சுஷில்குமாரின் கதைகள்- இரம்யா

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

மூங்கில் வாங்க

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

சுஷிலின் இந்தத் தொகுப்பில் “அப்பா” எனும் பிம்பம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. எந்தவொரு ஆண் கதாப்பாத்திரத்திலும் அந்த அப்பாவின் தன்மை ஓங்கியிருக்கிறது. அதைக் கண்ணுறும் ஓர் சிறுவனாக இளைஞனாக, சில சமயம் அந்த அப்பாவாகவே என அப்பா கதைகளில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

மூங்கில் காடுகளின் இளம்பசுமை ரம்மியமானவை. புல் வகையைச் சேர்ந்தவை எனினும் எந்தப் புல்லை விடவும் உயரமானவை. கலைஞர்களும் மூங்கில் போன்றவர்கள் தான். எல்லா வகையிலும் அன்றாட மனிதர்களை விட ஒரு படி மேல் எனலாம். வயிற்றுப்பாட்டுக்கும் சேர்த்தே கலைஞனாக அல்லாத அப்பாவினுடைய கதை. கலையின் உச்ச சாத்தியத்தில் அவர் அடையும் மகிழ்வும் நிறைவும் அதைக் கண்ணுறும் மகனுமென உணர்ச்சிகரமான கதையாக அமையப்பெறுகிறது மூங்கில்“.

கெவுரவும்” சிறுகதையில் நாராஜாவின் அப்பா அவனிடம், “மனுசங்க தான் மொக்கா முக்கியம்… பணம் காசு மயிரெல்லாம் தானா வரும். நம்மளுக்கு நாலு பேரு செஞ்சாம்ல மொக்கா?.. ” … “எனக்குப் பொறவு ஒனக்கு நாலு பேரு வேணும்லா டே? ” என்கிறார். தன் அப்பாவின் வார்த்தைகளால், அவர் வாழ்ந்த வாழ்க்கையால் வளர்ந்த கள்ளங்கபடமற்ற நாராஜா வள்ளிநாயகம் போன்றோரை எதிர்கொள்ளும் கதையாக விரிகிறது.  கெவுரவம் பார்க்கும் சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், ஏமாற்றுப் பேர்வழிகளையும் எதிர் கொள்ளும் மீறல் கதையிது. ஆனால் அவர்களையும கனிவோடு எதிர் கொள்ளும் பக்குவம் அந்தத் தந்தையிடமிருந்து தான் அவனுக்கு வருகிறது. நாராஜாவின் கனிவின் வழி தெரிவது அவனின் அப்பாவின் சித்திரம் தான்.

பெற்றோர்கள், குலம், அவர்களின் தொழில், முன்வினைகள் என எதனையும் தேர்ந்தெடுக்கும்/ கட்டுப்படுத்தும் உரிமை நம்மிடம் இல்லை. தன் தந்தை செய்த வினைகளின் எதிர்மறைக் குறியீடாக சுருக்குக்கம்பி சங்கிலி என்ற மகனின் முன் நிற்கிறது. தந்தை சுமந்த வினையை அதன் விளைவாக வந்த ஏளனத்தை அவமானத்தை தன் அம்மாவின் சிதையில் கரைக்கும் அந்தப் புள்ளி வரை கதை நகரும விதத்தை ரசித்திருந்தேன்.

குழந்தைப்பேற்றுக்காக ஏங்கி நிற்கும் பாண்டா சுப்ரமணியத்தின் கதையாக பிறப்பொக்கும்” அமைகிறது. எதிர்பாராது இறப்பின் தருவாயின் விளிம்பிலிருக்கும் நான்கு வயதுக் குழந்தையைக் காப்பாற்றி பின் அதை பறிகொடுத்து தவிப்பவனாகவும், அதன் இறப்பிற்காக வருந்தும் தந்தைமை உணர்வு கொள்பவனாகவும் சுப்ரமணி இருக்கிறான். கிறுக்கியான பௌதியம்மையின் பிரசவத்தைப் பார்த்து அதைத் தானே வளர்க்க ஆசைப்படும் தருவாயில் தன் மனைவியால் வசைபாடப்படுகிறான். இறுதியில் குழந்தைக்காக அவளைப் பிரிந்து செல்லும் தந்தைமையை உணர்ச்சிகரமாகவும் அவளுக்கும் பௌத்தியம்மைக்கும் இடையேயான ஓர் உறவை விரித்துக் கொள்ள ஏதுவான வாசக இடமும் அடங்கிய கதை.

தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதையுமே அப்பா எனும் பிம்பத்தை முன்னிறுத்தக்கூடியதாகவே அமைந்திருந்தது. விவசாயத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட தாத்தா தான் ஊன்றி வைத்த விதையாக, தன்னுடைய விதையாக பேரனை வளர்க்கும் கதையாக விதை அமைகிறது. அவன் வாழ்க்கைக்கு உரமாக விவசாய நிலத்தை உயில் எழுதி வைத்துச் செல்லும் கதையிது. தாத்தாவின் ஆளுமையாக கதை நிரம்பி வழிகிறது.

தனக்கும் தாத்தாவின் வயிற்றிலுள்ள கோட்டைப்போலவே இரு கோடுகள் வேண்டுமெனக் கேட்கும் சூர்யாவுக்கும் தாத்தாவுக்குமான அன்பின் கதையாக இரு கோடுகள் அமையப் பெருகிறது. அந்த இருகோடுகளுக்குப் பின்னாலிருக்கும் கதை வலி மிகுந்ததாக மனதை நிறைக்கிறது. அதை சூர்யாவின் பொய்க் கோடுகள் இலகுவாக்குகிறது. வீட்டின் பெரியவர்கள் தங்கள் கடந்த காலத்தை அசைபோடுவது அனைத்தையும் உற்று நோக்கும் சிறுவர்களால் மட்டுமே நிகழக்கூடியது. எங்கள் வீட்டிலும் இத்தகைய கேள்விகளைக் கேட்டு பல கதைகளை நான் வாங்கியிருக்கிறேன். அவைகளை அசைபோட்டிருந்தேன்.

அம்மாக்களை பிராதனமாகக் கொண்ட இரு கதைகள் இருக்கின்றன. இரண்டுமே வீட்டிலேயே முடங்கி குடும்பத்தைச் சுற்றிச் சுழலும் பிரச்சனைகளால் முற்றிலுமே வலியாலும் புலம்பலாலும் நிறைந்துகிடக்கிறது. அக்னி சிறுகதையில் அது அம்மாவின் வழி பொங்கி வருகிறது. வெண்முரசின் சுனந்தையின் காமத்தின் அக்னியை நினைவுகூறக்கூடிய அக்னியாக இந்த அம்மையின் தீ அமையப் பெறுகிறது. இருபத்திமூன்று வயதில் கணவனைக் கைவிட்டு எந்தத் தவறும் செய்யாமல் சதா “தேவடியாள்” என்ற வார்த்தையைக் கேட்டு மனங்குமைந்தவளின் அக்னியை இந்தச் சிறுகதையில் தவழவிட்டிருந்தார். “இன்னைக்கு ஒனக்கு நாலுவேரு இல்லாம ஆயிட்டுல்லா? ” என்று கவலைப்படும் அம்மையைப் பிடித்திருந்தது. அம்மையின் கர்பப்பையைக் கண்டு “… அப்படி நீந்திப் பிழைத்த சிறு மீன்குட்டி தானே நானும்” என்று அதன் வெதுவெதுப்பில் உருகும் மகனையும் பிடித்திருந்தது. அம்மை தன் அக்னிக்கான மீட்பை ‘அக்னி ரொசாரியோவில்’ கண்டடைந்ததில் மகிழ்வெனக்கு. அக்னியால் தகிக்கும் அத்தனை அம்மாக்களையும் வீட்டுப் பெண்களையும் இங்கு கண்டேன். அந்த நெருப்பை எந்த நீர்மையாலும் குளிர்மையாலும் அணைக்க முடியாதுதான். நெருப்பால் மட்டுமே அணையக்கூடியது. அதைக் கண்டேன்.

சாபம் சிறுகதையின் அம்மா முற்றிலும் எதிர்மறை சித்திரமாக இருப்பவர். அவருடைய நாவைக் கண்டும் அதிலிருந்து பிறப்பெடுக்கும் காட்டமான சாபத்தைக் கண்டும் பயப்படும் கதையாக ஆரம்பித்து நகைச்சுவையான கதையாக நிறைவுற்றது.

