சிறார் இலக்கியம்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

கொஞ்ச மாதம் முன்பு, நண்பர்களின், உறவுகளின் குழந்தைகள் என சில கேள்விகள் கேட்டுப் பார்த்தேன். அவற்றில் ஒன்று நீங்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் தொடர் எது என்பதும். பெரும்பாலானோர் சொன்னது, லிட்டில் கிருஷ்ணா, மற்றும் சோட்டா பீம். ஆழமான கிராபிக்குடன் எத்தனையோ தொடர்கள் இருக்கும் போது ஏன் சோட்டா பீம்? வித விதமான பதில்கள் வழியே நல்லா இருக்கே எனும் ஒன்றை மட்டுமே திரும்ப திரும்ப சொன்னார்கள்.

இதே போலவே சில வருடம் முன்பு வெளியான சக்திமான். அதனுடன் இணைந்து டாம் அன் ஜெரி, ஸ்பைடர் மான் போல பல சுவாரஸ்யமான கார்ட்டூன் தொடர்களும், பிரும்மாண்ட செலவில் வெளிநாட்டு தொடர்களும் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன, ஆனால் அன்று குழந்தைகளுக்கு பிடித்தது சக்திமான் தொடரே.

கொஞ்சம் இதை பொது தளத்தில் போட்டு பார்த்தால், எந்திரன் மற்றும் பாகுபலி பெற்ற ஆதரவு தெரியும். எந்திரன் போதும் சரி, பாகுபலியின் போதும் சரி, நான் ஈ, வெளியான போதும் சரி, அதைக்காட்டிலும் கூடுதலான, ப்ரும்மாண்டமும், சுவாரஸ்யமும், நமது கற்பனையின் எல்லை எதுவோ, அதை உடைத்து கடந்து செல்லும் காட்சி அமைப்புகளும் கொண்ட வெளிநாட்டுப் படங்கள் பல இங்கே வந்து போன பிறகு வந்தவை அவை. பாகுபலி அதன் இரண்டு பாகமும் சேர்த்து வரைகலை தரத்திலும் பட்ஜட்டிலும் ஹாலிவுட் படங்களின் அருகில் கூட வர முடியாது. ஆனால் இவை பிரும்மாண்ட வெற்றி கண்டன. கற்பனைக்கு எட்டாத ப்ரும்மாண்டம் கொண்ட ஹாலிவுட் படங்கள் சல்லிசான விலையில் விநியோகஸ்தர்களை தேடிக்கொண்டிருக்க, அவர்களோ கோடிகளில் அட்வான்ஸ் தந்து எந்திரனுக்காக காத்திருக்கிறார்கள். இதன் பின்புலம் என்ன?

ஆய்வாளர்கள் வித விதமான காரணங்களை ஆராய்ந்து கண்டு பிடிக்கலாம், ஆனால் எந்த ஆய்வாளரும் மறுக்க இயலா காரணம் ஒன்று உண்டு. அது இந்த படங்கள், சோட்டா பீம், கிருஷ்ணா, எந்திரன், பாகுபலி, எல்லாம் ஏதோ ஒரு அம்சத்தில் இங்கிருக்கும் இந்த பண்பாட்டுடன், அதாவது நமது பண்பாட்டுடன் இரண்டற கலந்திருக்கிறது. அதனால்தான் இங்கே ஸ்பைடர்மேன் அடையாத வெற்றியை சக்திமான் அடைகிறது, டெர்மினேட்டர் அடையாத வெற்றியை எந்திரன் அடைகிறது.

ஒவ்வொரு கண்டத்திலும் இந்த தனித்தன்மை மீது படையெடுத்து வெற்றி கொள்ளவே ஹாலிவூட் விரும்புகிறது [உதாரணம் அவதார்].. பொது தளம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, பாகுபலியை அதனுடன் வெளியாகும் ஒரு ராக் படம் வெல்லும் என்றால், யந்திரன் படத்தை அதனுடன் வெளியாகும் ஒரு அவதார் வெல்லும் என்றால், அந்த நாள் வருகையில், நமது பண்பாட்டில் இருந்து நம்மை இணைத்து வைக்கும் முக்கிய சரடு ஒன்று அறுந்து விட்டது என்றே பொருள்.

ஆறுதல் ”அந்த சரடு”  இன்னும் இருக்கிறது என்பதே. துர்பலம் அந்த சரடு மிக மிக பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறது என்பது. காரணம் இந்த சரடின் முதல் முடிச்சு எங்கே விழ வேண்டுமோ, அது இந்த சரடின் எல்லைக்கு வெளியில் எங்கோ இருக்கிறது. ஆம் பாலர் இலக்கியம் என்பதே அந்த தளம்.

முன்பு எனக்கு காமிக்ஸ் வழியே ஸ்பைடர்மான் கிடைத்தார். இணையாக வாண்டு மாமா வழியே கழுகு மனிதன் ஜடாயு கிடைத்தார். டெக்ஸ் வில்லர் கிடைத்தார். இணையாக இன்ஸ்பெக்டர் ஆசாத் கிடைத்தார். இரும்புக்கை மாயாவி அளவே வாலை வளர செய்யும் கபீஷ் பாலகர்களை கவர்ந்திருந்தான். மண்டை ஓட்டு முகமூடி வீரர் உடன், எதை கண்டாலும் பயந்து நடுங்கும் வேட்டைக்கார வேம்புவும் இருந்தார். பால்யத்தில் எங்கள் குலதெய்வம் இருக்கும் பொட்டல் வெளி எனக்கு ஒரே சமயம் டெக்ஸ் வில்லரும், ஆசாத்தும் கொள்ளையர்களை சுட்டு தள்ளியபடி துரத்தும் வெவ்வேறு கற்பனை வெளியாகவும் இருந்தன, அந்த செம்மண் மேல் எனக்கே எனக்கான சம்பல் பள்ளத்தாக்கு வெளியும், மெக்சிகோ வெளியும் கலந்து முயங்கிக் கிடந்தன. என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்தால், என் முன் இருக்கும் கெடிலமும், அதன் மேல் இருக்கும் பாலமும், ஜேம்ஸ் பாண்ட் நடக்கும் தேம்ஸ் நதி பாலமாகவும் இருக்கும்.

