மதம், அறம் -கடிதங்கள்

மதமும் அறமும்

அறம் விக்கி

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மதமும் அறமும் பதிவு தொடர்பாக.

காலப்போக்கில் அறங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு அல்லது மாறுதலடைவதற்கு முக்கியக் காரணி அந்தந்தக் காலங்களில் பிரதானமாக இருக்கும் உற்பத்தி முறை(கள்) என்று எடுத்துக்கொள்ளலாமா?

வேட்டுவ நாடோடி முறை தொடங்கி,  நிலம் சார்ந்த உற்பத்தி, பின்னர் வணிகப் பெருக்கம் ஊடாக இன்றைய தொழிலக உற்பத்தி   மற்றும் சேவைப் பொருளாதாரம் வரை,   இவையே  ஒரு ஊரின் அல்லது நாட்டின்  சமுதாயக் கூறுகளையும்,  அறக்கோட்பாடுகளையும்,  ஆட்சிமுறைகளையும் வடிவமைப்பதில் முக்கியமாக அமைகின்றன என்று தோன்றுகிறது.

அன்புடன்,
வி. நாராயணசாமி

அன்புள்ள நாராயணசாமி

அறம் உட்பட அனைத்தையும் கலாச்சாரத்தின் பகுதிகளாகவும், அவை எல்லாமே பொருளியல் அடிப்படையில் இருந்து முளைத்தவை என்றும் பார்க்கும் மார்க்ஸியப் பார்வை உண்டு. நான் கலாச்சாரம் அப்படி பொருளியலுடன் நேரடியாக உறவு கொண்டது என ஏற்கவில்லை. அது ஒருவித குறுக்கல் வாதம்

கலாச்சாரத்தின் அடிப்படைகள் மானுடர் ஒன்று கலப்பதன் வழியாகவே விரிவடைகின்றன. அதன் அடிப்படையில் அறம் விரிவடைகிறது. குடிகள் கலந்தபோது, நாடுகள் உருவானபோது பல்லாயிரம் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். விளைவாக மற்றவர்களை மதித்து, ஏற்றுக்கொண்டு வாழும் அறநெறிகள் தோன்றின. இன்று நாடுகள் இணைந்து உலகச் சமூகம் உருவாகிறது. அதற்கேற்ப கலாச்சாரம் விரிவடைகிறது. அறநெறிகளும் மாறுபடுகின்றன

பல்லினக் கலாச்சாரம் உடைய நாடுகளுக்கு குடியேறுபவர்கள் இதை உடனடியாக உணர்வார்கள். முதலில் அவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த திகைப்பு உருவாகும். ஒழுக்கம் என்பது பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடும் என்றும், தங்களுடைய ஒழுக்கம் மட்டுமே உண்மையானது உயர்வானது என எண்ணுவது அபத்தம் என்றும் உணர்வார்கள். தங்கள் ஒழுக்கநம்பிக்கைகளை மற்றவர்கள் மேல் போடக்கூடாது என்னும் எண்ணம் வரும்.

அதேபோல ஆசாரங்களையும் பிறர்மேல் போடமுடியாது என்று தெரியவரும். மெல்ல அவர்களின் அறவியலும் விரிவாகும். தாங்கள் கொண்டிருக்கும் அறவுணர்வை விரிவுபடுத்தாமல் பல்வேறு மக்களுடன் கலந்து வாழமுடியாது என்றும், உலகவாழ்க்கையின் வாய்ப்புகளும் வளர்ச்சிநிலைகளும் வேறுபட்டவை என்றும் அறிவார்கள். அறம் விரிவடைவது, புதிய அறங்கள் தோன்றுவது இவ்வாறுதான்.

இது புறவயமான காரணம். அதற்கு அப்பால் மானுடம் மேலும் மேலும் பெரிய அறம் நோக்கி சென்றுகொண்டிருப்பது, மானுடம் மேம்படவேண்டும் என்னும் கூட்டான விருப்பத்தின் விளைவு. அந்த விருப்பத்தை மானுடத்தின் உள்ளே புகுத்திய பிரபஞ்சவிசையின் ஆணை அதன் நாவாக ஒலிக்கும் ஞானிகளின் கொடை.

