அழகென அமைவது – சுசித்ரா

அழகிலமைதல்

அன்புள்ள ஜெ,

ஒரு வினோத இணைவாக அமைந்த சம்பவத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நேற்று காலை வேறெதோ ஒரு நினைப்பில் புத்தக அலமாரியில் தோண்டி நடராஜ குருவின் சௌந்தரியலகரி உரையின் புத்தகத்தை எடுத்தேன். அந்த புத்தகம் என்னிடம் ஒரு பத்து வருட காலமாக இருக்கிறது. நான் பிட்ஸ்பர்கில் இருந்தபோது என்னுடைய அறைத்தோழி சாலினி எனக்கு பரிசாக அளித்தது.

சாலினி அப்போது என்னைப்போலவே ஆய்வுமாணவி. எனக்கு மிகமிக பிரியமான தோழியும் கூட. கேரளப்பெண். சகலவிதமான ஆன்மீக மார்கங்களிலும் மாற்று வாழ்க்கைமுறைகளிலும் அவளுக்கு ஆர்வம் இருந்தது. ரெய்கி, மாற்று உணவு, மாற்று மருந்து என்று எல்லாவற்றையும் செய்தும் பார்ப்பாள்.  எந்த புதிய விபாசன தியான ஜப முறையை பற்றி அறிந்துகொண்டாலும் போய் உடனே கற்றுக்கொண்டுவந்து காலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து விளக்கேற்றி ஊதுபத்தி கமழக்கமழ பயிற்சிக்கு உட்கார்ந்துவிடுவாள். ஆன்மீகப்புத்தகங்கள் மட்டும் தான் படிப்பாள், சகட்டுமேனிக்கு.  ஒரே சமயம் ஶ்ரீஶ்ரீரவிசங்கரையும் ஶ்ரீராமகிருஷ்ணரையும் அருணாசல ரமணரையும் அரவிந்தரையும் பின்தொடர்ந்தாள். நாராயண குருவின் பெயரை முதன்முதலாக அவள் வழியாகத்தான் கேள்விப்பட்டேன்.

அவள் மேல் எனக்கு அநேக பிரியம் என்றாலும் அவளுடைய நானாவித முயற்சிகளையும் உள்ளூர ஒரு சின்ன புன்னகையோடு தான் நான் பார்ப்பேன். ஏனென்றால் அப்போது எனக்கு நான் ஒரு தர்க்கபுத்திக்கொண்ட, அறிவியல் பிடிப்புக்கொண்ட, ரேஷனலான ஆள் என்ற நினைப்பு. கல்வி என்பது படிப்படியாக ஆராய்ந்து அடையவேண்டிய ஒன்று என்று நான் நினைத்தேன். அவளுக்கும் அதே போல் என் மீது ஒரு ஓரக்கண் விமர்சனம் உண்டு. எல்லாத்தையும் கேள்வி கேட்கும் என்னுடைய பண்பு, பொதுவான ஒழுங்கின்மை, இலக்கியம் படிப்பதன் தொற்றாக வரும் irreverence, எல்லாமே அவளுக்கு உவப்பில்லாததாக இருந்திருக்கலாம். இந்த வித்தியாசங்களையும் மீறி நாங்கள் பிரியமான நண்பர்களாக நீடிக்க எங்களுக்குள் ஏதோ இணைவு இருந்திருக்கவேண்டும்

அவளுடைய புத்தகக்கட்டில் தான் நடராஜ குருவின் சௌந்தர்யலகரியை பார்த்தேன். எடுத்து பக்கங்களை திருப்பினேன். முன்னுறையை படித்தேன். வியந்தேன். ஏதோ அரிதான நிலக்காட்சிக்குள் நுழைந்ததுபோல இருந்தது.

சாலினியிடம் “என்ன புத்தகம் இது” என்று கேட்டேன். “சும்மா வாங்கினேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீ வேண்டுமென்றால் வைத்துக்கொள். என் பரிசு,” என்றாள். சரி, என்று கொண்டு போனேன்.

சௌந்தர்யலகரி எனக்கு பரிச்சயம் உண்டு. அது அம்மா தினமும் பாராயணம் செய்யும் நூல்களில் ஒன்று. அம்மாவின் பிரதியின் முதற்பக்கத்தில் தேவியின் மிக அழகான கருப்புவெள்ளை பென்சில் ஓவியம் ஒன்று இருக்கும். பார்த்துப்பார்த்து பழுப்பேறிப்போன தாளில் பெரிய கண்களுடன், பூரணமாக நிறைந்து வழிவது போல அழகுடன் இருப்பாள். கேட்டுக்கேட்டு அதில் பல சுலோகங்கள் எனக்கு மனனமாகத் தெரியும். அதன் அழகான சந்தம் எனக்கு எப்போதுமே பிடிக்கும். காலில் கொலுசு கட்டிய பெண்குழந்தை முதலில் சில அடிகளை மெல்லமாக எடுத்து வைத்து பிறகு கிணுகிணுவென்று வேகமாக ஓடுவது போன்ற வரிகள். பிறகு அர்த்தம் படித்து வாசித்தபோது நுணுக்கமான கவிதை என்று புரிந்தது.  ஶ்ரீசக்ரமும் தெரிந்த உருவம். அம்மா பூஜைக்கு முன்னால் கரைத்த அரிசிமாவில் கோலமாக ஒவ்வொருநாளும் வரைவது ஶ்ரீசக்ரத்தை தான். பிந்துவில் ஒரு அரளிப்பூவோ பாரிஜாதமோ வைப்பார். பதினைந்து பதினாறு வயதில் நானும் அதைப் போடக் கற்றுக்கொண்டேன். இப்போதும் கண்ணை மூடிக்கொண்டு வரைவேன்.

