செல்வேந்திரன் – ஒரு கடிதம்

பாலைநிலப்பயணம் வாங்க

அன்பு ஜெ,

எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களின் பாலைநிலப் பயணம் படித்தேன். இத்துனை இனிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பாலைநிலப்பயணத்தை எழுத முடியுமா என்று நினைத்தேன். நீங்கள் ஆஜ்மீர் பயணத்தில் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. சென்றமுறை பாலைநிலப் பயணம் சென்றபோது செல்வேந்திரன் கேட்டார் “ராஜஸ்தான் பாலைன்னு சொன்னாங்க ஜெ, பசுமையாத்தானே இருக்கு?” நான் சொன்னேன். “பாலைவனம்தான். ஆனா நீ சாத்தான்குளம் உவரி அளவுக்கு எதிர்பாக்கக்கூடாது” புன்னகைத்துக் கொண்டேன்.

சென்ற வாரம் வேலைநிமித்தமாக பயிற்சிக்கு சென்னை வந்திருந்தபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கள்ளமில்லாத சிரிப்பும், வெடிப்பேச்சுகளும் என உற்சாகமான மனிதர் என்று நினைத்தேன். ஆழத்தில் பாலைவன மணல் போன்ற விரிவும் உணர்வும் தகிக்கும் ஒன்றையும் கண்டேன்.

பேச்சினூடாக எத்தனை புத்தகப் பரிந்துரைகள்… எத்துனை பிடித்த வரிகள்… கவிதைகள் என பகிர்ந்து கொண்டே இருந்தார்.  ஒரு தீவிர இலக்கிய வாசகருடன் செலவிடும் நேரம் வாழ்வில் இத்துனை நினைவுப்புதையலாக தங்கக்கூடியது என நான் நினைத்திருக்கவில்லை.

முதல் நாள் சந்திப்பிற்கு பிறகு தளத்தில் அவர் எழுதிய, அவரைப்பற்றி நீங்கள் எழுதிய, பிறர் எழுதிய கட்டுரை கடிதங்களையும் வாசித்தேன். அவருடைய உரைகளைக் கேட்டேன். அவர் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது. இத்துனை மூர்க்கமாக வாழ்வை நோக்கி செயல் ஒன்றால் பொங்கிக் கொண்டே இருக்க முடியுமா என்று ஆச்சரியமளித்தது. மிகுந்த மரியாதை வந்தது. அவர் எனக்கு பல புத்தகங்களைப் பரிசளித்தார். நான் தான் புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளித்திருக்கிறேன். புத்தகம் வாசிக்கும் நண்பர்களுக்கு அவர்களின் சுவைக்கேற்ற புத்தகங்கள்..வாசிக்காத நண்பர்களுக்கு அவரின் “வாசிப்பது எப்படி? ” புத்தகம் என வாங்கித் தந்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒருவர் பரிசளிப்பது இதுவே முதல் முறை. அந்த புத்தகங்களில் இருந்த “பாலைநிலப்பயணம்” மிகப்பிடித்திருந்தது.

உங்களுடைய பயணக்கட்டுரைகள் எப்போதும் எனக்கு அணுக்கமானவை. பயணப்பாதையைத்தாண்டி அதில் நீங்கள் கடத்தும் ஆழம், தத்துவம், நண்பர்களைப்பற்றி கடத்தும் சித்திரம் என மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தப்பயணத்தில் உங்களுடன் வந்த நண்பர்கள் வழியாக உங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் தோன்றுமொனக்கு. அந்த ஒரு சித்திரத்தை தரப்போகும் புத்தகமென அதை ஆரம்பித்தேன். ஆனால் செல்வேந்திரன் எனும் குதூகலமான ஒரு மனிதன் வழியே பாலையை துள்ளிக் கொண்டே ரசித்தது போன்ற உணர்வை அது தந்தது.

அவர் எழுதிக்கொண்டே செல்லும்போது தன்னையறியாமால் தன்னுள் ஆழ்கிறார்… அவர் அகத்தினின்று கள்ளமில்லாத உள்ளமொன்று வெளிப்படுகிறது. அதில் ஆழமும் அழகும் ஒருசேர இருக்கிறது… வலிந்து தன்னை மறைத்துக்கொள்ள முற்படுபவர் போல நகைச்சுவையை அதில் இட்டு நிரப்பி கடந்து நம்மை இலகுவாக்குகிறார்…

இந்தப்புத்தகத்தில் “தங்க உப்பளம்” பகுதியும் “துயரப் பெருவெளி” பகுதியும் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது.

