விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
திருச்செந்தாழையின் சிறுகதைகளை அவரெழுதிய காலக்கட்டத்தை கொண்டு பிரித்துக்கொள்ள முடிகிறது. 2006 முதல் 2012 போன்ற காலக்கட்டங்களில் அவரெழுதிய தேவைகள், ஆண்கள் விடுதி : அறை எண் 12 போன்ற கதைகள் நேரடியான கதை சொல்லல் பாணியில் அமைந்திருக்கிறது.
ஆண்கள் விடுதி : அறை எண் 12 மேன்ஷன் வாழ்க்கையின் பாலியல் வறட்சியை மையமென கொண்டிருக்கிறது. பாலியல் தொழிலாளியிடம் தங்கிவிட்டு வெளியே வருகையில் அவளது மகள் வண்ணத்துப்பூச்சியுடன் விளையாடுவதை காணும் காட்சி உருவாக்கும் வேதனை இந்த கதையை மறக்கமுடியாத ஒன்றாக்குகிறது.
தேவைகள் சிறுகதையில், மகனை இழந்துவிட்ட தந்தை மருமகளின் ஒழுக்கத்துக்கு காவலாகிவிடும் சூழலைச் சொல்கிறது. வீட்டில் வாசனை மாறுபடுவதின் வழியே நிகழ்ந்தவற்றை ஊகித்துவிடும் சிவசு, ஒரு மனம் நெகிழ்ந்த தருணத்தில் ”தின்னுட்டு போ கழுதை” என்று நாய்க்கு சோறிடுவது, ஆண்டு அனுபவித்தவனின் மனது வந்தடையும் தரிசனம். கதையின் தலைப்பை நேரடியாக வைத்தது பிரசுரமானது வெகுஜன பத்திரிக்கை என்பதால் இருக்கலாம்.
2020க்கு பிறகு எழுதிய அவர் சிறுகதைகள் சட்டென்று வேறு வகையான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. வணிகர்களை, “நெடுநுகத்துப் பகல் போல் நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்கிறது சங்கபாடல். பெரும்பாலான திருச்செந்தாழை சிறுகதைகளின் களம் வியாபார உலகம். ஆனால், எந்திரத்தில் அமர்ந்து பேலன்ஸ் சீட்டை ஆராய்ந்து செய்யப்படும் பங்கு வணிகம் அல்ல அது. மண்ணுடனும், மழையுடனும் உறவாடி, போராடி தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளிடம் செய்யும் வணிகம். குரூரத்தின் எல்லைக்கும், கனிவின் உச்சத்துக்கும் ஒரு நொடியில் சென்றடைந்து விடும் குணத்தை சம்சாரி அவனுடைய மண்ணிலிருந்தே பெற்றிருக்க முடியும். அப்பாவித்தனமும், தந்திரமும் குதர்க்கமுமாய் விதவிதமான மனிதர்கள். அவர்களுடன் வியாபாரம் செய்யும் கமிஷன் மண்டி மனிதர்கள் கூற எத்தனை ஆயிரம் கதைகள் மீதமிருக்கும்? இப்படி ஒரு களம் தமிழ் சிறுகதையுலகிற்க்கு புதியதுதான். ஆ.மாதவனின் சாலை தெரு கதைகள் வேறு விதமானவை.
வாசகனை நின்று நிதானிக்க வைத்து தனது மாயச் சூழலுக்குள் இழுத்துக்கொள்வது திருச்செந்தாழையின் மொழி. அவர் கவிஞனாகவும் இருப்பதின் வழியே இந்த மொழிநடைக்கு வந்தடைந்திருக்ககூடும்.
”தென்னம்தோப்பிற்க்குள் சிறியதொரு கோவிலில் மாடவிளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள், அது அம்மாவின் நெற்றியைப் போல் இளவெளிச்சம் கொண்டிருந்தது” என்கிற விவரிப்பை எப்படி ஒரு வாசகன் சட்டென்று கடந்து கதைக்குள் புகுவது?
விலாஸம் கதையில் தன்ராஜிடம் முதலில் வெளிபடுவது, மானின் கழுத்தை கவ்வி சென்று நிதானமாக உயிர் அடங்குவதை ரசிக்கும் சிங்கத்தின் வன்மம். தன்ராஜ் தனது பழைய முதலாளியை பார்க்க வருவது, அந்த வீழ்ச்சியை உள்ளூர ரசிப்பதற்க்கு. கூடவே மென்மேலும் வெற்றிகளை குவிக்க, மனிதர்களுக்கு கொஞ்சம் சீண்டலும், சிறிய அவமானங்களும் கூட வேண்டியதாக இருக்கிறது. புது பணக்காரரான தன்ராஜின் புதிய கார், அதன் ஓட்டுனர், இவர்களை எதிர்க்கொள்ளும் பழைய முதலாளியின் ஓட்டுனரிடம் தெரியும் அலட்சியம், முதலாளி வந்தவுடன் உடனடியாக அவரிடம் தெரியும் உடல்மொழி மாற்றம், முதலாளியின் பியட் கார் இவற்றை கொண்டே அந்த காட்சியை கச்சிதமாக வாசகனுக்கு கடத்திவிடுகிறார் ஆசிரியர். மிக சிக்கனமான வரிகளில் பாத்திரங்களை நம்பகமாகவும் லாவகமாகவும் படைத்துவிட திருச்செந்தாழையால் முடிகிறது.
