விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]
[ 7 ]
தங்கள் வாழ்க்கையை ஒரு வெளிப்பாடாக, ஒரு வகையில் சொல்லப்போனால் ஒரு நிகழ்த்துகலையாக ஆக்கிக்கொண்ட கவிஞர்கள் உலகமெங்கும் உண்டு. அவர்களில் விக்ரமாதித்யன் ஒருவர். ஏ.அய்யப்பன் பற்றிச் சொல்லும்போது கல்பற்றா நாராயணன் குறிப்பிட்டார்.”அவருடைய கவிதைகள் ஒரு நாடகத்தில் உரைக்கப்படும் வசனங்களைப் போன்றவை. அவற்றைச் சொல்லும் கதாபாத்திரம் அவர்தான். அவர் அந்த நாடகத்தில் நின்றுதான் அந்த வசனத்தை சொல்ல முடியும். அந்த நாடகத்துக்கு வெளியே வந்து அந்த வசனத்தை சொல்லியிருந்தால் அவை புரிந்திருக்காது, அவ்வளவு உணர்ச்சிகள் ஏற்றப்பட்டிருக்காது. ஆகவே தன் வாழ்நாள் முழுக்க ஒரு நீண்ட நாடகமாக மாற்றிக்கொண்டார்”. விக்ரமாதித்யனுக்கு அது பொருந்தும்.
நினைத்துப் பார்க்கையில் முன்னால் சென்று மலையாளப் பெருங்கவிஞர் பி.குஞ்ஞிராமன் நாயர் அவர்களை நினைவு கூர்கிறேன். “ஏதோ வளை கிலுக்கம் கேட்டு அலையும் பிரஷ்ட காமுகன்” என்று அவரை ஆற்றூர் ரவிவர்மா சொல்கிறார். காதலியின் வளையலோசையை நினைவில் மீட்டுக்கொண்டு எல்ல ஓசைகளிலும் அதையே கேட்டு கலங்கி அலைந்து கொண்டிருக்கும் கைவிடப்பட்ட காதலன். பி.குஞ்ஞிராமன் நாயரின் அவருடைய வாழ்க்கைக் குறிப்புக்கு முன்னுரை எழுதிய எம்.டி. வாசுதேவன் நாயர், “இந்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இந்த வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞரின் வாழ்க்கையைப் போலவே கட்டவிழ்ந்தவை” என்கிறார். குத்தழிஞ்ஞவ என்ற சொல். குத்து அழிஞ்ஞ என்றால் சுவடிகளை சேர்த்துக் கட்டும் நூல் அறுபட்டுவிட்டது என்று பொருள். கட்டற்ற வாழ்க்கைக்கும் அச்சொல்லை பயன்படுத்துவதுண்டு.
தமிழில் ஒருவகையில் நகுலனையும் இவ்வாறு கூற முடியும். நகுலனின் வாழ்க்கை அருகே இல்லை எனில் அந்தக் கவிதைகளுக்கு எந்தப் பொருளும் இல்லை. புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் வழியாக நாமறியும் ஒரு நகுலன் நம்மிடம் நேரடியாக அவ்வரிகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன் பொருட்டுத் தன் வாழ்க்கையையே ஒரு முழு நாடகமாக அவர் நடிக்க வேண்டியிருந்தது. தன்னையறியாமலேயெ அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். சிமிட்டா பொடி, சற்றே சாய்ந்த சாய்வுநாற்காலி, செம்பில் நீர், வெற்றிலைபாக்கு, மது… நன்கு செதுக்கப்பட்ட ஒரு குணச்சித்திரம். ந.பிச்சமூர்த்திக்கோ பிரமிளுக்கோ தேவதேவனுக்கோ அப்படி ஒன்று இல்லை, அவர்கள் அந்தக் குணச்சித்திரத்தின் வல்லமையில் நிலைகொள்ளவில்லை. அவர்களின் தனிப்பட்ட குணச்சித்திரம் பற்றி மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.
பின்னால் சென்று நோக்கினால், பாரதிக்கும் இதை ஒரு வகையில் சொல்ல முடியும். பாரதி வாழ்வின் . பெரும்பகுதியை அபின் மயக்கத்தில் செலவழித்திருக்கிறார். பாரதியைப் பற்றிய வ.உ.சிதம்பரம் பிள்ளையின் குறிப்பு அவரை விக்ரமாதித்யனைப் போன்ற ஒரு ஆளுமையாகவே காட்டுகிறது. தனது கவிதைகளை உரக்கச் சொல்லி நடனமிடக் கூடியவர். கடற்கரையில் போதையில் கவிதைகளை உளறியபடி அலையக்கூடியவரை யதுகிரி அம்மாளின் இளமைக்காலக் குறிப்புகளில் அதைப் பார்க்கிறோம்.
