காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

[ 3 ]

தொடர்ச்சி….

விக்ரமாதித்யனை கவிதை எப்போது கண்டடைந்தது? அவர் ஓர் உரையாடலில் சொல்வதுபோல மிக இளம்வயதிலேயே சொற்களைச் சேர்ப்பதில் இன்பம் கண்டடைபவராக இருந்திருக்கிறார். அதன்பின் சினிமாப்பாடல்கள் வழியாக கண்ணதாசனைக் கண்டடைந்தார். இன்றும் கண்ணதாசன் மேல் தீராப்பற்று கொண்டவராகவே விக்ரமாதித்யன் இருக்கிறார். குற்றாலத்தில் ஒரு கவிதைப்பட்டறையில் நிறைபோதையில் “கண்ணதாசனப்பத்தி பேசுங்கடா” என்று அவர் பின்நவீனத்துவ – பின்அமைப்பியல் சண்டியர்களிடம் ‘சவுண்டு’ விட்டுக்கொண்டே இருந்ததை நினைவுகூர்கிறேன்.கண்ணதாசனின் பாடல்களிலும் கவிதைகளிலும் உள்ள இசைத்தன்மையும், மரபின் தொடர்ச்சியும் அவரை ஈர்த்திருக்கின்றன. அதன்பின் அன்றைய திராவிட இயக்கக் கவிஞர்களின் செல்வாக்கு அவரிடம் உருவாகியது. தமிழ்ஒளியின் மாதவி என்னும் காவியத்தைப் பற்றி ஒருமுறை சொன்னார்.

தி.க.சிவசங்கரன், வண்ணதாசன் வழியாக நவீன இலக்கியம் விக்ரமாதித்யனுக்கு அறிமுகமாகியது. திகசி ஆசிரியராக இருந்த தாமரை இதழ்களை விரும்பி வாசித்திருக்கிறார்.அன்றைய புகழ்பெற்ற வானம்பாடி மரபின் கவிஞர்களை வாசித்தாலும் அவர்கள்மேல் அவருக்கு ஈடுபாடு வரவில்லை. விக்ரமாதித்யனை அவர்களிடமிருந்து விலக்கியது இரண்டு கூறுகள். ஒன்று அவர்களிடமில்லாத மரபின் தொடர்ச்சியும் இசையமைவும். இரண்டு, அவர்களிடமிருந்த அரசியல். அன்றைய இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்த அந்த திராவிட இயக்க பாணிகொண்ட இடதுசாரி அரசியல் [அல்லது போலிப்புரட்சி அரசியல்] மேல் ஏன் விக்ரமாதித்யனுக்கு விலக்கம் ஏற்பட்டது? எப்போதுமே அவர் அதில் எந்த ஈடுபாடும் காட்டியதில்லை. அவர் அரசியல்கொள்கைகளையோ அரசியல்வாதிகளையோ நம்பியதே இல்லை.

விக்ரமாதித்யனின் அந்த அவநம்பிக்கையை புரிந்துகொள்ள நடைமுறையை நோக்கினால் போதுமானது. வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்யன், கலாப்ரியா என்னும் நால்வரையும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டு புரிந்துகொள்வது பலவகையிலும் தெளிவு அளிப்பது. நால்வரும் ஒரே நிலத்தைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ ஒரே சாதியப்பின்புலம் கொண்டவர்கள். ஒரே காலத்தவர். நண்பர்களும் கூட. அந்நால்வரில் வண்ணநிலவன் குறுகிய காலத்திற்கேனும் இடதுசாரி ஆர்வங்கள் கொண்டிருந்தவர். வண்ணதாசன் இடதுசாரி, திராவிட இயக்க ஆதரவு உளநிலை கொண்டவர். கலாப்ரியா திராவிட இயக்க ஆதரவாளர். விக்ரமாதித்யனே அரசியல்மேல் அவநம்பிக்கை கொண்டவர்

ஏனென்று உசாவினால் இப்படிச் சொல்லத்தோன்றுகிறது. நால்வரில் விக்ரமாதித்யனே வறுமையை அறிந்தவர், அடித்தள வாழ்கையை அடைந்தவர். நடைமுறையில் ஒவ்வொன்றும் எவ்வண்ணம் உள்ளன என்பதை தெருவிலிருந்து கற்றவர். ஆகவே அவருக்கு அரசியல் சார்ந்த கற்பனாவாத உளஎழுச்சிகள் ஏதுமில்லை. அரசியல்பற்று கொள்வதற்கு அவசியமான உணர்வுகளில் ஒன்று தன்முனைப்பு. தான் ஒரு தகுதியான ஆள் என்றும், தன்னால் சூழலை மாற்றிவிடமுடியும் என்றும் ஓர் இளைஞன் நம்பத்தொடங்கும்போதே அவனுக்குள் அரசியல்சார்ந்த கிளுகிளுப்புகள் தோன்றுகின்றன. அத்துடன் அந்த தன்முனைப்பு வெளிப்பாடு கொள்வதற்கு வேறு களங்கள் இல்லாத ஒருவகையான சிறிய வாழ்க்கையும் அவனுக்கு அமையவேண்டும்.

