மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு

தனது சேவையாலும் அர்ப்பணிப்பாலும் பொதுச்சமூகத்தின் ஆன்மாவோடு இறுதிவரையில் உரையாடியவர் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம். காந்திய-கம்யூனிச கூட்டுறவுச் சிந்தனைகளின் மூலம் இவர் உருவாக்கிய பல முன்னெடுப்புகள் இன்று பல்வேறு துறைகளில், பலவிதக் களங்களில் அசாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சேவை மருத்துவத்தைப் பரவலாக்குதல், கூட்டுறவு மருத்துவமனைகளை பொதுமக்கள் பங்களிப்போடு நிர்மாணித்தல், சூழலியல் மீட்சிக்கான திட்டங்களை இடைவிடாது வகுத்தல், கல்விக்கூடங்களைத் துவக்குதல், செயலாற்றும் அமைப்புகளை உருவாக்குதல், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு வாயிலாக தொடர்ந்து படைப்புகளை வெளியிடுதல் என மருத்துவர் ஜீவா தமிழ்ச்சூழலில் பங்களித்திருக்கும் ஒவ்வொரு செயலும் தேசிய அளவில் இன்றியமையாதவை.

மருத்துவர் ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர் விட்டுச்சென்ற செயல்களைத் தொடர்வதற்காக அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஜீவா நினைவைப் போற்றும் வகையிலும், அவருடைய அக்கறைக்கு உரிய பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு அறப்பணிகளை முன்னெடுக்க மருத்துவர் ஜீவா அறக்கட்டளை முடிவெடுத்திருக்கிறது. ஜீவா அவர்களின் தங்கையான ஜெயபாரதி அம்மாவும், அவருடைய குடும்பத்தாரும், இன்னும்சில நட்புத்தோழமைகளும் இணைந்து அறக்கட்டளையின் செயற்திட்டங்களுக்குப் பொறுப்பேற்று மிகுதீவிரத்துடன் செயலாற்றவுள்ளனர். ஜீவாவின் நல்லான்மா எல்லா செயற்கனவையும் நிறைவேற்ற அகத்துணிவு அளிக்கட்டும்.

அவ்வகையில், அறக்கட்டளையின் முதற்கட்டப் பணிகளாக ஈரோடு நகரில் மருத்துவர் இதுவரை சேவையாற்றிய மருத்துவமனை வளாகத்தை ‘கட்டணமற்ற மருத்துவ ஆலோசனை மையம்’ ஆகப் பொதுச்சமூகத்துக்கு அர்ப்பணித்தல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட ‘ஜீவா நூலகம்’ அமைத்தல், ஆய்வறிஞர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு தங்குமிடம் அமைத்தல், ஜீவா நினைவாக அவர் பெயரில் ‘பசுமை விருதுகள்’ வழங்குதல், மருத்துவர் ஜீவா அவர்களின் உருவச்சிலை திறப்பு மற்றும் உரையாடல்வெளி துவக்கம், நூல்வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகள் துவக்கமடைகிறது.

மருத்துவர் ஜீவா அவர்களின் நினைவை மனமேந்தும்விதமாக, வருகிற டிசம்பர் 12ம் தேதி ஈரோட்டில் ஜீவாவுக்கான நினைவேந்தல் நிகழ்வு நிகழ்கிறது. இந்நிகழ்வில் பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூகப்போராளி மேதா பட்கர், எழுத்தாளர் ஜெயமோகன், நீதியரசர் சந்துரு, தோழர் வி.பி.குணசேகரன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று கூடுகையை மேலும் சிறப்பிக்க உள்ளனர். மேலும், ஜீவாவுக்கு நெருக்கமான பல முக்கிய ஆளுமைகளும் இதில் கலந்துகொள்கிறார்கள். இவ்வாண்டிற்கான பசுமைவிருதுகள் பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இளம் செயற்பாட்டாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை மருத்துவர் ஜீவா. செயலூக்கியாக நிறைய இளையவர்களை அறம் நோக்கி வழிப்படுத்திய அவருடைய பெருவாழ்வு என்றுமே வணக்கத்திற்குரியது. எல்லா நிலையிலும் எளியவர்களுக்காகவே சிந்தித்த அவருக்கு நாம் அனைவரும் இணைந்து செலுத்தும் இந்த நினைவேந்தல் கூடுகை நம் நன்றிப்பெருக்கின் சிறுதுளி என்றே அர்த்தப்படட்டும். தோழமைகள் அனைவரும் நிச்சயம் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுங்கள். நம் எல்லோரின் மனங்களிலும் ஜீவாவின் தாக்கம் பெருந்துணையாக நிறைந்திருக்கிறது. களமியங்கிச் செயலாற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் ஜீவா ஒரு மிக முக்கியமான முன்தடம்.

~
நன்றியுடன்,
குக்கூ காட்டுப்பள்ளி
தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
அடுத்த கட்டுரைஜா.தீபா கடிதங்கள்