விகடனை எண்ணும்போது…

அன்புள்ள ஜெயமோகன்

.. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?

ராஜேந்திரபிரசாத்

அன்புள்ள ராஜேந்திரபிரசாத்

இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று மதியம் ஒருமணி வரை 3148.

பெரும்பாலும் எல்லா வாசகர்களும் ஆனந்தவிகடன் இதழ் செய்திருக்கும் பொறுப்பற்ற செயல் பற்றிய வருத்தத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் பலர் விகடனில் வெளியான எனது ‘சங்கசித்திரங்கள்’ மூலம் என்னை அறியவந்தவர்கள். விகடனின் நெடிய வரலாற்றில் இத்தகைய ஒரு ‘ஆள்காட்டி’ கட்டுரை இதுவே முதல் முறை என்ற வருத்தம் பலருக்கு இருக்கிறது. எனக்கும்.

சிலர் எழுதிய கடிதங்களில் பொதுவாக எழுந்துவந்த சில ஐயங்களை மட்டும் இப்போது உங்கள் வினாவுக்கான பதிலுடன் இணைத்துக் கொள்கிறேன்.

*

சிவாஜி அல்லது எம்.ஜி.ஆர் அல்லது இந்த இணையதளத்தில் பகடிசெய்யப்பட்டிருக்கும் பிற எவரையும் இழிவுசெய்யும் நோக்கம் எனக்கு இல்லை. இவர்களில் பலர் என் நண்பர்கள், மதிப்பிற்குரிய ஆசிரியர்கள். இது ஓர் இலக்கிய வகைமை. தமிழில் சிற்றிதழ் சார்ந்து எழுதபப்டும் தீவிர இலக்கியத்தில் எப்போதுமே இந்த அம்சம் இருந்திருக்கிறது.

விகடனின் இன்றைய நட்சத்திர எழுத்தாளரான சுஜாதா நாற்பது வருடம் முன்பு திருவிளையாடல் படம் குறித்து கணையாழியில் எழுதியவைக்குக் கூடுதலாக ஒன்றும் என் கட்டுரையில் எழுதப்படவில்லை. சுந்தர ராமசாமி உள்பட எல்லா எழுத்தாளர்களும் இப்படி எழுதியிருக்கிறார்கள். சமீபத்திய சிறந்த உதாரணம் பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ [காலச்சுவடு பதிப்பகம்] பெங்குவின் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்து உலகெலாம் படிக்கபட்டு ஒரு கிளாசிக் என புகழப்பட்ட Tiger Claw Tree நாவலின் இந்த தமிழாக்கத்தில் எம்.ஜி.ஆர்,சிவாஜி குறித்து வெளிவந்தவற்றுக்கு ஒரு படி குறைவாகவே என் கட்டுரைகள் உள்ளன என்று நீங்கள் வாசித்தால் காணலாம். காந்தியைப்பற்றியும் நேருவைப்பற்றியும் இதைவிட பல மடங்கு உக்கிரமான பகடிகளை எழுதிய வி.எஸ்.நைபாலுக்குத்தான் நோபல் பரிசு வழஙக்ப்பட்டது. இந்திய அரசால் அவர் கௌரவிக்கப்பட்டார்.

ஆம், இலக்கியத்தில் இல்லாத ஒன்றை, தேவையற்ற ஒன்றை நான் எழுதிவிடவில்லை. அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது. சாதி, மதம்,தெய்வம் ,அரசாங்கம் அனைத்தையும் நகைச்சுவையாக ஆக்கும் உரிமை இலக்கியத்துக்கு உண்டு என்று உலகமெங்கும் உள்ள நாகரீக சமூகங்கள் அங்கீகரித்துள்ளன.

நமது அண்டைமாநிலமாகிய கேரளத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் பாருங்கள். கடுமையான கிண்டலுக்கு உள்ளாக்கப்படாத எவராவது உள்ளனரா என்று தேடுங்கள். மம்மூட்டியை தலைவராகக் கொண்டதும், கம்யூனிஸ்டுக் கட்சியால் நடத்தப்படுவதுமான ‘கைரளி’ டிவியில் மம்மூட்டியையும், கம்யூனிஸ்டுதலைவர்களையும் சகட்டுமேனிக்கு கிண்டல்செய்து ஒவ்வொருநாளும் நிகழ்ச்சிகள் வெளியாகின்றன.

‘ஆசியாநெட்’ தொலைககட்சியில் ‘சினிமாலா’ என்று ஒரு நிகழ்ச்சி. அதில் வாரந்தோறும் தலைவர்களை கிண்டல்செய்வார்கள். தலைவர்களைப்போல வேடமிட்டுவந்து வந்து அவர்களைப்போலவே குரலால் பேசி அவர்களின் உடலைசவு பேச்சுமுறை எல்லாவற்றையும் சேட்டைகளாக மாற்றி பகடி செய்வார்கள். எப்போதுமே அதன் முக்கிய இலக்கு கேரளத் தலைவர் கெ.கருணாகரன். காரணம் அவரது முதுமை காரணமாக அவர் பேசுவது இயல்பாகவே சற்றுக் குளறலாக இருக்கும். அந்நிகழ்ச்சியின் நாநூறாவது நாள் நிறைவுக்கு சிறப்பு விருந்தினராக வந்து அக்கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கியவர், கெ.கருணாகரனேதான்.

அத்தகைய அறிவார்ந்த தரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் தமிழ்நாட்டில் எதிர்பார்க்க இயலாது என்று நான் அறிவேன். எதற்கெடுத்தாலும் மிகையாக உணர்ச்சிவசப்படுவதும், மனிதர்களைப் புகழ்ந்து புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்துவதும், மாற்றுக்கருத்தை வன்முறைமூலம் எதிர்கொள்வதும் இங்கு ஒரு பண்பாடாகவே வளர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று பிரபல இதழ், தொலைக்காட்சி உள்பட நமது பொது ஊடகங்களில் பகடியும் அங்கதமும் சாத்தியமே இல்லை. மாறி மாறிப் புகழ் பாடுவதற்கு மட்டுமே இடமுள்ளது.

ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளுக்கு தீவிரஇலக்கியம் ஒத்துப்போகவேண்டுமென்று எதிர்பார்ப்பது இலக்கியம் மீதான ஒடுக்குமுறையாகவே எஞ்சும். அதன் பின் புதுமைப்பித்தனோ, ப.சிங்காரமோ தமிழில் இருக்க முடியாது. நவீன இலக்கியமே இருக்க முடியாது.

என்னுடைய கட்டுரைகள் இலக்கியத்திற்குரிய அரங்கில் மட்டுமே முன்வைக்கப்பட்டவை. இலக்கியத்தில் பகடியின் இடத்தை அறிந்த சிலர், ஏற்கனவே புதுமைப்பித்தன் முதல் பி.ஏ.கிருஷ்ணன் வரையிலான எழுத்தாளர்களைப் படித்தவர்கள், மட்டுமே அதைப் படித்தார்கள். இழிவுபடுத்த வேண்டுமென்ற நோக்கம் இருந்தால் அதை இலக்கிய வாசகர்கள் அல்லாத பொது வாசகர்கள் படிக்கும் பெரிய ஊடகங்களில் எழுதியிருப்பேன். உண்மையில் இக்கட்டுரைகளை மறுபிரசுரம்செய்ய பிரபல இதழ்கள் விரும்பிக் கேட்டன. நான் மறுத்துவிட்டேன். பிரபல இதழ்களில் உள்ள பொதுவான வாசகர்களுக்குப் புரியக்கூடியவற்றை எழுதித்தருகிறேன் என்றே சொன்னேன்.

அப்படியானால் இந்த ஆளுமைகளை இழிவுபடுத்தியது யார்? இவற்றை என் அனுமதி இல்லாமலேயே எடுத்து மறுபிரசுரம்செய்த ‘ஆனந்த விகடன்’தான். உண்மையில் இக்கட்டுரைகளை விகடனில் பிரசுரம் செய்ய ஒரு குறுக்கு வழியையே அவர்கள் தேடியிருக்கிறார்கள். கட்டுரைகளை அப்படியே எடுத்துப் போட்டால் அது சட்டவிரோதமாகும். உடைத்து மேற்கோளாகக் காட்டினால் சட்டப்படி சரி. கட்டுரையையும் மறுபிரசுரம் செய்யலாம், எந்தப் பொறுப்பும் கிடையாது என்று எண்ணியிருக்கிறார்கள்.

ஓரு தரமான இலக்கியச் சூழலில் அதற்கான ஒருசில வாசகர் நடுவே இலக்கிய நோக்குடன் மட்டுமே வாசிக்கபப்ட்ட இக்கட்டுரைகளை இலக்கியம் பற்றி அறியாத வாசகர்கள் நடுவே கொண்டுசென்று வேறுவகையாக வாசிக்கச்செய்தது வழியாக எம்ஜி.ஆர், சிவாஜி இருவரையும் இழிவுடுத்தியது விகடன்தான். மிக துரதிருஷ்டவசமானது இது.

*

எம்.ஜி.ஆரின் பேச்சுமுறையைக் கிண்டல் செய்யலாமா என்ற வினா. உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமல்ல. ஒருபோதும் நான் என் தனிவாழ்விலும் எழுத்திலும் அதைச் செய்ததில்லை.

ஆனால் இலக்கியத்தில் இதற்கு இடமிருக்கிறது. பின்நவீனத்துவ காலத்து இலக்கியம் அங்கதத்தை ‘கவிழ்ப்பாக்கம்’ [subversive writing] என்றே குறிப்பிடுகிறது. ஒன்றை நேர் தலைகீழாக்கிப் பார்த்தல். நமது புராணங்களை அப்படி தலைகீழாக்கிப் பார்க்கும் பல நூல்கள் தமிழிலேயே வெளிவந்துள்ளன. அவற்றுக்கு நாகரீக எல்லைகளோ , ஒழுக்க எல்லைகளோ இல்லை. ஏனென்றால் நாகரீகம் ,ஒழுக்கம் என்று வரையறைசெய்து அதிகாரமாக ஆக்கியிருக்கும் விஷயங்களைத்தான் அவை தலைகீழாக்குகின்றன. உதாரணமாக நம் மரபில் முதியவர்களை நாம் மதிப்பாகவே நடத்துவொம். இது தொன்மையான பிதா வழிபாட்டின் ஒரு வடிவம் மட்டுமே என்றும் எந்த மனிதனையும் அவனது இயல்புகளுக்காக மட்டுமே மதிக்கவேண்டுமன்றி வயதுக்காக அல்ல என்றும் ஒர் எழுத்தாளன் எண்ணக் கூடாதா என்ன? அதை அவன் செய்யும்போது அது முறையல்ல என்று ஒழுக்க விதியை போட முடியுமா? ஒழுக்கத்தை மீறும்பொருட்டுதானே அவன் அதை எழுதுகிறான்?

மேலும் ஒரு புகழ்மிக்க மனிதரின் பேச்சுமுறை என்பது அவரது அடையாளம் மட்டுமே. அவரது குறை அல்ல அது. அப்படிப்பட்ட அடையாளங்களை மட்டுமே அங்கத இலக்கியம் எடுத்துக் கொள்ள முடியும். நானறிந்தவரை நாற்பது வருடங்களாக இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு அவர்களின் திக்குவாய் கிண்டலடிக்கப்படுகிறது. ‘நம்பூதிரிப்பாடு பேருரையாற்றினார். திக்கலைத் தவிர்த்தால் அது ஒரு சிறு குறிப்புதான்’– எழுதியவர் புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர்.

மீண்டும் அதைத்தான் சொல்கிறேன். தமிழின் பொதுச்சூழலில் இலக்கியம் பற்றிய அறிதலே இல்லை. ஆகவே இத்தகைய விஷயங்களை நாம் பொதுவாசகர்களிடையே கொண்டு செல்ல முடியாது. திட்டமிட்டு அப்படிக் கொண்டுசென்றது ஆனந்தவிகடன் செய்த பிழை. இதன்மூலம் அந்த இதழ் அவ்விரு ஆளுமைகளையும் பொதுமக்கள் முன் இழிவுபடுத்தியிருக்கிறது.

*

இதை விகடன் செய்வதற்கு தனிப்பட்ட காரணமும் உண்டு. திடமான ஆதாரம் இல்லாமல் அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இத்தகைய தனிப்பட்ட காழ்ப்புகளை சமூகப் பிரச்சினைகளாக ஆக்குவது மிக மிகப் பிழையான ஒன்று என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

*

இந்தச் செயல் மூலம் ஆனந்த விகடன் ஒரு பெரிய சவாலை இலக்கியவாதிகளுக்கு விடுத்துள்ளது. தமிழில் இன்றுவரை ஓர் எழுத்துச் சுதந்திரம் உள்ளது. கலை,அரசியல்,பண்பாடு குறித்து எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதி வருகிறார்கள். அந்த எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பெரிய வட்டம் நவீன இலக்கியத்தைச் சூழ்ந்து உள்ளது. அவ்வட்டத்துக்கு இவ்வெழுத்துக்களை போட்டுக் கொடுப்பது மூலம் எழுத்தாளர்களை முற்றிலும் பாதுகாப்பற்றவர்களாக ஆக்கிவிடலாம். மிக ஆபத்தான ஒரு மிரட்டலை விகடன் இலக்கியவாதிகளுக்கு விடுத்துள்ளது.நாளை இதை யாரும் செய்யலாம். மதவாதிகள், அரசியல்வாதிகள். இங்கும் தஸ்லீமா நஸ்ரீன் மீது நடந்தது போன்ற அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடக்கலாம். அதற்குத்தான் விகடன் வழிகாட்டியிருக்கிறது

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இதழ் வந்துசேர்ந்திருக்கும் இடம் என்று நினைக்கும்போது ஏற்படும் வருத்தமே அனைத்திலும் மேலாக உள்ளது.

முந்தைய கட்டுரைஆதிமூலம் நினைவிதழ்
அடுத்த கட்டுரைவிவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்