கவனித்து நோக்கினால் உயர்வர்க்கத்து இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் மிகமிக அரிது. அவர்களின் ஆணவம் பெருக உகந்த களங்கள் பல உள்ளன. அடித்தள இளைஞர்களிடமும் அரசியலார்வம் மிக அரிது. ஏனென்றால் அவர்களிடம் சமூகத்தை தான் மாற்றிவிடமுடியும் என்னும் எளிமையான தன்முனைப்பு இருப்பதில்லை. அரசியலார்வம் என்பது நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் ஒரு வயதில் அடையும் ஒருவகை கிளர்ச்சிதான். விக்ரமாதித்யன் அவர் இறக்கிவிடப்பட்ட தெருவில் இருந்து வாழ்க்கையை உணர்ந்தவர். அங்கே அரசியல் என்பது கொள்கைகள் அல்ல, கனவுகளும் இலட்சியங்களும் அல்ல, நடைமுறை அதிகாரமும் அதற்கான போராட்டமும்தான். விக்ரமாதித்யன் அதை பொருட்படுத்தவில்லை. நடுத்தரவர்க்கத்துக் கவிஞர்களின் இளமைக்கால உபாதையான நாக்குப்புரட்சிகளில் அவர் ஆர்வம் காட்டவே இல்லை.

ஏதோ ஒரு கட்டத்தில் விக்ரமாதித்யன் நவீனக்கவிதைக்குள் நுழைந்தார்.  தமிழ் நவீனக் கவிதையில் அவருடைய முன்னுதாரணம் எவராக இருக்கக்கூடும்? தமிழ்க்கவிதையில் எந்தக் கவிஞனுக்கும் அவனுடைய அகத்தில் திகழும் கவித்தொடர்ச்சி என்ன என்று நல்ல வாசகனால் சொல்லிவிடமுடியும். அது உண்மையில் அக்கவிஞனைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வழி. விக்ரமாதித்யனின் முன்னோடியாக நகுலனைச் சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் அது பின்னாளில் விக்ரமாதித்யன் நகர்ந்து நகர்ந்து வந்தடைந்த தொடர்ச்சி. அவர் தொடங்கியது நகுலனில் இருந்து அல்ல. அவரிடம் இருந்த தொடக்ககாலச் செல்வாக்கு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள்தான்.

ஆகாயம்நீலநிறம் தொகுதியின் பலகவிதைகள் நேரடியாகவே பிச்சமூர்த்தியின் நடைக்கு அணுக்கமானவை. ஓர் உதாரணத்துக்காக விக்ரமாதித்யனின் தட்சிணாமூர்த்தியான என்னும் கவிதையையும் ந.பிச்சமூர்த்தியின் சாகுருவி என்னும் கவிதையையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். செய்யுளுக்கு அணுக்கமான இசையொழுக்குள்ள அந்த நடை இருவருக்கும் பொதுவானது என்று அறியமுடியும். ந.பிச்சமூர்த்தியை நெருக்கமாக அடியொற்றி அன்று புதுக்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர் வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனிடமிருந்து ந.பிச்சமூர்த்தி விக்ரமாதித்யனுக்கு கையளிக்கப்பட்டிருக்கலாம்.

மொழியில் மட்டுமல்ல படிமங்களின் அமைப்பிலும் விக்ரமாதித்யனின் ஆரம்பகட்டக் கவிதைகளில் பிச்சமூர்த்தியின் செல்வாக்கு தென்படுகிறது. கோணல்தென்னை போன்ற ஒரு படிமம் விக்ரமாதித்யனுக்கும் தோன்றக்கூடுவதே. ஆனால் மெல்லமெல்ல தீர்மானமாக அவர் ந.பிச்சமூர்த்தியிடமிருந்து விலகிச்செல்கிறார். நடையில் மட்டுமல்ல உளநிலையிலும் நகுலனை அணுகுகிறார். அந்த விலக்கம் அவரை வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்ரியா ஆகியோரிடமிருந்தும் அகற்றியது. அவர்கள் எழுதிவந்த இதழ்களில் இருந்தும் அவர்கள் பேசிய சூழலில் இருந்தும் விலக்கிக் கொண்டுசென்றது. ந.பிச்சமூர்த்தி மரபார்ந்த, ஒழுக்கவாத நோக்கு கொண்ட, நவீனக் கவிஞர். அவருடையது நவீனஅத்வைத நோக்கு. விக்ரமாதித்யன் அவற்றுக்கு எதிரானவர்.

