல்லவேண்டிய அனுபவ சாரம் தேவை. அந்த அனுபவங்களுக்கு அவன் அளிக்கும் எதிர்வினைதான் ஒருவகையில் இலக்கியப்படைப்பு. அனுபவம் சிறு துளியாகக்கூட இருக்கலாம். ஆனால் அது அவனை சீண்டுகிறது, அமைதியிழக்கச் செய்கிறது, மேலும் மேலும் என சிந்தனை விரியச் செய்கிறது, கண்டடைதல்களை அளிக்கிறது.
அந்த அனுபவத்தளம் மேலைநாட்டுப் படைப்பாளிகளுக்கு மிகுதி. அதிகம் பயணம்செய்யாதவர் தஸ்தயேவ்ஸ்கி. இன்னொரு பெயர் ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஆனால் தஸ்தயேவ்ஸ்கி சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வதைமுகாமில் வாழ்ந்திருக்கிறார். சிங்கர் போலந்தில் பிறந்து முதல் உலகப்போரில் புலம்பெயர்ந்து அலைக்கழிந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்து ஒரு வாழ்க்கையை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தல்ஸ்தோய் உட்பட பல இலக்கியமேதைகள் போர்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் மாபெரும் வதைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.
ஐரோப்பியப் படைப்பாளிகள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பயணம் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. குறிப்பாக அவர்கள் இளமையில் ஓர் ஐரோப்பியப் பயணம் மேற்கொள்கிறார்கள். பலசமயம் தன்னந்தனி ‘முதுகுப்பையர்’களாக. ஐரோப்பா அவர்களின் பண்பாட்டின் நாற்றங்கால். அவர்களின் வரலாறு நிகழ்ந்த மண். அவர்களின் மூதாதையரின் நினைவுகள் அமைந்த நிலம். அது அவர்களை வாழ்நாளெல்லாம் தொடர்கிறது.
இன்னும் ஆச்சரியமாக ஒன்றை கவனித்தேன். பெரும்பாலானவர்களுக்கு பாரீஸ் ஒரு கவற்சியாக இருந்திருக்கிறது. பலர் பாரீஸில் வாழ்ந்திருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் கூட. பழைய பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்கூட கொஞ்சநாள் பாரீஸில் வாழ்ந்திருக்கிறார்கள். பாரீஸ் அவர்களின் நாகரீகத்தின் தளிர்முனை. அதுவும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இந்திய, தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் பெரும்பாலும் நடுத்தர, அடித்தள மக்கள். நமக்கு நம் லௌகீக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவே கடும் போராட்டம் தேவையாகிறது. ஆகவே வாழ்க்கை பற்றிய ஓர் அச்சம் உள்ளது. படிப்பு, வேலை, ‘செட்டில்’ ஆவது என்றே நம்முடைய வாழ்க்கைப்போக்கு உள்ளது. நம் பிழைப்புக்கல்விக்கு வெளியே கொஞ்சம் இலக்கியம் படிக்கவே போராடவேண்டியிருக்கிறது.
நமக்கு ஆழமான அனுபவங்கள் மிக அரிது. எளிமையான ஓரிரு அனுபவங்களுடன் இளமை முடிந்துவிடுகிறது பிறகு அந்த எளிமையான அனுபவங்களைக் கொண்டே நாம் மொத்த வாழ்க்கையையும் மதிப்பிடுகிறோம். அதற்கேற்ப நம் இலக்கியமும் பலவீனமாக உள்ளது. ஆழ்ந்த வினாக்கள் இல்லை, ஒட்டுமொத்தப்பார்வை இல்லை.
ஆழ்ந்த அனுபவங்கள் இல்லாத எழுத்தாளர்கள்தான் மேலோட்டமான ஆக்கங்களை எழுதுகிறார்கள். அவர்கள் இருவகை. ஒன்று எளிமையான அன்றாடச் சிக்கல்களை அப்படியே எழுதி வைப்பவர்கள். பெரும்பாலும் ஆண்பெண் உறவுகள். சில்லறை சமூகப்பிரச்சினைகள். இன்னொரு சாரார், தங்கள் அனுபவ வறுமையை உணர்ந்துகொண்டு வேண்டுமென்றே செயற்கையாக அதிதீவிர , மிகக்கொடூர, மிகைப்பாலுணர்வுகொண்ட எழுத்துக்களை எழுதுகிறார்கள். இன்று பாலியல் தளங்களைப் பார்த்து பயின்றவற்றை இலக்கியமாக எழுதும்போக்கே உள்ளது.
ஒரு மேலைநாட்டு இளைஞருக்கு அவர்களின் கல்விமுறையே அடிப்படையான ஐரோப்பிய வரலாறு, ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பியப் பண்பாடு சார்ந்து ஒரு பயிற்சியை அளித்துவிடுகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். இசையிலும் கலையிலும் ஓர் ஆரம்பப்பயிற்சி அங்கே இயல்பாக அமைகிறது. எட்டாம் வகுப்பு படித்த மாணவன் புரமித்தியூஸ் என்றால் யார் என்றும் ராஃபேலின் ஓவியத்தின் இயல்பு என்ன என்றும் தெரிந்து வைத்திருப்பான். மேலதிகமாக அறிந்துகொள்ள அவன் பயணம் செய்கிறான்.
