சீரோ டிகிரி விருது -ஐந்து நாவல்கள்

சீரோ டிகிரி பதிப்பகம்- தமிழரசி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நாவல்போட்டிக்காக நடுவர்களில் ஒருவராக இருக்க என்னிடம் கோரப்பட்டது. இறுதிப்பட்டியலில் இருந்த ஐந்து நாவல்கள் என் பார்வைக்கு வந்தன. நான் அவற்றை வாசித்து என் குறிப்பை அனுப்பி வைத்தேன். என் குறிப்பு இது

ஐந்து நாவல்கள் மதிப்பீடு

எழுத்து பிரசுரத்திற்காக நடத்தப்பட்ட நாவல்போட்டியில் முதல்கட்ட நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நாவல்கள் என் பார்வைக்கு வந்தன. அவற்றை வாசித்து ஒருநாவலை பரிசுக்குரியதாக தேர்வுசெய்யும்படி நான் கோரப்பட்டேன்.

இலக்கியத்துக்கு மிகக்கறாராக மதிப்பெண் போட முடியாது. அது ஒரு விமர்சகரின் மதிப்பீடாகவே அமையும். பல போட்டிகளில் தோல்வியடைந்த படைப்புகள் பின்னாளில் ’கிளாஸிக்கு’களாக ஆகியிருக்கின்றன. வெற்றிபெற்ற ஆக்கங்கள் எங்கே என்றும் தெரியாமல் அப்படியே மறைந்திருக்கின்றன. உதாரணம் பாரதியின் செந்தமிநாடெனும் போதினிலே என்னும் பாடல் ஓர் இலக்கியப்போட்டியில் தோல்வி அடைந்தது. வென்ற படைப்பு எங்கென்றே தெரியவில்லை.

ஆயினும் இலக்கியப்போட்டிகள் தேவைப்படுகின்றன. அவை புதிய திறமைகளை கொண்டுவருகின்றன. புதிய வெளிச்சங்களை படைப்பாளிகள்மேல் வீசுகின்றன. ஆகவே இந்த வகையான போட்டிகளை இலக்கியம் மீதான அறுதி மதிப்பீடாகக் கொள்ளவேண்டியதில்லை. இவை ஒருவகை அமைப்புசார் செயல்பாடுகள் என்றே கொள்ளவேண்டும்.

நான் இத்தகைய போட்டிகளுக்கு உடன்படுவதில்லை. ஏனென்றால் எனக்குரிய பொழுது மிகவும் எல்லைக்குட்பட்டது. அத்துடன் மூத்த எழுத்தாளர்கள் இளையபடைப்பாளிகள் மேல் விமர்சனப்பார்வையை முன்வைக்கலாகாது என்பது என் எண்ணம். நான் புதிய படைப்பாளிகளின் படைப்புகளை சிபாரிசு செய்வதுண்டு. எதிர்விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால் என் எதிர்விமர்சனம் அவர்களை உளம்தளரச் செய்துவிடலாம். உருவாகி வரும் புதுப்போக்குகளை மறுப்பதாகவும் என் பார்வை அமைந்துவிடக்கூம்.

ஆனாலும் புதிய போக்குகள் என்னென்ன என்று பார்க்கலாம் என இதை ஏற்றேன். இந்நாவல்களை வாசித்து என் மதிப்பீடுகளைப் பதிவுசெய்திருக்கிறேன்.  இதிலுள்ள கறாரான எதிர்விமர்சனம் அவர்களை தளரச்செய்யக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் படைப்புகளை புறவயமாகப் பார்க்க இது உதவவேண்டும். ஏற்கமுடியவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு முன்செல்ல அவர்கள் முயலவேண்டும்.

 

1.சொர்க்கபுரம் – கணேசகுமாரன்

 

கணேசகுமாரனின் சொர்க்கபுரம் குற்றவாழ்க்கையுடன் தொடர்புள்ள அடித்தள மக்களைப் பற்றிய சித்தரிப்பு. ஆண்வேசியாக கழிவறைகளில் வேலைபார்க்கும் ஒருவனை தொடர்ந்து அந்த வாழ்க்கைப்பகுதிக்குள் சென்று அவனுடைய மனைவி, அண்டைவீட்டுக்காரிகள்  என விரிந்து வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது.

ஒரு புனைவு ஏன் இத்தகைய வாழ்க்கையை முன்வைக்கவேண்டும்? எளிய விடை என்பது, இப்படியும் இங்கே வாழ்க்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக. ஆழ்ந்த விடை என்பது மானுடம் எதிர்கொள்ளும் அசாதாரணமான, உச்சகட்டமான அனுபவங்கள் வழியாக மானுடத்தின் பெறுமதி என்ன என்பதை உசாவியறிவதற்காக.  கீழ்நிலையும் உண்மையில் உச்சமே.

