காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

[ 1 ]

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தாண்டு காலையில், கவிஞர் விக்ரமாதித்யன் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். அதிகாலை, வரவேற்பறையில் அவர் குரல் கேட்டு நான் மேலிருந்து கீழிறங்கி வந்தேன். அருண்மொழி அவரை உபசரித்து அமரவைத்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். விக்ரமாதித்யனும் வழக்கம்போல அருண்மொழியின் அம்மா அப்பா பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். நான் வணக்கம் சொல்லி அருகே அமர்ந்தேன். அவரிடம் பொதுவாக அவருடைய பயணங்கள், அப்போது எழுதிக் கொண்டிருக்கும் கவிதை, கடைசியாக வெளிவந்த தொகுப்பு எனப் பலவற்றைப் பேசினேன். அவர் லக்ஷ்மி மணிவண்ணனைப் பார்ப்பதற்காக பறக்கைக்கு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர் காலையில் டீ காபி எதுவும் சாப்பிடும் வழக்கம் இல்லை.

கிளம்புவதற்கு முன்பு நான் வழக்கம்போல அவரை அணுக, அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு, “இன்றைக்கு நான் வந்ததே, புத்தாண்டு அதுவுமாக உன்னை வந்து பார்க்க வேண்டும், வழக்கம்போல நீ தரும் பணத்தை இந்தமுறை வாங்காமல் போக வேண்டும் என்பதற்காகத்தான். என்னிடம் பணம் இருக்கிறது” என்று சட்டைப்பையைத் தொட்டுக்காட்டினார். “பன்னிரண்டு மணிக்கு டாஸ்மாக் திறந்தவுடனே குடிக்க ஆரம்பித்துவிடுவேன். வேண்டிய பணம் இருக்கிறது. இன்றைக்கு இங்கே வரவேண்டும், உன்னிடம் பணம் வாங்காமல் வாழ்த்திவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன்.” என்றார்.

அவர் சென்ற பிறகு அருண்மொழி, “என்ன இது புதுப் பழக்கம்?” என்றாள். நான் சொன்னேன், “எது ஒன்று முறையாக, மரபாக ஆகிவிடுகிறதோ அதை மீறிச் செல்லாவிட்டால் அவர் என்ன விக்ரமாதித்யன்!”. தமிழ்க் கவிஞர்கள் அத்தனை பேரும் குடிப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றால்,  விக்ரமாதித்யன் குடிக்காத ஆசாரவாதியாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. அவர் எப்போதும் தன்னைச்சுற்றிய கோட்டுக்கு அப்பால் இருப்பவற்றைப் பார்க்கக் கூடியவர். அக்கரைப்பச்சை கண்டு மேயாது சுற்றிவரும் கன்று அவர். அவரைக் கவிஞராக்குவது அந்த மீறிச் செல்லும் இயல்பு. அவரை அலைக்கழிய வைப்பது அதுதான். தனியராக, புறக்கணிக்கப்பட்டவராக, வீழ்த்தப்பட்டவராக, அவரை நிலைகொள்ளச் செய்வது எப்போதும் எல்லாவற்றுக்கும் வெளியே நின்றிருக்கும் அவர் இயல்புதான்.

விக்ரமாதித்யனுடைய கவிதைகளையும், கவிஞராக அவருடைய ஆளுமையையும் தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு அறிமுகமானது நான் காசர்கோட்டில் இருக்கும்போது. 1987-ல் இருபத்தைந்து வயது இளைஞனாகிய நான் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு , வெவ்வேறு ஊர்களில் அலைந்து சலித்தபின்னர் , என் உறவில் ஓர் அண்ணனின் வீட்டை வந்தடைந்து, அவருடைய முயற்சியால் தபால்தந்தித்துறையில் வேலைகிடைத்து ஒரு நிலையான இடத்தில் தங்க ஆரம்பித்திருந்தேன். அப்போது பல ஊழியர்கள் சேர்ந்து எடுத்த ஒரு வாடகை வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்தேன். என்னுடைய இயல்புகள் அவர்களுக்கு ஒவ்வாமையை அளித்துக் கொண்டிருந்தன. எவருடனும் நல்லுறவு இல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என நான் கனவுகண்டுகொண்டிருந்த காலம் அது

