நமது கல்வி

நமது மாணவர்கள்

தேர்வு

அன்புள்ள ஜெ,

நமது மாணவர்கள் கடிதமும் பதிலும் கண்டேன். நம்முடைய பொது ஊடகங்கள் எதிலுமே விவாதிக்கப்படாத ஒரு பிரச்சினை இது. இதில் ஒருநாள் வகுப்புக்குச் சென்றுவந்த ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். நாங்களெல்லாம் தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறோம். இன்னும் மோசமான அனுபவங்கள். உயர்நிலைப்பள்ளிக்கு மேல் ஆசிரியைகள் பாடம் நடத்துவது மிகமிகக் கடினம். தவறான கோணங்களில் செல்போனில் ஃபோட்டோ எடுத்து வாட்ஸப்பில் பரப்புவது இன்று மிகச் சாதாரணம். எல்லா பள்ளிக்கூடங்களிலும் இது நடக்கிறது. ஆனால் அரசுப்பள்ளியில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதை எந்த ஆசிரியையிடம் கேட்டாலும் சொல்வார். இதை விவாதத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. ஆனால் இதற்கு என்ன செய்வதென்றுதான் எவருக்கும் தெரியவில்லை.

எஸ்.

அன்புள்ள எஸ்,

இந்த கடிதம்போல இன்னும் பல கடிதங்கள். சில கடிதங்கள் மிகுந்த சங்கடம் அளிப்பவை. சென்ற சில ஆண்டுகளாகவே வாசகிகளான பல ஆசிரியைகள் இதை எழுதியிருக்கிறார்கள். இதை கவனிக்காமல் கடந்துசெல்ல முடியாது என்பதே உண்மை நிலை. இதை மறைக்கும்பொருட்டு உருவாகும் கூச்சல்களே இது உண்மை என்பதற்கான சான்று. இந்நிலைமையை உருவாக்கியவர்கள், ஆதரிப்பவர்களின் கூச்சல்கள் அவை.

நான் அரசுப்பள்ளிகள் மேல் ஆர்வம் கொண்டவன். தொடர்ந்து அரசுப்பள்ளிகளைச் சென்று கவனிப்பவன். அரசுப்பள்ளிகள் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி பொத்தாம்பொதுவாக எதிர்மறையாக பேசப்படும் கருத்துக்களுக்கு எதிராக, அவர்கள் ஆற்றும் பணி பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசுப்பள்ளிகளில் ஆற்றப்படும் சாதனைகளை அடையாளம் காட்டுகிறேன். என் மகனை அரசுப்பள்ளியில்தான் படிக்கவைத்தேன். அதைப்பற்றிய கட்டுரை தமிழில் மிக அதிகமாக பகிரப்பட்ட கட்டுரைகளில் ஒன்று.[தேர்வு]

சென்ற ஐந்தாண்டுகளாக நிகழும் ஒரு மாற்றம் கவலைக்குரியது. செல்பேசி பிரபலம் அடைந்தபின், ஜியோ இணைய இணைப்பு எளிதாக ஆனபின் நிகழ்வது இது. அரசுப்பள்ளிகளில் செல்பேசியை கட்டுப்படுத்தவே முடியாது. கிராமப்புற மாணவர்களுக்கு சட்டென்று உலகின் அத்தனை அழுக்குகளும் அறிமுகமாகிவிட்டிருக்கின்றன. வீடியோ விளையாட்டுக்கள் அவர்களை முழுக்க ஆக்ரமித்து வைத்திருக்கின்றன.

இதை கர்நாடகத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் வைத்து எழுதுகிறேன். ஆற்றைப்பார்க்கச் சென்றிருந்தேன். சீருடையுடன் மாணவர்கள் ஆற்றோரம் அமர்ந்து செல்பேசிகளில் மூழ்கியிருந்தனர். என்ன பார்க்கிறார்கள் என கவனித்தேன். கொரிய சீரியல்கள். அவை எப்படிப்பட்ட வன்முறை, காமம் நிறைந்தவை என நாம் அறிவோம். இந்தியா முழுக்கவே இந்நிலைமை உருவாகியிருக்கிறது.

சுதந்திரம் நல்லது. ஆனால் அதைக் கையாளும் பொறுப்பும் முதிர்வும் இல்லாதவர்களுக்கு அது மிக அபாயமானது. நம் கிராமப்புற மாணவர்களின் வீழ்ச்சி இந்த கட்டற்ற சுதந்திரத்தால் உருவாவது.

இதை கட்டுப்படுத்தவேண்டியவை பள்ளிகள், ஆசிரியர்கள். ஆனால் திடீரென ‘மாணவர்களின் உரிமை’ என்றபேரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் மாணவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. சிறு தண்டனைகள் கூட வழங்க முடியாது. விளைவாக  பள்ளிகளில் கட்டுப்பாடின்மை உருவாகிவிட்டிருக்கிறது.

இந்த கட்டுப்பாடின்மையால் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் உண்மையிலேயே கற்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள். நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல கட்டுப்பாடின்மையால் வகுப்புகளை அழிப்பவர்கள் வெறும் பத்துசதவீதம் பேர்தான். ஆனால் அத்தனைபேரின் கல்வியும் பாதிக்கப்படுகிறது

சற்றேனும் பொருளியல் அடிப்படை கொண்டவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.  அங்கே படிக்க வருபவர்கள் ஏழை , அடித்தள மாணவர்கள். அவர்களுக்கான கல்வியே இந்த கட்டுப்பாடின்மையால் மறுக்கப்படுகிறது. அதை கண்டும் காணாமலும் விடமுடியாது.