ஞானப்பித்தர் என்றுதான் பாரதி பின்னாளில் கருதப்பட்டடார் ஆனால் அக்காலத்தில் வெறும் போதை அடிமையென்றே கருதப்பட்டிருக்கு வாய்ப்பிருக்கிறது. பாரதி புகழ்பெற்றது எல்லாம் அவர் மறைந்து மேலும் பதினைந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான். பாரதியின் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறுகள் எல்லாமே அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதப்பட்டன என்று சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார். செல்லம்மாள் பாரதியின் வானொலி உரை ஒன்றில் வாழ்ந்தபோது அவரை தானும் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்.
இந்த வாழ்க்கைப்புலம் கற்பனைவாதக் கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. உலகம் முழுக்க அவ்வாறுதான். மகாகவி குமாரன் ஆசான் நீரில் மறைந்தார். ஷெல்லி கடலில் மாய்ந்தார். அவர்களின் மறைவுக்கும் நாடகத்தனம் தேவைப்படுகிறது. ஆகவேதான் அபின் தின்று ஈரல் கெட்டு, வயிற்று உபாதைகளால் உயிர்விட்ட பாரதி, யானையால் தூக்கிப் போடப்பட்டதால் நோயுற்று உயிர் துறந்தார் என்ற கதையை அவர் மாணவர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. ஷெல்லி தன் கதையைத் தானே உருவாக்கிக் கொண்டார். கொந்தளிக்கும் கடலில் அவர் இறங்கிச் சென்றது ஒரு வகைத் தற்கொலைதான்.
தொட்டுத் தொட்டு செல்லும்போது இங்ஙனம் தன் வரிகளுக்குப் பின் வாழ்க்கையைக் கொண்டு வைத்த அத்தனை பேருமே கற்பனாவாதக் கவிஞர்கள் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. செவ்வியல் பெரும்படைப்பாளிகளுக்கு அது தேவை இல்லை. ஏனெனில் செவ்வியல் படைப்பு என்பது தன்னளவிலேயே ஒரு முழுமையான கட்டமைப்பு. அதற்கொரு ஆசிரியன் கூடத் தேவையில்லை. அந்த நூலுக்கு ஆசிரியன் என ஒரு பெயர் அடையாளம், ஒலி அடையாளம் இருந்தாலே போதுமானது. அவன் வாழ்க்கை எவ்வகையிலும் அப்படைப்பிற்கு மேலதிகப் பொருளையோ அழுத்தத்தையோ அளிப்பதில்லை. இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஆசிரியனை முற்றிலும் வெளியே தள்ளி தன் கட்டமைப்பாலேயே தானியங்கித் தன்மையுடன் காலத்தைக் கடந்து செல்லும் ஒன்றுதான் செவ்வியல் படைப்பு.
நவீனத்துவப் படைப்புகளுக்கு ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறான். காப்கா, காம்யூ போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இல்லையென்றால், அவர்கள் எவ்வண்ணம் வாசிக்கப் பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் தெரியும். ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால் அவர் கவிதைகள் எவ்வாறு பொருள் கொள்ளப் பட்டிருக்கும்! அந்த வரிசைக் கவிஞர்களிலேயே விக்ரமாதித்யன் வேறொருவராகத் திகழ்கிறார் என்பதை சொல்லத் தோன்றுகிறது.
ஆனால் தமிழில் கற்பனாவாத அம்சமே இல்லாத கவிஞர்களில் ஒருவர் விக்ரமாதித்யன். தமிழ் நவீனக் கவிஞர்கள் கற்பனாவாதத்துக்கு எதிரான நவீனத்துவ அலையால் உருவாக்கப்பட்டவர்கள். சுந்தர ராமசாமி, சி.மணி, ஞானக்கூத்தன் போன்றவர்கள் பிரக்ஞைபூர்வமாகவே கற்பனாவாதத்துக்கு எதிரான ஒரு கவிதை முறையை உருவாக்க முயன்றவர்கள். சுந்தர ராமசாயின் ‘நகத்தை வெட்டு உன் நகத்தை வெட்டு’ போன்ற கவிதைகள் கற்பனாவாதத்துக்கு எதிரான சீண்டல்கள். ‘மூடுபல்லக்கில் இல்லை மங்கை’ என்ற அறிவிப்பு கற்பனாவாதத்துக்கு எதிரான ஒரு கவிஞனின் நேரடிக்கூற்று.