அம்மாவுடைய சௌந்தரியலகரி பிரதியில் யந்திரங்களின் சிறிய படங்களுடன் ‘பலன்களும்’ போட்டிருக்கும். சில பலன்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ‘இந்த யந்திரத்தை வரைந்து இந்த சுலோகத்தை 45 நாட்களுக்கு 1008 உருப்படி போட்டு தயிரும் தேங்காயும் நைவேத்தியம் செய்தால் எதிரிகளை வெல்லலாம். பேய்களை ஓட்டலாம். குழந்தைகளுக்கு குடல்நோய் தீரும்’. இப்படி. முரட்டுத்தனமான பெண் அடங்கிப்போவதற்குக்கூட சுலோகம் உண்டு.  குப்புறப்படுத்துக்கொண்டு பல்லிவிழும் பலன் படிப்பதுபோல ஆர்வத்தோடு படிப்பேன்.

அப்படி இருக்க, நடராஜ குருவின் உரைநூலைக் கண்டபோது, அதன் முகப்பில் கூறப்பட்டவை நான் முற்றிலும் கேள்விப்படாத தளத்தில் இருந்தன. நான் படித்த எந்த ஆன்மீக புத்தகம் போலவும் அது இல்லை. தத்துவம் மாதிரி இருந்தது. ஆனால் வாசிக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றுமே புரியவில்லை. Protolinguistic என்றால் என்ன, structural approach என்றால் எதைச் சொல்கிறார், யந்திரங்களைப்போல் அவர் புத்தகம் முழுவதும் வரைந்துவைத்திருந்த கட்டங்களுக்கு என்ன அர்த்தம், ஒன்றுமே புரியவில்லை. அந்த இடத்தில் கல் சுவரென நின்றுவிட்டேன். அந்த ஆசிரியர் கண்டுவிட்ட முக்கியமான எதையோ எனக்குக் கண்டுகொள்ள கண் இல்லாமல் குருடாக இருக்கிறேனே என்று மட்டும் புரிந்தது. அந்த இயலாமை உணர்வின் வெறுமை வந்து சூழ்ந்தது.  ரோஜர் பென்ரோசின் ‘The emperor’s new mind’ என்ற புத்தகத்தை கல்லூரியில் இருந்தபோது எங்கேயோ பார்த்து வாங்கி கொஞ்ச தூரம் படித்த்திருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் புரியவில்லை. ஆனால் புரிந்ததுவரை என்னை பயங்கரமாக தூண்டிவிட்டிருந்த நூல். எனக்கு நரம்பியலில் ஆர்வம் வர அந்த புத்தகம் ஒரு காரணம். இதை புரட்டியபோது அதே உணர்வு ஏற்பட்டது. அதே பரபரப்பு, அதே நிலைகொள்ளாமை, புரியவில்லையே என்று கைப்பிழியும் அதே இயலாமை.

அந்த நாட்களில் தான் எனக்கு அறிவியலின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர ஆரம்பித்திருந்தன. மனம் தத்துவத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. மதமும் ஆன்மீகமும் கூட மனத்தோடும் தத்துவத்தோடும் எங்கோ சென்று இணைந்தாகவேண்டும் என்று புரியத் தொடங்கியிருந்தது. ஆனால் இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது, எங்கிருந்து தொடங்குவது, யாரிடம் கேட்பது என்று ஒன்றும் புரியாமல் இருந்த நாட்கள். இந்தப்புத்தகம் அந்த உலகத்துக்குள் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் கல்லால் வாயில் அடைத்த குகை மாதிரி இருந்தது.

சாலினியிடம் வாங்கிய பிறகு பல முறை அந்த புத்தகத்தை பிரித்துப் படிக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் புரிதலில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பிறகு காலம் கடந்தது. சாலினியின் தொடர்பு விட்டுப்போனது. அவள் இப்போது என்னென்ன பரிசோதனைகளில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. நான் இலக்கியம்  பழகிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னை  பழகிக்கொள்ள ஆரம்பித்தேன். உங்களை சந்தித்தேன். உங்கள் மூலம் இந்தப்பாடல்களை கவிதைகளாக எப்படி வாசித்து விரித்துக்கொள்ளலாம் என்று கற்றுக்கொண்டேன். அதன் வழியாக தொட்டுத்தொட்டு இந்த பாடல்களில் இருந்துகொண்டிருக்கிறேன். மேலும் என்னைச் சுற்றியுள்ள உலகைக்காண ஆரம்பித்தேன். என்னுள் சிறு வயது முதலாக உறங்கிக்கிடந்த சிவனும் சக்தியுமான வடிவங்கள் உருக்கொள்ளத்தொடங்கியது. முற்றிலும் உணர்வுரீதியான அனுபவங்கள். அந்த அனுபவங்களை என்னால் புரிந்து சொல்ல முடியவில்லை. எந்த ரேஷனலான பரிசீலனையாலும் விளக்கமுடியவில்லை. அதே நேரம் அதை மத உணர்வு என்று சொல்ல முடியவில்லை. விழிப்பு என்று வேண்டுமென்றால் சொல்லலாம். மேலும் கண் திறந்து பார்க்கிறேன். மேலும் ஒளி உள்ளே வருகிறது.

