கையிலிருக்கும் பூமி வாங்க
தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்
கல்லூரியில் படிக்கும்போது சேத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பன் கூறிய நிகழ்ச்சி இது. சேத்தூர் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். காட்டை ஒட்டிய வயல் இவர்களுடையது. ஒருநாள் உழுது முடித்து நுகத்தடியை வயலிலே போட்டுவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். மறுநாள் சென்று பார்த்தால் நுகத்தடியைக் காணவில்லை. ஆனால் உழுதுபோட்ட மண்ணில் நுகத்தடியை இழுத்துச் சென்ற தடம் தெரிகிறது. தடத்தைத் தொடர்ந்து சென்றால் காட்டுக்குள் சென்று மறைகிறது. தொடர்ந்து சென்று பார்த்ததில் சிறிது தூரத்திலேயே நுகத்தடி கிடந்திருக்கிறது. பக்கத்திலேயே ஒரு பெரிய மலைப்பாம்பு வயிறு கிழிந்து இறந்து கிடந்திருக்கிறது. விஷயம் இதுதான். மாடுகளின் கழுத்தில் நுகத்தடி அழுத்தி அழுத்தி புண்ணாகிஇருக்கிறது ரத்தம் வரும் அளவு. ரத்தம் படிந்த நுகத்தடியை இரையென்று நினைத்து விழுங்கியிருக்கிறது மலைப்பாம்பு. இரைசெரிக்க உடம்பை முருக்கையில் தடி வெளிவர இறந்து போயிருக்கிறது. இது நடக்கமுடியாத விஷயமல்ல என்ற அளவில் மட்டுமே நம்பினேன்.
ஆனால் ஜெயமோகனின் ‘ஆடகம்’ கதை படித்தபோது அது நல்ல கதை என்றும் ‘நல்ல கதை’ என்றும் ஒரே சமயத்தில் தோன்றியது. அதுவரை ராஜநாகத்தைப் பற்றி விலாவரியாகச் சொல்லிவிட்டு அந்தப் பாம்பு வந்து அவனைக் கடிக்கும் காட்சியில் ஒரு இடத்தில் கூட பாம்பு என்று எழுதியிருக்க மாட்டார் ஆசிரியர். அதை மிகவும் ரசித்தேன். ஆனால் விஷப்பாம்பு கடித்துத் தப்பிப்பதெல்லாம், அதுவும் ராஜநாகம், இப்படிக் கதையில் நடந்தால்தான் உண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தேன் தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ என்ற உயிர்மையின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பினைப் படிக்கும் வரை. அதில் ஒரு கட்டுரையில் கடியின் வீரியத்தைப் பொறுத்தே மரணம் சம்பவிக்கிறது என்றும், விஷப்பாம்புகளின் கடியிலேயே பாதிக்கு மேல் பொய்க்கடிகளே என்றும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். பல நாட்டு வைத்தியர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதும் இந்தப் பொய்க்கடிகள்தான் போலும்.
சென்ற புத்தகக்கண்காட்சியில் வாங்கிய தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ என்ற உயிர்மையின் சூழலியல் குறித்த கட்டுரைத் தொகுப்பினை தலைமாட்டில் வைத்துக்கொண்டு தினம் இரண்டு கட்டுரையாக இப்போதுதான் படித்து முடித்தேன். மலைப்பாக இருந்தது. பெரிய புத்தகத்தைப் படித்ததனால் அல்ல. இவ்வளவு பெரிய அனுபவத் தொகுப்பு தருகிற மலைப்பு. உலகம் முழுதும் உள்ள முக்கியமான இயற்கை சூழலியல் மற்றும் வனவியல் பூங்காக்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறார். சூழலியல் முன்னோடிகளிலிருந்து சமகாலத்திய வல்லுநர்கள் வரை தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். சூழலியல் சார்ந்த களப்பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இத்தனையையும் உயர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே(ஒருவேளை அதனால்தான் செய்யமுடிந்ததோ?) செய்திருக்கிறார். அத்தனை அனுபவங்களையும் நூறு கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். இதுவரை சூழலியல் குறித்து தியடோர் பாஸ்கரன் எழுதியதின் மொத்தத் தொகுப்பு. பல்லிக்கு விஷம் கிடையாது, முயலையும் மயிலையும் அடித்துத்தின்னும் மலைஆந்தை, ஏற்காட்டில் மட்டுமே காணப்பட்டு அற்றுப்போன ஓர் அரிய கீரிவகை விலங்கு, சத்தியமங்கலம் காடுகளில் மட்டுமே காணப்பட்டு அற்றுப்போன சிவிங்கிப் புலி, இரலைக்கும் மானுக்கும் உள்ள வேறுபாடு, காட்டெருமைக்கும் காட்டெருதுக்கும் உள்ள வேறுபாடு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹ்ரான்பூரில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் கோவேறு கழுதை உற்பத்தி நிலையம், பவானிசாகரில் மூழ்கிக் காணாமல்போன டணாய்க்கன் கோட்டை, அந்தமானில் மட்டுமே வாழும் நண்டு தின்னும் குரங்கு, காப்பிட இனப்பெருக்கம், ‘ஆலா பறக்கிறான்’ என்பதிலுள்ள ஆலா ஒரு கடல்பறவை என்று பல செய்திகள், புதியபுதிய தகவல்கள், சூழலியல் மற்றும் பண்பாட்டுத்தரவுகள் கட்டுரைதோறும் கொட்டிக்கிடக்கின்றன.
