கண்மணி குணசேகரன், கடிதங்கள்.

கண்மணி குணசேகரனும் சாதியும்

அன்புள்ள ஜெ

கண்மணி குணசேகரன் பற்றி உங்கள் கட்டுரையை கண்டேன். அவர் ஜெய் பீம் பற்றி சொன்ன கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது அவருடைய அந்த நிலைபாட்டை ஏற்கிறீர்களா? அதை ஒட்டி அவர் தாக்கப்படும்போது எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரனை ஆதரிக்கவேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் எழுத்தில் இக்குழப்பம் இருக்கிறது எனக்கு.

மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன்,

எளிமையாக வாசிப்பவர்களுக்கு எக்குழப்பமும் வராது. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் விதண்டாவாதமே தொழிலாக அலையும் வம்பர்களின் உலகு பேருருக்கொண்டுள்ளது. உங்கள் குழப்பம் அங்கே உலவுவதன் விளைவு

அக்கட்டுரை ஜெய்பீம் பற்றிய கண்மணி குணசேகரனின் கருத்தை பற்றியது அல்ல. அவருடைய அரசியல் பற்றியதும் அல்ல. அவர் ஜெய்பீம் பற்றிச் சொன்னது அவர் சார்ந்திருக்கும் சாதிக்கட்சி- சாதிச்சங்கத்தின் தரப்பு.அதற்கு எதிர்ப்பு வந்தால் அவரும் அவருடைய சாதிக்கட்சியும் சாதிச்சங்கமும்தான் அவரை ஆதரிக்கவேண்டும். அதில் எழுத்தாளர்கள் ஆதரவு தேவையில்லை,கூடாது.

அதேபோல ஓர் எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சாதிச்சார்பு நிலையை ஏற்கவில்லை என்றால், கண்டிக்கிறார் என்றால் அதைச் சொல்லுவது அவருடைய உரிமை. நான் கண்மணி குணசேகரனின் அந்த எதிர்வினையை விவாதிக்குமளவுக்கு இலக்கிய- கருத்தியல் முக்கியத்துவம் கொண்டதாக நினைக்கவில்லை. அது ஓர் அரசியல், அவ்வளவுதான்.

ஆனால் கண்மணி குணசேகரனின் சாதிய ஆதரவு மனநிலையை ஒட்டி அவருடைய ஒட்டுமொத்த படைப்பியக்கத்தையே அவமதித்து எழுதப்படுவனவற்றை இலக்கியவாதியாக, இலக்கியவிமர்சகனாக என்னால் ஏற்கமுடியாது. நான் எப்போதுமே இலக்கியத்தின் குரலாக ஒலிப்பவன். இலக்கியவாதிகளை முன்வைப்பவன். அதில் மாற்று எண்ணமே இல்லை.

கண்மணியின் சாதிசார்பு உளநிலை அவர் வாழும் சமூகத்தின் பொதுப்பெருக்கில் அவரை இணைத்து அதன் குரலாக அவர் ஒலிக்கும்படிச் செய்கிறது. அது அவருடைய கலையின் ஊற்றுமுகம். அவருடைய அடையாளம், அவருடைய தனித்தன்மை. அந்த சாதிசார்பு மௌனிக்கும் கி.ராஜநாராயணனுக்கும் உண்டு. தி.ஜானகிராமன் உள்ளிட்டவர்களின் எழுத்தில் சாதிச்சார்பு இருக்காது, சாதிசார்ந்த பண்பாடு இருக்கும். அதுவே அவர்களின் தனித்தன்மையை உருவாக்கியது. அதை முன்னரே தமிழ் இலக்கியவிமர்சனத்தில் பேசியிருக்கிறார்கள். நானும் விரிவாக எழுதியிருக்கிறேன். இனக்குழு அழகியல் என அதைச் சொல்வேன்.

ஆகவே பொதுவெளியில் அரசியல்கூச்சலாளர் உருவாக்கும் நிபந்தனைகளைக் கொண்டு இலக்கியத்தை அளவிடவேண்டாம் என அக்கட்டுரை கோருகிறது. இலக்கியமே அறியா அரசியல்வாதிகளின் வம்பளப்புகளைக்கொண்டு இலக்கியவாசகன் இலக்கியவாதியை மதிப்பிடக்கூடாதெனச் சொல்கிறது. இலக்கியம் செயல்படும் ஆழுள்ளத்தை அப்படி எளிமையான அரசியலைக் கொண்டு வகுத்துவிட முடியாது என்கிறது. இலக்கியம் பொதுப்போக்கு அரசியல் கருத்துக்களால் உருவாவது அல்ல, வாழ்க்கை நுட்பங்களால் உருவாவது. ஆழுள்ளத்தில் இருந்து மட்டுமே அவை வர முடியும். ஆழுள்ளம் சிந்தனையின் கட்டுப்பாடு உள்ளது அல்ல. 