ஆனால் அந்நவீனத்துவத்துக்குள் இருந்து பிரமிள் எழுந்து வந்தார். கற்பனாவாதத்தின் முழு வீச்சும் வெளிப்பட்டது நவீனக் கவிதையில் பிரமிளில்தான். பிரமிளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பித்தின் கற்பனாவாதம் எனலாம். லட்சியவாதத்தின், முழுமை நோக்கி செல்லுதலின் பரவசங்களால் ஆன கற்பனாவாதம் என்று தேவதேவனைச் சொல்லலாம். இயற்கையின் முன் நின்றிருக்கும் வர்டஸ்வொர்த்துக்கும் தேவதேவனுக்கும் வேறுபாடு இல்லை. பிறிதொரு நோக்கில் தேவதச்சனிடமும் இந்த கற்பனாவாதம் உண்டு. காலத்தை, வெளியை தத்துவ வெளியாக சென்று தொடும் அவருடைய உள எழுச்சிகள், அதன் வழியாக அவர் அடையும் நுண்தருணங்கள் எல்லாமே கற்பனாவாத அளவுகோல்களால் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்கவை.
கற்பனாவாதக் கூறுகள் இல்லாதவர் என்று ஞானக்கூத்தனைக் கூறலாம். அவருடைய பகடி கற்பனாவாதத்தில் இருந்து அவரை விலக்கி நிறுத்துகிறது. ஆனால் அவருடைய கவி உலகை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கற்பனாவாத வெளிப்பாடு கொண்ட கவிதைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். சி.மணியின் ‘நரகம்’ போன்ற கவிதைகள் நவீனத்துவத்தின் உள்ளிருந்து எழுந்தவை எனினும், அவையும் ஒரு கற்பனாவாத [எதிர்] லட்சியவாதத் தன்மை கொண்டவைதான்.
இவ்வாறு தொட்டுத் தொட்டு விக்ரமாதித்யனிடம் வரும்போது அவருடைய முழுமையான உலகியல்தன்மை, கற்பனாவாதத்தில் இருந்து அவரை விலக்கி நிறுத்தியிருப்பதைக் காண முடிகிறது. புகழ்பெற்ற அவருடைய கவிதையான குற்றாலத்துக்குப் போய் கல்வெள்ளிக் கொலுசைக் கண்டெடுக்கும் கவிதை, கற்பனாவாதத் தன்மை கொண்டதுதான். ஆனால் அவருடைய கவி உலகில் அப்படி ஓரிரு கவிதைகளைக் கூடத் தெரிவு செய்ய முடியவில்லை. பெரும்பாலானவை கறாரான உலகியல்தன்மையுடன் ‘இங்கு’, ‘இவ்வாறு’ எனச் சுட்டி நிற்பவை.
கற்பனாவாதத்திற்குரிய மொழிக்கட்டமைப்பு என்பது இசைத்தன்மையும் உணர்வெழுச்சியும் கொண்டது. அத்தகைய வரிகள் விக்ரமாதித்யனில் எவை உள்ளன என்று நினைவைத் துழாவிக்கொண்டிருந்தேன். ”கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ?” போன்ற வரிகள் சிலவே. “தீவுகளால் நிரம்பியிருக்கிறது ஒரு மகாசமுத்ரம்” போன்ற வரிகள் கூட அரிதானவையே. விக்ரமாதித்யனின் கவிதையுலகு யதார்த்தத்தில் அன்றாடத்தில் ஆழமாக வேரூன்றியது.
அன்றாடத்தில் நிலைகொள்ளும் விக்ரமாதித்யனின் கவிதைவரிகளின் பின்புலமாக நிலைகொள்ளும் அவருடைய வாழ்க்கை பிற கற்பனாவாதக் கவிஞர்களின் கவிதைகள் வழியாக பொருள் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. இது தன்னை இங்கிருக்கும் அனைத்தில் இருந்தும் விலக்கி மேலெழுந்த கவிஞனின் குரல் அல்ல. இங்கேயே உடைந்து சிதறிக்கிடக்கும் கவிஞனின் குரல். கற்பனாவாதக் கவிஞன் புறவுலகில் எப்படியென்றாலும் அகத்தே வென்று தருக்கி நிலைகொள்பவன். தோல்வியே அற்றவன். விக்ரமாதித்யன் தன்னை தோல்வியுற்றவனாகவே அறிவித்துக்கொண்டவர். சிதைவை, வீழ்ச்சியை, பின்வாங்குதலை முன்வைப்பவர். அதன் ஏக்கத்தை, தவிப்பை எழுதுபவர்.
