இனிய ஜெயம்,
ஆசிரியர் அட்டன்பரோ மொழிபில், டாம் பெயர்ட் இயக்கிய The year earth changed எனும் முக்கிய ஆவணப் படம் கண்டேன். கடந்த ஆண்டு உலக முடக்கம் உச்சத்தில் இருந்த பொழுதில் கானுயிர் வாழ்முறையில் அது நிகழ்த்திய மாற்றத்தை வெவ்வேறு நாடுகள் சென்று அதை ஆவணம் செய்து அட்டன்பரோ குரலில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டாம்.
இந்தியாவில், மாசு குறைந்து 200 கிலோ மீட்டர் கடந்து வெறும் பார்வைக்கு முதன் முதலாக தென்பட்ட இமயமலைத்தொடரின் அந்தத் தருணக் காட்சியில் துவங்கி நிறையும் வரை அந்த முக்கால் மணி நேரமும், நகர சாலையை குட்டிகளுடன் கடக்கும் பென்குயின் குடும்பம், நகர பங்களா காம்பௌண்ட் சுவரில் சாடி ஏறி நிற்கும் பியுமா, அகஸ்மாத்தாக வீட்டு தோட்டத்தில் நீர்விலங்கு ஒன்றினை பார்த்துவிட்டு கூப்பாடு போடும் வீட்டு நாய், என திடுக்கிட வைத்துப் பரவசம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே கொண்டு நகர்கிறது ஆவணம்.
தென் ஆப்பிரிக்கா சொகுசு விடுதி ஒன்றின் தோட்டத்தில் வைத்து சிறுத்தை தனது மான் வேட்டையை நிகழ்த்தும் (வெறும் ஐந்தடி தொலைவில் நின்று சிறுத்தையை கண்ணுடன் கண் நோக்கி படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்) காட்சி, தினத்துக்குப் பல்லாயிரம் பேர் வந்து போகும் இப்போது ஆளரவம் அற்ற மியாமி கடற்கரையில் தனது வாழ்நாளில் முதன் முறையாக முட்டையிட வரும் ஆமைகள் குறித்த காட்சி என, (எஸ்ரா வின் சொல்லை கடன் வாங்கினால்) வியப்பூட்டும் தருணங்கள் கொண்ட ஆவணம்.
ஆவணம் காட்சிப்படுத்தும் பலவற்றில் என்னைக் கட்டி வைத்த முக்கிய தருணங்கள் இரண்டு. ஒன்று ஆப்ரிக்கா வில் சிறுத்தைகளின் பெருக்கம். இரண்டு அலாஸ்கா பகுதியில் திமிங்கலங்கள் பெறும் விடுதலை. ஆப்ரிக்காவில் சிறுத்தையை அதன் வாழ்விடத்தில் வைத்தே மக்கள் வேடிக்கை பார்க்க வழி செய்வது அங்குள்ள முக்கிய வருமான வழிகளில் ஒன்று. அது எந்த அளவு தீங்கு பயப்பது என்பதை இவ்வாவணம் அட்டன்பரோ குரலில் விளக்கி, விடுதலையை காட்சிப் படுத்துகிறது.
குட்டி போட்ட அம்மா சிறுத்தை, குட்டிகளை புதர் மறைவில் நிறுத்தி விட்டு வேட்டையாடும். வேட்டையாடிய இரையை இழுத்துக்கொண்டு குட்டிகளை நோக்கி வருவதற்குள், கழுதைப் புலி போன்ற பிற விலங்குகள் வன நீதியின் படி வேட்டை உணவை பறித்து சென்று விடும். சில சமயம் அம்மா விலகிய சூழலில் குட்டிகள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். குட்டி போட்ட சிறுத்தை சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வேட்டையாடும். ஆனால் இப்போது நிலவரம் தலை கீழ். தொலைதூரம் ஓடி வேட்டையாடிய இரையை பிற விலங்குகள் அணுகா வண்ணம் காலில் காவியபடி, அம்மா சிறுத்தை கிளி போல மெல்ல ஒரு ஒலி எழுப்புகிறது. இரண்டாவது ஒலியில், தூரத்தில் மறைந்து நிற்கும் குட்டிகள் அம்மா வசம் ஓடி வந்து இணைந்து கொள்கின்றன. இணைந்து உண்கின்றன. இந்த ஒலியை எழுப்ப, அப்படி எழுப்பி அது குட்டிகளை அடைய, இடையூறாக இந்த நாள் வரை இருந்தது, பார்வயாளர்கள் இடையூறு. அருகி வரும் சிறுத்தை இனத்துக்கு இந்த இடையூறு என்பது அந்த இடரை அதிகரிக்கும் ஒன்றே.
