இது மழைக்காலம்.
கனமழை பெய்தால் நம் ஊடகங்கள் “கொட்டி தீர்த்த மழை” என்ற ஒரே ஓர் வார்த்தையைத்தான் பயன்படுத்துகின்றன.
புதிய சொற்களை நீங்கள் அளியுங்களேன்.
நன்றி.
ஜெ.ஜெயகுமார்
***
அன்புள்ள ஜெயக்குமார்
சொற்கள் இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால் செய்திகள் எப்போதுமே தேய்வழக்குகளிலேயே சொல்லப்படுகின்றன. ஏனென்றால் தேய்வழக்குகள் அனைவரும் அறிந்தவை. ஐயத்துக்கிடமில்லாமல் ஒன்றைச் சொல்பவை. செய்திகள் திட்டவட்டமாக அமைய தேய்வழக்குகள் மிக உதவியானவை. ஆகவே செய்தியாளர்கள் பழைய தேய்வழக்குகளை பயன்படுத்துகிறார்கள். புதிய தேய்வழக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இது சட்டம், வணிகம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உள்ள வழக்கம். தொழில்நுட்பத்துறையில் மாறாமல் ஒரே சொற்றொடரை பயன்படுத்துவதே சிக்கலற்ற தொடர்புறுத்தலை உருவாக்குகிறது என்பதை காணலாம். இலக்கியத்தில் மட்டுமே தேய்வழக்குகள் தவறானவையாக கருதப்படுகின்றன
ஜெ
***
அன்புள்ள ஜெ,
உங்கள் கட்டுரைகளில் வரும் சொற்கள் கட்டுரைகளை வாசிப்பதற்கு பெரிய தடையை அளிக்கின்றன. உதாரணமாக அறவியல் என்று சொல்கிறீர்கள். அதை நான் அறிவியல் என்றுதான் வாசித்துக்கொண்டிருந்தேன். திரும்பத்திரும்ப அறவியல் என்று வந்தபிறகுதான் அது என்ன என்று தெரிந்தது. இதச் சொற்கள் இல்லாமல் எளிமையாக பேச முடியாதா? இது பாவனை என்று சொல்லலாமா?
உஷா குமார்
***
அன்புள்ள உஷா,
அறவியல் என இணையத்தில் தேடினாலே பொருள் கிடைத்துவிடும். என் கட்டுரைகளில் அதற்கான ஆங்கிலச் சொல்லும் இருக்கும். அதைக்கொண்டு தேடினாலும் பொருள் கிடைக்கும். தேடமுடியாது என்பவர்களுக்காக நான் எழுதவில்லை. எனக்கு அறிவுத்தேடலும் அதற்கான உழைப்பும் கொண்ட வாசகர்கள் மட்டும் போதும். மற்றவர்கள் இந்தப்பக்கமாக வரவேண்டியதில்லை.
உலகம் முழுக்கவே அறிவுத்துறைகளில் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு பொருளை வாசகனுக்கு அளிப்பவை. அறவியல் என்னும் சொல்லுக்கு பதிலாக ஒவ்வொரு முறையும் ’ஒரு சமூகம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது பற்றிய இலட்சியங்களும் வரையறைகளும்’ என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
சிந்தனை என்பதே கலைச்சொற்களை உருவாக்கி, நிலைநிறுத்திக்கொண்டு மேலே செல்வதுதான். பழைய கலைச்சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கின்றன. ஆகவே இயல்பாக எடுத்துக்கொள்கிறீர்கள். உள்ளம், உண்மை, இல்லறம், பாசம் எல்லாமே கலைச்சொற்கள்தான். இன்று மேலும் கலைச்சொற்கள் தேவையாகின்றன. அவற்றை கற்றுக்கொள்வதன் வழியாகவே சிந்தனைகளை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கலைச்சொல் என்பது ஒரு கருத்துநிலை. ஒரு சிந்தனைப்போக்கால் உருவாக்கப்பட்டது அந்தக் கருத்து நிலை. அச்சொல்லை நீங்கள் முழுமையாக அறியும்போது அந்தச் சிந்தனைப்போக்கை அறிந்துவிடுகிறீர்கள். கலைச்சொல் இல்லாமல் சிந்திக்கவே முடியாது.
மிக எளிய அன்றாடத்தில்கூட புதிய கலைச்சொற்களை கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். செல்போனில் ஸிம் என்கிறீர்கள், டேட்டா என்கிறீர்கள், டவுன்லோட் என்கிறீர்கள். இவையெல்லாம் சென்ற இருபதாண்டுகளில் உருவாகி வந்த கலைச்சொற்கள். இவற்றை எத்தனை வேகமாக கற்றுக்கொள்கிறீர்கள். ஆடைவடிவமைப்பில் எத்தனை கலைச்சொற்கள். காலர் என்கிறீர்கள், லூஸ்டாப் என்கிறீர்கள்.
இவற்றை எல்லாம் கற்கச் சோம்பல் இல்லை. சிந்தனையின் அடிப்படைச் சொற்களை கற்க மட்டும் என்ன சோம்பல்? ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். எளிய விஷயங்களையே எளிமையாகச் சொல்லமுடியும். வரலாறு, பண்பாடு, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்றவை சிக்கலானவை. உள்விரிவும் கிளைகளும் கொண்டவை. அவற்றை அவ்வாறுதான் பேசமுடியும், பயிலமுடியும். அவற்றை எளிமையாகச் சொல்பவர்கள் அவற்றின் மேல்தோலை மட்டுமே செதுக்கி அளிப்பவர்கள்.
”எளிமையாகச் சொல்லுங்கள்” என்று கேட்பவர்கள் எதையும் கற்பவர்கள் அல்ல. அறிவியக்கத்தில் மட்டுமல்ல, தொழில்நுட்பம் வணிகம் நிர்வாகம் எங்கும் அவர்களுக்கு இடமில்லை.
ஜெ
***