நகுலனுக்கும் விக்ரமாதித்யனுக்கும் இடையேயான வேறுபாடு என்ன? விக்ரமாதித்யனை வரையறை செய்துகொள்ள அது மிகவும் இன்றியமையாதது. நகுலனிடம் இருக்கும் நேரடியான மொழி, முறிந்து மடியும் சொற்றொடர்கள், நேரடிக்கூற்றுத் தன்மை ஆகியவற்றாலான கவிமொழி விக்ரமாதித்யனிலும் உள்ளது. ஆனால் நகுலனில் இருக்கும் வேதாந்தச் சாய்வும் இருத்தலியல் சாய்வும் கொண்ட தத்துவப்பார்வை விக்ரமாதித்யனில் இல்லை. விக்ரமாதித்யன் தத்துவ நோக்குக்கே எதிரானவர். நகுலனில் நூல்குறிப்புகள், ஆசிரியர்குறிப்புகள் வழியாக உருவாகும் ஊடுபிரதித்தன்மை விக்ரமாதித்யனில் இல்லை.

நகுலன் கவிதைகள் ஓர் அறிஞனால் எழுதப்பட்டவை. விக்ரமாதித்யனின் கவிதைகள் தன்னை பாமரனாக நிறுத்திக்கொண்ட கவிஞனால் எழுதப்பட்டவை. வீடுவிட்டிறங்காதவை நகுலன் கவிதைகள். வீடில்லாதவனால் எழுதப்பட்டவை விக்ரமாதியனின் கவிதைகள். உலகியல் அம்சமே இல்லாதவை நகுலனின் கவிதைகள். இங்கெங்கும் இல்லாத ஓர் அந்தர வெளியில், அறிவாந்த சிதைவு நிலையின் அகப்பரப்பில் நிகழ்பவை அவை. மாறாக, முற்றிலும் உலகியல் சார்ந்தவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.  கவிதையில் எப்போதும் தொடர்ச்சிகள் இவ்வண்ணமே அமைகின்றன. ஒருவேளை தன்னில் இல்லாத கூறுகளை நகுலனில் கண்டமையே விக்ரமாதித்யனை அவரை நோக்கி ஈர்த்திருக்கலாம்.

மது அருந்துவதிலும் இருவருக்குமிடையே வேறுபாடுண்டு. விக்ரமாதித்யன் மது அருந்தும்போது இன்னொருவராக வெளிப்படுகிறார். முற்றிலும் மாறுபட்ட ஒருவராக.  வெடித்துச் சிதறிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளுமையாக. நகுலன் மது அருந்தாதபோதுதான் சிதறியவராக இருப்பார். நிலைகொள்ளாதவராக, நடுக்கம் கொண்டவராக. மது அவரை குவிக்கும், கூர்மையாக்கும், அவரிடமிருந்து நாம் முன்பு அறிந்திராத ஓர் எதிர்மறை அம்சம் வெளிவரும். நையாண்டியும் கசப்புமாக. காழ்ப்பும் தீமையுமாகக்கூட நகுலன் வெளிப்படுவதுண்டு. மது அவரை இறுக்கி இறுக்கி துயர்நோக்கி கொண்டுசெல்கிறது. எடைமிக்கவராக மண்ணுடன் அழுந்த வைக்கிறது. துயர்நிறைந்த நகுலன் போதையில் அழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் குடிப்பதே பெருந்தாகம் கொண்டவன் உயிர்காக்க நீரை குடிப்பதுபோலிருக்கும். மடக் மடக் என ஓசைகேட்க ஒருவர் மது அருந்துவதை நகுலனிடம் மட்டுமே கண்டிருக்கிறேன்.

நேர் மாறாக மது அருந்திய விக்ரமாதித்யன் விசித்திரமான களியாட்டுநிலை கொண்டவர். ஆங்கிலத்தில் dance macabre என சொல்லப்படும் ஒரு தாண்டவத்தையே அவரிடம் நான் கண்டிருக்கிறேன். அவரை சகக்கவிஞர்களும் பொதுமக்களும் தாக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு.  குடித்தபின் எழும் விக்ரமாதித்யன் தன் வளர்ப்பும், சூழலும் ,அடிப்படை இயல்பும் அளிக்கும் எல்லா வரையறைகளையும் மீறிச்செல்பவர். நல்லியல்பென்றோ தீமையென்றோ வரையறை செய்யமுடியாத ஒரு சிதறல். அதை அஞ்சியே அவரிடமிருந்து திட்டவட்டமான விலகலை நான் எப்போதும் கடைப்பிடித்துவந்தேன்.

[ 4 ]

விக்ரமாதித்யனின் ஆளுமையைத் தீர்மானிக்கும் அந்த மீறல், அவரிடம் குடிக்காதபோது ஒரு போதும் இல்லை என்பது அணுக்கமானவர்களுக்குத் தெரியும். குடிக்காத விக்ரமாதித்யன் மிகப் பணிவான, மிக மிகப் பண்பான, இனிய மனிதர். முற்றிலும் மரபார்ந்தவர். எங்கே அவர் குடிக்க ஆரம்பித்திருப்பார்? நான் கற்பனை செய்து பார்க்கிறேன். முதல் முறை ஒரு மதுக்கடைக்குள் அவர் எவ்வாறு நுழைந்திருப்பார்? எப்படி முதல் மதுக் கோப்பைக்கு ஆணையிட்டிருப்பார்? கண்டிப்பாக அவர் தனியாகச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எவரோ அழைத்துச் சென்றிருக்கக்கூடும். அவர் பொருட்டு அந்நண்பர் ஆணையிட்டிருக்கக்கூடும்.