நான் இரவெல்லாம் விளக்குப் போட்டுப் படிக்கிறேன் என்பது அவர்களுடைய மிகப் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆகவே மிகச் சிறிய ஒரு ஸீரோ வாட் பல்பு வாங்கி வைத்திருந்தேன். ஒரு கைவிளக்கு அளவுக்குக் கூட அதில் வெளிச்சம் வராது. அதை என் தோளுக்கு மேல் ஒரு சிறிய கொக்கியில் பொருத்தி, புத்தகத்தின் தாள்களில் மட்டும் வெளிச்சம் விழும்படி வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். விடியற்காலையில் அவர்கள் அனைவரும் எழுந்து வேலைக்குத் தயாராகும்போது நான் தூங்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு சங்கடத்தை அளித்தது. எனக்காக எடுத்து வைத்த உணவை நான் நேரம் பிந்தி உண்கிறேன் என்றார்கள். எனது உடைகளை சரியாகத் துவைக்கவில்லை, அவர்களின் உடைகளுடன் அது கிடக்கும்போது  ஒவ்வாமையை உருவாக்குகிறது என்றார்கள். நான் பெரியாளாகக் காட்டிக்கொள்ள புத்தகம் படிக்கிறேன் என்றார்கள்.

அனைத்திற்கும் மேலாக, நான் அன்றெல்லாம் பெரும்பாலும் பேசுவதே இல்லை. எனது  அப்பாவும் அம்மாவும் தற்கொலை செய்துகொள்ள நான் ஆழ்ந்த மன அழுத்தத்தில் இருந்த காலம். அலைச்சலில் என்னை இழந்து, எங்கோ சென்று, நினைவு மீண்டு, திரும்ப வந்து வேலைக்குச் சேர்பவனாகஇருந்தேன். செல்லும் வேலைக்கு ஏற்ப அன்றன்று சம்பளம் போடப்படும் தற்காலிக ஊழியன் என்பதனால், விடுமுறையோ விடுப்போ எனக்குப் பிரச்சனை இல்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு சம்பாதிப்பது மட்டுமே என் வேலையின் நோக்கமாக இருந்தது. ஆகவே மாதம் ஒரு பத்துப் பதினைந்து நாட்களே நான் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.

அன்றெல்லாம் வேலைக்குக் கிளம்பிச் செல்பவன், எதிரில் வரும் பேருந்தின் ஊர்ப்பெயரைக் கண்டு, அப்படியே அதிலேறி அது செல்லும் ஊருக்குச் சென்றிறங்கி, அங்கே இலக்கில்லாமல் சுற்றி,  இன்னொரு பேருந்தில் ஏறி, இன்னொரு ஊருக்கு சென்று, அப்படியே பலநாட்களுக்குப் பிறகு காசர்கோடுக்குத் திரும்பி வருவேன். செறிந்த தாடியும், கலைந்த தலைமயிரும், ஒல்லியான உடல் மேல் பெரிய தலையுமாக பைத்தியக்காரன் போல இருந்தேன். ஒரு நாளைக்கு மூன்றரை மணிநேரம் தூங்கினால் அரிது.

தூக்கம்தான் அன்று நான் ஏங்கும் ஒன்றாக இருந்தது. மதுக்கடைகளின் முன் சென்று, உள்ளே  சென்று அமர்ந்து மதுவுக்கு ஆணையிடுவதாய் கற்பனை செய்தபடி, ஆனால் என் தந்தை அளித்த ஆணையை மீற முடியாதவனாக, இரவெல்லாம் வெளியே நின்றிருப்பவன் நான். நின்று சலித்து கிளகோடின் வாங்கிக்கொண்டு வந்து குடித்து சில மணிநேரம் தூங்கி விசைகொண்ட உள்ளத்துடன் எழுந்து மீண்டும் வாசிப்பேன்.

மனநோயாளிக்குள்ள தீவிரத்துடன் ரஷ்ய இலக்கியங்களை, ஜெர்மானிய இலக்கியங்களை படித்துக் கொண்டிருந்தேன். படித்த வற்றை பல பக்கங்கலாக நீண்ட குறிப்புகளாக எழுதி சுந்தர ராமசாமிக்கு கட்டுக்கட்டாக அனுப்பிக் கொண்டிருந்தேன். கதைகள் ஒன்றிரண்டு எழுத முயன்று கொண்டிருந்தேன். கல்லூரி மாணவனாக உற்சாகமான இளைஞனாக இருந்த காலங்கள் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டிருந்தன. அன்றெழுதிய கதைகளையும்  நினைவிலிருந்தே தூக்கி வீசியிருந்தேன்.