ஆகவேதான் எளிய வாசகர்கள் இயல்பாக அவருடன் இணைந்துகொள்கிறார்கள். அவருடைய தோல்விகள் அவர்களுக்கும் தெரிந்தவையே. ஒரு கற்பனாவாதக் கவிஞனின் மென்மையும் உன்னதநிலைகளும் அவர்களால் புரிந்துகொள்ளத் தக்கவை அல்ல. அவை வாசகனும் தன் வாழ்க்கையை நுண்மையாக்கி, அகவயமாக்கிச் சென்றடையத் தக்கவை. இவை வாழ்க்கையின் நேரடி யதார்த்தங்கள். விக்ரமாதித்யன் முன்வைப்பது ஒரு ஞானத்தேடியின், ஒரு பித்தனின், கவியோகியின் ஆளுமை அல்ல. இரக்கமற்ற விதிகளாலான யதார்த்த உலகத்தால் வீழ்த்தப்பட்ட எளிய மனிதனின் ஆளுமையை.
வாடகை பாக்கிக்காய்
ஒரு பூகம்பம்
மளிகைக்கடைப்பற்றுக்காய்
ஒரு பிரளயம்
பாலுக்குக் கொடுக்கப்பட வேண்டி
ஒரு போராட்டம்
பிள்ளைகள் படிப்புச் செலவையிட்டு
ஒரு சண்டை
தீபாவளி பொங்கல் விசேஷமென்றால்
ஒரு கொந்தளிப்பு
கல்யாணம் காட்சிக்குப் போவதென்றால்
ஒரு கலாட்டா
விருந்தாளிகள் வந்தால்
ஒரு விவகாரம்
என வாழும் ஒரு வாழ்க்கையையே அவர் திரும்பத்திரும்ப எழுதுகிறார். “நான் கவிஞன்” என்று தருக்குவதில்லை. “கலங்கித்தவிக்கிறான் கவிஞன்” என்று சொல்கிறது அவர் கவிதை. “கவிமனசு யாருக்குத் தெரியும்?” என்கிறது. அவர் உருவாக்கும் உலகம் யதார்த்தத்தின் மாறாநெறிகளாலானது. அதில் கையறுநிலையில் நின்றிருக்கும் ஓர் ஆளுமையே கவிஞன். அவனுடைய புலம்பலும் தெளிவும் விலக்கமும் கவிதைகளாகின்றன
[ 8 ]
விக்ரமாதித்யனின் கவிதையை தொடர்ந்து முதலில் இருந்து இறுதிவரை, மீண்டும் இறுதியில் இருந்து தொடக்கம் வரை தொட்டுத் தொட்டுப் புரட்டிக்கொண்டே செல்லும்போது என்னுடைய முப்பதாண்டுகால கவிதை வாசிப்பும் உடன் நிகழ்வது போல இருக்கிறது. இக்கவிதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருக்கிறேன். வெவ்வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தில் நினைத்திருக்கிறேன். நானே அகவை முதிர்ந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இவ்வாசிப்புகளினூடாக அக்கவிதைகளும் நானும் வளர்ந்திருக்கிறோம். இந்த வினா அன்றும் இன்றும் என்னிடம் இருக்கிறது. முற்றிலும் உலகியல் சார்ந்ததும், அதைக் கடந்தெழும் ஆன்மீகத்தை மறுப்பதும், அதில் உணர்ச்சிப்பெருக்கை ஊட்டும் கற்பனாவாதத்திற்கு எதிரானதுமான ஒரு கவிதை, எவ்வண்ணம் கவிதையெனத் தன்னை ஆக்குகிறது?