இன்றைய பாலகர்களுக்கு இந்த நிலை இருக்கிறதா என்றால் விடை பூஜ்யமே. காரணம் கணிப்பொறி.

அன்று பால்யத்தில் வாசிப்பு எங்கே உள்ளே வருகிறது ? முதலில் காட்சி, அங்கிருந்து கற்பனை, அதிலிருந்து சிந்தனை, அதிலிருந்து கவனம், அதிலிருந்து செயல்பாடு. காட்சி, கற்பனை, சிந்தனை, கவனம் அனைத்தையும் அன்று பால்யத்தில் பாலர் இலக்கியமே ஆக்கிரமித்து இருந்தன. மாறாக அந்த நான்கையும் இன்று கணிப்பொறி எடுத்துக்கொண்டு விட்டது.

இந்த கணிப்பொறி அளிக்கும் காட்சி என்பது முற்றிலும் பிழையானது. அது அளிக்கும் காட்சி பாலகனை, அவனது கற்பனையை விரிய செய்யாமல், அவனால் எந்த எல்லை வரை கற்பனை செய்ய முடியுமோ, அந்த எல்லையின் அடுத்த படியில் நின்றே இதன் காட்சிகள் துவங்குகிறது. சிந்திப்பதை காட்டிலும், குறித்த நேரத்துக்குள்ஓடுவது, தப்புவது, துரத்துவது, கொல்லுவது, என பாலகன் அட்ரினல் சுரப்பை அடிமை கொள்கிறது. இதில் கவனம் என்பது முழுக்க முழுக்க ”அந்த கணத்தில் ” நீங்கள் செய்யும் ரிஃப்ளக்ஸ் ஆக்சன் என்பதில் மட்டுமே நிலைக்கிறது. ஈடுபாடும் செயல்பாடும் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் ஒன்றுக்காக மட்டுமே என்றாகிறது.

இதில் அடிமை கண்ட பால்யம் இதன் பயனாக பால்யத்துக்கே உரிய ”வியப்படைதல்” எனும் ஆசியை இழக்கிறது. அன்றெல்லாம் பூந்தளிர் இதழில் அதன் துணை இதழாக வெளிவரும் பைகோ க்ளாஸிக் காமிக்ஸ் காக தவம் கிடப்பேன். மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ், டேல் ஆப் டூ சிட்டிஸ், டான் கிவீசாட், மென் இன் அயன் மாஸ்க், போன்ற உலக புனைவுகளை எளிய வடிவில் அதன் ஆசிரியர் குறித்த சுருக்கமான வரலாற்று குறிப்புடன் அது வெளியிட்டது. அருமையான ஓவியங்கள். நிலகாட்சிகள், சூழும் பொருட்கள், மனிதர்கள், அவர்களின் உடைகள், உணர்வுகள், எல்லாம் மிக மிக துல்லியமாக, நுண் விவரணைகளுடன் இருக்கும். மென் இன் அயன் மாஸ்க் கதையில் லூயி மன்னன் முகத்தில் முகமூடி மாட்டப்படுகையில் அந்த கண்களில் தெரியும் பீதி, அன்றெல்லாம் என் கனவில் வரும். அந்த இதழில் வரும் க்விஸ், அறிவியல் ஆச்சர்ய செய்திகள் என அனைத்துக்காகவும் தவம் கிடப்பேன்.

இன்றைய பால்யம் கணிப்பொறியின் குழந்தை. அவள் மடியில்தான் அவன் கண் விழித்ததே. அவனுக்கு ஆச்சர்யம், அதற்காக காத்திருத்தல், தேடுதல், தேடுவதற்கான ஆர்வம், ஆர்வத்தை பின்தொடரும் தீவிரம் என எதுவும் இல்லை. அனைத்தையும் வீடியோ கேம் என்ற ஒரே ஒரு போதை முன்பு இழந்து விட்டான். மீண்டு வெளியே வந்து வாசிக்க வருபவருக்கு கூட, வெளிநாட்டு சாகசங்கள்தான் கிடைக்கும், நமதே ஆன நாயகர்களை கொண்ட சாகசங்களும், நமதே ஆன ஒரு உலகும் இல்லை, கிடைக்கும் சில தமிழ் பாலர் இதழ்கள் கேனத்தனமான ஓவியங்களும், அதைவிட கேனத்தனமான கதைகளும் கொண்டதாக இருக்கிறது. மீட்பு எங்ஙனம்? மறுமலர்ச்சி எவ்விதம்? தெரியவில்லை.

இது எல்லாம் இந்த சுட்டியில் கண்ட சில பழைய பூந்தளிர் இதழ்கள், பைகோ க்ளாஸிக் காமிக்ஸ்கள் ஆகியவற்றை கண்ட போது எழுந்த சிந்தனைகள். நமது குழுமத்தில் கூட கபீஷ் எனும் புனை பெயரில் ஒருவர் இருப்பதாக நினைவு.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைசிறுகதைகளில் எதிர்பார்ப்பது…
அடுத்த கட்டுரைபுழுக்கள், கடிதங்கள்