எழுத வருபவர், கடிதம்

அன்பிற்கு உரிய ஆசிரியருக்கு,

வணக்கம்.நான் பூவன்னா சந்திரசேகர்.தும்பி சிறாரிதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியில் உடனிருக்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர் எஸ் மங்களம் அருகிலுள்ள இராக்கினார்கோட்டை எனும் குக்கிராமம் எனது ஊர். அத்தியாவசிய தேவைகளுக்கும் பத்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய நிலைகொண்ட ஊர். பேருந்து போக்குவரத்தோ பள்ளிக்கூட வசதியோ மட்டுமல்லாது அழும் பிள்ளையை அமைதிப் படுத்தும்வண்ணம் ஒரு மிட்டாய் வாங்கக் கூட இல்லாத ஊர். பள்ளிக்காலம் அற்புத கணங்களை எனக்குத் தந்தது.மிக நன்றாகப் படித்தேன்.தடகளப் போட்டிகளில் ஓடி ஜெயித்தேன்.காலப்பந்தாட்ட அணியில் இருந்தேன். கவிதைப் பேச்சு என வாய்ப்பிருந்த கதவுகளை எல்லாம் தட்டினேன். சீரான போக்கில் சென்ற நாட்களுக்கு முதல் முட்டுக் கட்டையாய் வீட்டின் பொருளில்லாச் சூழல் விழுந்தது. பள்ளிப் படிப்பு நிறைவானதும், நினைத்த கல்லூரியில் சேர இயலவில்லை.காரணம் பொருளாதார நெருக்கடி. நடை பழகும் குழந்தை முதன்முதலாய் தடுமாறி விழுவது போன்ற உணர்வு.அதுவரை அனுபவித்திராதது.இன்னும் நிறைய விழவேண்டி இருப்பதும் அப்போது தெரியவில்லை.

விரும்பாத ஒன்றை அனுசரணையின் அடிப்படையில் விரும்புதல் பாவனையையாவது செய்யக் கற்றுக் கொண்டேன். அவ்வாறு இல்லையென்றால் என்றால் என்னவாகுமோ என்ற உலநடுக்கம்.

பகுதிநேரமாய் பணிபுரிந்துகொண்டே படிப்பு. கல்லூரி நேரம் மற்றும் வேலைநேரம் போக மீந்திருந்த பொழுதெல்லாம் மனம் நொந்து புழுங்கிப் புலம்பவே செய்தேன். கால அட்டவணை அடிப்படையில் வாழும் சுழற்சி வாழ்க்கைமுறை, கொஞ்சம் கொஞ்சமாய் எத்தன மீதும் பிடிப்பற்ற மனநிலை வளர்த்துவிட்டது. “எதன் மீதும் எவர் மீதும் நன்னம்பிக்கை இல்லாத மனம் கொள்ளல்” எனும் இருண்மைக்குள் நான் மெல்ல அமிழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். படிப்பின் மீது நான் வைத்திருந்த பாவனை விருப்பம் வெட்டவெளி கற்பூரமாய் கரைந்தோடிப் போயிற்று.

கல்லூரி இடைநிற்றலுக்குப் பிறகு,எதனிடமிருந்தோ விடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த என்னைக் குடும்பச் சூழல் முழுநேர வேலைக்குள் தள்ளியது. வாழ்விலேயே முதல் முறையாக வீடு அப்போது என்னை நோக்கி எதிர்பார்ப்பொன்றை வளர்க்கத் துவங்கியது. அம்மாவுக்கு கற்பப்பை நீக்க அறுவைச் சிகிச்சை. அப்பா, வீடு கட்ட வாங்கிய கடனில் விழுந்துவிட்டார்.குறைந்தது என் பங்காக இருபதாயிரமாவது நான் அம்மாவின் மருத்துவத்துக்குக்  கொடுத்தாக வேண்டும். அந்த நேரம் ஒரு சிறிய உணவகத்தில் வேலையிலிருந்தேன்.அந்த சமயத்தில் நான் சிறிதளவு வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வாசிப்பு தீவிரமான ஒரு சமயத்தில் எழுதவேண்டும் எனும் உந்துதல் தோன்றவே, எதையாவது எழுதினேன்.உணவாக வேலைநேர அளவும் அந்த வேளையில் இருக்கும் விற்பனை மனத்தால் செய்யப்படும் உணவு தரத்தின் மீதான அவர்களின் சமரசமும் என்னை நாட்பொழுதில்லாமல் அனத்திக் கொண்டிருந்தது. உள்ளார்ந்த புழுக்கம் என்னை அவ்விடம் விட்டு நீங்க வேண்டுமென்றது. எனக்கும் அது தான் நல்லதாகப் பட்டது. இவ்வாறாக நான் எப்போதெல்லாம்  அந்த பணியை விட்டு வெளியேற எத்தனித்தேனோ அபொழுதெல்லாம் குடும்பம் என் மீது ஏதேனுமொரு எதிபார்ப்பை வீசியபடி இருந்தது.