புகழேந்தி அண்ணனின் கிண்டலை அமைதியாக வாங்கிக்கொண்டு அவரை திருப்திபடுத்துவதின் வழியே அவரை போன்றவர்களை காலம் முழுவதும் அப்படியே விட்டுவிடுவதில் அடங்கியிருக்கிறது தன்ராஜின் வன்மம்.
அப்பா இப்படிதானென்று தன்ராஜின் மகன் முடிவுகட்டியபின்பு, இவை மட்டுமல்ல அவர் என்பது தெரியவருகிறது. வேட்டையின் வெற்றி இரையில் மட்டுமல்ல. வேட்டையாடுதலின் ருசி, அந்த ஆட்டத்தின் களிப்பிலிருக்கிறது என்பதை உணரும் மகன் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.
துலாத்தன் சிறுகதையில் ஏறக்குறைய அய்யாவுவை ஓடவைப்பதும் இந்த ஆட்டத்தின் ருசிதான். தரகுக்கும் மிஞ்சாது என்று தெரிந்தபின்பும், அய்யாவு, யூரியா சாக்குகளை கொண்டு, விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்வது, வியாபாரம் என்பது வெறும் லாப நட்ட கணக்கல்ல என்பதால் தான். ஒவ்வொரு கணத்திலும் அங்கு எடை வைக்கப்படுவது அவருடைய இத்தனை நாள் வாழ்வின் அனுபவமும் அதன் பெறுமதியும் தான். அந்த ஊசலாட்டத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில்தான் திருச்செந்தாழையின் நுட்பம் அடங்கி உள்ளது. இருபது ரூபாய் கூட்டி கொடுப்பதால் வேறு வியாபாரியிடம் தமது தானியங்களை கொடுக்க ஒத்துக்கொள்ளும் சம்சாரிகள், இத்தனை நாள் பழகிய அய்யாவுவை நிராகரிக்கிறார்கள். இனி தோல்விதான் என்கிற நிலையிலிருந்து துவளாதவனாக போராடி ஒரே ஒரு காட்டில் தனது கொள்முதலை நிகழ்த்திகாட்டிவிடும் அய்யாவுவை, அதே சம்சாரிகள் மதிப்புடன் பார்த்து நகருமிடத்தில் அய்யாவு கொள்ளும் பெருமிதத்தை வாசகனும் உணர்கிறான். அய்யாவு அந்த வெற்றியின் ருசியை சப்புக்கொட்டி அமர்ந்திருக்கையில் உதிர்ந்த சோளத்தட்டையாக மகள் பரமு நினைவில் எழுந்து சுருள வைக்கிறாள்.
இரு மணம் இணைந்து, உயிரில் கலந்த அற்புதமான உறவிலும், ஏதோ ஒரு மூலையில், கொஞ்சமாய் துரோகத்தின் சுவடு வெளிபட தருணம் வேண்டி காத்துக்கொண்டுதான் இருக்கிறது. அற்புதமான இணை என்று உள்ளும் புறமும் நெகிழ்கையில், தெய்வம் கள்ளசிரிப்பு கொள்ளுமோ? தன்னுடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியவள் திடீரென்று வேறொருவனுடன் சென்று விடும் மர்மத்தை புரிந்துக்கொள்ளவே அவளை தேடி ஜே.பி செல்கிறான். அந்த கொலுசின் சிரிப்பில் அதை கண்டுக்கொண்டு திரும்பி நடக்கிறான் டிஷர்ட் சிறுகதையில்.
காப்பு சிறுகதை முழுக்க முழுக்க தாழம்பூவின் வாசம் கொண்ட மயக்க நிலையிலே நிகழ்கிறது. சிறு பிள்ளை பருவத்தில், தாத்தா ”தாழம்பூவின் வாசம் நினைவழிக்கும்”, என்கிறார். அவர் காசுகொடுத்து அனுப்பிய பெண்ணை பார்த்தோமா, இல்லையா என்கிற மயக்கமே தீர்ந்தபாடில்லை. கதையின் இறுதி வரிகளில் சட்டென்று கதை திருப்பமெடுத்து, அந்த தாழம்பூவின் வாசம் தான் நாயகனுக்கு காப்பாக அமைந்து அவனை நிலையழிதலிருந்து காத்து நிற்கிறது. அழகான படிமமாக தாழம்பூவின் மணம், உத்தரகோசமங்கையின் சந்தனக்காப்பு, கதையின் இறுதி திருப்பம் என சிறுகதையின் அத்தனை இலக்கணங்களும் பொருந்திய கதையாக இந்த கதை திகழ்கிறது.