நான் கண்டவரை, நம் கல்வியின் அடிப்படையும் நோக்கமும் வேறு. இங்கே ஆளுமைப்பயிற்சி, அறிவு வளர்ச்சி சார்ந்த கல்விக்கு இன்று இடமில்லை. வேலைவாய்ப்புச் சந்தைக்கு இளைஞர்களை உருவாக்குவதே நம் கல்வியின் நோக்கம். வெளியே உள்ள கடும் போட்டிக்கு இளைஞர்களை தயார் செய்வதே அதன் இலக்கு.

ஆகவே வேறுவழியில்லை. உயர்ந்த பொருளியல் நிலையுள்ள, தனியார் நிறுவனங்களில் கல்விகற்ற மாணவர்களுடன் போட்டியிடுவதற்கான கல்வியே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். அரசுப் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்கள் அவ்வாறு கல்வி பெற்று எப்படியாவது பொருளியல் நிலையில் அடுத்தபடிக்கு நகரவே விரும்புகிறார்கள். அந்தக் கல்வி அவர்களுக்கு மறுக்கப்படலாகாது.

இங்கே ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை கல்வியில் மிகப்பெரிய பாகுபாடு உள்ளது. வாழ்க்கைப் போட்டிக்கான கல்வியை தனியார் கல்விநிலையங்கள் வழங்குகின்றன. அரசுசார் கல்வி நிறுவனங்களில் மேலே சொன்ன கட்டுப்பாடின்மை நிலவுகிறது. உண்மையான தேவையுடன் கல்வி நாடி வருபவர்கள் கைவிடப்படுகிறார்கள்.

மாணவர்களை அடித்து படிக்கவைக்க முடியும் என நான் நினைக்கவில்லை. ஆனால் பொறுப்பின்மை, குற்றச்செயல் ஆகியவை தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். நம் சமூகமே அவ்வாறு தண்டனைகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்த தண்டனையும் இல்லாமல் எதையும் செய்யலாம் என்னும் நிலையில் இளமைப்பருவம் வரை வரும் மாணவர்கள் உண்மையில் மிகப்பெரிய அழிவை தங்களுக்கும் சமூகச்சூழலுக்கும் உருவாக்குகிறார்கள்.

பள்ளிகளில் கட்டுப்பாடின்மையை தண்டிக்க, கட்டுப்பாடான கல்விநிறுவனங்களை உருவாக்க ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டாகவேண்டும். சமீபமாக ஆசிரியர்கள், குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மேல் கசப்புடன் எழுதும்போக்கு மிகுந்துள்ளது. அவர்கள் வாங்கும் சம்பளம் எப்போதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு பக்கம் அவர்கள் மேல் ‘ரிசல்ட்’ க்கான சவுக்கடி வீசப்படுகிறது. மறுபக்கம் அவர்கள் மாணவர்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

நம் கல்வியை பொறுத்தவரை நாம் ஆசிரியர்களை நம்பியே ஆகவேண்டும். அவர்களின் அதிகாரத்தை ஏற்றே ஆகவேண்டும். அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. நான் சொல்ல வருவது அதைத்தான். மாணவர் உரிமை என்பது ஆசிரியரின் பொறுப்பை மறுப்பதாக ஆகக்கூடாது.

தொடர்ந்து ஆசிரியர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பவன் நான். களத்தில் இருந்து போராடுபவர்கள் அவர்கள். பழிசுமப்பவர்களும்கூட. அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் “இங்க ஒண்ணுமே செய்ய முடியாது சார்” என சோர்வடைவதைக் காண்கிறேன். ஏதாவது செய்யப்போனால் பழிவரும் என அஞ்சுபவர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன்

முந்தைய கட்டுரையில் நடைமுறை சார்ந்து செய்யக்கூடுவது ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன். திரிபடைந்த ஒரு சிறு மாணவர்கும்பல் உருவாக்கும் அராஜகத்தால் வகுப்புகள் அழிகின்றன. அதை அனுமதித்தால் படிக்க வரும் மாணவர்கள் கைவிடப்படுவார்கள். அந்த சிறுபகுதி மாணவர்களுடன் போராட, மாற்றியமைக்க இன்றைய சூழலில் ஆசிரியர்களால் இயலாது. இன்றைய மொத்த அரசியல்சூழலும் அந்த பத்துசத மாணவர்களை ஆதரிப்பதாகவே உள்ளது.ஆனால்  ஆசிரியர்மேல் கல்வியின் வீழ்ச்சிக்கான பழியையும்போடுகிறது.

ஆகவே வகுப்புக்கு வெளியே, தனியாக, ஆர்வம் கொண்ட மாணவர்களை மட்டும் தெரிவுசெய்து கல்வியும் போட்டிக்கான பயிற்சியும் அளிப்பதே இன்றைய ஆசிரியர்கள் செய்யக்கூடுவது.அதைச் செய்தாகவேண்டும். என் அக்கறை அந்த ஆர்வம்கொண்ட எளிய மாணவர்களிடம் மட்டுமே. அவர்களுக்காகவே பேசுகிறேன்.

இதெல்லாம் கண்கூடான உண்மை, நடைமுறைத் தீர்வு. இதைச்சொல்வதற்குத்தான் தனிக்குரலாக ஒலிக்கும் எழுத்தாளனின் தரப்பு தேவைப்படுகிறது

 

ஜெ

கல்வி நிலையங்களில் சாதி

அர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை! -பாலா

அஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

கல்வி – தன்னிலையும் பணிவும்

தேசிய கல்விக்கழகத்தில்

கல்வி- மேலுமொரு கேள்வி

கல்வியும் பதவியும்

கல்விக் களைகள்

கல்வி – பதில்கள்

கல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்

சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்

கல்வியும் பெற்றோரும்

 

முந்தைய கட்டுரைகிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பங்கேற்புப் பதிவு- படிவம்