இந்நாவலில் இரண்டாவது கோணம் முற்றிலும் இல்லை. அசாதாரணமான இருண்ட வாழ்க்கைச்சூழலில் வெளிப்படும் மனிதசாரம் ஏதும் இதில் பேசப்படவில்லை. அத்தகைய வினாக்களோ, அவ்வினாக்களை நம்மில் எழுப்பும் தருணங்களோ இதில் இல்லை. ஆசிரியர் கூற்று என முன்னும் பின்னும் வரும் வரிகள்  ‘இதோ இதுதான் வாழ்க்கை’ என்று அவர் சுட்டவிரும்புவதையே சொல்கின்றன. இதுதானய்யா பொன்னகரம் என்னும் புதுமைப்பித்தனின் குரல். நாவலுக்கு சொர்க்கபுரம் என்று வைக்கப்பட்டிருக்கும் தலைப்பும் அதையே சுட்டுகிறது.

அவ்வகையில் இது சீண்டக்கூடிய, அமைதியிழக்கச் செய்யக்கூடிய, நினைவில் ஒரு தொந்தரவாக நீடிக்கக்கூடிய நாவல். ஆசிரியரின் வெற்றி என அந்தச் சீண்டலைச் சொல்லலாம்.

நாவலின் குறைபாடுகள் என நான் காண்பவை

அ. இத்தகைய நாவல்களில் இரண்டு வகை கலைக்குறைபாடுகள் அமையும். ஒன்று கருத்துப்ப்பிரச்சாரம். அது இதில் இல்லை என்பது பாராட்டுக்குரியது. ஆனால் இத்தகைய நாவல்களில் வழக்கமாக வரக்கூடிய ரொமாண்டிக்கான மொழியாட்சிகள் வருகின்றன. அவை நாவலின் வீச்சை குறைக்கின்றன.”தூரத்து வானில் கருமேகம் ஒன்று கவனித்துக் கடந்தது”  “வீட்டை விட்டு இறங்கி வெயிலில் கலந்தாள் நளினி” போன்ற வரிகள் இத்தகைய நாவல்களுக்குரியவை அல்ல. ஜி.நாகராஜன் உணர்ச்சியற்ற, வெறும் அறிக்கைபோன்ற, காட்சிகளில் தலையிடாத மொழியையே கையாள்கிறார் என்பதைக் காணலாம். இந்நாவலின் மொழி வணிகக்கதைகளின் நடைக்கு நெருக்கமானது. ஆகவே அது இலக்கிய வாசகனை விலக்கம் கொள்ளச் செய்கிறது.

ஆ. அதிர்ச்சியூட்டும் காட்சிகளால் நிறைந்திருக்கிறது இந்நாவல். ஆனால் அதிர்ச்சி தொடர்ச்சியாக நிகழ்ந்தால், அப்பட்டமாக நிகழ்ந்தால் மிக விரைவிலேயே வாசகன் அதற்கு உளம்பழகி பின்பு சலித்துவிடுவான்.  இந்நாவலில் அது நிகழ்கிறது.

இ. அனுபவத்தின் துளியில் இருந்தே எந்த கலைப்படைப்பும் முளைத்தெழமுடியும். இந்நாவலின் பல பகுதிகள் உருவாக்கப்பட்டவை. அதிர்ச்சியோ திகைப்போ அளிக்கும்பொருட்டு. உதாரணமாக  புனிதாவை சுந்தர் சந்திக்கும் காட்சியைச் சொல்லலாம்

ஈ. இந்நாவலில் கதாபாத்திரங்களின் பெயர்கள், நிகழ்வுகள் வருகின்றன. குணச்சித்திரங்கள் செதுக்கப்படவில்லை. வெறும் முகங்களாகவே எஞ்சுகிறார்கள். கதாபாத்திரங்களின் அன்றாடவாழ்க்கை நம்பகமாகச் சித்தரிக்கப்படுகையிலேயே அவர்கள் நாமறிந்த மனிதர்களாக நம்முள் பதிகிறார்கள். மதுக்கடையில் குடித்துவிட்டு “ஒரு மசுத்துக்கும் ஏறலை” என்று சொல்லிச்செல்லும் ஜி.நாகராஜனின் கதாபாத்திரம் ஒரே வரியில் நாமறிந்தவராக ஆவது அவ்வாறுதான்.