இரவின் பாலை அனுபவத்தை அவர் எதிர்கொண்ட விதத்தை சொல்லிக்கொண்டே தன்னுள் அகழ்ந்து சென்று விட்டதான ஒரு உணர்வைத் தந்தது “தங்க உப்பளம்”

“ஒவ்வொருவரும் ஏதேதோ பேசினார்கள் . அனைத்தும் அனிச்சை . ஒவ்வொருவர் மனமும் கடத்தகாலத்தின் ஏதோ ஒரு தெருமுனையில் இறக்கி வைத்த துக்கமூட்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை உணரமுடிகிறது . கடந்து சென்ற காதல்கள் , நிறைவேறாத ஏக்கங்கள் , எதிர்பாராத துரோகங்கள் , சிதைந்து போன உறவுகள், இழந்து இளமை எண்ணியெண்ணி ஏங்கத்தான் எத்தனையை கொடுத்திருக்கிறது வாழ்க்கை ? நான் என் கடந்த காலத்தின் உக்கிரமான தருணங்களுக்குள் சென்று துயரத்தை மென்று கொண்டிருந்தேன் . ஜெயமோகன் சில புகழ்மிக்க காதல் சோகப்பாடல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இந்தத் தருணமும் நிலக்காட்சியும் இந்நேரத்தைய சிந்தனைகளும் வாழ்நாள் முழுக்க உடன் வரப்போகிறவை என உறுதியாகத் தெரிந்தது . தலையை உதறி உதறி நினைவுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். சிறிய பிழைகளின் வழியாக பெரும்பிழைகளை வந்தடைந்து சுற்றியுள்ளோருக்கெல்லாம் ஏமாற்றத்தையே அளித்த கடந்த காலத்தின் நினைவலைகள். இருளுக்குள் தலைகுனிந்து கண்களின் ஈரத்தை மறைத்துக்கொண்டேன். விதம் விதமான பெரிய கரிய வண்டுகள் மணல் வளைவுகளின் வழியே ஊர்ந்து கொண்டிருந்தன. பகலில் இவை எங்கிருந்தன? எங்கு செல்கின்றன? எதைத் தேடுகின்றன. பார்க்கும் யாவும் குறியீடுகளாகிக் கொண்டிருந்தன. அபாயம். எண்ணங்களை எண்டர் தட்டி எவளுக்காவது அனுப்பி வைத்துவிடுவாய் . ஜாக்கிரதை மேன். போனை எடுத்து ஜெ எடுத்த சில்அவுட் படங்களை விரலால் நகட்டி நகட்டி பார்த்தேன். நான் ஓடிக்கொண்டிருந்த போது எடுத்த படம் ஒன்று கவனம் ஈர்த்தது .

“பார்த்த இடமெங்கும்

கண்குளிரும்

பொன் மணல்

என் பாதம் பதித்து

நடக்கும்

இடத்தில் மட்டும்

நிழல் தேடி

என்னோடு அலைந்து

எரிகிறது

ஒரு பிடி நிலம்”

 

பிரமிளின் வரிகள் துலக்கமாக நினைவில் எழுந்தன. ”

இத்துனை நுணுக்கமாக ஒரு ஆணின் உள்நுழைந்து அந்த இரவின் பாலையை தரிசித்து விட முடியுமா என்றிருந்தது. தனியனும், தவிப்புமான ஒரு ஆண் எழுப்பிவிடும் தாய்மையின் உணர்வை என்னில் அது கடத்தியிருந்தது.

“துயரப் பெருவெளி” பகுதியில் ரான் ஆஃப் கட்சில் அஸ்தமனங்களையும் பார்க்கும் காட்சி கோபுரம் பற்றிய அவரின் சித்தரிப்பில் சிந்தனையில் அவர் ஆழும் தருணம் பிடித்திருந்தது.

“சிகரங்களுக்கு முன் நிற்கையில் இப்பேருருவிற்கு முன் என் எளிய ஆணவத்தின் பொருளென்ன என மனமடங்கும். இங்கோ வாழ்வின் அனைத்து அபத்தங்களையும் வெண்மணல் பரப்பு ஒன்று ரப்பரைப்போல் அழிக்கிறது. சிந்தை உப்புக்காற்றில் ஓடியோடி கரைந்தழிந்து போகிறது.” என்ற வரிகளுக்குப் பின் ரான் ஆஃப் கட்சின் காட்சியை, அங்குள்ள மனிதர்களை அங்கிருந்து விரிந்து செல்லும் அவரின் நினைவுகள், மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா, கடந்த காலங்கள் அவற்றையெல்லாம் இட்டு நிரப்பும் என் மனதிற்கும் அணுக்கமான பிரமிளின் வரிகள் என உணர்வு பொங்கி எழுதியிருக்கிறார். இலக்கிய வாசகனின் பித்தின் உச்சித்தருணமது. நேரில் காணவே முடியாத செல்வா வெளிப்படும் தருணமாக இந்தப் பகுதி அமைந்தது.