நம் நாட்டின் தேசியப்பறவை மயில் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேசியப்பறவையைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழு முதலில் தேர்ந்தெடுத்த பறவை எது தெரியுமா? கானமயில். பின் ஏன் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தப்பறவையின் ஆங்கிலப்பெயர் Great Indian Bustard. ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் தவறான அர்த்தம் வந்துவிடும் என்கிற ஒரே காரணத்திற்காக அந்தப்பறவை தெரிவு செய்யப்படவில்லை (உன் பேரு மட்டும் என்ன வாழுதாம் என்று கானமயில் மயிலைப் பார்த்துப் புலம்புவது நமக்குக் கேட்காமல் போகலாம்) புதர்க்காடுகளில் மட்டுமே காணப்படும் இப்பறவை கடைசியாகக் கண்ணில் பட்டது ஹொகனேக்கல் பக்கத்தில் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி இருபதுகளில். கால்நடைகள் அதிகரித்ததும் இதுபோல புதர்ப்பறவைகள் அழிந்ததற்கு முக்கியக் காரணம் என்கிறார் பாஸ்கரன். இப்போது ராஜஸ்தான் அருகே ஒரு கிராமத்தில் நூற்றிஇருபது பறவைகள் மட்டுமே மிச்சம்.
இந்தநூலில் ‘அற்றுப்போன’ என்ற வார்த்தை அதிக அளவில் காணப்படுவது வருத்தப்படத்தக்க செய்தி. நம்மூரிலேயே சத்தியமங்கலம் காடுகளில் காணப்பட்ட (Chettah) சிவிங்கிப்புலி (அக்பரிடம் வேட்டைக்குப் பழக்கப்பட்ட ஆயிரம் சிவிங்கிப்புலிகள் இருந்தன என்கிறது அக்பர் நாமா), ஏற்காட்டில் மட்டுமே காணப்பட்ட மூங்கணத்தன் (Madras Tree Shrew), மொரீஷியசில் மட்டுமே காணப்பட்ட டோடோ பறவை, ஊட்டியில் காணப்பட்ட பிணந்தின்னிக்கழுகு (பாறு) முதலியன அழிந்துபோன உயிரினங்கள். உயிரினங்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் கூட அவற்றின் ‘அற்றுப்போத’லை முடிவு செய்கின்றன. எதையும் தின்று வாழும் குரங்கு, காக்கை, நாய் போன்றவை எங்கும் பல்கிப் பெருகுவதும் மூங்கில் இலைகளை மட்டுமே உண்டு வாழும் பாண்டா கரடிகள் அழிவதையும் காணலாம் என்கிறார் ஆசிரியர்.
