அன்புள்ள ஜெ
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்குள் பாரதிய ஜனதாக் கட்சியின் அண்ணாமலை மோடியின் உரையை ஒளிபரப்பியதைக் கடுமையாக கண்டித்து பேசியதை கவனித்திருப்பீர்கள். தனக்கு கடுமையாக மிரட்டல்கள் வருகின்றன என அவர் புகார் சொல்லியிருக்கிறார். நீங்கள் உங்கள் எதிர்வினையை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீராம் ஆர்.
அன்புள்ள ஸ்ரீராம்,
முன்னரே இதைப்பற்றி பல கேள்விகள் வந்தன. செய்திகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றவேண்டியதில்லை என்பது என்னுடைய நிலைபாடு. அத்துடன் அப்போது இதைப்பற்றி பேசிய நண்பரிடம் சொன்னேன். “ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் பழமைவாதி. அவருக்கு அவர்களின் ஆதரவு இருக்கலாம். நான் அவருக்கு ஆதரவாகவே பேசப்போய் அது அவருக்கு சிக்கல்களை உருவாக்கலாம். அவரை என்னைப்போல ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்று சொல்லப்போகிறார்கள். அவருக்கு எதற்கு அந்த சிக்கல்?”
இன்று நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் பேசிக்கொண்டிருந்தபோது ரங்கராஜன் நரசிம்மன் போதிய அவதூறுகள் மற்றும் வசைகளுக்கு ஆளாகிவிட்டார் என்றார். அவர் ‘கிரிப்டோ கிறிஸ்தவர்’ என முத்திரை குத்திவிட்டார்கள். அவர்அமெரிக்காவில் சட்டைபோடாமல் சென்றபோது வெளியே நடமாடிவிட்டார் என்பதற்காக போடப்பட்ட ஒரு சிறு வழக்கை [இண்டீசன்ட் எக்ஸ்போசர்] அவர் ஒரு சிறார் பாலியல்குற்றவாளி என காட்டும்படி திரித்துச் சொல்கிறார்கள் என்றார். ஆகவே, இனி தயங்க வேண்டியதில்லை.
முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன். ரங்கராஜன் நரசிம்மன் போன்ற பழமைவாத, ஆசாரவாதிகளுடன் நான் பொதுவாகக் கொள்ளக்கூடிய சிந்தனை ஏதுமில்லை. இந்து மதத்தின் ஆன்மிகம் அவர்களைப்போன்றவர்களை மீறித்தான் நிகழவும் முடியும்.
ஆனால் அவரைப்போன்றவர்கள் நிலைச் சக்திகள். எந்த கருத்தியலுக்கும் நிலைச்சக்திகள் இன்றியமையாதவர்கள். இலக்கியத்திற்கு இலக்கணவாதிகளே நிலைச்சக்திகள். அவர்கள் பின்னுக்கு இழுப்பவர்கள். ஆனால் கட்டற்று பறந்துவிடாமல் காப்பவர்களும்கூட.
ரங்கராஜன் நரசிம்மன்அவர்கள் ஆலயப்பாதுகாப்புக்காக களம்நின்று போராடுபவர். ஆலயநிலங்கள் கொள்ளைபோவதற்கு எதிராக, ஆலயங்கள் கைவிடப்படுவதற்கு எதிராக, புதுப்பித்தல் என்னும் பெயரில் ஆலயங்கள் வடிவஅழிப்பு செய்யப்படுவதற்கு எதிராக, ஆலயச்சடங்குகளும் ஆகமமுறைகளும் மாற்றப்படுவதற்கு எதிராக சட்டப்போர்களை முன்னெடுப்பவர். அதில் அவர் மிகத்தெளிவான பல வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். இந்து மதம் மேல் பற்று கொண்ட எவரும் மதிக்கவேண்டிய செயல். இந்து பக்தர்களின் அமைப்புக்கள் செய்யவேண்டியவற்றை தனியாக நின்று செய்பவர் அவர்.