பாலுணர்ச்சிகள் மிக எளிதாக நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடியவை. அதைப் பற்றிய அப்பட்டமான விவரணையில்லாமல் மனித அகத்தின் வழி உள் நுழைந்து அதன் பலவீனத்தின் நுண்மைகளை விரித்து விசாரணை செய்யும் சிறுகதை “புத்துயிர்ப்பு“. உண்மையில் வாசிப்பவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கக்கூடியது தான். ரோமன் கத்தோலிக்க கிறுத்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் பாவமன்னிப்பு வழங்குவார்கள். உண்மையில் அது மன்னிக்கபடுகிறதா என்பது தெரியவிலாலை. ஆனால் பிரகடனப்படுத்திக் கொள்வதாலேயே அது மனதிலிருந்து விடுதலை கொள்கிறது. சுஷில் இந்தக்கதையின் வழி முப்பரிமாண பாவ அறிக்கையை விரித்துக் கொண்டே சொல்கிறார். இறுதியில் யாரும் சரி என்றோதவறென்றோ மதிப்பிட்டுக் கொள்ளவியலாத அளவு என் சலனங்களெல்லாம் என் முன் வந்து நின்றன. இடையிடையே வரும் கிறுத்துவ வரிகள் ஆற்றுப்படுத்தின. ஒட்டுமொத்தமாக இந்தக் கதை என்னை அணைத்து புத்துயிர்ப்பு அளித்தது. மேலும் விரித்துச் சொல்லவியலாது மனமென்னும் கள்ள மிருகத்திற்கு அணுக்கமான கதை.

தான் சார்ந்திருக்கும்/ தன்னைச் சூழ்ந்திருக்கும் மரபையும் தொன்மத்தையும் அதன் கடவுள்களையும் சடங்குகளையும் அதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதர்களையும் தன் புனைவின் வழி சுஷில் காணிக்கிறார். அப்படியான கதைகளாக “சுவர்மாடன்”, “பச்சைப்பட்டு”, “பட்டுப்பாவாடை” ஆகியவற்றைக் காண்கிறேன்.

விடியவிடிய நடக்கும் வில்லுப்பாட்டு கதை சொல்லலை எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் கிடைத்த உக்கிரமான புனைவுக்கதைகள் வில்லுப்பாட்டின் வழி தான். பாய்விரித்து அங்கேயே படுத்துத் தூங்கினாலும் கனவிலும் அதன் சன்னதம் கேட்டுக் கொண்டே இருக்கும். பெரும்புலையன் காளிப்புலையன், மகள் மாவிசக்கி மற்றும் மாயாண்டி சுடலை மாடனுக்கிடையே நிகழும் ஆடலின் வில்லுப்பாட்டு உக்கிரமானது. வில்லுப்பாட்டின் வரிகள் மட்டும் சன்னதம் வந்து அவர் எழுதியது போல இருந்தது.

“… மாவிசக்கி எப்படிப் புலம்புகிறாள் ?

எப்டி , எப்டியம்மா புலம்புகிறாள் ? .. எந்தகப்பா பெரும்புலையா ..

என்ன மோசம் வந்ததடா ? ..

எந்தகப்பா பெரும்புலையா ..

என்ன மோசம் வந்ததடா ? ..

சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே …

சண்டாளப் பண்டாரம் சொன்ன வார்த்தை பலித்திட்டதே .. ”

எனும்போது சுஷில் வில்லுப்பாட்டுக்காரராக போட்ட வேடம் நினைவிற்கு வந்தது. அது ஒரு உக்கிரமான வேடம். இந்த வில்லுப்பாட்டின் உச்சியில் அப்பா சுவர் எழுப்ப ஒத்துக் கொண்டதும் சுவர் எழுப்பிய பின்னும் ஹோஸ் பைப்பின் வழி வெறித்துப் பார்க்கும் சுடலை என புனைவுக் காட்சிகள் அருமையாக இருந்தது. கன்னிக்கு வைத்து கொடுக்கும் நாளில் மகன்மினிப்பூச்சி வந்து அமரும் என்ற குடும்பத்தார்களின் நம்பிக்கை இனியான ஒன்றாக இருந்தது. சிறுவனான கதைசொல்லியின் வழி வில்லுப்பாட்டின் கதைக்கு இணையாகவே ஓர் நிதர்சன வாழ்க்கையில் பயணம் செய்யும் கதையாக “சுவர்மாடன்” அமைந்தது.