அப்போதுதான் ஒருநாள் என்னைப் பார்க்க எவரோ வந்திருக்கிறார்கள் என்று என்னுடன் பணியாற்றுபவர் வந்து சொன்னார். நான் எழுந்து சென்று, எங்கள் கேன்டீனில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்தேன். அவர் வரும் வழியில் ரயிலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு, தன்னுடைய பையை இழந்து, எஞ்சிய பொருட்களை சட்டையில் போட்டு, அதை ஒரு மூட்டையாகக் கட்டிக் கையில் வைத்துக் கொண்டு, வேட்டி மட்டும் கட்டியவராக அங்கு நின்றிருந்தார். கலைந்த தலை, சிக்குப் பிடித்த சிறிய தாடி, மதுப்பழக்கத்தின் நடுக்கம் கொண்ட மெலிந்த உடல், கலங்கி செவ்வரியோடிய கண்கள். அன்றே முன்பற்கள் சில இல்லாமலாகி இருந்தன. ஆகவே பேச்சு சீறலாகவும் குழறலாகவும் வெளிவந்தது. என்னிடம் “நான் கவிஞர் விக்ரமாதித்யன்” என்றார்.

நான் திகைத்து, “என்னை எப்படித் தெரியும்?”  என்று கேட்டேன். “உன்னைப் பற்றி கோணங்கி சொன்னான்” என்றார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு கோணங்கி என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது காஸர்கோட்டுக்கு அப்பால் கும்பளா செல்லும் வழியில், ஒரு தன்னந்தனியான இஸ்லாமிய இல்லத்தை வாடகைக்கு எடுத்து அங்கே தனியாகத் தங்கியிருந்தேன்.  தென்னந்தோப்புக்குள் அமைந்திருந்த அந்த இல்லம், திண்ணையில் இருந்து பார்த்தாலே கடல் தெரியும்படி இருந்தது. கடல் அலையின் ஒளி தென்னைமரங்களை நடனமாடச் செய்யும். என் அறைக்குள் நிழல்கள் நெளிந்து கொண்டிருக்கும்.

அங்கிருந்து ஒரு நாள் கிளம்பி தற்கொலை செய்யும் நோக்குடன் கும்பளா வரை நடந்து சென்று, இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி நான் என உணர்ந்து, திரும்பி வந்திருந்தேன். அந்த வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு நண்பர்கள் சேர்ந்து தங்கியிருந்த இந்த இல்லத்துக்கு வந்திருந்தேன். அதற்கு முன் நான் இருந்தது இடதுசாரிகளின் கம்யூன். அங்கே நான் இலக்கியம், அரசியல் என கொண்டாடிக்கொண்டிருந்தேன். அப்பா அம்மா மறைந்தபின் அந்த தனித்த இல்லத்துக்கு வந்திருந்தேன். அங்கே என்னைச்சூழ்ந்திருந்த இருள் சாவின் நெடிகொண்டது என நினைத்து அந்த புதிய வீட்டுக்கு சக ஊழியர்களுடன் வந்தேன். அவர்கள் ஆசிரியர்களும் மின்துறை ஊழியர்களும் அடங்கிய சிறு குழு. இடதுசாரிகள் அல்ல. லௌகீகவாதிகள், அதற்குரிய எல்லா குறுகல்களும் கொண்டவர்கள்.

“உன்னுடைய ரூம் ரொம்ப நல்லா இருந்தது என்று கோணங்கி சொன்னான். மழையும் பெஞ்சுகிட்டே இருந்ததுன்னு சொன்னான், அதனால் வந்தேன். ” என்றார். எனக்கு அவரை என்ன செய்வதென்றே தெரியவில்லை. “சட்டை இல்லையா?” என்று கேட்டேன். “வழியிலே வித்துட்டேன்”‘ என்றார். “உள்ளே ஒரு வேட்டி மட்டும்தான் வச்சிருக்கேன்”.

நாங்கள் பேசிக் கொண்டிருப்பதை என் அலுவலக ஊழியர்கள் சூழ்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பியபோது என் கண்களைச் சந்திப்பதை தவிர்த்தனர். ஆனால் அன்று என்னைச் சந்திக்க விக்ரமாதித்யனைப் போன்றவர்கள் பலர் வந்துகொண்டிருந்தனர். முக்கியமாக ஜான் ஆபிரகாம். அவர் ஒருமுறை படிகளில் கைகளை ஊன்றி தவழ்ந்து ஏறிவந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு நான் அப்போது கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த ‘விஜயபாரதம்’ என்னும் இதழில், ‘இலக்கிய மூலை’ என்னும் பக்கத்தில் விக்ரமாதித்யனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அவருடைய நிலைகொள்ளாமை, தேடல், தனிமை ஆகியவை எவ்வண்ணம் கவிதையில் வெளிப்படுகின்றன என்று. உலகில் எங்கும் பொருந்தாமல் அலைப்புறும் கலைஞன் என அவரை மதிப்பிட்டு அவர் கவிதைகளை அறிமுகம் செய்திருந்தேன். அது ஒரு அரசியல் இதழ்.  அதில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக நவீனத் தமிழிலக்கியத்தைப் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னாளில் நான் அறிமுகம் செய்துகொண்ட பல இலக்கியவாசகர்கள் அந்த ‘இலக்கிய மூலை’ என்னும் பகுதி வழியாகவே நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டதாக சொல்லியதுண்டு. ராஜன் என்ற பெயரில் அக்கட்டுரையை எழுதியிருந்தேன். ராஜன் எனது அண்ணனுடைய விளிப்பெயர்.

அந்தப்பக்கத்தின் முக்கியத்துவம் அன்று தெரியவில்லை, இன்று புரிகிறது. அன்று சிற்றிதழ்கள் மட்டுமே இலக்கியத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ‘யாத்ரா’ வெங்கட் சாமிநாதனுக்குரிய இதழ். ‘நிகழ்’ கோவை ஞானிக்குரிய இதழ். பிரமிளுக்கு ‘லயம்’ இருந்தது. சென்னை கசடதபற குழுவினர் ஒன்று நிற்க இன்னொன்று என வெவ்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தனர். இவை அனைத்தும் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருபவை. மொத்தமாகத் தமிழில் அச்சிடப்படும் இலக்கியப் பக்கங்களே ஒரு ஆண்டுக்கு ஆயிரத்துக்குள்தான் வரும் என்று சுந்தர ராமசாமி சொல்வார். ஆகவே வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருந்த ‘இலக்கிய மூலை’ என்பது அன்றைய இலக்கிய வாசகர்கள் நடுவே மிகப் பரவலாகப் படிக்கப்பட்டது. விக்ரமாதித்யனைப் பற்றி எழுதப்பட்ட முதல் விமர்சனம் என்பது நான் எழுதிய அந்தக் குறிப்புதான். அதுதான் அவரை என்னைத் தேட வைத்தது.

நான் எங்கள் தங்குமிடத்துக்குச் செல்லும் வழியிலேயே விக்ரமாதித்யனுக்கு ஒரு சட்டை ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவருடைய அளவுக்கு மிகப்பெரிய  சட்டை. அதைப் போட்டுக்கொண்டு எனது அறைக்கு அவர் வந்தார். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்தினோம். வந்ததுமே எனது வீட்டில் இருந்த பொதுவான ஒவ்வாமையை அவர் உணர்ந்து கொண்டார். அவர் எண்ணி வந்த காசர்கோடு இல்லம் அல்ல அது என்று அவருக்குத் தெரிந்தது. என் அறைத் தோழர்கள் அவரை முகம் கொடுத்தே சந்திக்க மறுத்துவிட்டார்கள். அறையில் எனக்குப் படுக்கவே ஒரு பாய்தான் இருந்தது. அவருக்கு படுக்க ஒரு பாய் கொடுத்தேன். ஆனால் அது மழைக்காலம். தரையிலிருந்து சில்லிப்பு வருகிறதென்று சொன்னார். ஆகவே இரவில் செய்தித்தாள்களை எடுத்துக் கொடுத்து அதைப் பரப்பி அதன் மேல் பாய் போட்டு படுக்க சொன்னேன்.

மறுநாள் காலை அவர் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது, அந்த அறைக்குப் பொறுப்பாக இருந்த மூத்தவர் ஒருவர் என்னை அழைத்து, “இன்றே இவர் காலி செய்து செல்ல வேண்டும், இல்லையென்றால் நீயும் செல்ல வேண்டியிருக்கும்” என்றார். நான் விக்ரமாதித்யனிடம் “அண்ணாச்சி, நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள், இங்கு தங்க முடியாது” என்று சொன்னேன். “புரியுது” என்று அவர் சொன்னார், “ஆனால் என்னிடம் செல்வதற்குப் பணம் இல்லை.” நான் அவருக்குப் பேருந்துக்கான கட்டணமும் செல்வதற்கான செலவும் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். அன்று முதல் இன்று வரை என் ஆசிரியரின் இடத்தில் இருக்கும் ஒரு கவிஞருடன் என்னுடைய உறவென்பது இவ்வாறு அமைந்தது.