அவருடன் பேசும் யாரும் “திரு” “இளவெயினி” “ஜெயமோகன்” என்ற பெயர்களைக் கடக்காமல் சென்றுவிட முடியாது என்று தோன்றும். புத்தகத்தில் பயணத்தில் அவர்களுக்கு வாங்கிக் குவித்த பயணப்பையில் அன்பும் நிரம்பியிருந்தது. அப்பாவாக கணவனாக நண்பனாக அவர் செய்யும் யாவும் அவர்கள் உள்ளத்தினின்று பிறப்பெடுக்கும் மகிழ்வை எண்ணி எண்ணி செய்வது போல் இருக்கிறது.

செல்வாவுடன் பேசிக்கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்திலேயே அவர் தகவல்களின் களஞ்சியம் என்று  தோன்றுமளவு நம்மை அவற்றால் நிறைத்துவிடுவார். எதைப்பற்றிப் பேசினாலும் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துவிட முடியும் என்று தோன்றுமளவு. இந்த புத்தகத்தில் ஜெய்பூரிலிருந்து அகமதாபாத் வரை கண்ட அனைத்து முக்கிய இடங்களையும் தகவல்களோடு பகிர்ந்துள்ளார். அது வெறும் விக்கிபீடியா தகவல்கள் இல்லை. தன் சிந்தனையால், அனுபவத்தால், புத்தக அறிவால் கண்டடைந்த யாவையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தத் தகவல்களிலெல்லாம் மேதைமையைக் காட்டிக் கொள்ளும் பகட்டு தென்படவில்லை. உடன்வந்திருந்த அனைவரின் காட்சியாக, சொல்லாக, எண்ணமாக, தகவலாக, உரையாடலாக, விவாதமாக, அவற்றை நோக்கும் ஒரு குழந்தை உள்ளமாக பதிவு செய்திருப்பது அழகாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. அறிவார்ந்த கலைரசனை கொண்ட அதே சமயம் இலக்கிய பித்து கொண்ட நண்பர்கள் என்றைக்கும் பத்திரப்படுத்தும் இனிய நினைவின் பயணத்தைக் கடத்திவிட்டிருந்தார்.

நீங்கள் உட்பட உடன் வந்தவர்களைப்பற்றி அவர் விவரித்த விதம் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக கிருஷ்ணன் சார் மற்றும் சக்தி கிருஷ்ணன் பற்றிய விவரணை அபாரம். ஒவ்வொருவரும் ஒரு புனைவுக் கதாப்பாத்திரம் போல பயணம் முழுவதுமாக திகழ்நது கொண்டே இருந்தார்கள். சிரித்துக் கொண்டே இருந்தேன். ஒருமுறையாவது உங்கள் எல்லோருடனும் ஒரு பயணம் போக வேண்டுமென்ற உணர்வைக் கடத்தியிருந்தார்.

சென்னையில் அவருடனான இறுதி சந்திப்பில் பிரியும் ஒரு தருவாயில் கேட்டேன்… “இவ்வளவு வேலைப்பளு… இத்துனை பொறுப்புகள்… புகழோ பணமோ வெற்றியோ ஒரு பொருட்டாக இல்லாத நிலையில் அமைந்திருக்கிறீர்கள். ஆனாலும் அடியாழத்தில் உங்களில் ஓர் வெறுமையைக் காணமுடிகிறது. நீங்கள் என்னவாக வரலாற்றில் நினைவுகூறப்பட ஆசைப்படுகிறீர்கள்… ” என்று கேட்டேன். கிட்டத்தட்ட இலக்கியம், வாழ்க்கை, வம்புகள் என குழந்தை ஒன்று தான் காணும் புது உலகைச் சார்ந்து கேள்விகளைப் பெருக்கி அறிந்து கொள்வது போல அறிந்த பல பதில்களில் ஒன்று இது. இந்தக் கேள்வியில் மட்டும் ஆழ்ந்த மௌனத்திற்குச் சென்றுவிட்டார். கண்கள் சிறிது நனைந்திருந்தது. என் உளமயக்காகவும் இருக்கலாம். “ஒரு நாவலாசிரியனாக… பா. சிங்காரத்தைப்போல…” என்றார்.

“எழுதலாமே… ஆனால் இத்தனைக்கும் அடியில் ஒரு பதட்டமும் அச்சமும் உங்களில் காணமுடிகிறது” என்றேன்.