அந்தச் சட்டப்போர்களை அவர் முன்னெடுக்கையில்தான் அவருக்குத் தெரிகிறது, இந்து ஆலயங்களைச் சூறையாடுபவர்களில் பலர் இந்துக்களே. இந்து அறங்காவலர்கள், இந்து பிரமுகர்கள், இந்து அமைப்புக்கள். அவர் தன் அடிப்படைகளில் சமரசம் செய்துகொள்பவர் அல்ல. ஆகவே அவர்களையும் அவர் எதிர்க்கிறார். ஆகவே அவருக்கு எதிரான காழ்ப்புகள் திரள்கின்றன.
இதை என் பார்வையை தொடர்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஏனென்றால் இத்தகைய விஷயங்களில் உடனடியாக காழ்ப்பாளர்களின் திரிபுகள் மலைமலையாக வந்து குவியத்தொடங்கும்.
எந்த மதமும் இரண்டு எல்லைகள் கொண்டது. ஓர் எல்லையில் அது அமைப்புகளாக உள்ளது. மறு எல்லையில் அது தேடலாக உள்ளது. அமைப்புக்கள் நிலைத்தன்மை கொண்டவை. தேடல் கட்டற்றது, தன்னிச்சையானது. அமைப்பை மதம் என்றும் தேடலை ஆன்மிகம் என்றும் சொல்லலாம். இரண்டும் நேர் எதிரான திசைவழிகள் கொண்டவை. ஒன்றையொன்று எதிர்த்துச் செயல்படுவன எனத் தோன்றுபவை. ஆனால் அவை ஒன்றின் இரு நிலைகளே.அவை கொண்டிருப்பது முரணியக்கம்.
மத அமைப்புகள் என்பவை ஒரு மதம் நீண்டகாலமாகத் திரட்டிக்கொண்ட மெய்ஞானத்தையும் பண்பாட்டுக்கூறுகளையும் காலத்தில் நிலைநிறுத்தும் பொருட்டு உருவானவை. அவை மெய்ஞானத்தையும் பண்பாட்டுக்கூறுகளையும் படிமங்களாக, உருவகங்களாக,ஆசாரங்களாக, வழிபாட்டுமுறைகளாக, நம்பிக்கைகளாக மாற்றி நிலைநிறுத்துகின்றன. கலைகளாகவும் இலக்கியங்களாகவும் மாறுபவை அந்த படிமங்களும் உருவகங்களும்தான்.
அந்த அடித்தளத்தில் இருந்து முளைத்தெழுந்துதான் ஆன்மிகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்செல்கிறது. வேர் நிலைத்திருக்க கொடியின் முனை புதிய கொழு தேடிச்சென்றுகொண்டே இருப்பதுபோல. அந்த அடித்தளம் அழியுமென்றால் காலப்போக்கில் அந்த ஆன்மிகத் தேடலும் அழிந்துபடும்.
ஏனென்றால் ஆன்மிகத் தேடலுக்கு அவசியமான குறியீடுகள், படிமங்கள், நுண்ணிய உளநிலைகள், பல்வேறு சடங்குச்செயல்பாடுகள், யோகமுறைகள் மதக்கட்டமைப்பில்தான் உள்ளன. அங்கிருந்து அவற்றை எடுத்து அகவயமாக்கிக் கொண்டு முன்செல்வதையே ஆன்மிகசாதகன் செய்கிறான். அவை மிக இளம்வயதிலேயே அவனை வந்தடைந்து, அவனுடைய ஆழுள்ளத்தில் [ஸ்வப்ன, சுஷுப்தி நிலைகளில்] உறைந்தால்தான் அவனால் அவற்றைக்கொண்டு தன் அகத்தின் கட்டற்ற பெருக்கை பற்றமுடியும், கையாள முடியும்.
மதம் அழிந்தால் அவையும் அழியும். ஆன்மசாதகன் வெற்றிடத்தில் தன் அகப்பெருக்கை நிலைகொள்ளச் செய்ய முடியாது. அதற்கு அவன் எப்படியும் படிமங்களையே நாடவேண்டும். இந்துமதம் அழிந்தால் அவன் மாற்று மதங்களையே நாடுவான். அவ்வண்ணம் செல்லக்கூடாதென்றில்லை, ஆனால் அவ்வண்ணம் செல்பவர்கள் இந்துமதம் மட்டுமே அளிக்கும் ஆழ்ந்த தனித்துவம் கொண்ட தளம் ஒன்றை இழக்கிறார்கள். எவரிடமும் அதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். இப்புவியில் மானுடன் உணர்ந்த மெய்மைகளில் தலையாயது வேதாந்தமே.