பணிந்த, மரபார்ந்த, சைவப் பிள்ளையான அண்ணாச்சி மதுக்கடைக்குள் காலெடுத்து வைக்கும்போது மண்ணிலிருந்து நிலாவில் காலெடுத்து வைத்த ஆர்ம்ஸட்ராங்குக்கு இணையான தாவலை  நிகழ்த்தி இருக்கிறார். எத்தனை எடை கொண்டதாக இருக்கும் அக்காலடி என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரது உள்ளம் திகைத்ததா? அல்லது மரத்து சொல்லிழந்து நின்றதா? அவர் உடல் நடுங்கியதா? அந்நடுக்கத்தை மறைப்பதற்காக மிகையான உற்சாகத்தை பாவனை செய்தாரா? அல்லது கடுந்துயருடன் அங்கு சென்றாரா? தாளமுடியாத  சலிப்பையும் வெறுமையையும் வெல்வதற்கு சென்றாரா? அதை அவர்தான் சொல்ல வேண்டும். இதுவரை அத்தருணங்களை அவர் எவரிடமும் சொன்னதில்லை. கவிதையிலோ கதையிலோ எழுதியது கூடக் கிடையாது.

ஒருமுறை பேசும்போது சொன்னதை வைத்துப் பார்த்தால், எண்பதுகளின் தொடக்கத்தில் ,தனது முப்பதாவது அகவையில், சென்னையில் ஒரு கிசுகிசு இதழின் துணையாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் முதன் முறையாக மது அருந்தினார். அப்போது அவருடைய ‘ஆகாயம் நீல நிறம்’ என்ற தொகுதி வெளிவந்திருக்கவில்லை. அதன் பின்னட்டையில் ’வேலை தேடும் வேலையில் இருப்பவர்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அப்போது அவர் பத்திரிகை ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, பிறிதொரு வேலைக்காகத் தேடிக் கொண்டிருந்த தருணம். அந்நாட்களில் எப்போதோ அவர் தொடர்ச்சியாக மது அருந்தத் தொடங்கியிருக்கலாம்.

தெளிந்த உரைநடைத்திறன் கொண்டவரான அண்ணாச்சி இதழாளராக வெற்றிகரமாக இருந்திருக்க முடியும். ஆனால் அவருடைய இயல்புக்கு அவ்விதழ்களில் இருக்கும் எதிர்மறைத்தன்மையை தாங்கிக் கொள்ள முடிந்திருக்காது. எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஒரு நாலாந்தர வம்பிதழில் அரசியல் பாலியல் வம்புகளுக்கும், கிசுகிசுக்களுக்கும், ஆளுமைக் கொலைகளுக்கும், ஊழல்களுக்கும் களமான ஓர் அமைப்பின் ஒரு பகுதியாக  எப்படி அண்ணாச்சி இருந்திருக்க முடியும்? அந்த இதழ்களின் வழியாகத்தான் அவர் புறவுலகின் ஈடிணையற்ற குரூரத்தை உணர்ந்திருக்க முடியும்.

பிறந்த சில நாட்களிலேயே துரத்தப்பட்டு, முள் நிறைந்த வறண்ட காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பன்றிக் குட்டி ஒன்றை இளமையில் பார்த்திருக்கிறேன். அது சோர்ந்து கீழே விழுந்தபோது துரத்திச் சென்ற நாய்கள் அதைக் கவ்விக்கொண்டன. ஏற்கனவே அதன் உடல் முழுக்க முட்கள் கிழித்து, குருதிக்கோடுகளை உருவாக்கி இருந்தன. இதழியலின் முட்கள் நிறைந்த வெளியில் ஓடும் அண்ணாச்சியின் தோற்றத்தைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர் மதுவை நாடியது அந்தக் காலகட்டத்தில்தான். மதுவினூடாக அவர் அடைந்த விடுதலை என்ன? அதை விடுதலை என்று சொல்ல முடியுமா?

மது என்னும் சொல் கவிதையில் எத்தனை வகையாகப் பொருள் கொள்கிறதென்று எண்ணிப் பார்க்கிறேன். சமீபத்தில் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் கவிதைகளை படித்துக் கொண்டிருக்கும் போது மதுவும், மது பரிமாறுபவனும் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். ரூமியில், உமர் கய்யாமில் மது தொடர்ந்து பேசப்படுகிறது. “மது நமக்கு மது நமக்கு” என்று பாரதியின் கவிதை கூத்தாடுகிறது. அந்த மது இங்குள்ள உலகியல் அனைத்தையும் உதறிச் சென்று மேலெழுந்து அடையும் களிப்பின் அடையாளம். வானம் கனிந்து சொட்டும் ஒரு பித்துத் துளி.