ஆனால் இலக்கியவாதி சாதிச்சங்கம், கட்சி உட்பட எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்தால் அவன் அதன் கொள்கைகளைச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். அது அவனுடைய ஆழுள்ளம் கலையென வெளிப்படுவதை தடுக்கும். அதையும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

மிகத்தெளிவாக, இலக்கியவாதியான கண்மணி குணசேகரனை அவருடைய அரசியல் சார்புகளைக்கொண்டு அறுதியாக மதிப்பிடுவதை எதிர்த்து அவரை படைப்பாளியாக முன்வைக்கிறது. அதேசமயம் அவருடைய அரசியலில் இலக்கியவாதி ஈடுபட தேவையில்லை என்கிறது. எப்போதும் என் நிலைபாடு இதுவே. இதை ஏற்கனவே மனுஷ்யபுத்திரன் பற்றிய கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள். எனக்கு மனுஷ்யபுத்திரன் என்னும் கவிஞர் ஆதர்சமான படைப்பாளி. ஒருநிலையிலும் அவரை விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர் திமுகக்காரர் என்றால் அது அவருடைய பிரச்சினை. அவர் திமுகவுக்காக பேசியவற்றின் அடிப்படையில் அவரை கவிஞரல்ல என ஒருவர் சொல்வார் என்றாலும் இதுவே பதில்.

இதில் என்ன குழப்பம்? என்ன சிக்கல்? மிகமிக எளிய ஒன்றாம்நிலை விஷயங்களைக்கூட பேச, புரிந்துகொள்ள முடியாத நிலையை இந்த டப்பாக்களின் ஓசை இங்கே உருவாக்கியிருக்கிறதா என்ன? இந்நிலையில் எதையாவது புரிந்துகொள்ள உங்களால் முடியுமா?

ஜெ

அன்புள்ள ஜெ,

கண்மணி குணசேகரன் பற்றிய உங்கள் கட்டுரை ஒரு தெளிவை அளித்தது. எழுத்தாளனாக அவருடைய வெற்றிகள் எனக்கு தெரியும். ஆனால் அவர் சாதிய நிலைபாடு எடுத்தபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். ஆனால் அவருடைய கலையின் ஊற்றே அதுதான் என்னும்போது அவர் இயல்பாக அதை வெளிப்படுத்துவதில் என்ன பிழை என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்வதுபோல அவர் அதை அரசியலாக முன்னெடுத்தால் இழப்பு அவருக்கே. ஆனால் இங்கே பெரும்பாலும் படைப்பாளிகள் சாதி சார்ந்த அரசியல் நிலைபாடு கொண்டவர்கள். அதை பூடகமாக வெளிப்படுத்துபவர்கள்.

இத்தனை நாள் கண்மணி குணசேகரனை படிக்காதவர்கள் ,ஒரு வார்த்தை  எழுதாதவர்கள் ஏதோ இலக்கியக்காவலர்கள் அறச்செல்வர்கள் புரட்சியாளர்கள் என்றெல்லாம் பாவலா காட்டி வசைபாடுவதைக் காணும்போது வெறுப்பாக இருக்கிறது. எந்த எழுத்தாளரை திட்டினாலும் திரண்டு வரும்  அரசியல் சல்லிகளின் கூட்டம் இது என உறுதியாகிறது.

நடராஜ் முகுந்தன்

 

அன்புள்ள நடராஜ்,

முக்கியமான நாவல்களை, அகராதியை உருவாக்கிய ஒரு படைப்பாளி கண்மணி குணசேகரன். ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பகுதியின், ஓர் இனக்குழுவின் கலைஞன். அவர் பற்றி இணையத்தில் ஒரு நூறுபக்கம் பாராட்டி எழுதப்பட்ட பின், அவருடைய சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட்டபின், ஆயிரம் பக்க வசை வந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. இங்கே வருவன வசை மட்டுமே. வசைபாட மட்டுமே எழுத்தாளனின் பெயரை கணக்கில்கொள்கிறார்கள். இவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. பொதுமக்கள் என எவருமில்லை. பெரும்பாலும் அரசியல்சல்லிகள். ஒப்பேறாத சல்லி எழுத்தாளர்கள், எங்கும் புகுந்து நடனமாடும் இலக்கிய வம்பர்கள். அவர்களின் கூட்டுமனநோய்தான் வசையாக விழுகிறது.

ஆனால் இப்படியாவது இலக்கிய ஆர்வமுள்ள நூறு இளைஞர்களுக்கு கண்மணி குணசேகரன் பெயர் சென்று சேர்ந்தால் நல்லது. இன்றைய சூழலில் இப்படித்தான் எழுத்தாளன் பெயர் பெறவேண்டியிருக்கிறது போலும்.

ஜெ

முந்தைய கட்டுரைகல்லில் எழுந்த காலம் 2- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைநந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா