கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெ,
நலம் தானே?
கல்குருத்து சிறுகதை அதிமதுர வாசிப்பனுபவம். ‘திருவிளையாடல்’ சினிமா காணும் பொழுதெல்லாம் ஒருவித பரவசம் தோன்றும். அப்படியொரு திருப்தி இக்கதையில் கிடைக்கிறது. பூலோக ஆத்மாக்களுக்கு ஏதேனும் சோதனையென்றால் கடவுளர்கள் மண்ணில் தோன்றி திருவிளையாடல் நிகழ்த்தி சுபமாய் முடித்து வைப்பதுபோலே கல்லாசாரியும் கல்லாசாரிச்சியும் அழகம்மை வீட்டில் தோன்றி மாற்றங்கள் செய்வது அற்புதம்.
அவர்கள் அம்மியை மட்டும்தானா கொத்துகிறார்கள்? சிற்பிகள் போல் அவர்கள் செதுக்குவது மற்றுமோர் சிலையையும் தானே? அழகம்மை. என்னவொரு அருமையான பெயர். அழகு அம்மை. “A Beautiful Mother” is in the making. இன்னொரு பக்கம் ஆசான் கதை வழியாய் வாசக மனங்களை கொத்தி கொத்தி கனிய வைத்து நெகிழ்த்தியபடி செல்கிறார். So many parallel tracks, subtexts and nuances.
“அவர்கள் இருவரும் இரு பக்கமாக அமர்ந்து அம்மியை கொத்த ஆரம்பித்தனர். இரு கிளிகள் சிலைப்பொலி எழுப்புவது போலிருந்தது. டிச்! டிச்! டிச்!
கருங்கல் கற்கண்டு சீவல்கள் போல உடைந்து உடைந்து விழுந்தது. அதன் தூள் விபூதி போலிருந்தது” அடடா. கவித்துவமாய் வரிகள் விரிந்து பறக்கிறது. கதை நெடுக அவரவர்க்கு தேவையான பிரசாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனது கற்கண்டு விபூதியை நான் எடுத்துக் கொண்டேன்.
“ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது” இவ்வரிகள் பாரதியின் பராசக்தி வணக்கத்தை நினைவு படுத்தியது.
“ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்றமைத்தனன் சிற்பி மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்றுயர்த்தினான்; உலகினோர் தாய்நீ;
யாங்கணே எவரை எவ்விதம் சமைத்தற்
கெண்ணமோ அவ்விதம் சமைப்பாய்
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் என்னை
இருங்கலைப்புலவனாக்குதியே”
அந்த பெருசுகள் ரெண்டும் ஏதோ பிதற்றுகிறார்கள் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்க நமக்கு நேரமும் மனமும் அமையவில்லை என்றால் அவை வெறும் உளறல்கள் தான். மாசி மாசம் இருள் குழ்ந்து கருமேகம் மழை பெய்து காற்றடித்து பூக்கள் உதிர்ந்துவிட்டால் பிறகு பிஞ்சு வைத்து காயாகி கனிவது எப்படி? ஆனாலும் கிழவி ஆவணி மாதம் சுபநிகழ்ச்சியை ஊகித்து விடுகிறது. ஆவணி மைனஸ் மாசி என்றால் ஏழு மாதம். பொதுவாக ஏழாம் மாதம் வளைகாப்பு வைப்பார்கள். கிழவர் “சவத்துக்கு கருப்பட்டி” என்றவுடன் சிரித்து விட்டேன்.
தீபாவளி மலரில் வெளியான சிறுகதை என்பதால் என்னவோ கதை முழுக்க ஒரு festival mood திகழ்கிறது. சில சவங்களுக்கு கருப்பட்டி. சில சவங்களுக்கு உங்கள் சிறுகதைதான் ஸ்வீட். இவ்வருட தீபாவளி பலகாரங்களில் மிகச்சுவையான பலகாரம் கல்குருத்து தான். வருகின்ற தைப்பொங்கலுக்கு இதே போன்று மண்வாசனையுடன் ஒரு சிறுகதை படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்,
ராஜா.