இந்தியாவில் எங்கும் அத்தகைய பயிற்சி இல்லை. நம் கல்வி பிழைப்புக் கல்வி. நம் குடும்பங்களில் பண்பாட்டுக் கல்வி என்பதே இல்லை என்பதுடன் அது தேவையில்லை, அது பிழைப்புக் கல்வியைக் கெடுக்கும் என்னும் எண்ணமும் உள்ளது. ஆகவே நமக்கு நாம் வாழும் நிலத்தின் பண்பாடு, வரலாறு, நம் கலைமரபு பற்றி அடிப்படை அறிவுகூட கிடையாது. ‘உயர்கல்வி’ என இங்கே சொல்லப்படும் கல்வியை அடைந்தவர்கள்கூட அவ்வகையில் தற்குறிகளே.
அதற்குத்தான் பயணம் தேவைப்படுகிறது. ஓரு மேலைநாட்டு எழுத்தாளன் ஐரோப்பாவில் பயணம் செய்வதுபோலத்தான் நாம் இந்தியப்பெருநிலத்தில் பயணம் செய்வது. நம் வரலாற்றின் நாற்றங்கால். நம் பண்பாட்டின் குறியீட்டு வெளி. நம் நினைவுகளின் நிலம். அதை கற்றறியலாம். ஆனால் நேரில் அனுபவித்து அறிவது எழுத்தாளனுக்கு ஆழமான அகப்புரிதலை அளிக்கிறது. பாரதி, தாகூர், தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, பஷீர், சிவராம காரந்த் அனைவரும் பயணம் வழியாகவே அதை அறிந்தனர்.
இன்று ஓவியக்கல்லூரிகளில், கலைகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் எல்லாம் அவர்களின் கல்வித்திட்டத்தின் பகுதியாகவே இந்தியப்பயணம் உள்ளது. வேளாண்மைக் கல்வியின் பகுதியாகவே இந்தியப்பயணம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இலக்கியவாதிகளுக்குத்தான் பயணமும் அதன் ஆழ்ந்த புரிதலும் மிக உதவியானவை, ஆனால் அவர்களில் பலர் பயணம் செய்வதே இல்லை.
பயணம் என்பது பலவகையான அனுபவங்களுக்கு நம்மை திறந்து வைப்பதுதான். அத்துடன் நேரடியாக அறிந்துகொள்ளுதலும்கூட. வரலாற்றையும் பண்பாட்டையும் நூல்களில் பயில்வதை விட பல மடங்கு ஆழமானது பயணம் செய்து அறிவது. ஏனென்றால் எழுத்தாளனுக்கு தேவை செய்திகள், தகவல்கள் அல்ல. படிமங்கள். அவை நேரடி அனுபவங்களாக, கண்கூடான காட்சிகளாகவே கிடைக்கும். கிருஷ்ணா நதி மகாபலேஸ்வரில் தோன்றுகிறது என்பது செய்தி. அது ஊறிப்பெருகும் மலையுச்சியில் அமைந்த மாபெரும் மலர்வெளியை நேரில் பார்ப்பது ஆழ்ந்த அனுபவம்.
என்னென்ன வேடிக்கைகள் என எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தமிழ் எழுத்தாளர் மேடையில் பேசினார். ‘தமிழகத்திற்கு வெளியே கல்லில் செதுக்கிய சிற்பங்களே இல்லை. வடக்கே பெரிய கோயில்கள் இல்லை’ நான் அவரிடம் அரைநாள் பயணத்தில் பேலூர் ஹலபீடு செல்லலாம் என்றேன். அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள்தான் உலகிலேயே விருந்தோம்பல் கொண்டவர்கள் என மேடையில் பேசுகிறார்கள். இந்த வகையான குறுகல்கள் எழுத்தாளனின் எழுத்தையும் சூம்பிப்போக செய்யும்.
இந்தியாவை பார்ப்பது இந்திய எழுத்தாளனுக்கு ஒரு இன்றியமையாத தேவை என நினைக்கிறேன். அனுபவக்குறைபாடுகளை ஈடுகட்ட, படிமத்தொகையை உருவாக்கிக்கொள்ள, பண்பாட்டை சொந்த அனுபவமாகவே உணர்ந்துகொள்ள அது வழி வகுக்கிறது. முடிந்தால் ஓர் ஐரோப்பியப் பயணமும் தேவை என்றே சொல்வேன். இன்று ஒரு தோள்பையுடன் கிளம்பிச்சென்றால் மிஞ்சிப்போனால் இரண்டுலட்சம் ரூபாயில் ஐரோப்பாவை பார்த்துவிட முடியும். அது அளிக்கும் அகத்திறப்பு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஒரு கொடை.
ஜெ