 

  1. வாதி- நாராயணி கண்ணகி

 

ஜோலார்ப்பேட்டை பகுதியில் ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்த ஜமீன்தார் ஆதிக்கம், அதை எதிர்த்து போராடிய அக்கால நக்சலைட் இயக்கத்தவர், அவர்கள் மேல் போலீஸாரின் அடக்குமுறை ஆகியவற்றை இன்றும் உயிர்வாழும் எஞ்சிய ஒருவர் நினைவுகூரும் முறையில் எழுதப்பட்ட நாவல். அன்று மூவரை கொலைசெய்துவிட்டு காணாமலான ராமலிங்கம் என்பவரை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அவரைப்பற்றி விசாரிக்கிறது. விசாரணைக்கு உள்ளாகிறவரின்நினைவுகள் கொப்பளித்து எழுந்து இந்நாவலாகின்றன

எழுதப்படாத ஒரு நிலம், எழுதப்படாத ஒரு வாழ்க்கைச்சூழல். அது இந்நாவலை ஆர்வத்துக்குரியதாக ஆக்குகிறது. ஆனால் மிக மேலோட்டமாகவே இந்நாவல் அதைச் சொல்லிச்செல்கிறது. அந்நிலத்தின் காட்சிச்சித்திரம் விரிவதில்லை. நினைவில் விரியும் தொடர்நிகழ்வுகள் வழியாகவே நாவல் செல்கிறது.

ஜமீன்தார் அடக்குமுறைக்காலம் என நாவல் சொல்கிறது. சித்தரிப்புகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலம்போல் தோன்றுகின்றன. நக்சலைட் எழுச்சி எழுபதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. தமிழகத்தில் 1970களில் ஜமீன்தார் முறைக்கு அதிகாரம் இல்லை. அதன் அடிப்படை ஒழிக்கப்பட்டுவிட்டது. நிலம்சார்ந்த அதிகாரமும் இல்லை.ஏனென்றால் வேளாண்மையை மட்டுமே சார்ந்து ஆதிக்கம் இருக்கமுடியாத நிலை உருவாகி விட்டது.

அரிதாக சில நிலப்பகுதிகளில் அப்படி ஓர் ஆதிக்கம் இருந்திருக்கலாம்.  ஆனால் ஜோலார்ப்பேட்டை பகுதி அப்படி இருந்தது என்பதற்கான சித்திரமோ, அதற்கான சூழலோ இந்நாவலில் இல்லை. பெண்களை வயசுக்கு வந்ததும் சடங்குசெய்து ஜமீன்தார்கள் புணர்வதற்காக ஊராரே கொண்டு சென்று விடுவது எல்லாம் எழுபதுகளில் இருந்தமைக்கான பண்பாட்டுச் சான்று தமிழகத்தில் இல்லை. அவை கற்பனைகளில் வாழும் நிகழ்வுகள்.

அந்த ஜமீன்தார் எந்த சாதி, அவர்களின் பண்பாட்டுச்சூழல் என்ன, ஆதிக்கத்தின் வரலாறும் வலைப்பின்னலும் என்ன , அவருடைய அரசியல் என்ன எதுவுமே இந்நாவலில் இல்லை. அந்த மக்கள் மேல் அவருடைய பாலியல் சார்ந்த ஆதிக்கமே பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அவர் ஒரு வழக்கமான சினிமாவில்லன் போலவே காட்டப்படுகிறார். அதேபோலவே வீட்டில் நிர்வாணநடனம் ஆடச்செய்கிறார். அதை வேடிக்கை பார்க்க காவலதிகாரிகள் செல்கிறார்கள்.

அதேபோல நக்சலைட்டுகள் பற்றிய செய்திகளும் மிக மேலோட்டமானவை. எந்த இயக்கம் அந்த போராட்டத்தை நடத்தியது, அவர்கள் எப்படி பரவினர், அவர்களின் வகுப்புகள் எப்படி நடந்தன எதுவுமே இதில் விளக்கப்படவில்லை. நக்சலைட்டுகளைப் பற்றிய பொதுவான மனச்சித்திரமே இதிலும் உள்ளது

இலக்கியத்துக்கு தேவை உள்ளுண்மைகள். அரிய உண்மைகள். பொதுப்புத்திக்கு அப்பால் செல்லும் அறிதல்களும் உணர்தல்களும். அவை இல்லாமல் திரைப்படம், வணிகக்கலைகள் வழியாக உருவாகும் பொதுவான பதிவுகளையே நம்பி எழுதபட்ட நாவல் இது.