அது ஞானியை, காதலனை, கவிஞனை, கனவு நிறைந்தவனாக்குவது. இங்கு தன்னைப் பற்றியிருக்கும் பல்லாயிரம் கைகளை ஒரே உதறலில் உதறி அகற்றிவிட்டு அவன் மேலெழுகிறான், எடையற்றவனாகிறான், தடைகளற்றவனாகிறான். கூத்தாடவும், களியாடவும், கூச்சலிடவும், உருகவும், விழிநீர் உதிர்த்து ஒடுங்கவும் ஒன்றுமில்லை என்றுணர்ந்து ஒழியவும் அவனுக்கு அது இடம் கொடுக்கிறது. வேதகாலத்தில் சோமமும் சுராபானமும் நேரடி மதுவாகவே அருந்தப்பட்டன. ஆனால் ரிக் வேதம் முதிரும்போதே அவை குறியீடாக மாறிவிட்டதைக் காண முடிகிறது. சோமம் தெய்வீகமான இசையின் துளியென்றும், சுரா ஆட்டிப் படைக்கும் நடனத்தின் அமுதென்றும் உணரப்படுகிறது. யோகியரின் மது வெறுமைக்களி. தெய்வங்களின் மது காதலென இனிமை கொண்டது. பாட்டுப்பாடல் சிவக்களி எய்தல்.
சூஃபிக்கள் அருந்திய மது, சாலமனும் புனித ஜானும் (St. John of Cross) அருந்திய மது.

விக்கி அண்ணாச்சி அருந்துவது அந்த மது அல்ல. அவர் அடைந்ததும் விடுதலைதான். ஆனால் அது திரிபின் ஊடாக அடைந்த விடுதலை. சிறகு பெற்று மேலெழும் அனுபவத்தை அவர் மது வழியாக அடைந்தாரா? மதுவை அவர் அருந்தினார், விரும்பினாரா? மதுவை இனிய அனுபவமாக அவர் அடைந்திருக்கிறாரா? லட்சுமி மணிவண்ணன் ஒருமுறை சொன்னார், மதுவை இன்னொருவருக்குப் பரிந்துரைக்காத பெருங்குடிகாரர் விக்ரமாதித்யன் என. அவரிடமிருந்து கற்றதனால் தானும் எவருக்கும் மதுவை அளித்ததில்லை என. விக்ரமாதித்யன் தனது கவிதையில் எங்காவது மதுவைப் பற்றி ஏதாவது சிறப்பாக சொல்லி இருக்கிறாரா?

அவருடைய கவிதைகளையும் நினைத்து நினைத்து, அகத்தே புரட்டிப் புரட்டி அவர் மதுவைப் பற்றி எழுதிய வரிகளைத் தேடுகிறேன். மது தன்னைத் தட்டழியச் செய்கிறது, நிலைகுலையச் செய்கிறது, பெரும் வதையெனத் தொடர்கிறது, வேதாளமெனத் தோளில் அமர்ந்திருக்கிறது என்றே அவர் கவிதைகள் சொல்கின்றன.

“போதையில்
தலைசுற்றித் திரியும்போது தெரிகிறது
ஓர் உண்மை
உழைத்துக் குடிப்பதே
உத்தமம் ”

என்று தன்னைத்தானே கேலி செய்து கொள்கிறார்.

’மதுபரியாறுபவனே, போதும் அகன்றுவிடு, மொய்ன் மேலும் பெரிய மதுவை அருந்தி போதையில் இருக்கிறார்’ என்பது போன்ற வரியை விக்ரமாதித்யன் எழுதுவதே இல்லை. அந்த பிறிதொரு மது ஒரு துளி கூட அவரால் அருந்தப் படவில்லை. அவர் அருந்திய மது வெறுமே கட்டுகளை அவிழ்த்து களியாடச்செய்யும் ஒரு மந்திரம் மட்டுமே. பிறிதொருவராக அவரை ஆக்கும் வேடமாற்றம் மட்டுமே. விக்ரமாதித்யன் ஒரு முறை பேசும்போது கண்ணதாசன் போதையில் ஒருவரிகூட எழுதியதில்லை, தானும் போதையில் கவிதை எழுதியதில்லை என்றார். எனில் போதை எதற்கு என்றேன். ”கவிதைக்காக என்று நான் சொன்னேனா? அது வேறு” என்றார்.

எனில் மதுக்கடையின் ஊடாக அவர் சென்றதெங்கே? அந்த மதுக்கடை ஒரு வாசல், அதற்கு வெளியே எடை மிக்க காலடிகளுடன் தயங்கி வந்து நின்ற விக்ரமாதித்யன் சைவத்தை, வேளாளப் பிள்ளை எனும் அடையாளத்தை, தாயை தந்தையை, வேலை செய்ய வற்புறுத்தும் சமூகத்தை, உழைத்து வாழ் என்று அறிவுரை சொல்லும் சான்றோரை, உன் குடும்பம் இப்போது என்ன செய்கிறதென்று உசாவும் அறிமுக முகங்களை, அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு உள்ளே செல்கிறார். அங்கு அமர்ந்து ஒரு கோப்பை மதுவுக்கு ஆணையிடும்போது, அவர் தன்னை அவ்வாறு துரத்தி வரும் அனைத்து பேய்களுக்கும் எதிர்முகம் கொடுக்கும் ஆற்றல் கொண்டவனாக ஆக்கும் விசை ஒன்றை அளிக்கும்படி கோருகிறார். மதுவிலிருந்து அவர் பெறுவது அது மட்டுமே.