உண்மையில் விக்ரமாதித்யனின் வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இந்த வினா எழுந்திருக்கும், ஆனால் விடை தெரிந்திருக்காது. அவருடைய ஒரு கவிதையை எடுத்து வைத்துக் கொண்டு ஒரு எளிய வாசகன் இது எவ்வண்ணம் கவிதையாகிறது என்று கேட்டால், முதற்பார்வைக்கு அது அன்றாட உலக வாழ்க்கையை சார்ந்த ஒரு அறிக்கையாக இருக்கும். ‘எப்படியும் இருந்து கொண்டிரு’ என்ற ஒரு வரி கவிதை அல்ல, அது ஓர் அனுபவ கூற்று மட்டும்தான் என்று என்னிடம் வாதிட்ட ஓர் இளைஞனை நான் நினைவு கூர்கிறேன். அவர் இன்று கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
விக்ரமாதித்யன் கவிதைகளுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க கவிதைகள் உலகமொழிகளில் எல்லாம் உள்ளன. உடனே நினைவுக்கு வருபவை சீனக்கவிஞர் பை ஜூயி எழுதிய கவிதைகள்.
புதிய கவிதைகள் எதையும்
அவன் தூரிகை தீட்டவில்லைதான்
அவனது புகழும் கூட மங்கிப்போனது
அவனது பழைய கவிதைகள்
பெட்டிகளில்
அலமாரிகளின் அடியில் தூசித்தும்புகளில் கிடக்கின்றன
ஒரு சமயம் எவனோ ஒருவன்
பாடிக்கொண்டிருந்த பொழுது
அவனது அக்கவிதையை தற்செயலாகக் கேட்டேன்
ஒரு பெரும் வலி
எனது இதயத்தை துளைத்துச் சென்றது
முன்னமே அதனை கவனம்
செய்ய நேரமிருந்தும்
சும்மா இருந்ததால்
[தமிழில் பினாகினி]
தமிழ் மரபில் அத்தகைய கவிதைகள் புறநாநூறில் பல உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பிசிராந்தையார்.
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்டு அனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
அலுங்காமல் செல்லும் பயணத்தால் கவிதையாகின்றவை. அந்தரங்கத்தால் கவிதையாகின்றவை. சிறகுமுழுக்க வண்ணங்கள் கொண்ட பறவைகள், ஆற்றல் கொண்ட வல்லூறுகள் நடுவே எளிய சாம்பல்நிற சிட்டுக்குருவி அழகுகொள்வது போல. இவை தங்கள் எளிமையான இருப்பாலேயே கவிதையாகின்றன.
விக்ரமாதித்யனின் கவிதைகள் மீதான மிக முக்கியமான விமர்சனமாக இன்றும் இருப்பது, அவை முழுக்க முழுக்க அன்றாடம் சார்ந்தவை, உலகியல் சார்ந்தவை; அதற்கப்பால் எழும் கவித்துவம் இல்லாதவை என்பதுதான். அதையே வேறு வார்த்தைகளில் ‘இதை எவரும் சொல்லலாமே!’ என்பார்கள். எவரும் சொல்லலாம், ஆனால் விக்ரமாதித்யன் அதை சொல்லியிருக்கிறார் என்று அதற்கு நாம் பதில் சொல்லலாம். விக்ரமாதித்யனுடைய வாழ்க்கையால்தான் அவற்றை கவிதையாக நினைக்கிறோம்.
அதை இவ்வண்ணம் விளக்குவேன். வாழ்க்கையைப் பற்றி அத்தனை அரிதொன்றும் இல்லாத ஒரு புரிதலை ஒருவர் முன் கூறுகிறார். ஆனால் தூக்குமேடைக்கு இட்டு செல்வதற்கு முன்பு அவர் இறுதியாக அதைச் சொல்லியிருக்கிறார் எனில் அதை நம்மால் எளிதாகத் தள்ளிவிட முடியுமா? நம் உள்ளம் அதற்கேற்றும் உணர்ச்சிகளையும் அர்த்தங்களையும் பொய்யானவை என்று கூறிவிட முடியுமா?
விக்ரமாதித்யன் உலகியலால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர். தன்னைத் திரிபடையச் செய்து வெளியேற்றிக் கொண்டு அங்கிருந்து உலகியலை நோக்கிப் பேசியவர். நேரடியாக சொல்வதென்றால் உலகியலால் கழுவேற்றப்பட்டவர். கழுவில் அமர்ந்த ஒருவனின் கூக்குரலும் மெல்ல அவன் கனிந்து செல்லும் உச்சமும் என இக்கவிதைகளை சொல்லலாம்.