விக்ரமாதித்யனைப் பற்றி நான் எழுதிய அந்தக்குறிப்பை பின்பொருமுறை சுந்தர ராமசாமிக்கு காட்டினேன். அவருடைய இல்லத்திற்கும் விஜயபாரதம் வந்துகொண்டிருந்தது என அப்போதுதான் கண்டேன். அவர் அதை வாசித்துமிருந்தார். “நீங்கதானா அது?” என்றார். பின்னர் “நாடோடி வாழ்க்கையைப் பற்றியும் அலையறதைப் பற்றியும் எழுத்தாளர்கள் கிட்ட ஒரு ரொமாண்டிஸிசம் உண்டு…” என்றார். “சார், நான் அந்த அலைச்சலை வேண்டிய அளவுக்கு செஞ்சாச்சு….” என்றேன்.

“விக்ரமாதித்யனை அவரோட அலைச்சல், குடி எதோடயும் இணைக்காம கவிதைகளை மட்டுமே வைச்சு பாருங்க…அப்ப என்ன தோணுது?” என்றார். “அப்பவும் அவர் பெரிய கவிஞர்தான்” என்றேன். சுந்தர ராமசாமிக்கு விக்ரமாதித்யன் கவிதைகள் ஏற்புடையனவாகவே இல்லை. அவர் “சரி, அவரோட கவிதைகளிலே உங்களுக்குப் பிடிச்ச ஒண்ணைச் சொல்லுங்க” என்றார்.

நான் இரண்டு கவிதைகளை சொன்னேன். ஒன்று “திசைமுடிவுக்கு தெரிவதெல்லாம் ஆகாயம் நீலநிறம்” என்ற கவிதை. இன்னொன்று “தட்சிணாமூர்த்தியான” என்னும் கவிதை. பீடம் விட்டிறங்கி ஊர்சுற்றி திரும்பி வந்து தட்சிணாமூர்த்தியாக அமரும் துடியான கருப்பசாமி பற்றிய கவிதை. இரண்டாவது கவிதை சுந்தர ராமசாமிக்கு ஏற்புடையதாக இல்லை. அது சொல்வதென்ன என்றே அவருக்கு பிடிகிடைக்கவில்லை. ஆகாசம் நீலநிறம் கவிதை வானம்பாடி கவிதைகளோட மெட்டிலே இருந்தாலும் நல்ல கவிதை” என்று சொன்னார்.

நான் எனக்கு ஏன் விக்ரமாதித்யன் முக்கியமானவர் என்று சொன்னேன். அன்று நான் தமிழ் நவீனக்கவிதைகளிலுள்ள அன்னியத்தன்மை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நவீனத்தமிழ்க்கவிதையை கேரட் பீட்ரூட் போன்ற ஓர் அயலகப்பொருள் என்பேன். அவற்றை குமரிமாவட்டத்தில் இங்கிலீஷ் காய்கறி என்பார்கள்.

“சார், இது பீர்க்கங்காய் வழுதுணங்காய் மாதிரி. இங்கயே உருவான காய்கறி. வயலிலே விளைஞ்சு நாம சாப்பிடுறோம். காட்டுக்குப்போனா இதோட காட்டுவகை  இஷ்டத்துக்கு வளந்து கிடக்கும். விக்ரமாதித்யன் எழுதுறது நவீனக் கவிதை. ஆனா ஒரு சுத்து சுத்திவந்தா இங்கேயே யாராவது நாட்டுப்புற கவிஞன் இதோட ’வைல்ட் வெரைட்டியை’ பாடுறதை கேக்க முடியும்” என்றேன்.

கவிதை என்பது ஒரு refinement என்றார் சுந்தர ராமசாமி. கலை என்பதே ஒரு நுண்மையாக்கம்தான். அவற்றில் உச்சகட்டக் கலை கவிதையும் இசையும். நான் “ஆமாம், ஆனால் எதன் நுண்மையாக்கம்?” என்றேன். “பனையின் சாரமான சாறுதான் பதநீர். ஆனால் நமது மண்ணின் பதநீருக்கும் வேறொரு அன்னிய நிலத்தின் பதநீருக்கும் வேறுபாடுண்டு…ஆப்ரிக்காவில் வெவ்வேறு மரங்களில் இருந்து கள் எடுக்கிறார்கள். அது வேறு” எங்களுக்குள் அந்த விவாதம் அப்படியே நீடித்தது.