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்களது மதமும் அறமும் கட்டுரையைப் படித்தேன்,அந்தக் கட்டுரை மிகவும் அர்த்தமுள்ள கட்டுரை ஆனால் அதில் வரும் ஒரு உதாரணம் பிழையான அர்த்தத்தைத் தருகிறது.அதில் தங்களது பின்வரும் கருத்தான  ” ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு” என்பது மேலெழுந்தவாரியான ஒரு விளக்கம் மட்டுமே

அதேபோல  “ராமானுஜர் அவ்வாறு  கருதி இருக்கவும் வாய்ப்புண்டு””  என்றும் பொருள் கொள்ள இடம் இருக்கிறது.நீங்கள் சொல்வது நபரை விட கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அளவில் மட்டுமே  புரிந்து கொள்ளகிறேன்..

அதை நேரடியாக சொல்லாமல் ராமானுஜரை மேற்கோள்காட்டி சொல்லுவது தேவையா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளவும்..ஆனால் எனது நம்பிக்கை ராமானுஜர் ஒரு மகான்..ஆதிசேஷனின் அவதாரம்.அவரை கருணை அற்றவராக வலிந்து சித்தரிப்பது ஏன்?..

ரங்கராஜன்

சென்னை.

 

அன்புள்ள ரங்கராஜன்

என் பார்வைக்கும் உங்கள் பார்வைக்குமான வேறுபாடு பெரியது. ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம், அவருடைய ஒவ்வொரு சொல்லும் காலாதீதமானது என எண்ணுவது மதநம்பிக்கை. நான் அவரை மெய்ஞானி என எண்ணுகிறேன். ஆனால் பிளேட்டோவோ சங்கரரோ ராமானுஜரோ எந்த மெய்ஞானியும் அவருடைய காலகட்டத்தின் பொதுவான சிந்தனையின் எல்லைக்குள் தான் நிற்க முடியும். அது மானுடத்தின் எல்லை. ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்றாலும்கூட அவர் மானுடராக வந்தமையால் மானுடரின் எல்லா எல்லைகளும் அவருக்கும் உண்டு என்றுதான் புராணமும் சொல்லும். ஆகவேதான் ராமனும் பிழைசெய்ய நேர்ந்தது. துயர்கொள்ளவும் வாய்த்தது.  

நான் ஞானிகளை கருணையற்றவர்கள் என சொல்பவன் அல்ல. ஆனால் மானுடரின் பார்வைகளின் எல்லைகளை உணர்ந்தவன். இளமையில் நான் மாட்டுவண்டிகளில் பயணம் செய்தவன். மாடு வண்டியிழுக்க வேண்டியது என்பதே என் இயல்பான எண்ணம். உழவுக்கும் பயணத்துக்கும் மானுடம் பத்தாயிரம் ஆண்டுகளாக விலங்குகளை பயன்படுத்தி வந்திருக்கிறது. நுகத்தில் கட்டி சவுக்காலடித்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன் அது எவ்வகையிலும் பிழையாக படவில்லை. சமீபத்தில் ஒரு குதிரை வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. குதிரை ஒன்றும் சிரமப்படவும் இல்லை.ஆனால் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. அதை என் அகம் ஏற்கவே இல்லை. ஏனென்றால் இன்றைய மதிப்பீடுகள் மாறிவிட்டிருக்கின்றன

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோயில் யானை பெருமாளை ஏற்றிக்கொள்வது என்பது அதன் கடமை, அதன் மோட்சம் என்றே கருதப்பட்டிருக்கும். அதை அடிப்பது எவருக்கும் பிழையென பட்டிருக்காது. மனிதர்களே அவ்வாறுதான் நடத்தப்பட்டனர்.  எப்படி விழுமியங்கள் மாறின என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். வலிந்து சித்தரிக்கவில்லை. கேட்டவர் தீவிர வைணவர் என்பதனால் அவ்வாறு விளக்கினேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசுபிட்சமுருகன் வாசிப்பு – கதிர்முருகன்
அடுத்த கட்டுரைநிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி