ஊர்த்துவதாண்டவம், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘ஊர்த்துவ தாண்டவம்’ கதை குறித்த என் பார்வையைப் பகிர்கிறேன்,

“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா

தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்”

எல்லாக் கலைகளும் அதைக் கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் எழுந்துவிடுகிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது. ஒன்றுடன் ஒன்று கலந்து இட்டு நிரப்பிக் கொண்டு, அதுவாகவே மாறி உன்மத்தம் அடைகிறது.

சிவன் சக்தியின் கதை ஒரு தொன்மம், அதன் தொடர்ச்சியாக முப்பிடாதி பொம்மி என ஒரு உண்மை நிகழ்வு, பின் முப்பிடாதி பொம்மியின் கதையும் தொன்மமாதல் என கதையில் ஒரு முடிச்சு தொடர்ந்துகொண்டே இருப்பது அரிதான பண்பு.

முப்பிடாதியும், பொம்மியும் இணைந்து நிகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவத்தை நவின் உக்கிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அசாத்தியமான கதை சொல்லல், வித்தியாசமான பின்புலம் என இந்தக் கதை முழுமையான ஒன்றாக மனதில் நிலைக்கிறது. எழுத்தாளர் நவினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

 

அன்புள்ள ஜெ

ஜி.எஸ்.எஸ்.வி விநவீன் எழுதிய ஊர்த்துவதாண்டவம் கதை வாசித்தேன். நெல்லை மாவட்டத்தின் பண்பாட்டின் உள்ளடுக்குகளைச் சொல்வதனால் இது ஒரு சுவாரசியமான கதையாக ஆகிறது. அந்தச் சூழலின் நாட்டுப்புறத்தன்மையையும் உக்கிரத்தையும் கதையில் ஆசிரியர் நன்றாகவே காட்டியிருக்கிறார்.

ஆனால் இன்றைய வாசகனுக்கு இந்தக்கதை ஒரு நிகழ்த்துகலையின் சித்திரம் என்பதைக்காட்டிலும் மேலதிகமாக என்ன தருகிறது என்பது முக்கியமான கேள்வி. ஒரு நல்ல நிருபர் ஒரு சின்ன ஊருக்குப்போய் இப்படி உண்மையிலேயே நடக்கும் ஒரு கூத்தை பதிவுபண்ணி தந்தால் இதே அனுபவம் கிடைக்கும் என்றால் இதை ஏன் எழுதவேண்டும்?

ஊர்த்துவதாண்டவம் என்பது சைவ மரபிலே உள்ளது. அதை ஃபோக் மனம் எப்படி புரிந்துகொள்கிறது என்பது ஒரு கேள்வி. ஊர்த்துவ தாண்டவம் என்பது ஒரு உச்சம். செங்குத்தாக வானுக்கு எழுவது என்று அதற்குப்பொருள். ஒரு ஆண் பெண்ணின் வாழ்க்கையில் அந்த நிகழ்ச்சி குறியிட்டு ரீதியாக என்னவாக பொருள்படுகிறது என்பது இன்னொரு கேள்வி.

இப்படிப்பட்ட கேள்விகள் வழியாக மேலும் ஆழமாகச் சென்றிருக்கலாம்.

ஆர்.ஸ்ரீனிவாஸ்

ஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ்.வி நவீன்

முந்தைய கட்டுரைஜா.தீபா – கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைசின்ன வீரபத்ருடு கவிதைகள்-3