தேவாங்கு, ஆந்தை போன்றவை மாந்த்ரீகக் காரணங்களுக்காகவும், உடும்பு,புலி போன்றவை மருத்துவக் காரணங்களுக்காகவும் கொன்றொழிக்கப்பட்டன. மூடநம்பிக்கையால் உயிரினங்கள் அழிந்ததுபோலவே, காப்பாற்றப்படவும் செய்திருக்கின்றன. குறிப்பாக சாரஸ் எனப்படும் பெருங்கொக்கு (‘சாரசம் வசீகரம்…என்பது பி.யு.சின்னப்பாவின் புகழ்பெற்ற பாடல்) தன்னுடைய இணையை கடைசிவரை பிரியாமல் வாழும் இந்தக்கொக்குகளைக் கொன்றால் தன்னுடைய இணைக்கும் ஆபத்து வரும் என்பது நம்பிக்கை.
மேற்கு மலைக்காடுகள் நம்முடைய மேல்நிலைத் தண்ணீர்தொட்டிகள் என்கிறார் ஆசிரியர். அவற்றை அழிப்பதென்பது நம் வீட்டுத் தண்ணீர்தொட்டிகளை இடித்தொழிப்பதுதான். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பசுமைமாறாக் காடுகளின் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் தாவரப்பெருக்கம் வேறுஎங்குமே காணமுடியாதது. நாற்பது மீட்டர் உயரம் வரை வளரும் இலை உதிர்க்காப் பெருமரங்கள். அதன் விதானத்திலேயே வாழும் சோலைமந்தி மற்றும் கருமந்தி, நடுத்தளங்களில் வாழும் மலை அணில், தரையை ஒட்டிய புதர்களில் வாழும் கூரம்பன்னி போன்ற உயிரினங்கள். அந்தந்தத் தளங்களுக்கான பறவைகள். இங்கிருக்கும் பெருமரம் ஒன்றை மறுபடியும் காண ஒரு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர். ஜீவநதிகளின் ஊற்றுமுகங்களான பசுமைமாறாக்காடுகளை நாசம் செய்து அதன் பெரும்செல்வங்களான வேங்கை,ஈட்டி,தேக்கு மரங்களை ஆறுகளின் வாயிலாக கொச்சித் துறைமுகத்திற்கு அனுப்பி தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தது அன்றைய வெள்ளை அரசு. ‘வாட்டர்லூவின் வெற்றி இந்திய மரங்களாலேயே சாத்தியப்பட்டது’ என்கிறார் ராமச்சந்திரகுகா.
அதுபோக நாடுமுழுதும் போடப்பட்ட ரயில்பாதைக்கான ‘ரீப்பர்’ கட்டைகளுக்கும் இந்த மரங்கள்தான். அதிகமான மரங்களை வெட்டித்தரும் ஜமீன்தார்களுக்கு பல்லக்கு பரிசாகக் கிடைத்திருக்கிறது. இதுபோல மொட்டையடிக்கப்பட்ட மலைகளில் தேயிலைத்தோட்டங்களை நிறுவி ‘பசுமைப் பாலைவன’ங்களை உருவாக்கியது, அங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தை வேட்டையாடி அழித்தது(தொப்பியில் வைத்துக்கொள்ளும் இறகுக்காக மட்டும் பல்லாயிரம் கொக்குகள், தூண்டிலில் மீன்பிடிக்கப் பயன்படும் தக்கைக்காக மட்டும் பல்லாயிரம் காட்டுக்கோழிகள்) போன்ற சர்வநாசமும் வெள்ளையர்களாலேயே நிகழ்த்தப்பட்டது. அதேசமயத்தில் இன்றைக்கு நமக்கிருக்கும் குறைந்தஅளவு கானகச் செல்வங்களைப் பாதுகாப்பதில் அரணாக இருந்து செயல்பட்ட ஹியூகோ வுட், எ.ஓ.ஹுயூம் (இந்திய தேசிய காங்கிரசின் ஸ்தாபகர்) போன்ற வெள்ளை அதிகாரிகளைப் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளில் எழுதியுள்ளார் ஆசிரியர். மந்து என்பது ஐந்து அல்லது ஆறு வீடுகள் கொண்ட தொதுவர் குடியிருப்புக்குப் பெயர். ஒற்றைக்கல் அருகில் உள்ளதால் ஒற்றைக்கல்மந்து. கோயமுத்தூருக்கு அருகில் உள்ள சிறுமுகையிலிருந்து கோத்தகிரி வழியாக ஒற்றைக்கல்மந்து வரை ஒரு கழுதைப்பாதையைப் போட்டு ‘ஒட்டக்கமண்’டை (அது ஊட்டியும் ஆனது பிற்பாடு) சென்னை ராஜதானியின் கோடைகாலத் தலைநகராக ஆக்கியவர் சல்லிவன் துரை.