மதமே இல்லை என்றால் தேடல்கொண்டவன் நவீனப்படிமங்களை நாடவேண்டியிருக்கும். அறிவியலும் நவீனக் கலையும் உருவாக்கும் படிமங்கள். அவை பயனுள்ளவை என நிறுவப்படவில்லை. அவை நேர்நிலையான ஆற்றல்கொண்டவை என்றுகூட சொல்லிவிட முடியாது.
ஆகவே மதம் இங்கே இருந்தாகவேண்டும். அது பேணப்பட்டாகவேண்டும். மாற்றமின்மையே அதன் இயல்பு. நிலைத்தன்மையே அதன் பொறுப்பு. மாற்றமில்லாமல் அதை நீடிக்கவைப்பதற்காகவே மதம்சார்ந்த உளநிலை கொண்டவர்கள் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள். ரங்கராஜன் நரசிம்மன் போன்றவர்கள் அதையே செய்கிறார்கள்.
முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்.
இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அனைவருக்கும் ஆலயநுழைவு உரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆதல் போன்றவை அறச்சார்பு கொண்டவை. மானுடசமத்துவம் என்னும் மெய்ஞானத்தின் அடிப்படை கொண்டவை. நித்ய பிரம்மசாரியாக உருவகப்படுத்தப்படும் தெய்வத்தின் சன்னிதியில் அத்தனை பெண்களும் செல்லவேண்டும், அந்த உருவகம் உடைக்கப்படவேண்டும் என்பது அவ்வாறல்ல.
இதையே எல்லா மதங்களுக்கும் சொல்வேன். சமீபத்தில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கரிஸ்மாட்டிக் பிரேயர் எனப்படும் புதியவகை நோன்பு வழிபாடுகளைச் செய்யலாமா என்னும் விவாதம் எழுந்தது. அதுவும் வழிபாடுதானே என சிலர் கூறினர் [பெந்தேகொஸ்தே பாணியிலான வழிபாடு அது. கத்தோலிக்க வழுமுறைகளுக்கு வெளியே உள்ளது] ஓர் மலையாள இதழ் என் கருத்தைக் கேட்டது. வழிபடலாம், ஆனால் தனியாக மண்டபங்கள் அமைத்து அதைச்செய்யவேண்டும். கத்தோலிக்க வழிபாட்டுமுறை என ஒன்று உண்டு. அதை மாற்றினால் கத்தோலிக்க மதம் அழிகிறதென்றே பொருள் என்று நான் சொன்னேன்.
ரங்கராஜன் நரசிம்மன் சொல்லும் எதிர்ப்புக்கே வருகிறேன். திரு.அண்ணாமலை அவர்கள் செய்தது பெரும் பிழை, மீறல். அதை இந்துக்கள் எதன்பொருட்டும் ஏற்கவோ நியாயப்படுத்தவோ கூடாது. நீண்டகால அளவில் அழிவைக்கொண்டுவரும் ஒரு செயல்பாடு அண்ணாமலை செய்தது. ஆகவே திரு ரங்கராஜன் அவர்களின் எதிர்ப்பை மரபிலிருந்து எழுந்தேயாகவேண்டிய குரல் என்றே சொல்வேன்
இரண்டு காரணங்களால் அதைச் சொல்கிறேன். முதன்மையாக, ஸ்ரீரங்கம் வைணவ ஆலயம். அங்கே சிவ ஆலயமான கேதார்நாத் குறித்த காணொளியை காட்டியது பிழை.
இதை முதலில் சொல்வேன் என என் நண்பர்களிலேயே பலர் எதிர்பார்க்காமலிருக்கலாம். ஆனால் இன்று நிகழ்ந்து வரும் முதன்மை அழிவு இது. இந்துமதம் என ஒன்று உண்டு. ஆனால் அது ஒற்றைப்படையான ஒரே அமைப்பு அல்ல. பல மதங்கள் வரலாற்றின் போக்கில் இணைந்து உருவான ஓர் பண்பாட்டு – ஆன்மிக இயக்கம்தான் அது. அதற்குள் வைணவமும் சைவமும் சாக்தமும் தனித்தனியாக, தங்கள் தனித்தன்மைகளுடன், இயங்குவதே அதன் ஆதார இயல்புக்கு உகந்தது. அரசியல்தேவைக்காக அதை ஒற்றைப்படையாக ஆக்கி உட்பிரிவுகளை மழுங்கடித்தால் காலப்போக்கில் இந்துமதம் அழியும்.