த்வந்தம் சிறுகதை திருச்செந்தாழையின் இரு முக்கிய கதை கருக்களான வணிகத்தின் சூது மற்றும் ஆண் பெண் உறவில், காலங்காலமாக தொடரும் பகடையாட்டம் இவற்றை மையமாக்கி நிகழ்கிறது. அப்பாவி கணவனை கொண்டுள்ள பெண் அடைவதற்கு எளிதானவளாக தோன்றுகிறாள். ஒவ்வொரு சிப்பாயாக வெட்டி ராணியை நெருங்குகையில் சட்டென்று ராணி அந்த ஆட்டத்தின் சூதில் கைதேர்ந்து ராஜாவை வெற்றிக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆட்டத்தை புரிந்துக்கொள்கிறாள் லீலா, அவளிடம் தடுமாறுவதில் ஆட்டத்தின் நுணுக்கத்தை தவறவிடுகிறான் கதைச்சொல்லி. வியாபாரத்தில் இயல்பாக வந்து விழுவது போல் சொல்லப்படும் கூர்மையான அம்புகள், இருவருக்குமிடையேயான உரையாடல்கள் என இந்த பகடையாட்டம் தொடர்கிறது. ”கரிசனத்தின் முதலீடு” என்கிற வார்த்தையில் அவனை சரியான இடத்தில் நிறுத்துகிறாள் லீலா. இனி, அவன் எந்த பக்கம் அடியெடுத்து வைத்தாலும் மென்மேலும் சிறியவனாவான். அவனுடைய கூர்மையும், தன்மதிப்பும் அப்படி அவனை கீழிறங்க வைக்காது என்று கணிப்பதில் அடங்கியிருக்கிறது லீலாவின் நுட்பம். மற்றொரு புறம் அவன் விரும்பியது இந்த வணிகத்தின் குரூர ருசியை கண்ட லீலாவை அல்ல. இப்போது அவன் லீலாவின் ஆகிருதி முன் போரிட முடியாதவனாய், அவளை அஞ்சுகிறவனாய், அவளிடம் தோல்வியடைய விரும்பதாவனாய், ஏதோ ஒரு நிறுத்தத்தில் ரயிலிலிருந்து மெளனமாக வெளியேறி மறைகிறான்.
இந்த வரிசையில் ஆபரணம் மற்றொரு அற்புதமான சிறுகதை. காட்டுச்செடியாய் வளர்ந்த அண்ணன், போன்சாய் மரமாக இருக்கும் தம்பியை கொஞ்சம்கொஞ்சமாக மென்றுவிழுங்கும் பங்காளி துரோகம்தான் களம். ஆனால், இங்கு போர் நிகழ்வது சித்திரைக்கும், மரியத்துக்குமிடையில். ஒன்றில் தோற்பதை மற்றொன்றில் வெல்வதின் மூலம் நிகர் செய்துக்கொண்டு கணக்கு வழக்கை நேர் செய்துக்கொள்கிறார்கள். ”அழுக்கடைந்த மெழுகுவர்த்தி போல்” என்று சித்திரையை வர்ணிக்கையில் வேறு எதைக்கொண்டும் அவளை இவ்வளவு பொருத்தமாக வர்ணித்துவிடமுடியாது என்று தோன்றுகிறது. குழந்தைகள் சூழ அவள் அமர்ந்திருக்கும் சித்திரம், ”மெழுகுவர்த்தியை சுற்றிலுமுள்ள ஸ்படிக துளிகள்” என்கிற உவமை அழகு.
த்வந்தம், ஆபரணம் போன்று பலமான கதைகரு இல்லாது ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மொழியின் துணையோடு அவர் எழுதி பார்க்கும் துடி போன்ற சிறுகதைகள் அவருடைய மாற்று முயற்சிகளாக இருக்கலாம்.
சாணை தீட்டிய கத்தி போல் உரையாடல்கள், ”இரண்டு மூணு லைன் எச்சு போறான்” போன்ற இயல்பான வட்டார வழக்குகள், துல்லியமான காட்சி விவரிப்பு, உடல்மொழியை சொல்லி உணர்வை கடத்திவிடுவது, புத்தம்புதிய களம் இவையெல்லாம் திருச்செந்தாழையின் பலம். அது அப்படியே இந்த கதைகளில் நிகழ்ந்திருக்கிறது.
தொடர்ந்து இப்படி நல்ல கதைகள் ஒரு எழுத்தாளனிடமிருந்து வருவது திருச்செந்தாழை இப்போதிருக்கும் அற்புதமான படைப்பூக்கத்து காலக்கட்டத்தை காட்டுகிறது. விஷ்ணுபுர விருதுவிழாவின் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் திருசெந்தாழை அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
ரா.செந்தில்குமார்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்