குல தெய்வத்திற்கு பலி கொடுத்தல், முன்னோர் சாபத்திற்கு பரிகாரம் செய்தல், நேர்ச்சை செய்தல் என்பவை எல்லாம் நாட்டாரியல் நம்பிக்கைகளில் உள்ளடங்கியது. ஒரு குடும்பத்தில் நிகழும் தொடர் மரணமும் அதன் வேரைச் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதையும் இணையாகப் பயணித்து வாசகனைப் போல அனைத்தையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கும் கதைசொல்லி தெய்வம் ஏறப்பெற்று படையலைத் திண்ணச் செய்து உச்சத்திற்கு கொணாடு செல்கிறார். செண்பகராமன்புதூரத்துக் கொட்டாரமும் சித்திரை முழுநிலவில் இளவரசியும் மாந்த்ரீகமறிந்த காதல் தூதுவனும் அவர்களின் நிறைவேறாத காதலும் சாபமும் அதன் நிகழ் தொடர்ச்சியுமென மிகப்பிடித்த கதை.

” மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ

எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ

பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி

சுட்ட சொல்லு வெலக்கு தாயி

சுட்ட சொல்லு வெலக்கு தாயி

புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே

நல்ல கோழி நாலு தாறேன் , உச்சிக்கு செங்கிடா தாறேன்

பச்சமுட்ட வெட்டித் தாறேன் , தடியங்கா கீறித் தாறேன்

கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ

குழி நெறைய வள தாறேன் , பிச்சிமால கெட்டித் தாறேன்

பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி

கருமாரி முத்தாரம்மா

பத்ரகாளி காட்டாளம்மா

கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு

கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு”

“ஏய் ஏய் பண்டாரக் கொடலுருவி… பண்டாரக் கொடலுருவி… ”

என்ற நாட்டார் வழக்காற்றியல் பாடல் தெய்வம் ஏறப்பெற்று பாடப்பட்டதான உணர்வைத் தந்தது பச்சைப்பட்டு எங்கோ ஒற்றைப் பனைமரத்தின் அடியில் நின்று பலி கேட்கும் எங்கள் குலதெய்வத்தின் கதை தான் என்று கண்டேன்.

கொரனா ஊரடங்கு காலத்தில் எத்தனையோ விதமான மனிதர்களின் துயரத்தைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் அது உணவு, பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் சார்ந்தது. ஆனால் நீலகண்ட போத்தி எனும் பித்தைப் போன்ற ஒரு பிரச்சனையை நான் யோசித்தது கூட இல்லை. ஒரு எழுத்தாளன் தான் இந்த நுண்மையான பித்தைக் கண்டடைய முடியும் என்று நினைத்தேன். பகவதிக்கு நித்தமும் புத்தாடை உடுத்தி அலங்காரம் செய்யும் போத்தி கொரனா காலத்தில் அது இல்லாது தவிப்பதுமென அவரின் கையறுநிலையைக் கடத்தியிருந்தார். ஒரு தொழிலை கடமையாகச் செய்பவனுக்கும் பித்தின் உச்சியில் மிக விரும்பிச் செய்பவனுக்குமான வித்தியாசத்தின் நுண்மையது.

முதன் முறையாக பள்ளி சுற்றுலாவின் போது கன்னியாகுமரி பகவதியைக் கண்டேன். ஏதோவொன்று என்னை அவளின் தரிசனம் ஈர்க்கச் செய்தது. அது அவளது மூக்குத்தியின் சுடரொளி தான் என்பதை சமீபத்தில் இரண்டாவது முறையாக சென்ற போது தான் கண்டடைந்தேன். அவளின் தரிசனத்தோடு மங்களமாக முடியும் கதையாக பட்டுப்பாவாடை” சிறுகதை நிறைவக அமைந்தது.

கதைசொல்லியாக அமைந்த குட்டி சுஷிலும், இளைஞனாகிய சுஷிலும் கூட்டிச் செல்லும் நாஞ்சில் நிலமும், அவனைச் சூழ்ந்திருக்கும் அம்மைகளும், அப்பன்களும், மனிதர்களும், கடவுள்களும் நம்பிக்கைகளும், உணர்வுகளும் மனதிற்கு அணுக்கமாகியிருக்கிறது இந்த “மூங்கில்”. இனிமையான அனுபவமாக அமைந்தது.

-இரம்யா


விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைசெல்வேந்திரன் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…