இந்திய அரசியல் சட்டம் காடுகளை மாநிலஅரசின் அதிகாரத்தின் கீழ் வைத்தது மிகப்பெரிய தவறு என்று கூறிய சூழலியல் முன்னோடி மா.கிருஷ்ணன் (இவரது தந்தை அ.மாதவையா முன்னோடித் தமிழ் எழுத்தாளர்) ஒரு தீர்க்கதரிசி என்கிறார் ஆசிரியர்.நம் சட்டமன்றத்தில் சூழலியல் குறித்து ஏதாவது விவாதம் நடந்திருக்கிறதா? என்று நினைத்துப் பார்த்தாலே இதை உணர்ந்துகொள்ளலாம். மத்தியஅரசு ஒருமுறை சிங்கத்திற்காக மத்தியப்பிரதேசத்தில் ஒரு இடத்தைக் கண்டறிந்து அங்கு கிர் காட்டின் சிங்கங்களைக் குடியமர்த்த முயற்சித்தபோது அன்றைய குஜராத் முதல்வர் மோடி ‘கிர் சிங்கங்கள் குஜராத்தின் பெருமை. அதை விட்டுத்தர முடியாது’ என்று மறுத்துவிட்டதைக் குறிப்பிடுகிறார். கிருஷ்ணன் முன்னோடிக் கானுயிர் புகைப்படக் கலைஞரும் ஆவார். பறவைகளின் பாரம்பரியத் தமிழ்ப் பெயர்களை உபயோகித்தும், அறிவியல் நோக்கில் கானுயிர்கள் பற்றியும் முதன்முதலில் கட்டுரைகள் எழுதியது கிருஷ்ணனே. தன் நண்பர் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை ‘Sins of Appu’s Mother’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் கிருஷ்ணன் என்பது கூடுதல் தகவல்.
மற்றொரு வனவியல் முன்னோடியான உல்லாஸ்கரந்தோ வேங்கைகளுக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். தொலையுணர்வு முறையில், ரேடியோ பொருத்தப்பட்ட கழுத்துப்பட்டைகளை அணிவித்து வேங்கைகளைக் கண்காணித்து அவர் சேகரித்த விவரங்கள் களஆய்வில் ஒரு புரட்சியையே உருவாக்கியது. அதேபோல் தானியங்கி கேமராக்களைப் பயன்படுத்தி புலிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறியும் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவரே. குதிரேமுக் சரணாலயத்தில் கனிமவளம் வெட்டியெடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடியவர் உல்லாஸ்கரந்த். இவருடைய தந்தை கன்னட முதுபெரும் எழுத்தாளர் சிவராமகரந்த். உல்லாஸ் கரந்த்தின் ‘The way of tiger’ நூலை ஆசிரியர் ‘கானுறை வேங்கை’ (காலச்சுவடு பதிப்பகம்) என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இன்னொரு முன்னோடியான ராமுலஸ் விட்டக்கேர் காப்பிட இனப்பெருக்கத்தின் மூலம் விலங்குகளைப் பெருக்கி அழிவிலிருந்து காக்க முடியும் என்று நடைமுறையில் செய்து காட்டியவர் . சென்னை கிண்டியில் பாம்புப்பண்ணை, கிழக்குக் கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை போன்றவை இவரது சாதனைகள்.