“என்னைச் சுற்றி பெரிய எதிர்பார்ப்புகளோடான ஒரு கூட்டத்தை உருவாக்கிவைத்து விட்டேன்…”

“அதிலிருந்து விடுவித்துக் கொள்ள நினைக்கிறீர்களா… ” என்று கேட்டேன்.

“இல்லை. அதை உளமார செய்கிறேன்.. ” என்றார்.

“அந்த அழுத்தத்தோடும் எழுத முடியுமென்று தானே ஜெ சொல்கிறார்… ”

“கண்டிப்பாக எழுதுவேன் ரம்யா.. ” என்று முகம் மலர்ந்தார்.

அவருடைய நாவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஜெ.

உங்கள் எழுத்துக்களின் வழி என் வாழ்வில் அற்புதமான மனிதர்களை சந்திக்கிறேன். பொதுவாக இந்த சந்திப்புகளில் உங்கள் எழுத்துக்களை நாங்கள் வந்து அடைந்த புள்ளியிலிருந்து நீண்டு நீண்டு இணைமனமாக பயணிக்கும் தருணத்தை சந்தித்து சிலாகிப்போம். இந்த உலகில் இணை மனங்களை காணுந்தோறும் ஏற்படும் மகிழ்வோடு அவரிடம் பிரியாவிடை பெற்றதை மனதில் பதித்திருக்கிறேன். என்றென்றைக்குமாக நிலைத்திருக்கப்போகும் நட்புகளை, என் மனதிற்கு அணுக்கமானவர்களையும் உங்கள் எழுத்துக்களின் வழி தான் கண்டடைகிறேன். நன்றி ஜெ.

பேருந்துப்பயணத்தில் தான் இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். அருகில் வேறொரு புத்தகத்தைப் படித்திருந்த நபர் என் புத்தகத்தைக் கேட்டார். ஆசிரியர் யாருங்க? என்றார்.

“எழுத்தாளர் செல்வேந்திரன்” என்றேன். அட்டையை மட்டும் புகைப்படம் எடுத்துக்கலாமா! என்றார்.

“நான் படிச்சு முடிச்சுட்டேன். நீங்க வேணா படிங்க” என்று அவரிடமே கொடுத்துவிட்டேன்.

“நிஜமாவா” என்று பெருமகிழ்வுக்கு ஆளானார்.

“நிஜமா தாங்க” என்று புன்னகைத்தேன். “பாலைநிலப்பயணம்” மேலுமொரு பயணத்தைத் துவங்கியது என்றெண்ணினேன். பேருந்தை விட்டு இறங்கும்போது செல்வாவை நினைத்துக் கொண்டேன். தன் அருகமைந்தவர்களுக்கு அத்தகைய பேரானாந்ததைக் கொடுக்கக்கூடியவர்!

 

பிரேமையுடன்

இரம்யா

அன்புள்ள இரம்யா,

சென்ற சில நாட்களுக்கு முன் சென்னையில் இளங்கோ கிருஷ்ணனின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இளங்கோ அதை தன் பெற்றோர் உட்பட பலருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக ஆக்கிக்கொண்டார். அவ்வுரையில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது செல்வேந்திரனை. வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழலில் அவரை அழைத்தது, அவர் செய்த உதவி வழியாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது பற்றிச் சொன்னார்.

அத்தகைய பல உதவிகளை செல்வேந்திரன் செய்திருக்கிறார். எழுத்தாளர், இலக்கியவாசகர் என்றாலே பிறிதொன்று எண்ணாமல் உதவிசெய்பவர். காரணம் இலக்கியம் மீதான நம்பிக்கை. நான் என் நண்பர்களில் சிலரிடம் மட்டுமே பிறர் பொருட்டு முழுநம்பிக்கையுடன் உதவிகோர முடியும். அவர்களில் ஒருவர் செல்வா. அதில் கசப்புகளும் ஏமாற்றங்களும் அவருக்கு உண்டு, மானுட இயல்பு அத்தகையது. ஆனால் அவை அவருடைய நன்னம்பிக்கையை அசைப்பதில்லை.

செல்வா உலகியலில் ரொம்ப உழன்று எழுதாமலாகிவிட்டார் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. கொஞ்சம் மிகையாகவே அவரை கடிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் பாலைநிலப்பயணம் ஒரு முக்கியமான நூல். பயணநூல் மட்டும் அல்ல, பண்பாட்டுநூலும்கூட. அவர் மேலும் எழுதுவார் என்னும் நம்பிக்கையை உருவாக்கும் நூல் அது

ஜெ

பாலையின் களிப்பு

முந்தைய கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்
அடுத்த கட்டுரைசுஷில்குமாரின் கதைகள்- இரம்யா