புத்தனாகும் புழுக்கள் – கடிதங்கள்

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை விரும்பி வாசிப்பேன். மிகப்பெரும்பாலான கடிதங்களில் சுருக்கமாக ஒரு வாழ்க்கைச் சித்திரம் இருக்கும். எத்தனை வகையான மனிதர்கள், எவ்வளவு கதைகள் என்னும் திகைப்பு உருவாகும். அவ்வாறு நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கடிதம் புழுக்களைப் பற்றி டாக்டர் தங்கபாண்டியன் எழுதியது. அந்தக் கடிதத்தின் மொழிநடையை மட்டும் வைத்தால் நீங்கள் எழுதியதென்றே தோன்றும். அத்தகைய கூர்மையான மொழி. அபாரமான கவித்துவம். ஒரு மகத்தான சிறுகதை போலத் தோன்றியது அந்தக் கடிதம். அவருக்கு என் வணக்கம்.

செந்தில்ராஜா

 

அன்புள்ள ஜெ

தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய கடிதம் என்னை உலுக்கியது. அதனுடன் இருந்த படத்தை பார்த்ததுமே அதை வாசிக்காமல் கடந்துவிட்டேன். ஆனால் அந்தத் தலைப்பு என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. புத்தனாகும் புழுக்கள். அற்புதமான தலைப்பு. பௌத்தம் என்ன சொல்கிறதென்றால் மானுடப்பிறவி உயிர்களில் உயரியது. அதில் உயரியது புத்தநிலை. உயிர்களில் கீழ்நிலை புழுக்கள். புழுக்கள் புத்தனாவது என்பது எவ்வளவு பெரிய தரிசனம். அதன் பின் அக்கடிதத்தை வாசித்தேன். அது வெண்முரசுக்கு வந்த மிகச்சிறந்த எதிர்வினைகளில் ஒன்று. உடன் இணைந்த வெண்முரசு பக்கங்களையும் படித்தேன். ஒரு வாழ்க்கைத்தரிசனம், ஒரு மாபெரும் காவியப்பகுதிபோல இருந்தன அனைத்தும் இணைந்து

மிக அற்புதமான வரிகள். வெண்முரசின் வரிகள் ஓர் அபாரமான புனைவுநிலையில், ஒரு ஞானநிலையில் எழுதப்பட்டவை. அந்த வரிகளை இயல்பாக எட்டிநிற்கின்றன தங்கபாண்டியனின் வரிகள். எங்கள் இறப்பறி சோதனைக்கூடம் முழுவதும், மேலும் வழிநெடுகிலும் நெளியும் புழுக்கள். மரணத்தின் மேல் மரணமின்மையின் குதூகலம் என. ஓர் இலக்கியப்படைப்பு வாசகனை அந்த இலக்கியப்படைப்பாளியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும், அவனை கடந்துசெல்லவும் வைக்கும் என்பதற்கான சாட்சியமாக அந்த வரிகளை எடுத்துக்கொண்டேன். கடிதமெங்கும் தலைப்பை விளக்கவில்லை. ஆனால் தலைப்பையே அக்குறிப்பு விளக்கி நிற்கிறது.

அற்புதமான கடிதம். உங்கள் தளத்தில் லோகமாதேவி போன்ற நிபுணர்கள் எழுதும் கடிதங்களில் இயல்பாக வெளிப்படும் கவித்துவம் பிரமிக்கச் செய்கிறது

எஸ்.ஆர்.ராஜ்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷில்குமார்
அடுத்த கட்டுரைவசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்