 

3 உடல்வளர்த்தான் – அபுல் கலாம் ஆசாத்

 

உடற்பயிற்சி, உடல் வடிவமைப்பு சார்ந்த களம் இந்நாவலின் சிறப்பு. தமிழுக்குப் புதுமையானது. ஏராளமான நுண்தகவல்கள். உடல்வடிவமைப்பு பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் சென்னையில் அதைச்சார்ந்து உருவாகியிருக்கும் ஒரு கலாச்சாரச் சூழலையும் இந்நாவல் நம்பகமாகச் சித்தரிக்கிறது.

எளிய நிலையில் இருக்கும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் [அப்துல் கரீம்] தன் உடலை வளர்ப்பதனூடாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றலையும் அடைகிறான். உடலை வென்று உலகையும் வெல்கிறான். அவ்வகையில் ஒரு மனிதனின் வென்றுசெல்லுதலின் கதையும்கூட.

இந்நாவலின் குறைபாடுகளாக நான் காண்பவை இவை

அ.இது ஆசிரியர்கூற்றாக பல இடங்களில் ஒலிக்கிறது. அங்கெல்லாம் கதைப்புலத்துக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் ஒருவர் செய்திகளை நம்மிடம் நேரடியாகச் சொல்லும் தன்மை வந்துவிடுகிறது. இது வடிவம்சார்ந்த கலைக்குறைபாடு. அப்துலின் பார்வையே நாவலின் கோணமாக அமைந்திருந்தால், அவன் அறிபவையே வாசகனுக்கும் அறியக்கிடைத்திருக்குமென்றால் இயல்பான ஒழுக்கும் கலையமைதியும் உருவாகியிருக்கும்.

ஆ.இந்நாவல் உடல்வளர்ப்பதன் சவால்களைப் பற்றிப் பேசும்போது அதன் பொதுவான புறவயச் சிக்கல்களைப் பற்றியெ பேசுகிறது. பணம் திரட்டுவது, போட்டிகளில் கலந்துகொள்வது போன்ற சவால்கள். அகச்சிக்கல்களைப் பற்றிப் பேசுவதில்லை. சமூகச்சிக்கல்களையும் எடுத்துப் பேசுவதில்லை.

உடலை வளர்க்கும்போது அப்துல் அகத்தே எப்படி மாறுகிறான்? அவனுடைய ஒவ்வொரு அன்றாடச்செயல்பாட்டிலும் அவனுடைய பார்வை எப்படி மாறுபடுகிறது? நான் பார்த்தவரை உடல்மீதான கூச்சம் இல்லாதவர்களாக அவர்கள் ஆவதுண்டு. எங்கும் சட்டையை கழற்றுவார்கள். தன் உடல்மேல் மோகம் கொண்டு கண்ணாடிகளில் எல்லாம் உடலை பார்த்தபடியே இருப்பார்கள். தன் உடல்மேல் கொண்ட மோகம் காரணமாக பெண்ணுடல் மேல் மோகம் குறைவதும் உண்டு. தன்னம்பிக்கை மிக்கவர்களாக, பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ளத் தயாராகிறவர்களாகவும் அதே சமயம் தேவையற்ற பூசல்களை தவிர்க்கும் அமைதி கொண்டவர்களாகவும் ஆவதுண்டு. அந்த உலகம் இந்நாவலில் பேசப்பட்டிருக்கலாம்.

சமூகச்சிக்கல்களும் வெறுமே தொட்டுச் செல்லப்பட்டுள்ளன.இரண்டு இடங்களைச் சுட்டிக்காட்டலாம். உடல்வளர்த்து அதை வெளிக்காட்டுவது பற்றிய இஸ்லாம் மதத்தின் எதிர்நிலை. அதை தத்துவார்த்தமாக எதிர்கொள்ளாமல் தொட்டுவிட்டு மேலே செல்கிறது நாவல். [இஸ்லாமின் ஹதீஸ்களின் படி கேளிக்கைக்காக உடலைக் காட்டுவது ஹராம். உடலை வளர்த்து வலுப்பெறச் செய்வது ஹராம் அல்ல, கடமை. இந்த முரண்பாடு சுவாரசியமானது].

உடல்வளர்ப்பவனை உடனே குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படுத்தும் நம் சமூக மனநிலையையும் விரிவான குற்றவிவரணையுடன் சொல்லவந்து அப்படியே கடந்து செல்கிறது. நம்மூரில் உடல்வளர்ப்பவர்களின் முதன்மை எதிரியே காவல்துறைதான்.

நம் சமூகம் உடலை எப்படி பார்க்கிறது என்பதை இந்நாவல் பேசியிருக்கலாம். நம் சமூகம் உடலை ஒருவகை சுமையாகவே எண்ணுகிறது. ‘கட்டை’ போன்ற சொற்களை உடலைச் சொல்ல பயன்படுத்துகிறது.  மேலைச்சமூகம் உடல்வழிபாட்டுத் தன்மை கொண்டது. இந்தியச் சமூகம் உடல்மறுப்புத் தன்மை கொண்டது. இது உடல்செதுக்கும் கலையை அணுகும்போது அடையும் தத்துவார்த்தமான சிக்கல்கள் என்ன, உளவியல் சிக்கல்கள் என்ன என்று இந்நாவல் பேசியிருக்கலாம்.

இ. எந்நாவலும் ஆழத்தை சென்றடைவது பேசுபொருளை குறியீட்டுரீதியாக விரித்துக்கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளைச் சென்று தொடும்போதே. வாசகன் எழுதப்பட்ட நாவலில் இருந்து மேலும் மேலும் விரிந்து செல்ல அதுவே வழிவகுக்கிறது. உடல்வளர்த்தல் இதில் நேரடியாகவே பேசப்படுகிறது. மேலதிக குறியீட்டுப்பொருளை அடையவில்லை.

உடல் அப்துல் கரீமுக்கு காலப்போக்கில் என்னவாக பொருள் படுகிறது? உடலாகவே தன்னை அவன் எண்ணிக்கொள்வதன் ஆன்மிகச்சிக்கல்கள் என்ன? அந்த உடல் தவிர்க்க முடியாமல் முதுமை அடைகிறது. செதுக்கிய சிற்பம் பார்த்திருக்கவே அழிகிறது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான்? அவன் உருவாக்கும் கலை மணலில் சிற்பம் உருவாக்குவதுபோன்றது. நிலையற்றது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான்?

அப்துல் தேடிக்கொண்டே இருக்கும் அந்த ‘இலட்சிய மனித உடல்’ எப்படி அவனை இழுத்துச்செல்கிறது? மானுட குலம் ஒட்டுமொத்தமாக அந்த இலட்சிய மானுட உடலை தேடிச்சென்றுகொண்டே இருக்கிறதே, அது உண்மையில் எங்குள்ளது? எத்தனையோ கேள்விகளை நோக்கி நாவல் நகர்ந்திருக்கலாம் என்பது வாசக எதிர்பார்ப்பு.

ஒரு புதிய களத்தை நம்பகமான செய்திகள் வழியாகச் சொல்வதனால் நல்ல நாவலாக அமைந்துள்ளது உடல்வடித்தான்.

 

  1. அல்கொஸாமா- கனகராஜ் பாலசுப்ரமணியம்

 

இந்நாவலின் முதன்மைச்சிறப்பு இது இதுவரை தமிழில் எழுதப்படாத ஒரு களத்தை சித்தரிக்கிறது என்பது. அரபுப் பழங்குடிகளின் பாலைவன வாழ்க்கையின் நுண்விவரணைகள், அவர்களின்இனப்பெருமை மனநிலை, அதன் விளைவான பூசல்கள், பண்பாட்டுக்குறிப்புகள் ஆகியவை செறிவாக இணைந்து இதை குறிப்பிடத்தக்க படைப்பாக ஆக்குகின்றன.

அத்துடன் இந்நாவல் வெறும் வாழ்க்கைச் சித்தரிப்பாக இல்லை. இதில் உள்ள மாயத்தன்மையே இதன் கலைச்சிறப்பு. கவிதை வழியாக தாங்கள் வாழும் பாலைவனநிலத்தில் இருந்து ஜின்னுகள் வாழும் பிறிதொரு நிலத்திற்குச் சென்று உலவி மீள்கிறார்கள் அப்பழங்குடிகள். கனவுகளின் பிறிதொரு பாதை அங்கே வந்து இணைகிறது. அங்கே இங்குள்ள உலகம் உருமாறி தோற்றம் கொள்கிறது.

நாவலின் மையம் திரள்வது அம்மக்களின் வாழ்க்கையில் அல்ல, வாழ்க்கைக்கு அப்பாலிருக்கும் அவர்களின் அகவுலகில், கனவுலகில் என்பதுதான் இந்நாவலை தனிச்சிறப்பு கொண்டதாக ஆக்குகிறது.

இந்த அகவயத்தன்மைக்கு உகந்த ஒரு வடிவையும் இந்நாவல் அடைந்துள்ளது. பதூவிக்களின் சென்றகாலக் கதைகள் நிகழ்கால கதைமாந்தருக்குள் ஊடுருவுகின்றன. தமிழ்நாட்டு கூலிப்பணியாளர்களின் வாழ்க்கையும் அரபு நாடோடிகளின் வாழ்க்கையும் ஒன்றையொன்று தொட்டு பின்னிச் செல்கின்றன. கனவுகளும் யதார்த்தமும் முயங்குகிறது.

இந்நாவலின் கலைக்குறைபாடுகள் என சிலவற்றைச் சொல்லலாம்

அ. உரையாடல்கள் சீராக இல்லை. அராபியர் பேசும் மொழியே சட்டென்று தமிழ் வட்டாரவழக்கின் சாயல் கொள்கிறது.

ஆ. அவ்வப்போது தொடர்பில்லாமல் ஆசிரியர் குரல் ஊடாடுகிறது. ‘இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட’ என்று ஆசிரியர் சொல்கிறார். இந்நாவல் மெட்டாஃபிக்‌ஷன் தன்மை கொண்டது அல்ல என்னும்போது அது ஒரு பிசிறடித்தல்தான்.

ஆ. இத்தகைய நாவல்கள் முற்றிலும் அன்னியர்களான வாசகர்கள் முன் அவர்களின் வாழ்க்கையே என நிகழவேண்டும். அதற்கு இரண்டு வழிகள். ஒன்று, அந்நிலத்தையும் மக்களையும் காட்சிவடிவமாக கண்முன் காட்டுதல். இரண்டு, கதைத்தொகுதித்தன்மையை அளித்தல். [fable, parable போன்றவை]. இந்நாவல் வெறுமே நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறது. அது வாசகனுக்கு தனக்கான நிகர்வாழ்க்கையனுபவமென மாறாமல் வெறுமே ‘சொல்லப்பட்டதாகவே’ நாவலை நிறுத்திவிடுகிறது

இ.அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இந்த வகையான வடிவம் கவித்துவத்தின் வல்லமையால் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இந்நாவலில் அந்த தன்னெழுச்சியான கவித்துவம் நிகழ்ந்திருக்கவேண்டும். அது நிகழாமையால் ஒருவகை பயிற்சியெனவே நின்றுவிடுகிறது.அனைத்துக்கும் அப்பால் இது முக்கியமான ஓர் இலக்கிய முயற்சி.

 

  1. மூத்த அகதி – வாசு முருகவேல்

 

ஒரு வாழ்க்கைச்சூழலை மட்டும் சொல்லி, பிற அனைத்தையும் வாசகனே ஊகிக்கவும் விரிவாக்கவும் வைத்துவிட்டு நின்றுவிடும் நவீனத்துவபாணி நாவல் இது. ஈழத்துக்கான விடுதலைப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் வந்து தங்கியிருக்கும் அகதிகளின் வாழ்க்கையின் சித்திரம். ஒரு கொத்து மனிதர்கள். அவர்களின் உறவுகள். ஒவ்வொருவரும் இன்னொருவருடன் மெல்ல தொட்டு உரசி விலகி தொட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்குமேல் என அரசியலின் ஒழுக்கு. ஒரு கொலை. அவ்வளவுதான்.

இந்நாவலின் கலைவெற்றி என்பது இது நேரடியாக வாழ்க்கையை தன் ஊற்றுமுகமாகக் கொண்டுள்ளது என்பதே. பிற எழுத்துக்களில் இருந்து, இலக்கிய அலைகளில் இருந்து, அரசியல்கொள்கைகளில் இருந்து எழுத்து உருவாக்கப்படுவதற்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.எத்தனை போதாமைகள் இருந்தாலும் நேரடியாக இத்தகைய எழுத்து வாசகனை ஒரு வாழ்க்கைக்குள் இட்டுச்செல்கிறது.

இலக்கியம் ஏன் எழுதப்படவேண்டும் என்னும் கேள்விக்கு விடையென முதலில் அமைவது இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் பிறிதொன்றிலாத பார்வைக்காக என்பது. பொதுப்புத்தியாலோ, அரசியலாலோ அளிக்கப்படும் சித்திரங்களை திரும்பவும் அளிக்க இலக்கியம் தேவையில்லை.ஆகவே எத்தனை இலக்கிய அழகியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இலக்கியம் வாழ்க்கை சார்ந்த நுண்சித்தரிப்புகள் மற்றும் ஒட்டுமொத்த பார்வை வழியாகவே அர்த்தம் கொள்கிறது.

இந்நாவலில் ஒட்டுமொத்தப்பார்வை இல்லை. ஆனால் நுண்சித்திரங்கள் நிறைந்து நாவலை ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்டவையாக ஆக்குகின்றன. நவீனத்துவ உள்ளம் வாழ்க்கையின் துயரங்களைக்கூட தன்னிடமிருந்து சற்று விலக்கிப் பார்க்கிறது. விலக்கப்படுவன அனைத்தும் வேடிக்கையாகிவிடுகின்றன. இந்நாவலில் மெல்லிய குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பகடிதான் இதை கலைப்படைப்பாக ஆக்குகிறது

ஆனால் அந்தப்பகடி ஆசிரியர் குரலாக அல்லது பார்வையாக வெளிப்படவில்லை. பெரும்பாலும் எங்கோ எவரிடமோ வெளிப்படும் ஒற்றைக்குரலாக ஒலிக்கிறது. கல்யாணப்புகைப்படம் எடுப்பவர் “இப்ப எல்லாம் மூன்றுமுடிச்சு இல்லதானே?” என உறுதிப்படுத்திக்கொள்கையில், “கொஞ்சம் நேச்சுரலா இருங்க தங்கச்சி, உன்ர மனுசன்தானே?” என்று ஊக்கப்படுத்துகையில் “கீழ வாறியளா, இல்ல அம்மாவுடன் நான் மேலே வரவா?” என புதுப்பெண் “ஸ்பொன்ஸர்’ செய்யும் கணவனை மிரட்டுகையில் சட் சட்டென்று முகங்கள் நம் முன் மின்னிச்செல்கின்றன. சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் கதைகளின் அழகியல்பு இது. கலையால் மட்டுமே பொருட்படுத்தப்படும் பெயரிலா எளிய மானுடர் அவர்கள்.

அகதி வாழ்க்கையின் முக்கியமான சிக்கல் என வாசு முருகவேல் இங்கே காட்டுவது சம்பந்தமே இல்லாமல் பண்பாடுகள் கலந்து திரிபடைந்து ஒரு கேலிக்கூத்து நிலையை அடைவதைத்தான். ஓர் ஊரில், ஒரு நிலத்தில் உருவாகி நிலைகொண்ட பண்பாடு முற்றிலும் சம்பந்தமற்ற நிலத்தில் அபத்தமாக வந்து நிற்கிறது.

ஏனென்றால் எந்தப் போரிலும்  மானுடர் வாழ்ந்தாகவேண்டும். புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கே குடியுரிமை பெற்று, நாற்பது வயதுக்குமேல் உள்ளூர் அகதிகளுக்கு பிரெஞ்சு ஒயின் ‘போத்தல்’களுடன் சென்னைக்கு வந்து, இங்கே அகதிப்பெண்ணை திருமணம் செய்து ஸ்பான்சர் செய்து கூட்டிச்செல்ல வேண்டும். அவள் தன் குடும்பத்தையே கூட்டிச்செல்ல முயல்வாள்.

அந்த திருமணங்களை இங்கே நாடக ஒழுங்குடன் செய்துவைக்கும் அமைப்பு உருவாகிறது. பலநூறு திருமணங்களில் ஒரே அப்பா வந்து நின்று சட்டத்தையும் வரலாற்றையும் காமிராவையும் நோக்கிப் புன்னகைக்கிறார். வரலாறு புகைப்படங்களின் அடிப்படையில் எழுதப்படுமென்றால் ஒரு பின்நவீனத்துவ பைத்தியக்கார வரலாறு எழுதப்படும்.

”கனம் போலீஸ் ஐயா அவர்களுக்கு” என பணிந்து போலீஸாருக்கு கடிதம் எழுதி மாதாமாதம் சென்னையில் தங்கும் அனுமதி பெறப்படுகிறது. திரும்பத்திரும்ப எம்ஜியார் நகர், திநகர் என சென்னையின் சிக்கலான பரமபத தெருக்களில் அலைச்சல். இதன் நடுவே ஊமைக்காமம். போரே திரிபடைந்துவிடுகிறது. எந்தப்போதையிலும்”புலி ஏண்டா உன்னை அடிச்சது?” என்று கேட்டால் போதை இறங்கிவிடுகிறது.

”திருமணம் ஆகவில்லை ரிஜிஸ்ட்ரேஷன் ஆகியிருக்கிறது” என்கிறது ஒரு கதாபாத்திரம். இரண்டுக்கும் நடுவே “பாரிய” வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால் பெண் தொடப்படாமல் கனடாவில் இருக்கிறாள். சுற்றிச்சுற்றி இந்த அபத்தவுலகுக்குள் அலையும் கதை சென்னையின் நான்கு தெருக்களில் வழியறியாமல் திகைத்து, ஒருகட்டத்தில் அந்த அபத்தத்தை எண்ணி நாமே சிரித்துக்கொள்ளும் அனுபவத்தை அளிக்கிறது.

நுண்சித்தரிப்புகளே இந்நாவலின் ஆற்றலை உருவாக்குகின்றன. “தோசையைப்போல முகமெங்கும் துவாரங்கள்” என்னும் இயல்பான வர்ணனை. “ஒரு மயிர் கொட்டேல்ல பாரும். காலையிலே வெந்தயம் வெறுந்தண்ணியிலே போட்டு விழுங்கோணும்” என அரைப்போதையில் சலம்பிக்கொள்பவரின் வீராப்பின் அசட்டுத்தனம். புன்னகையும் கசப்புமாக படித்து முடிக்கவேண்டிய ஒருநாவல் இது.

திரிபின் கதை என இதைச் சொல்லலாம். அகதிவாழ்க்கைக்குள்ளும் என்ன ஏது என தெரியாத அரசியல். தொடர்ந்து ஒரு படுகொலை. அதன்பின் போஸ்டரை பார்க்கும் ஈழ அகதி “இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்” என்ற வாசகத்தை வாசித்து “ஈழ இனப்படுகொலைக்கு” என்றல்லவா இருந்திருக்கவேண்டும் என, பெரிய அக்கறை ஏதும் இல்லாமல், நினைத்துக்கொள்கிறான். கண்ணெதிரே அந்த வரலாற்றையும் காலம் திரித்துவிட்டது.

இந்நாவலின் குறைபாடு என நான் எண்ணுவது முதன்மையாக பல அத்தியாயங்கள் முழுமையான ஒரு புனைவுப்பகுதியாக இல்லாமல் சிறிய காட்சிச்சித்தரிப்புகளாக, விவரணைத் துண்டுகளாக நிலைகொள்வதுதான். நாவல் ஒட்டுமொத்தமாக ஒரு கலைப்படைப்பு. ஆனால் எந்த நல்ல கலைப்படைப்பிலும் அதன் ஒவ்வொரு துண்டும் தனியான கலைப்படைப்பும்கூடத்தான். முழுமையடையாத ஓர் அத்தியாயம் வாசகனில் எந்த ஆழ்ந்த பதிவையும் உருவாக்காமல் கடந்து செல்லும்.

போதாமை என நான் எண்ணுவது, இது அகதிவாழ்க்கையின் அபத்தத்தை, பண்பாட்டு திரிபுநிலைகளை சொல்லிச் செல்லும்போதே ஒட்டுமொத்த வரலாற்றைப் பார்க்கும் பார்வையை நோக்கிச் செல்லவில்லை என்பது. வரலாறெங்கும் மானுடர் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு கணக்கில் அத்தனை மானுடரும் இடம்பெயர்ந்து குடியேறிய அகதிகளே. ஓடும் நதி ஆங்காங்கே தேங்கி கொஞ்சநாளுக்கு குளம் என ஆவதுபோலத்தான் நிலைத்த பண்பாடுகளும். தமிழ் மக்களில் ஒரு பெரும்பகுதியினர் இன்று நகரங்களுக்கு குடியேறுகிறார்கள். நகரங்களில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்கிறார்கள். இந்த பெயர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

புகழ்பெற்ற மலையாள ஆசிரியர் ஆனந்த் எழுதிய அபயார்த்திகள் [அகதிகள்] என்னும் நாவல் மானுட இனத்தையே அவ்வாறு அடையாளப்படுத்துகிறது. தேசம், நிலம், பண்பாடு எல்லாமே மானுடர் எனும் அகதிகள் ஆங்காங்கே தங்குமிடங்களில் உருவாக்கிக்கொள்ளும் தன்னடையாளங்கள், அல்லது பாவனைகள் மட்டுமே என்கிறது.

இது ஒரு பார்வை மட்டுமே. ஆனால் இத்தகைய வரலாற்றுப்பார்வை, தத்துவப்பார்வை ஒரு நாவலில் வாசகனால் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய போதாமையால் இந்நாவல் கலைரீதியாக சற்று பழையதாக உள்ளது, ஆனால் நேர்மையான வாழ்க்கைப்பதிவு என முக்கியமானது.

*

இந்நாவல்களை நான் வாசித்த தரவரிசைப்படி அடுக்கியிருக்கிறேன். முதற் பரிசுக்குரிய நாவலாக வாசு முருகவேலின் மூத்த அகதியை தெரிவுசெய்கிறேன். இரண்டாமிடம், ஏறத்தாழ அதற்கிணையான இடத்தில் அல் கொசாமா.  மூன்றாமிடம் உடல் வளர்த்தான்.

மற்ற ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இலக்கியத்தில் சற்றும் உளம்சலிக்காத முயற்சிகளுக்கே வெற்றிகள் அமைகின்றன. அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டுமென விழைகிறேன்.

முந்தைய கட்டுரைஒற்றை சம்பவம்- ஜா.தீபா
அடுத்த கட்டுரைபெருந்தேவிக்கு இலக்கியத் தோட்ட விருது