பழைய கேரளக் கதை ஒன்று உண்டு. தெரியாமல் பிராமணன் ஒருவனைக் கொன்று விடும் கரைநாயர் ஒருவர் பிரம்மஹத்தியில் இருந்து தப்பும்பொருட்டு ஓடுகிறார். பிரம்மஹத்தி ஒரு போதும் விட்டுவிடாது. ஆகவே அவர் ஆற்றிங்கல் பகவதி ஆலயத்துக்குள் நுழைந்து விடுகிறார். பகவதியின் தட்டகத்திற்குள் பிரம்மஹத்தி நுழைய முடியாதென்பதனால் ஆலயத்திற்கு வெளியே பிரம்மஹத்தி ஒரு கூழாங்கல் வடிவில் காத்திருக்கிறது. கூழாங்கல்லுக்குக் காலமில்லை. முடிவிலி வரை அதனால் காத்திருக்க முடியும். ஆகவே தன்னை பிரம்மஹத்தியிடம் இருந்து காப்பாற்றும்படி கரைநாயர் பகவதியிடம் மன்றாடுகிறார். தன் பக்தனுக்கு இரங்கி பகவதி தோன்றுகிறாள்.

பிரம்மஹத்திக்குத் தெய்வங்களும் அஞ்சியாக வேண்டும். தெய்வகணங்களும் அஞ்சியாக வேண்டும். சிவனே பிரம்மஹத்தியால் இரவலாக ஆனார்.அஞ்சத் தேவையற்றது ஒன்றே. பேய்கள் அஞ்ச வேண்டியதில்லை. பூதங்கள் அஞ்ச வேண்டியதில்லை. பகவதி கரை நாயரை சங்கறுத்து அங்கே விழுந்து ஒரு பூதமென ஆகும்படி சொல்கிறாள். தன் இடைவாளை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்து விழுந்து பூதமென்றாகி வெளியே வரும் கரைநாயரைக் கண்டு பிரம்மஹத்தி திகைக்கிறது. பிரம்மஹத்தி ஓடத்தொடங்க, பூதம் அதைத் துரத்திச் செல்கிறது. பிரம்மஹத்தியும் பூதமும் முடிவில்லாத துரத்தலில் உள்ளன. பகவதியின் தட்டகம் அந்த மதுக்கடை. அங்கு நுழைந்து அந்தக் காளிமுன் சங்கறுத்து விழுந்து பூதமென்றாகித் திரும்பி வரும் அண்ணாச்சி தன்னைத் தொடர்ந்து அதுவரை வந்த அத்தனை பிரம்மஹத்திகளையும் துரத்தத் தொடங்குகிறார்.

காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதற்காகவே தனக்கு விக்ரமாதித்யன் என்று பெயர் போட்டுக் கொண்டதாக ஒருமுறை அவர் சொன்னார். காடு பதினொரு மாதம், வீடு ஒரு மாதம் என்பதுதான் இந்த விக்ரமாதித்யனின் ஊழாக இருக்கிறது. திரிபு கொண்டு, குடிகாரனும் கலகக்காரனும் தனியனும் கசந்தவனும் ஆக மாறி அதுவரை தன்னை ஆயிரம் கைவிரித்து துரத்தும் அனைத்துக்கும் எதிர் விசை கொடுத்து  நின்றிருந்து, தருக்கி கவிஞனென்று அறைகூவி முடித்ததுமே சலித்து தன் இல்லம் திரும்ப விழைபவர் விக்ரமாதித்யன்.

விக்ரமாதித்யனை இறக்கிவிட்டு நம்பிராஜன் என்றாகி இல்லம் மீள்கிறார். இக்கவிதைகளினூடாக கடந்துசெல்கையில் எத்தனை இல்லம் மீளும் கவிதைகள் உள்ளன, எத்தனை இல்லத்தில் தங்கும் சலிப்பு பற்றிச் சொல்லும் கவிதைகள் உள்ளன,  இல்லத்தை விட்டுக் கிளம்பும் துயரைக் கூறும் கவிதைகள் எத்தனை உள்ளன என்று பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது. அனைத்து வசதிகளுடனும் இல்லத்தில் அமைந்த பின்னர் ’ஆனாலும் கொடுமை மக்கள் ஆயிரமாண்டு கால வாழ்க்கை’ என்று சலிப்பு கொள்கிறது கவிஞனின் உள்ளம்.

