ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம்
அன்புள்ள ஜெ
அ.முத்துலிங்கம் அவர்களின் ஆட்டுப்பால் புட்டு சிறுகதையை வாசித்தேன். நான் வாசித்த அவரது முதல் கதையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சுட்டிக் கொடுத்த போது வாசித்தது. அன்று அவரது கதையுலகுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. இப்போது மீண்டும் எழுத்தாளர் சுசித்ரா அக்கா அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தை வாசிக்கையில் மீள் வாசிப்பு செய்தேன்.
அவரது கதையுலகில் நுழைவதற்காக தங்களின் கட்டுரைகளை தேடியதில் புன்னகைக்கும் கதைச்சொல்லி என்ற கட்டுரையை கண்டுகொண்டேன். தங்களுடைய அந்த ஒரு கட்டுரை அ.முத்துலிங்கம் அவர்களை வாசிக்க தொடங்கியுள்ள எனக்கிருந்த ஆரம்பக்கட்ட பிழைபுரிதல்கள், அறியாமைகள் என அனைத்தையும் நீக்கிவிட்டது.
இப்போது மீண்டும் வாசிக்கையில் ஆட்டுப்பால் புட்டு எத்தனை அருமையாக இருக்கிறது என ரசிக்கத் தொடங்கிவிட்டேன். கதை முழுக்க அந்த புன்னகை ஓடி வருகிறது. ஆனால் எங்கும் எதையும் கீழிறக்கவும் செய்யவில்லை. புறவுலகை மட்டுமே சொல்லும் கதைச்சொல்லி நுட்பமாக தகவல்களை அடுக்குவதன் மூலம் கதாபாத்திரங்களின் குணசித்திரம், கதையின் தரிசனம் ஆகியவற்றை வாசகனையே தேடி எடுத்துகொள்ள சொல்லி விடுகிறான்.
கதையின் மையமான சிவப்பிரகாசம் நடுத்தர வயதை தாண்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த தந்தை. நல்ல மனிதர், வசதியான குடும்பஸ்தர், நேர்மையான உத்தியோகஸ்தர். அவருக்கு ஆட்டுப்பால் புட்டு மிக பிடிக்கும். அவர் கொழும்பிலிருந்து யாழ்தேவி வருவதன் முக்கியமான நோக்கமே புட்டை ருசிக்க தான். ஆனால் அது ரகஸ்யமான காரணம் என்று கூறுகிறார் கதைச்சொல்லி. அவர் ஏன் அதை வெளிப்படையாக சொல்லி கொள்வதில்லை? அந்த மாறியான விஷயங்களை வெளியில் சொல்வது ஒரு கூச்சமும் வெட்கமும் நிறைந்த காரியம். நமக்கு மிக முக்கியமாக தோன்றும் இந்த விஷயங்களை பிறர் மலிவாக காண்பது ஒரு பொது விடயம்.
கதையை நகர்த்தும் இரண்டாவது பாத்திரங்களான நன்னனும் அவன் மனைவியையும் பற்றி கொடுக்கப்படும் சித்திரங்களை கூர்ந்து வாசித்து எடுக்க வேண்டியுள்ளது. நன்னனை பற்றி சொல்கையில் சாதுவானவன், சொன்ன வேலையை செய்துவிட்டு கொடுத்த காசை வாங்கி கொள்ளும் அப்பிராணி, படிப்பு ஏறாத மந்தப்புத்தி காரன் என வர்ணித்து சொல்லும் கதைச்சொல்லி அவன் கூற்றாக கூறும் இந்த சொற்றொடர், ”அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்க வேண்டும். இந்த ஊர் ஆலமரத்தை பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று” சிவபிரகாசத்திற்கு ஆச்சர்யமளிப்பதுடன் எளிய மனிதர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது.
மனிதர்கள் பேசுவதை கவனிக்கையில் ஒன்று தெரியும், அவர்கள் பேசும் அத்தனை விஷயங்களிலும் அவர்கள் தங்களை உள்ளுர என்னவாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்து கொண்டே இருக்கும். திருமணத்திற்கு பின்னான நன்னனின் மாற்றமும், அவன் ஆட்டை திருடிச்சென்றதும் இறுதியில் பத்துமா வசவு பொழிகையில் கண்டு கொள்ளாமல் அவன் செல்வதும் சிவப்பிரகாசத்திற்கு வியப்பை தந்து கொண்டே இருப்பதற்கான காரணம். கதைச்சொல்லியின் கூறலாக சிவப்பிரகாசத்தின் மன எண்ணமாக வெளிப்படும், ‘எட்டாம் வகுப்பு நன்னனும், பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு ஒன்றும் பட்டப்படிப்பு தேவையில்லை.’ என்ற வரிகளில் பொதிந்து உள்ளது. இதிலுள்ள அந்த எள்ளல் கலந்த நகைச்சுவை கொடுப்பவரான சிவப்பிரகாசத்தின் கண்களை வாங்கும் நன்னனின் மனநிலையை அறிவதை தடுத்து விடுகிறது. ஏனெனில் எப்போதும் பெற்று கொள்பவனின் அகத்தின் ஒரு பகுதி கொடுப்பவன் மேல் வஞ்சம் கொண்ட படியே தான் உள்ளது. மேலும் நன்னனை போன்றவர்களை பற்ற வைக்க எப்போதுமே ஒரு பத்துமா தேவைப்படுகிறாள்.
அதேபோல் கதையில் நீதிமுறையின் மிக நீண்ட விசாரணை முறையும் வழக்கு தொடுத்தவனையே வதைக்கும் நடைமுறையின் சித்திரமும் மென்மையாக சொல்லப்பட்டாலும் நம் நீதிமுறையின் மேலான வலுவான விமர்சனத்தை பதிவு செய்கிறது.
இறுதியாக பத்துமாவின் வசவுகளை சொன்னவுடன் தான் சிவப்பிரகாசத்தின் உண்மையான அதிகார நிலை தெரியப்படுத்தப்படுவது அவரைப் போன்ற ஒருவரின் நிலையில் உள்ளவருக்கு அது எத்தனை வலியை தரும் என காட்சியாக்கி காட்டுகிறது. அதற்கடுத்த வரியே வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் ஆட்டுப்பால் புட்டின் நினைவு வந்தது என கூறி முடிகையில் கதை வேறு தளத்திற்கு சென்று மானுடமளாவிய தரிசனத்தை காட்டி விடுகிறது.
அது கொடுக்கும் புன்னகை வாழ்க்கையை கனிந்து நோக்கி இங்குள்ள எவையும் ஒரு புன்னகைக்கு அப்பால் ஒன்றுமில்லை என கூறும் கனிந்த கதைச்சொல்லியின் தரிசனம் அல்லவா! ஆம் அந்த ஆட்டுப்பால் புட்டு பிறர்க்கு என்னவோ அது போல் தான் சிவப்பிரகாசத்திற்கு இந்த எளியவர்களின் கீழ்மையும். அதற்கப்பாலும் மௌனமாக அந்த புன்னகை மலர்ந்து இதழ் விரித்தபடியே உள்ளது.
அன்புடன்
சக்திவேல்