பின் என்னைச் அந்தச் சூழலுக்குச் சமாதானப்படுத்திக் கொண்டு, கிடைத்த நேரம் படித்தேன்.கொஞ்சம் பயணம் செய்யத் துவங்கினேன். அவ்வாறான பயனமொன்றின் வழியே தான்  குக்கூ காட்டுப்பள்ளிக்கும் முதன்முறை போய் வந்தேன். குக்கூ சொந்தங்களினூடான நட்பு, எனக்கு கலங்கலான வாழ்வின் மீது தெளிச்சியான பார்வையைத் தந்தது. அவர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு எப்பாடு பட்டாவது போக முயற்சிப்பேன். அவ்வாறாகத் தான் யூமா வாசுகிக்கு வழங்கப்பட்ட தன்னறம் இலக்கிய விருது விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வு முடிந்த அன்று இரவு, ஒரு மொட்டைமாடியில் சிவராஜ்  அண்ணாவுடனான ஒரு உரையாடல் என்னை எல்லா வகையிலும் மீட்டேடுப்பதாய் இருந்தது.குடும்ப அமைப்பு எந்நிலையிலும் தன் எதிர்பார்ப்புகளை நிறுத்திக் கொள்ளாது என உணர்ந்து, உணவகத்திலிருந்து வெளியேறினேன்.திசை கலங்கி நின்ற பொழுதில் தான் சிவராஜ் அண்ணா எனக்கான பற்று கையாகி, தன்னறம் நூல்வெளியின் பயணத்தில் உடனிருக்குமாறு செய்தார். என்னுள்ளிருந்த சிந்தையிடர்களிலிருந்து நான் மீள உங்களின் தன்மீட்சி நூலுக்கு  பெரும் பங்குண்டு. இப்போது என் வாழ்வு முன்னாட்களைவிட்டு முற்றிலும் மாறுபட்டது. குடும்பம் நெருக்கடி செய்யத்தான் செய்கிறது.செய்தாக வேண்டியதைக் கட்டாயம் செய்து தான் வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இப்போது நான் நிறைய வாசிக்கிறேன். நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். சில மாதங்களாக உங்களது வலைதளத்தில் உள்ள சிறுகதைகளை வாசித்து வருகிறேன். ஆறு மாதங்களுக்கு முன், அந்த வாசிப்பின் உந்துதலால் ஒரு சிறுகதையை நானும் எழுதவேண்டும் என தீர்மானமாய் எண்ணிக்கொண்டேன். அந்த சிறுகதைக்கான தலைப்பு “அச்சாரம்”. சமீபத்தில் “பதாகை” இதழில் வெளியானது.

ஐந்தாறு மாதங்களாகவே, எழுதத் தொடங்கியும் உருப்பெறாமலேயே கிடப்பில் இருந்தது அந்த கதை.

ஆனால்,அதை நான் தான் எழுதியாக வேண்டும், என்ற சிறு தவிப்பின் காரணமாக சமீபத்தில் நிறைவு செய்தும்விட்டேன்.

ஒரு கற்பனைக் கருவை எனக்குக் கையாளத் தெரியுமாவெனத் தெரியவில்லை. அதை இனிவரும் நாட்களில் கட்டாயம் முயன்று பார்ப்பேன்.

இந்த “அச்சாரம்” கதை முழுக்க என் தாத்தனின் கதை. ஆடு, மாடு,பட்டி என வாழ்ந்து செத்தவர். கோவில் கொடை விழாக்களில் கூட, பட்டி உயிர்களுக்கு தனி அர்ச்சனை செய்தவர். மாட்டை விற்று வாங்கிய காசைச் செலவழிக்க மனங்கசந்து உலையடுப்பில் வீசியவர். அவருடைய கதையை நான் எழுத வேண்டும் என நினைத்ததின் இம்மி அளவு  இந்த கதை.

அச்சாரம்,நான் முதன்முதலாய் எழுதத் தொடங்கிய கதை மற்றும் எழுதி முடித்த கதை. உங்களது எழுத்து வழி நானடைந்த உந்துதலால் எழுதப்பட்ட கதை ஆதலால்,அதை உங்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என ஆசைப்பட்டேன். கதைக்கான பின்னூட்டத்தை கடித்தத்துடன் இணைத்துள்ளேன். அதை நீங்கள் வாசித்தளிக்கும் ஒற்றைச் சொல்லை,செயலூக்க விசையென கொண்டு மனநிறைவாய் மேலும் மேலும் செயல்படுவேன்.

நன்றியுடன்,

பூவன்னா சந்திரசேகர்

சிறுகதைக்கான இணைப்பு: https://padhaakai.com/2021/11/28/acharam/

 

அன்புள்ள பூவன்னா சந்திரசேகர்,

சிவராஜ் சொன்னது மிகச்சரியான சொல். ஒரு மனிதன் குடும்பத்துக்கான கடமைகளை ‘முடித்துவிட்டு’ செய்யவேண்டும் என்றால் எதையுமே செய்ய முடியாது. குடும்பம் என்றல்ல, வணிகம் உட்பட எல்லா உலகியல் அமைப்புக்களும் தீராப்பசி கொண்டவை. முழுமையாகவே நம்மை கேட்பவை.

நமக்கு பிறரிடம் கடமைகள் உள்ளன, அவற்றைச் செய்தாகவேண்டும். கூடவே நமக்கு நம்முடனும் சில கடமைகள் உள்ளன. அவற்றையும் விடக்கூடாது. நீங்கள் எழுதவேண்டும் என உள்ளூர விரும்பினால் அதில் சமரசமே செய்துகொள்ளவேண்டாம்

ஜெ

முந்தைய கட்டுரைகீதை கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி – கடிதங்கள்