“ஆதியில்
ஒரு நாள்
அடர்ந்த பசிய காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்”

என்று தன்னை உணர்கிறது. பரிசில் வாழ்க்கைக்குக் கிளம்பும்போது கிளம்பும் பேருந்தில் தன்னந்தனியாக அமர்ந்து தன் ஊழ் நினைத்து ஏங்குகிறது. பொருள்வயின் பிரிவு. மீண்டும் எங்கோ அத்திரிபை அடைந்து பூதமென்றாகித் தருக்கி நின்று

“சென்றான்
புதுமைப்பித்தன்
வந்து நிற்கிறான்
விக்ரமாதித்யன்”

என்று அறைகூவுகிறது. அவ்வண்ணம் சில உச்சங்கள், மீண்டும் அதே இல்லம் திரும்பும் வேட்கை. வெளியே இருக்கையில் அழைக்கும் , உள்நுழைந்த கணமே துரத்தும் வீடு. ஒற்றைக்கால் மட்டும் ஊன்ற இடமிருக்கும் தவப்பீடம் என்னும் ஓர் அழகிய படிமம் நம் மரபில் உண்டு. விக்ரமாதியனுக்கு வீடு அத்தகையது.

மது விக்ரமாதித்யனை விடுதலை கொள்ள வைக்கிறதா? எனில் ஆமென்றும் இல்லையென்றும் சொல்லலாம். இங்கிருக்கும் எதிலிருந்தும் அவரை அது விடுவிக்கவில்லை. இங்கிருக்கும் அனைத்தையும் மிதித்து மேலேறிச் செல்ல வைக்கிறது. மீண்டும் அதிலேயே விழச் செய்கிறது. அவர் எதையும் அவர் கடந்துசெல்லவில்லை, எதிர்த்து நிற்கிறார். அது மேலும் தீவிரமாக இவையனைத்திலும் ஈடுபடுவதேதான்.

உலகக் கவிதை வரலாற்றிலிருந்து அலைந்து திரிந்த கவிஞர்களின் பட்டியலை ஒவ்வொரு முறை விக்ரமாதித்யன் கவிதைகளைப் படிக்கும்போதும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. விக்ரமாதித்யனைப் போலவே அலைந்து திரியும் குடிகாரக் கவிஞராக இருந்தவர் மலையாளக் கவிஞர் ஏ.அய்யப்பன். காசர்கோட்டில் என்னை விக்ரமாதித்யன் பார்க்க வந்த சில மாதங்களுக்குப் பிறகு ஏ.அய்யப்பன் என்னைப் பார்க்க வந்தார். அங்கு காசர்கோடு திரைப்பட இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த முரளீதரன் மாஸ்டரைப் பார்க்க வந்தவர், அங்கு அவர் இல்லையெனத் தெரிந்தபின் என்னைத் தேடி வந்தார். “உன்னைப் பற்றி ஜான் ஆபிரகாம் சொன்னார்” என்று என்னிடம் சொன்னார்.

இன்று எண்ணும்போது அந்தப் பொருத்தங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. கோணங்கி விக்ரமாதித்யனுக்கு சொன்னது போல. கோணங்கிக்கும் ஜானுக்கும் பொருத்தங்கள் பல நூறு. ஜான் ஒரு  கள்ளமற்ற தெய்வப்பிறவியும் கூட; கோணங்கியும் அவ்வாறுதான். கோணங்கியிலிருக்கும் அந்தக் கள்ளமின்மை, அவரைக் கலைஞராக்குகிறது, கூடவே பெரும்படைப்புகளைப் படைக்க முடியாமல் தடுக்கவும் செய்கிறது என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. பெரும்படைப்புகள் அறிவாந்தவை, ஒருவகை மொழிசார்ந்த பொறியியல் கொண்டவை. ஜான் அவ்வாறே. மாபெரும் படைப்பாளிகள் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளுடனும் ஆகாமபோன இருவர் என்றே அவர்கள் இருவரையும் நான் இதுவரைக்கும் மதிப்பிட்டு வைத்திருக்கிறேன்.

ஏ. அய்யப்பனும் என்னைப் பார்க்க வந்தபோது கிழிந்த சட்டை அணிந்திருந்தார். ரயிலில் இன்னொரு குடிகாரன் தன் சட்டையைக் கிழித்து விட்டதாக  சொன்னார். அன்று அவரை என் அறைக்கு அழைத்துச் செல்ல நான் துணியவில்லை. ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து, பணம் கொடுத்து பிறிதொரு நண்பரின் விலாசத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தேன். பலமுறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் மறைவதற்கு சிலகாலம் முன்பு வரை கூட.
விக்ரமாதித்யனிடம் இருக்கும் பண்பட்ட குடிக்காத மனிதர் ஏ.ஐயப்பனில் இல்லை. குடிக்காத போது அவர் ஓர் அடித்தள மனிதர். எல்லாவகையான தாழ்வுணர்சிகளும் கொண்டவர்.