ஒரு வீட்டுவளர்ப்புப் பிராணி பராமரிக்க ஆளில்லாமல் அனாதையாக விடப்பட்டால், அதன் இருதலைமுறைகள் கடந்தபிறகு அதன் இயல்பான காட்டுயிர் நிலைக்குச் சென்று விடும். அவைகளை feral என்று கூறுகிறார்கள். ஊட்டி முக்குருத்தி மலையில் திரியும் எருமைகள், கோடிக்கரையில் திரியும் குதிரைகள் என்று பல உதாரணங்கள். இத்தகைய feral dogs எனப்படும் தெருநாய்கள் கிண்டி கவர்னர் மாளிகையில் அரிதாக இருக்கும் வெளிமான்களை கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடிய செய்தியைக் குறிப்பிடும் ஆசிரியர், தேவையில்லாமல் தெருநாய்கள் புனிதப்பசுவாக ஆக்கப்படுவதாகவும், அவை ஒழிக்கப்படவேண்டியவையே என்றும் கூறுகிறார். இந்தக் கருத்தை காந்தியடிகளும் ஆதரித்த தகவல் சற்றே ஆச்சரியமூட்டுகிறது. அதேபோல சமீபமாக திருட்டு வேட்டையாடிகளை அவர்கள் பட்டறிவையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் வகையில் வனக்காவலர்களாகவும், சுற்றுலாப்பயணிகளுக்கு காட்டினுள் வழிகாட்டியாகச் செல்லும் பணியிலும் அமர்த்தப்பட்டது வனப்பாதுகாப்பில் ஒரு முக்கியமான திருப்பம் என்கிறார் ஆசிரியர். இது அன்றைய வெள்ளை அரசு கள்ளர்களை ஒழிக்க அவர்களிடமிருந்தே ஆளெடுத்து ‘போலீஸ் பட்டாளம்’ ஏற்படுத்தியதை நினைவுபடுத்தியது (இது சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்ட’த்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நினைவு) இது போன்ற எண்ணற்ற செய்திகள் கட்டுரைதோறும்.
பறவைகளின் உணவுப்பழக்கங்களையும், வலசை போவதையும் பற்றிப்பாடியிருக்கும் சங்ககாலப்புலவர் பிசிராந்தையார், சக்திமுத்தப் புலவர், மாங்குடி மருதனார் என்று சங்கப்பாடல்களில் இருந்து திருக்குறள், பாரதியார் கவிதை வரை கட்டுரை தோறும் வரும் மேற்கோள்கள் மற்றும் கட்டுரைத் தலைப்புகள் ஆசிரியரின் மரபு சார்ந்த ரசனையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஓங்கில்(Dolphin), ஆவுளியா (Sea cow), ஓதம் (tide), அலையாத்திக்காடுகள்(Mangrove forest), கருநாகம்(King cobra)போன்ற தேர்ந்தெடுத்த தமிழ்ப்பெயர்களையே பயன்படுத்துவதும் கூடுதல் சுவையளிக்கிறது. சங்ககாலப் பாடல்களில் சூழலியல் மற்றும் இயற்கை குறித்துத் தொழிற்படும் மொழிவளம் சமீபகாலக் கட்டுரைகளில் பிரதிபலிக்காதது குறித்து வருந்துகிறார் ஆசிரியர். சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு பற்றிய கரிசனம் ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டுமென்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும் மிகச்சிறிய வயதிலேயே இயற்கை குறித்த புரிதலையும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும்,தாவரங்களுக்கும் நமக்குமான பிணைப்பையும் அறிமுகப்படுத்தவேண்டும். அதே சமயத்தில் கொடிய விலங்கு, கொடூரமான காடு என்று அவைகள்மேல் வெறுப்பு வருவதுபோல் அறிமுகப்படுத்தக் கூடாது என்கிறார். நாம் சிறிதுகாலமே இருக்கப்போகிற இந்த உலகத்தில் நாம் ஒரு சிறுபகுதியே என்பதும், மற்ற உயிரினங்கள் நம் பங்குதாரர்களே என்பதும் நினைவில் இருப்பது மிக முக்கியம் என்கிறார் ஆசிரியர். சூழலியல் ஆரம்ப வகுப்புகளிலேயே பாடமாக வைக்கப்படவேண்டும் என்கிறார் ஆசிரியர் தியடோர் பாஸ்கரன். கல்லூரியில் பாடமாக வைக்கப்பட வேண்டிய இந்நூல் சூழலியல் ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒன்று.
ஆறுகளைக் கொன்றோம், வனங்களை அழித்தோம், பெறுநுகர்வில் திளைத்தோம். இது பரிகாரத்திற்கான நேரம். நாம் செய்யும் குறைந்தபட்ச பரிகாரம், நமக்களிக்கப்பட்ட பூமியை அடுத்த தலைமுறைக்கு முடிந்தால் சிறந்த ஒன்றாக அல்லது குறைந்தபட்சம் அதேபோலவாவது கையளிப்போம். எதையோ இரையென்று தின்று கிழிபட்ட பாம்புக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டுதானே
கிருஷ்ணன் சங்கரன்