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்தில் ஒருவன் கழுவில் ஏற்றி ஊர் நடுவே அமர வைத்திருப்பார்கள். கொடியவனும் கொலைகாரனுமாகிய அவன், கழுவில் உயிர்விடுகையில் தன்னைச் சுற்றி இளம்பெண்கள் கை கொட்டி நடனமாட வேண்டுமென்று கோரும் ஓர் இடம் அதில் வரும். அவனில் வேறொன்று நிகழ்ந்து அவன் கனிந்திருப்பதை அது காட்டுகிறது. கழுவேறியவன் தெய்வமுமாக ஆகிறான். பெருந்துன்பம் தெய்வமாக்குகிறது மனிதனை. உலகியலின் ஊடாக துயருற்று குருதிவார்ந்து உடலொழிந்து அழிந்து கொண்டிருக்கும் ஒருவனின் வரிகள் எனத் தென்படுவதனால்தான் இவை கவிதை ஆகின்றன.
விக்ரமாதித்யனின் சில வரிகள் ‘இதென்ன கவிதையா’ என்று தோன்றும் ஆனால், எங்கோ ஒரு கோவிலின் முன் கல் மண்டபத்தில் அரை வெளிச்சத்தில் பென்சிலால் இதை அண்ணாச்சி எழுதியிருக்கக் கூடும், ஒரு மதுக்கடையில் உட்கார்ந்து முழுப்போதையில் இதை எழுதியிருக்கக்கூடும் என்ற சாத்தியம்தான் அதைக் கவிதையாக்குகிறது. இக்கவிதைகளின் தன்னியலபான ஒழுக்கு இவற்றை ஒருவகையான சாமிகொண்டாடியின் வாக்குகள் போல, ஆசி உரைகள் போல மாற்றுகின்றன.
விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளைப் பற்றி எனக்கு வந்த கடிதங்களில் ஒரு கடிதத்தின் வரி, ஒரு தொடுகை போல என்னை உலுக்கியது. இதுவும் எனது முப்பத்தைந்து ஆண்டு காலக் கவிதை வாசிப்பில் மிக ஆச்சரியமான ஒன்று. கவிதை என்றால் என்னவென்று அறியாத பாமரர் ஒருவர், ஒரு கவிஞனின் ஆத்மாவுக்குள் செல்லும் மிக முக்கியமான பாதை ஒன்றைத் திறப்பது. தமிழில் மிகத் துயருற்றவர், மிகப் புறக்கணிக்கப்பட்டவர் எனச் சொல்லத்தக்க இக்கவிஞனின் வரிகளில் சாபமில்லை, இருளில்லை, நெஞ்சம் கனிந்த வாழ்த்துதான் உள்ளது என்று அந்த வாசகர் சொன்னார். அவ்வரியை வாசித்து நான் கண்ணீர்மல்கினேன்.
ஊருக்கு வெளியே சுடுகாட்டில் மரநிழலில் அமர்ந்து திரும்பி நோக்கி, பெற்றும் பெருகியும் புணர்ந்தும் ஊடியும் கூடியும் வாழும் மக்களைப் பார்த்துக் கனிந்து புன்னகைத்து வாழ்த்தும் சித்தன் ஒருவனின் வரிகளென அமைந்த பல கவிதை வரிகளை விக்ரமாதித்யன் உலகில் இருந்து நம்மால் அடைய முடியும். திரும்பத் திரும்ப ‘வாழுங்கள் உலகீரே’ என்று அவர் கூறுகிறார்.
தமிழின் நவீன கவிதைப் பிண்ணனியில் இது எளிய விஷயமல்ல. நவீனக் கவிதை இருண்மையானது, எதிர்மறைப் பண்பு கொண்டது. உயர் விழுமியமாகத் தற்கொலையை முன்வைத்த கவிதைகளை தமிழ்க் கவிஞர்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். உலகெங்கும் நவீனக் கவிதையில் தற்கொலை, தன்னழிப்பு இரண்டுமே கொண்டாடப்பட்டிருக்கிறது. உளம் நிறைந்து எதையும் நம்பாதவனாக, எவரையும் வணங்காதவனாக, எவ்விழுமியத்தையும் முன்வைக்காதவனாக நவீன கவிஞன் திகழ்கிறான். அவநம்பிக்கையும் எள்ளலும் அவனது மொழியாக அமைந்திருக்கிறது. ஆனால் விக்ரமாதித்யனின் உலகிலிருந்து மீள மீள வாழ்த்தொலிகளே எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழின் முதன்மைக் கவிஞராக அவரை ஆக்கும் கூறு இது என நான் நினைக்கிறேன். அண்ணாச்சிக்கு மீண்டும் பாதம் தொட்ட வணக்கம்.
[நிறைவு]