ஆகவே சைவம் வேறு வைணவம் வேறுதான். அவற்றுக்கான நம்பிக்கைகளும், ஆசாரங்களும், குறியீட்டமைப்புகளும் வேறுவேறுதான். அவற்றை மனம்போனபடி கலக்கலாகாது. வேறுபாடுகளை அழிக்கலாகாது. முரண்பாடுகளைக்கூட இல்லாமலாக்கலாகாது. மோதலை தவிர்க்கலாம், உள்விவாதம் அழியக்கூடாது. ராமானுஜ வைணவர்களுக்கு சங்கர அத்வைதம் எதிர்நிலைதான். அவ்வாறே அது நீடிக்கவேண்டும்.
இந்து என பொதுவாக தன்னை உணரும் ஒருவர் எல்லா ஆலயங்களுக்கும் செல்லலாம். அத்வைதியான எனக்கு ராமானுஜரின் ஆலயங்களுக்குச் செல்ல எந்த உளத்தடையும் இல்லை. நாட்டார் தெய்வங்கள் எனக்கு உண்டு. அஜ்மீரும் எனக்கு ஏற்புடையதே. ஆனால் ஒரு தீவிர வைணவர் அவ்வாறு சங்கரரை ஏற்கமாட்டார். அதை புரிந்துகொள்கிறேன். அவருக்கான இடம் அழியக்கூடாது என்றும் சொல்வேன்.
வைணவத்திற்குள்ளேயேகூட ஒவ்வொரு ஆலயத்துக்கும் உரிய ஆன்மிகப்பாவனைகள் நீடிக்கவேண்டும். குருவாயூரில் பெருமாள் குழந்தை, பண்டரிபுரத்தில் சிறுவன், திருப்பதியில் அரசன், ஸ்ரீரங்கத்தில் யோகப்பெருநிலையில் கிடக்கும் கரியவெளி. அந்த வேறுபாடுகள் இருக்கும் வரையே ஆலயங்கள் நீடிக்கும், வழிபாடுகள் நீடிக்கும், இந்து மதம் நீடிக்கும்.
ஆகவே ஆகமமுறைகளை விருப்பப்படி மாற்றலாகாது. சடங்குகளை மாற்றலாகாது. ஆலயங்களுக்குள் செவ்வந்தி போன்று மரபில் இல்லாத மலர்களைக் கொண்டுசெல்வது, ஆப்பிள் கொய்யா போன்று வந்துசேர்ந்த கனிகளைக் கொண்டுசெல்வதுகூட தவிர்க்கப்பட்டாகவேண்டும் என்பதே என் நிலைபாடு.
ஆகவே வைணவம் அன்றி வேறொன்றுக்கு இடமில்லாத ஸ்ரீரங்கத்தில் சைவ ஆலயத்தின் காணொளி வெளியிடப்பட்டது பிழை. அதுவும் தூயசைவத்தின் பாசுபத -காளாமுக மரபினரின் ஆலயம் கேதார்நாத் . அந்தக் காணொளி எதன்பொருட்டும் ஸ்ரீரங்கத்தில் காட்டப்படக்கூடாது.நாளை அங்கே விபூதியுடன் செல்லவேண்டும் என சிலர் கிளம்பலாம். ஒரு தவறான தொடக்கம் எப்போதுமே கடுமையாகக் கண்டிக்கவேண்டியது.
அடுத்தபடியாகவே ஆலய வளாகத்தில் அரசியலை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது. எந்த அரசியலானாலும் அது ஆலயத்தின் ஒருமையை, மரபை அழிப்பதே. நாளை கே.என்.நேரு ஸ்டாலின் உரையை அதே வளாகத்தில் ஒளிபரப்பலாம். இன்று நடந்ததை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். இந்து அரசியல் என்பது இந்து மதத்தை சிதைப்பதற்கல்ல. இந்து மதத்தின்மேல் குறைந்தபட்ச நம்பிக்கையாவது அவர்களுக்கு இருக்கவேண்டும்.