இப்போது நடராஜ குருவின் உரையில் அவர் உபயோகிக்கும் முறைமைகள் – முரணியக்க தர்க்கம், structuralism, முதலியவை அவர் எங்கிருந்து எதை உத்தேசித்து எப்படிக் கையாள்கிறார் என்று புரிகிறது. நித்ய சைதன்ய யதியின் சிந்தனைகளை உங்கள் வழியாக அறிந்ததன் விளைவான ஞானம் இது. அந்த சிந்தனை முறைக்குள் இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ஆனால் தர்க்கம் ஓரளவுக்கு பிடி கிடைத்தாலும் அவர் உணர்வுகள், அவர் நின்று பேசும் இடம், என்னால் அங்கே போக முடியவில்லை. அவர் சட்டகம் சட்டகமாக போடும் தர்க்க அமைப்புக்கும், அவர் பாடல் மொழியாக்கத்திலும் உரையிலும் காணக்கிடைக்கும் பரவசத்துக்கான உறவையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் தீப்பிடித்தது போல மரங்களெல்லாம் நின்றுகொண்டிருக்கின்றன. ஒளியில் பொன்னும் மாணிக்கமும் பூண்டு நிற்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒளிசூடி ஒளிசூடி பூமியில் சுழன்று வந்து விழுகிறது. கிழே சருகுக்குவியல். எனக்குள் அம்மா சொல்லிச்சொல்லிக் கேட்ட அந்த பழைய வரிகள் சந்தமாக ஓடுகின்றன. கிண்கிண்ணென்று மணிகளைப் போன்ற ஒலியுடைய சொற்கள். கோடு வரைந்து தர்க்கம் போட முடியுமா இந்த உலகத்தில்? போட்டாலும் எரிந்து உருகும் இந்த உலகத்தில் வைத்து அதை பார்க்கமுடியுமா? பார்த்துவிட்டால் உலகத்தில் பிறகு இருக்க முடியுமா? காட்சியையும் தர்க்கத்தையும் ஒருசேர மீற முடியுமா என்ன?

நேற்று காலை சாலினி எனக்கு அளித்த நடராஜ குருவின் சௌந்தரியலகரி உரையை எடுத்துப் பார்தேன். தற்செயல் தான். அப்போது, திறந்ததும், முதல் பக்கத்தில் அவள் பென்சிலில் எழுதிவைத்திருந்த மலையாள வரிகள் என் கண்ணில் பட்டன. பல முறை கண்டும் அதை குறித்து எனக்கு ஆர்வம் எழுந்ததில்லை. நேற்று அந்த வரிகள் என்ன என்று தோன்ற அதைத் தேடினேன்.

அவை நாராயண குருவின் வரிகள். ஜனனி நவரத்ன ஸ்தோத்ரம் என்ற பதிகத்திலிருந்து

மீனாயதும் பவதி மானாயதும் ஜனனி
நீ நாகவும் நகககம்
தானாயதும் தர நதீ நாரியும் நரனு
மா நாகவும் நரகவும்
நீ நாமரூபமதில் நானாவிதப்ரக்ருதி
மானாயி நின்னறியுமீ
ஞானாயதும் பவதி ஹே நாதரூபிணி-
அஹோ! நாடகம் நிகிலவும்.

இந்தப்பாடலை எனது எல்லைக்குட்பட்டு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

மீனாகவும் மானாகவும் உள்ள தாயே
நீயே பாம்பாகவும் பருந்தாகவும்
நிலமாகவும் நதியாகவும்
பெண்ணாகவும் ஆணாகவும்
சுவர்க்கமாகவும் நரகமாகவும்

இருக்கின்றாய்
உன் பெயருருவத்தில் இங்குள்ள எல்லா படைப்புமாகிறாய்

ஹே நாதவடிவானவளே,
உன்னை அறியும் நானாவும் ஆகிறாய்… அகோ!

என்ன ஆச்சரியம்! எல்லாம் நாடகம்.

இந்தப்பாடலில் ‘அகோ’ என்ற சொல் நேற்று முழுவதும் என்னை பின்தொடர்ந்து வந்தது. இரவில் உங்கள் தளத்தில் ‘அழகிலமைதல்’ என்ற கட்டுரையை வாசித்தேன்.

 

அன்புடன்,

சுசித்ரா

 

முந்தைய கட்டுரைஅதிமதுரம்
அடுத்த கட்டுரைநாராயண குருவின் இன்னொரு முகம்