கடலிலும் இதே நிலை. தொடர்ந்து கடல்பரப்பு நெடுக விரையும் கப்பல்களின் படகுகளின் ப்ரோப்பல்லர் சுழற்சி திமிங்கலங்களை பாதிக்கிறது. விளைவு குட்டிகள் அம்மாவை விட்டு எங்கும் பிரிவதில்லை. இப்போது மொத்த கடலிலும் முதன் முறையாக தங்கள் விடுதலையை கொண்டாடுகின்றன அப் பெருயிர்கள். குட்டிகள் அம்மாவை விட்டு வெகு தூரம் விலகி சென்று, தனது பசிக்கான வேட்டை போன்ற சுய நடவடிக்கைகளில் தாமே ஈடுபடுகின்றன. அவர்களுக்குள் இத்தகு சூழலில் முதன் முறையாக நிகழும் மொழிப் பரிமாற்றத்தை ஒலிப்பதிவு செய்யும் நிபுணரின் பரவசம் அலாதியானது. இவை போன்ற தருணங்கள், ஒலி வடிவமைப்பு, மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி இசையும் இந்த ஆவணத்தின் பெரும் பலம்.
ஆவணத்தின் இறுதி பகுதி மிக முக்கியமானது. இந்தியாவில் கங்கையில் பிராண சக்தி ஐம்பது சதமானம் கூடி இருக்கிறது என்கிறது. அசாமில் ஒரு கிராமத்தில் தொடர்ந்து யானைக் கூட்டம் வயலில் இறங்கி நாசம் செய்யும் சூழலை, (ஒரு காட்டு யானை சராசியாக நாளொன்றுக்கு 25 கிமி நடந்து 150 கிலோ உணவை உண்ணுமாம்.) அந்த கிராமம் இந்த முடக்க சூழலில் அந்த நிலையை தலைகீழாக மாற்றி இருக்கிறது. முடக்க சூழலில் இந்தியாவின் எல்லா பகுதியில் இருந்தும் வேலை இழந்து திரும்பி வந்தவர்கள் அந்த குறிப்பிட்ட கிராமத்தில், கிராமத்து வயலுக்கும் காட்டுக்கும் இடையே யானைக் கூட்டம் உண்பதற்காக வேண்டியே தனியே ஒரு விவசாயம் செய்கிறார்கள். அற்புதமாக யானைகள் அவற்றைப் புரிந்து கொண்டு, அவற்றை மட்டும் உண்டு விட்டு காட்டுக்குள் திரும்பி செல்கின்றன. கிராமத்துக்குள் வந்த யானைக் கூட்டத்தை விரட்டிய காலம் போய், கிராமத்தினர் யானைகளுக்கு விளைவித்த உணவை, அவற்றை அவை உண்ண வர வேண்டி பாடல்கள் பாடி வரவேற்கிறார்கள். இவற்றை முன்னெடுத்து செய்த பெண் ஒன்று சொல்கிறார்.
யானைகளை நீங்கள் விரும்பினால்,
யானைகளும் பதிலுக்கு உங்களை விரும்பும்.
மிக எளிய சொற்கள்தான், ஆனால் காட்சியாக இதை கண்ட பிறகு அந்த சொல்லைக் கேட்டால் வரும் பரவசம் இருக்கிறதே அதை விவரிக்கவே இயலாது. எந்த போதமும் இன்றி, அற உணர்வும் இன்றி மானுடம் பறித்த கானுயிர்களின் வாழ்விட எல்லையை கானுயிர்கள் மீண்டும் கண்டடைந்து திளைக்கும் பரவசத்தை காட்சியாக்கிய இவ்வாவணம் நிறைந்த அமைதியில், வந்து இடி என விழுந்தது கோவையில் இரண்டு ஆண் யானைகள் உட்பட மூன்று யானைகள் ரயிலால் அடிபட்டு உயிர் போன சம்பவம்.