எதற்காகக் குடிக்கிறீர்கள் என்று ஏ.ஐயப்பனிடம் நான் கேட்டேன். “குடிக்காமல் இருந்தால் நான் நல்லவனாக இருக்கிறேன். அதைத் தாங்க முடியவில்லை” என்று அவர் சொன்னார். அந்த வேடிக்கைப் பேச்சுக்கு அடியில் இருப்பது ஒரு வகையான உண்மை. நல்லவன் என இங்கு மரபு வரையறுத்திருக்கும் கோடுகளுக்குள் நின்றிருக்க முடியாமைதான் அவரைக் குடிகாரனாக்குகிறது. குடித்த பின் அவர் எதுவும் செய்யலாம். முச்சந்தியில் ஆடையைத் தூக்கிக் காட்டலாம். போலீஸ்காரனிடம் சென்று கெட்ட வார்த்தை சொல்லலாம். கோவில் திண்ணையில் படுத்துத் தூங்கலாம். இலக்கியக் கூட்டத்தில் உள்ளே வந்து வாந்தி எடுக்கலாம். அந்த சுதந்திரம் அவருக்கு அவருடைய ஆளுமை அளிக்கும் தளைகளை எளிதில் களைய உதவுகிறது. ஏ.ஐயப்பன் அதை முழுமையாகவே கொண்டாடினார்

அவ்வாறுதான் அதைக் களைய முடியுமா எனில் அல்ல. அதற்கு வேறு வழியுண்டு. அத்தளைகள் அனைத்தையும் மிகச்  சிறிதென்றாக்கும் ஒரு எழுச்சி. வெளியே செல்வதற்கான வழி திரிபு என இருக்க வேண்டியதில்லை. திரிபு என்பது ஒரு எதிர்வினை மட்டுமே. எதிர்வினையானது எதிர்வினை ஆற்றப் படும் எதிலிருந்தும் விடுவிப்பதில்லை. முற்றிலும் வெளியே செல்லும் வழி என இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக  உள்ளது. துறத்தல், உன்னதமாக்கல், உச்சிமுனை நோக்கிச் சென்று அங்கு மட்டுமென அமர்தல். சைவ மரபிலிருந்து வந்த விக்ரமாதித்யனுக்கு அது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு ஒவ்வொரு இல்லத்திலும் ஒருவர் அவ்வண்ணம் தன்னை விடுதலை செய்து கொண்டிருப்பார். துறந்து செல்லுதலின் விடுதலை ஒன்றுண்டு. உன்னதமாக்கலின் விடுதலை பிறிதொன்று. இங்கு இவ்வண்ணம் என இருப்பனவற்றை எங்கும் எவ்வண்ணமும் என அறிந்து , அவ்வாறே ஆக்கிக்கொள்ளுதல். தனது என ,தன் சூழல் என இருப்பனவற்றை பிரபஞ்சமாக விரித்துக்கொள்ளுதல். அதுவே கலையின் இலக்கியத்தின் வழி.

இங்கிருக்கும் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு பிறிதொன்றாக்கி ஒளி கொள்ளச் செய்து, ஒவ்வொரு எடையையும் பனியென்றும் முகிலென்றும் ஆக்கி பறந்தெழுந்து, ஒவ்வொரு இடைவெளியையும் நிரப்பும் நீரெனத் தன்னை நெகிழ வைத்து நிறைத்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்திலும் திகழ்கையிலும் எங்குமிலாது ஆகும் விரிநிலையை அடைந்து முழுமை கொள்ளும் ஒரு வழி. கலையின் வழி அது என்றே நான் நினைக்கிறேன். அதைவிடப் பெரியது துறவின் வழி என்று அறிந்திருக்கிறேன். துறவின் வழியை உணர்ந்து அடிபணிந்த கலையின் வழியே கலைஞன் தேர்வதற்கு உகந்தது என்று பாரதி வரைக்குமான மரபில் இருந்து கற்றிருக்கிறேன்.

ஒன்றொன்றாய்த் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கும் ஒரு பெருநிலை கலையிலும் கூடும். பெருநாவல்களை எழுதியவர்களும், காப்பியங்களில் சென்று கடந்தவர்களும் அவ்வழியைத் தேர்வு செய்தவர்கள். அது அரிய வழி. அணு அணுவாகத் தன்னை உடைத்தறிந்து ஆராய்ந்து முன் செல்லும் வழி. அடைந்து அடைந்து உதிர்த்து செல்லும் வழி. அறிந்தறிந்து மறுத்து செல்லும் வழி.

விக்ரமாதித்யன் வழி என்பது துறவு அல்ல திரிபே. இன்று திரும்பிப் பார்க்கையில் அவருடைய மொத்தக் கவிவாழ்க்கையும் தொடர்ந்து திரிபுகளின் பயணம் என்று சொல்லத் தோன்றுகிறது. முதற் திரிபென்பது மதுக்கடைக்குள் அவர் நுழைந்த தருணம். அங்கிருந்து வெளிவந்து, இங்கு அனைத்தை நோக்கியும் திரும்பி நின்றிருக்கும் விக்ரமாதித்யன் தன் ஒவ்வொரு வரியிலும் இங்குள்ளவற்றுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். ஆகவேதான் தமிழில் உலகியலைத் தொடர்ந்து எழுதி வந்த கவிஞனென்று சொல்லத்தக்கவர், உலகியலால் அடித்து வெளித்தள்ளப்பட்டவர் என்றும் சொல்லத்தகுந்தவர், முற்றிலும் உலகியல் கவிஞராக நமக்குத் தென்படுகிறார்.

[மேலும்]

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் –1 ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபதக்கம் பாலாஜி பிருத்விராஜ்
அடுத்த கட்டுரைமருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு