அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். இலக்கியத்தை விலைபேசுதல் கட்டுரையையும் அதற்கான எதிர்வினையையும் வாசித்தேன். நீங்கள் இவ்வளவு அழுத்தமாகப் பேசியிருப்பதை எண்ணி நெகிழ்ந்துவிட்டேன். என்னைத் திரட்டிக்கொண்டு எழுத சற்று நேரம் தேவைப்பட்டது. உங்கள் சொற்கள் எனக்கு மிகுந்த பலம் கொடுப்பவை. அமேசான் கணக்கு முடக்கப்பட்டது குறித்து அறிந்ததும் நண்பர்கள் பலரும் பேசினார்கள்.
துரதிர்ஷ்டவசமான இந்த நிகழ்வை நினைக்கும்போது சற்று சோர்வாகத்தான் இருக்கும். அழிக்கப்பட்ட அந்த ஐநூறு நூல்களில் லா. ச. ரா., க. நா.சு., பிச்சமூர்த்தி போன்ற சிலரின் பெரும்பாலான படைப்புகள் இருந்தன. ஆசையுடன் வெளியிட்ட ஆரோக்கிய நிகேதனம், அக்னி நதி நாவல்கள் இருந்தன. அக்கறையுடன் கேட்பவர்களுக்கு இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதிலும் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து மீள உங்கள் எழுத்து உதவுகிறது.
இன்னும் செய்வதற்கு வேறு பணிகள் இருப்பதால் அவற்றில் கவனம் செலுத்துகிறேன். உங்களுக்கும், உங்கள் கட்டுரையைத் தனது தளத்தில் பகிர்ந்திருக்கும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆதரவாகப் பேசிய எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றியை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
ஶ்ரீநிவாச கோபாலன்
அன்புள்ள ஜெ
ஸ்ரீனிவாச கோபாலன் இணையவெளியில் சேர்த்து இலவசமாக அளித்த கிட்டத்தட்ட ஐநூறு நூல்கள் மிகப்பெரிய பொக்கிஷம். மிகப்பெரிய அறிவுத்துறை உழைப்பு. எந்த பயனும், நிதிக்கொடையும் இல்லாத பணி. அந்த நூல்பொக்கிஷம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட்டுள்ளது.
முதல் முறை நூல்கள் அழிக்கப்பட்டது பற்றி எழுதியிருந்தீர்கள். அப்போது இலவச பிடிஎஃப் வெளியிடும் ஏதோ கூட்டத்தின் செயல்பாடாக இருக்கலாமென நினைப்பதாகச் சொன்னீர்கள். இப்போது பேராசிரியரால் நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இப்போது எனக்கு இந்த நாசவேலை நம் அக்கடமிக்குகளால் செய்யப்படுகிறது என தோன்றுகிறது. இவர்கள் இந்த நூல்களை ‘கண்டுபிடிப்பது’ ‘பதிப்பிப்பது’ என பெரிய பிராஜக்டுகளை தயாரித்து யூஜிஸிக்கும் வெளிநாட்டுப் பல்கலைகளுக்கும் அளித்து பெரும்பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரிய வேலைகள் இல்லை. டிஜிட்டலைஸ் செய்யப்படுந்தோறும் வேலை இன்னும் இல்லாமலாகிறது. ஆகவே தனியார் இதைச் செய்வதை இவர்கள் விரும்புவதில்லை.
ரமேஷ் ராம்
அன்புள்ள ஜெ,
இலக்கியத்தின் விலை கட்டுரை வாசித்தேன். அதைக் கண்டதும் இணையத்தில் சூடான விவாதம் வெடிக்கப்போகிறது என நினைத்தேன். ஒன்றுமே இல்லை. இல்லாத காரணங்களை எல்லாம் கற்பித்துக்கொண்டு, வரிகளை திரித்துப் பொருள்கொண்டு பொங்கிப்புகைபவர்கள் எல்லாம் சும்மாவே இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. நமக்கு நூல்களில் இருக்கும் ஆர்வம் இத்தனைதானா என எண்ணிக்கொண்டேன்.
ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்,
இந்த விஷயத்தில் எனக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியாது, எவ்வகையிலும் திரித்து அறச்சீற்றம் அடையமுடியாது, ஆகவே சும்மா இருக்கிறார்கள். எனக்கு எதிராக கொண்டுகூட்டிப் பொருள்கொண்டு எதையாவது சொல்ல முடிந்திருந்தால்கூட அறப்புகை கிளம்ப ஆரம்பித்திருக்கும்.
ஆனால் போலி பெயர்களில் இருந்து அழிசி ஸ்ரீனிவாசனை வசைபாடி மின்னஞ்சல்கள் வருகின்றன. ஏதோ ஒரு கண்காணா கும்பல் வலுவாக வேலைசெய்கிறது. அவர்கள் இந்த இலவச நூல் வலையேற்றத்தை வளர விடமாட்டார்கள். எவருடைய லாபமோ அதில் உள்ளடங்கியிருக்கிறது.
ஜெ