சுந்தர ராமசாமி அவருடைய கருத்துக்களை உறுதிசெய்துகொள்ளவே என்னை பயன்படுத்திவந்தார். எனக்கும் அன்று இன்று எழுதுவதுபோல சரியான வார்த்தைகளில் சொல்ல தெரிந்திருக்கவில்லை. எனக்கு அன்றெல்லாம் முதலில் எழுவது உருவகங்களும் உவமைகளும்தான். இன்றுவரை என் இலக்கியவிமர்சனத்தின் அடிப்படையாக இருப்பவையும் அவைதான்.

சுந்தர ராமசாமி “நீங்க அந்த உவமைகளை வீணடிக்காம கவிதைகளா எழுதலாம், நல்லா இருக்கு” என்பார். ஒருமுறை அரசியல் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது “பறக்கிறப்ப பறவைகள் கால்களை மடிச்சு வைச்சுக்கிடறது மாதிரி அரசியல்கவிதைகளிலே அரசியல் இருக்கணும்…” என்றேன். சுந்தர ராமசாமி வாய்விட்டுச் சிரித்தது நினைவுள்ளது.

[ 2 ]

 

விக்ரமாதித்யனைப் பற்றி அவருடைய ‘ஆகாசம் நீல நிறம்’ என்ற முதல் தொகுதியை முன்வைத்து 1987-ல் நான் உருவாக்கிக் கொண்ட அந்த மதிப்பீடு, அடிப்படையில் பெரிய மாறுதல்கள் ஏதுமின்றி முப்பத்து நான்கு ஆண்டுகளாக அவ்வாறே நீடிப்பது வியப்புக்குரியது. அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. இந்த முப்பத்துநான்கு ஆண்டுகளில் தொடர்ந்து அவரைப் பற்றி விடாமல் எழுதிக் கொண்டிருப்பவனாக, அவருடைய அனைத்துத் தொகுதிகளுக்கும் எதிர்வினையாற்றுபவனாக, எங்கு கண்டாலும் அவர் கால்தொட்டு வணங்குபவனாக இருந்து கொண்டிருக்கிறேன்.

அவருடைய வாழ்க்கைப் போக்கும் என்னுடைய போக்கும் முற்றிலும் வேறுவேறு திசைகளைச் சார்ந்தவை. ஒரு பொது இடத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டால், எங்களுக்கிடையே பொதுவான எதுவுமே இல்லை என்ற உணர்வே ஏற்படும். என்னை கசப்படையச் செய்யும்படி அவர் பலமுறை நடந்துகொண்டிருக்கிறார். கவிதையன்றி நானும் அவரும் சந்தித்துக் கொள்ளும் களங்களே கிடையாது. அவரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடங்கள் உரையாடி, மது அருந்துவதற்கான பணத்தைக் கொடுத்து அனுப்புவதே வழக்கம். அதைப் பலர் கொடை என்பார், கப்பம் என்பவர்கள் உண்டு. நான் காணிக்கை என்றே எப்போதும் சொல்லி வருவேன்.

ஆனால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயமோகன் விக்ரமாதித்யனை சந்தித்த காலப்புள்ளி முக்கியமானது. அன்று ஒருவர் மதுக்கடைக்குள் நுழைந்து விட்டிருந்தார். இன்னொருவர் நுழைய முடியாமல் வெளியே நின்றிருந்தார். அந்தச் சிறு வேறுபாடுதான் இரு வேறு திசைகளில் வளர்ந்து, முற்றிலும் வேறுபட்ட இரு ஆளுமைகளாக மாறி இருக்கிறது. வெளியே நின்றவர் தன் தந்தையாருக்குக் கட்டுப்பட்டிருந்தார். முன்னோர் சொல் எனும் ஆணை அவருக்கு இருந்தது. அதுவே அவரை சுந்தர ராமசாமிக்குக் கொண்டு சென்றது, ஆற்றூர் ரவிவர்மாவை நோக்கிக் கொண்டு சென்றது. நித்ய சைதன்ய யதியின் பாதங்களில் அமர வைத்தது. இன்று இவ்வண்ணம் ஆக்கியிருக்கிறது.

மதுக்கடைக்குள் சென்றவர் அவ்வாறு யாராலும் தடுக்கப்படாதவர். சொல் என ஒன்று அளிக்கப்படாதவர். விக்ரமாதித்யனின் தந்தையை இன்று அவர் கதைகளின் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மிகமுக்கியமாக திரிபு என்னும் சிறுகதை ஒரு தன் வரலாற்று ஆவணம்.மிக இளமையிலேயே, ஓர்  உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கையிலிருந்த தன் மனைவியையும் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டு , திரைப்பட ஆர்வத்தால் சென்னைக்குச் சென்றவர் விக்ரமாதித்யனின் தந்தை. தாயும் குழந்தைகளும் கடும் வறுமைக்குள் விழுந்து ,தன்மானம் இழந்து உதவிகளுக்காக அலைந்து,பசித்து, பரிதவித்து, தங்கள் வாழ்க்கையைக் கடந்தனர்.

விக்ரமாதித்யன் பல கவிதைகளில் தன் இளம்பருவ வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். நான் இளமையிலேயே நொம்பலப்பட்ட ஆன்மா, மாயக்கவிதை எழுத மற்ற ஆளைப்பாரு என கொந்தளிக்கிறது ஒரு கவிதை. திரையரங்குகளில் முறுக்கு விற்றவர், தொண்டர்கடைகளில் பொட்டலம் மடித்தவர், தூக்குவாளியில் சுக்குகாப்பி விற்றவர், ஈரம் உலராத கிழிந்த ஆடையை ஆண்டு முழுக்க அணிந்தவர்.

விக்ரமாதித்யன் அவர் தந்தை அவ்வாறு உதறிச் செல்லாமல் இருந்திருந்தால் முறையான சிறந்த கல்வியை அடைந்திருக்கக் கூடும். நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கூரிய அறிவும், திகைக்க வைக்கும் நினைவுத் திறனும் கொண்டவர் அவர். அவர் கற்ற எதையுமே மறந்தவர் அல்ல, மூளைக்குமேல் இத்தனை லிட்டர் மது பெய்யப்பட்டபோதும்கூட. ஒருவேளை நாம் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் சமூகப் பதவியில் சென்று அமர்ந்திருக்கக் கூடும். அவர் தந்தை அவரைக் கைவிட்டார். அது சமூகம் கைவிடுவதுதான், மரபு கைவிடுவதுதான், முன்னோர்களின் நீண்ட நிரை அவரைக் கைவிடுவதுதான்.

அவருடைய கையறுநிலை அங்கேயே தொடங்கிவிட்டது. அவரை அலையச் செய்வதற்கான தெய்வஆணை அவருடைய தந்தை ஊரை விட்டுச் செல்லும் அந்த கணத்திலேயே விழுந்து விட்டது. குலேபகாவலியிலோ எதிலோ அவருடைய தந்தை ஒருகணம் சிறு வேடத்தில் வருவார், அதை பலமுறை திரையரங்குகளில் பார்த்ததுண்டு என ஒரு முறை சொன்னார். தந்தைக்கும் அவருக்குமான உறவு எந்த வகையானது? இன்று அவர் எவ்வண்ணம் உணர்கிறார்?

தான் தந்தையாகும்போது எவருக்கும் தந்தையுடனான உறவு மாறுபடுகிறது என்பார்கள். மகன் என்ற கோணத்தில் இருந்து நோக்குகையில் வந்த கசப்புகளும் விமர்சனங்களும் மறைகின்றன. தந்தையைப்பற்றி பல கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். விக்ரமாதித்யனின் கவிதைகளில் அப்பா வருகிறாரா? நான் அவர் கவிதைகளை புரட்டியே பார்க்காமல் இக்கட்டுரையை எழுதவேண்டுமென நினைக்கிறேன். என் நினைவில் தொகுதிகளை புரட்டிக்கொண்டே இருக்கிறேன். இல்லை என்றே தோன்றுகிறது.

திரும்பி வந்த தந்தையைப் பற்றி ‘திரிபு’ என்னும் கதையில் விக்ரமாதித்யன் எழுதுகிறார். நோயுற்று, சலித்து, கருணை கோரி வந்து, திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவர். ஆனால் ஒரு காலத்தில் அவருடைய இனிய துணைவியாகவும் பணிவான மனைவியாகவும் இருந்த அவர் அன்னை, நால்வகை நிலமும் வயின் வயின் திரிந்து பாலை என்றாவது போல் மாறிவிட்டிருந்தார். கடுமையும், கசப்பும், கொடுமையும் அதற்குத் தேவையான கூர்மையும் கொண்டவராக. குளவி போலக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். தன்னையும் வதைக்கிறார். வலியால் தானே உளநோயாளிக்கு நிகராக ஆகும்வரை.

தந்தையை அன்னை பழிவாங்குவதைப் பார்த்து மகன் வளர்கிறார். உண்மையில் அதுவும் ஒருவகை கைவிடப்படுல்தான். ஒருவேளை அந்த அன்னை உளம் விரிந்து திரும்பிவந்த கணவரை ஏற்றுக் கொண்டிருந்தால், அன்னையென அணைத்துக்கொண்டிருந்தால், மரபிலிருந்து பிறிதொரு பெரும்படிமம் வந்து விக்ரமாதித்யனைத் தொட்டிருக்கும். தந்தையை அகத்தே இழந்தவருக்கு, தாய் எனும் பேருருவம் கிடைத்திருக்கும்.ஆனால் அந்தக் கதை காட்டுவது, அவர் தன் தாயையும் அகத்தே இழந்தார் என்பதே.

எளிய மனிதர்களாக, சிறிய உணர்வுகளால் தூக்கிச் சுழற்றப் படுபவர்களாக, தாயையும் தந்தையையும் அவர் அறிகிறார். உண்மையில் நமது அனைவருடைய தாயும் தந்தையும் எளிய மனிதர்கள்தான். அன்றாடத்தால், ஆணவத்தால் அலைக்கழிக்கப் படுபவர்கள்தான். ஆனால் தந்தைமை என்றும் தாய்மை என்றும், பல்லாயிரம் ஆண்டுகளாக மரபும் இயற்கையும் உருவாக்கி வைத்திருக்கும் சில விழுமியங்கள் அவர்களிடம் வெளிப்படும் தருணங்கள் உண்டு. அவற்றினூடாகவே நாம் அவர்களை நினைவில் நிறுத்திக் கொள்கிறோம். அத்தருணங்களைக் கோர்த்துக் கோர்த்து அவர்களை ஒரு ஆளுமையென உருவாக்கிக் கொள்கிறோம்.

இளமையின் அன்றாடச்சூழலில், பின் உருவாகும் தலைமுறை மோதலில் நாமறியும் தாயும் தந்தையும் இருவேறு ஆளுமைகள் கலந்த வடிவங்கள். ஒருபக்கம் அவர்கள் எளிய மனிதர்கள். மறுபக்கம் அரிதாக வெளிப்படும் உயிரியல்ரீதியான பாசம், அதன் விளைவான தியாகம் ஆகியவற்றின் உருவங்கள். மூதாதையர்களின் நீட்சியென நின்றிருப்பவர்கள். நம் பெருமரபு தலைமுறை தலைமுறையென தொகுத்து அளித்த தொல்படிமம் அவர்கள் மேல் கவிகிறது. தாய் என்று ஒரு பெண்ணை அறிகிறோம். கூடவே தாய்மை என்று எழுந்தருளும் ஒரு தெய்வத்தையும் அறிகிறோம்.

மனிதர்களாகத் திகழ்ந்த தாயும் தந்தையரும் மறைந்த பிறகு, அவர்களின் மனிதத்தன்மை அனைத்தும் மெல்ல மெல்ல நம் நினைவுகளில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.அவர்களில் எழுந்த தந்தைமையும், தாய்மையும் மட்டுமே ஆளுமையென உருக்கொண்டு நிலைகொள்கிறது. படிமங்களென உருமாறுகிறது. நம் இல்லங்களில் படங்களாக நாம் வைத்திருக்கும் தாயும் தந்தையரும் அந்தப் படிமங்களே. அவற்றுக்கே நாம் மாலையிட்டு ஊதுவத்தி ஏற்றி வணங்குகிறோம், தெய்வங்களாக்கி வழிபடுகிறோம்.

அவ்வாறு தந்தைமையும் தாய்மையும் எழுந்த தருணங்களை நினைவில் கொள்வதற்கு இலாது, தன் பெற்றோரை மானுடர்களாக மட்டுமே உணரக்கூடிய தீயூழ் கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அத்தெய்வங்களால் கைவிடப்பட்ட மனிதர்கள். அத்தெய்வங்களின் இடத்தில் அவர்கள் பிறிதொன்றை வைத்தாக வேண்டும். அதற்கெனத் தேடித் தேடி புதிய தெய்வங்களைக் கண்டு கொள்கிறார்கள். அவற்றுள் சில அருளும் தெய்வங்கள், சில மருட்டி ஆட்படுத்தும் கொடிய தெய்வங்கள். விக்ரமாதித்யன் கவிதையைக் கண்டு கொண்டார்.

[மேலும்]

கவிப்பெரும்பழம்- கா.சிவா

எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்

நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

எத்திசை செலினும்- சாம்ராஜ்

கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ

எரியும் தீ -சௌந்தர்

கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.

செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு

உள்ளுலகம் – சக்திவேல்

பாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம் அச்சுநூல்கள்
அடுத்த கட்டுரைசெல்வேந்திரன் – ஒரு கடிதம்