நேற்று பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் என் நிலைபாட்டைச் சொன்னேன். அவற்றை இப்போது தொகுத்துக்கொள்கிறேன்
அ. இந்து மெய்மரபும் இந்துமதமும் இதுகாறும் இயங்கி வரலாற்றில் திரண்டுவந்தது இன்றைய அரசையோ பாரதியஜனதா கட்சியையோ அதிகாரமையமாக ஆக்குவதற்காகத்தான் என எவரேனும் நினைத்தால் அவர் இந்து விரோதி, இந்துமதத்தை அழிப்பவர்.
ஆ. பாரதிய ஜனதாக் கட்சி இந்துமதத்தின் உருவாக்கம் அல்ல. அவர்கள் தங்கள் அரசியலுக்காக இந்து என்னும் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்பவர்கள். அவர்கள் எவ்வகையிலும் இந்துமதத்தின் காவலர்களோ பிரதிநிதிகளோ அல்ல. அவர்கள் இந்துமதத்தின் முகம் அல்ல.
இ. ஆகவே பாரதியஜனதா கட்சியின் செயல்களுக்கு இந்துமதம் எவ்வகையிலும் பொறுப்பு அல்ல. பிற அரசியல் கட்சிகளைப்போலவே அவர்களே அவர்களுக்குக் பொறுப்பு. அவர்கள் தேர்தலில் வெல்லலாம் தோற்கலாம். அது முற்றிலும் வேறொரு களம். மதமோ மத அமைப்புகளோ மதத்தலைவர்களோ அதில் தலையிடலாகாது.
இன்றைய சூழல் மிக இக்கட்டானது. ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ஒரு அரசியலியக்கம் உச்சகட்ட விசையுடன் பல்லாயிரமாண்டுக்கால வரலாறுள்ள ஒரு மதத்தையே தான் என்று காட்ட முயல்கிறது. அதை எதிர்ப்பவர்களை ஆளுமைக்கொலை செய்கிறது, வெறுப்பினூடாக எதிர்கொள்கிறது. அதை எதிர்க்கும் அமைப்புகள் வலுவாக இல்லை. மரபார்ந்த நிறுவனங்கள் அவற்றின் புறவய கட்டாயங்களால் அமைதி காக்கின்றன.
ஆகவே முடிந்தவரை திரும்பத்திரும்ப இந்துமதம் வேறு இந்து அரசியல் வேறு என சொல்லவேண்டியிருக்கிறது. பல்லாயிரமாண்டுகால வரலாறு கொண்ட இந்த மதம் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும். அதன் நோக்கம் ஆன்மிக நிறைவு, மானுட மீட்பு, பண்பாட்டை நீடிக்கச் செய்தல் மட்டுமே. ஞானியர் நிரை இதுகாறும் செய்தது அதுவே. எவரோ சிலர் ஆட்சியதிகாரத்தை அடையச்செய்யும் ஏணி அல்ல இந்துமதம். மதம் அரசியலுடன் கலக்காமலிருக்கும் வரைத்தான் அது மதம். கலந்த கணமே அது இன்னொரு அரசியல்பேரமைப்பு.
அந்த வேறுபாட்டை நாம் நமக்கே சொல்லி நிறுவாவிட்டால், அரசியலை அதில் கலக்கும் முயற்சிகளை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், மதத்தை அரசியல்வாதிகளுக்கு விட்டுவிடுவோம். அரசியல்வாதிகள் செய்யும் அனைத்துக்கும் மதம் பழிசுமக்கும்படி ஆக்கிவிடுவோம். அவர்களின் ஊழல், சூதுகள், அழிவுகள், அடக்குமுறைகள் அனைத்துக்கும் உருவாகும் எதிர்வினைகளால் மதம் கறைகொள்ள நேரிடும். ஒருபோதும் பின்னர் மதத்தை நம்மால் மீட்க முடியாது.நம் முன்னோர். குருமரபென அமைந்த ஞானியர் அனைவரையும் கைவிட்டு ன் பெரும்பழியை ஈட்டிக்கொண்டவர்கள் ஆவோம்.
ஜெ