வசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள் என்ற தலைப்பில் வெளியான எம். அர்விந்த்குமாரின் கடிதம் காழ்ப்பானது என்று சொன்னால் அது மென்மையான விமர்சனம்.

சங்கி முத்திரை வந்துவிடுமோ என்பதற்காக சம்பிரதாயத்துக்கு, “சங்கிகளின் காழ்ப்பை பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவர்கள் அரசியல் மனநோயாளிகள். ஆனால் இந்துக்களில் அவர்கள் பத்துசதவீதம்கூட இருக்க மாட்டார்கள். மிச்சமிருப்பவர்கள்தான் இலக்கிய வாசகர்கள். இங்கே அத்தனை பேருக்கும் அவர்கள்தான் வாசகர்கள்” என்று எழுதுகிறார்.

இந்துக்களில் பத்து சதவீதம் தான் இந்துத்துவர்கள் என்று இவர் எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் வந்தடைந்தார். பாஜகவுக்கு ஓட்டு போட்ட எல்லோரும் “சங்கிகள்” இல்லையென்று வைத்துக் கொண்டாலும் பத்து சதவீதத்தையும் தாண்டுவார்களே. சரி, பேச்சுக்கு பத்து சதவீதம் என்றாலும் எப்பேர்பட்ட தொகையில் பத்து சதவீதம் என்பது இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகர்.

சம்பிரதாயத்துக்கு சங்கிகளை குட்டி விட்டு அப்புறம் மொத்தமாக விஷம் தொடர்கிறது. “ஆனால் சிறுபான்மையினரில் அனேகமாக அத்தனைபேருமே மதவாதக்கோணத்தில் மட்டும்தான் யோசிப்பார்கள். அரசியல், இலக்கியம் எதுவானாலும் அவர்களின் மதவெறி மட்டும்தான் வெளிப்படும். அவர்களுக்கு கலையோ இலக்கியமோ அழகியலோ ஒன்றுமே புரியாது. விதிவிலக்காக இணையத்தில் ஒருவர்கூட இதுவரை என் கண்ணுக்குப் படவில்லை”. நேற்றுக் கூட ஒரு சிறுபான்மை தனிக் குழுமத்தில் “பேட்டை” நாவல் பற்றி நல்லதொரு குறிப்பு வாசித்தேன்.

இப்படி அடித்து விடுவதற்கு அசாத்திய சமூக அறிவு வேண்டும். அதோடு நிற்காமல், பிராமணர்களுக்கு நற்சான்றிதழ் வேறு, “இந்துக்களில் பிராமணர்களுக்கு பிராமண மேட்டிமைவாதம் இப்படி சின்னவயசிலே புகுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்.”. இதையெல்லாம் இவர் எழுதிவிட்டு சிறுபான்மையினர் பற்றி, “சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்” என்று போகிற போக்கில் அடித்து விட்டு போகிறார்.

நான் இணையத்தின் அதிகமாக புழங்குகிறவன் என்கிற முறையில் சில வார்த்தைகள். உங்கள் எழுத்தை படித்து விவாதிப்பவர்கள் பல தரப்பட்டவர்கள். நிச்சயமாக இந்துக்கள், இந்திய ஜனத்தொகயை பிரதிபலித்துத்து, அதிகமாக இருப்பார்கள். அதே சமயம் உங்களை வசைப் பாடுபவர்களும் அநேகர். அதில் சர்வ நிச்சயமாக அநேகர் இந்துக்கள் தாம். “திராவிட அரசியல் பேசுபவர்கள்” என்கிறாரே அவர்கள் யார்? செவ்வாய் கிரகவாசிகளா? அநேகர் இந்துக்கள் தாம்.

இவ்வருடம் தலித் வரலாறு தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவத்தில் சொல்கிறேன் எல்லா வகையான மனிதர்களும் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். அயோத்திதாசர் என்றாலே கிண்டலடிக்கும் பிராமணர்களும் இருக்கிறார்கள், சரி என்ன தான் எழுதியிருக்கிறார் என்று கேட்கும் பிராமணர்களும் இருக்கிறார்கள். ஸ்டாலின் ராஜாங்கத்தின் நிகழ்ச்சியை முன் வைத்து அநேக விவாதங்கள், கிண்டல்கள், ஆர்வமுடன் கேள்வி எழுப்பியவர்கள் என்று பல தரப்பட்ட எதிர்வினைகள் வந்தன.

இணையத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களில் ஒன்று பலருக்கும் தத்தமது குல/மத வரலாறு சார்ந்து தான் ஆர்வமிருக்கிறது. எந்த தரப்பின் வரலாறு அல்லது சமூகம் பற்றியாவது ஒரு குறிப்பு எழுதினால் மறு நாள் அந்த சமூகத்தவரிடமிருந்து 10-20 நட்பு அழைப்புகள் வரும். ஆனால் இதை தாண்டி அலாதியான செய்திகளும் அனுபவங்களும் கிட்டியிருக்கிறது. இங்கு இரண்டு பதிவுகள் பற்றி சொல்கிறேன்.

இஸ்லாமிய மரபு சார்ந்த முனாஜாத்து என்கிற வழிபாட்டு பாடல் மரபில் “சரஸ்வதி முனாஜாத்து” என்ற தலைப்பில் நண்பர் எழுதியதை பகிர்ந்தேன்

https://www.facebook.com/arvindkannaiyan/posts/10219568786349864

இன்னொரு பதிவு, “திரவுபதி அம்மன் வழிபாட்டில் காவல் தெய்வமான முத்தால ராவுத்தர் வழிபாடும்” என்ற தலைப்பில்

https://www.facebook.com/arvindkannaiyan/posts/10219622158364131 .

காந்தியை பற்றி இஸ்லாமியர் எழுதி வெளியிட்டவைகளை ஒரு இஸ்லாமிய நண்பர் அனுப்பினார். அது பற்றி தனியே எழுத வேண்டும். வாசகர்களே குறைவாக இருக்கும் சூழலில் தேடல் கொண்ட வாசகர்கள் அதனினும் அரிது ஆனால் அவர்கள் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் மிக முக்கிய செய்தி பேஸ்புக் நிறுவனம் பற்றியது. சமூக வலைதளம் எப்படி காழ்ப்புகள், பொய் செய்திகள் பரவ வகைச் செய்கிறது என்றும் அவற்றை தடுக்க பேஸ்புக் நிறுவனம் தடுக்க தவறியது என்கிற விஷயம் விவாதமானது. அதில் முக்கிய நாளிதழ்கள் இந்தியாவில் பரவும் வெறுப்பரசியல் பற்றி முதல் பக்க கட்டுரைகளே வெளியிட்டன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான சொல்லாடல்களைக் கண்டு பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களே திக்குமுக்காடிவிட்டனர். இந்த செய்தியை நீங்களும் மறுக்க வாய்ப்புண்டு. இது அமெரிக்ககள் இந்தியா மீதுள்ள காழ்ப்பு என்று ஆனால் நிஜம் அதுவல்ல.

“எவ்வளவு படித்தாலும் என்ன சிந்தித்தாலும் அடிப்படையான மனநிலை மதக்காழ்ப்பு மட்டும்தான்” என்று அர்விந்த்குமார் முடித்திருக்கிறார். அது அவருக்கு தான் முதலில் பொருந்தும்.

நன்றி,

அரவிந்தன் கண்ணையன். 

அன்புள்ள அரவிந்தன்,

அந்தக் கடிதம் வெளியான அன்றே நண்பரும் சிறந்த இலக்கியவாசகருமான கொள்ளு நதீம் எழுதிய குறிப்பு [நூல்வேட்டை ] வெளியாகியிருக்கிறது. அவர் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட இஸ்லாமியர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் செயல்பாட்டாளர். என் தளத்திலேயே தொடர்ச்சியாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த தளமே ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவரான சிறில் அலெக்ஸ் தொடங்கியதுதான்.

ஆகவே அர்விந்த்குமார் மகாதேவன் எழுதியது ஒற்றைப்படையான, குத்துமதிப்பான உளப்பதிவு. தர்க்க அடிப்படை அற்றது. எளிதில் தோன்றும் உளப்பதிவை முழுமுடிவாக முன்வைப்பது. ஆனால் நம் இளமைக்காலச் சிந்தனைகள் பெரும்பாலும் அப்படித்தான் உருவாகின்றன.

அக்கடிதம் எனக்கு வெறும் காழ்ப்பு அல்ல என்று ஏன் தோன்றியதென்றால், அதை எழுதியவர் மதக்காழ்ப்பெல்லாம் இல்லாத இளைஞர். சமூகவலைத்தளங்களில் செயல்படுபவர். ஒருவேளை இலக்கியவாதியாக ஆகக்கூடும். அங்கே சிறுபான்மை மதத்தினரான சிலர் உருவாக்கும் காழ்ப்பின் புகைமூட்டம் இத்தகைய சித்திரத்தை மிக வலுவாக ஏராளமானவர்கள் மனதில் உருவாக்கியிருக்கிறது. மிகமுக்கியமாக விவாதிக்கவேண்டிய ஓர் உளப்பதிவு இது.

குறிப்பாக இணைய உலகில் கடும் மதவெறியுடன் இலக்கியவாதிகளையும் பொதுவான பண்பாட்டு ஆளுமைகளையும் தாக்கியும் வசைபாடியும் எழுதுபவர்கள் இத்தகைய உளப்பதிவை மிக எளிதாக பரப்பிவிடுகிறார்கள். அர்விந்த்குமாரை எனக்குத் தெரியும். அவர் இந்த உளப்பதிவை அடைந்தது இளையராஜா மேல் சிறுபான்மையினரில் ஒருசாரார் ஒருங்கிணைந்து தொடுத்த காழ்ப்புகளைக் கண்ட பின்னர்தான். எனக்கு அதுபற்றி ஓராண்டுக்கு முன் அவர் ஒரு விரிவான கடிதத்தை எழுதியிருந்தார்.

பொதுவான தமிழ் ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களை தலைமேல் கொள்ளும் ரசிகர்களும் வாசகர்களும் இருப்பார்கள். ஏதோ ஒருவகையில் பொது ஆளுமைகள் மதம்கடந்தவர்கள். ஆகவே மதக்காழ்ப்பாளர் அவர்களையே முதன்மையாகத் தாக்குவார்கள். ஏனென்றால் அந்தப் பொது ஆளுமைகளுக்கு அவர்களின் மதங்களில் ரசிகர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் இருப்பார்கள். அதை ஒருவகை மதமீறலாகவே இந்த வெறியர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே அந்தப் பொது ஆளுமைகளை தாக்கி ‘காலிசெய்ய’ முயல்கிறார்கள்.சமூக வலைத்தளங்களில் அதற்காகக் கூட்டாக முயல்கிறார்கள்.

இந்த மதவெறியர்கள் பொது ஆளுமைகள் அனைவரையும் தாக்கும் வெறியில் மிக எளிதாக ஒட்டுமொத்தச் சமூகத்தையே எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார்கள் என்பது ஓர் நடைமுறை யதார்த்தம். மதக்காழ்ப்பாளர்கள் அதற்கு அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப பல காரணங்களைச் சொல்வார்கள். முற்போக்குக் காரணம், அரசியல் காரணம். ஆனால் அதெல்லாம் பாவனையே என்பதை அவர்களின் நாலைந்து பதிவுகளைக் கண்டாலே உணர்ந்துகொள்ள முடியும். பாவலாக்கள்தான் முதலில் அப்பட்டமாக வெளியே தெரியும்.

இன்று வந்த இன்னொரு கடிதத்தில் ஏறத்தாழ இதே பதிவை ஒருவர் எழுதியிருக்கிறார். ‘நீங்கள் துணிவாகக் கருத்துச் சொல்கிறீர்கள். ஆகவே இவர்கள் உங்களை எதிர்க்கிறார்கள் என்று கொள்வோம். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனையும் இதேபோலத்தான் வசைபாடுகிறார்கள். சில நாட்களுக்கு முன் அவர் யாரோ ஆட்டோ ஓட்டுநர் பற்றி ஒரு நிகழ்வைச் சொன்னார் என்று காரணம் கற்பித்து வெறிகொண்டு தாக்கினார்கள். இந்த மதவெறி கவலை தருகிறது’

இந்தக் கவலையை அல்லது உளப்பதிவை வெறும் மதக்காழ்ப்பு என்று நிராகரிப்பது உங்கள் விருப்பம். ஆனால் அவ்வண்ணம் எந்த முன்முடிவுகளும் இல்லாத  பல்லாயிரவர் சமூகவலைத்தளங்களுக்கு சென்று சிலகாலம் புழங்கியதுமே சிறுபான்மை மதத்தவர் எல்லாமே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், அவர்களால் வேறெந்தவகையிலும் சிந்திக்க முடியாதென்ற உணர்வை அடைவது கண்கூடான நடைமுறை உண்மை. வாரம் ஒருமுறை எவராவது அதைச் சொல்லவும் கடிதமெழுதவும் காண்கிறேன்.

ஓராண்டுக்குக்கு முன்பு என் அறைக்கு ஓரு கிறிஸ்தவ வாசகர் வந்து சென்றதுமே கூட இருந்த ஒருவர், அவர் ஓர் இடதுசாரி, சொன்னார்.  “ஆச்சரியம்தான், இவங்களுக்கு இவங்களோட ஸ்டஃப் இல்லாத எதையுமே படிக்க முடியாது. இவர் படிக்கிறார்னா ரொம்பப் பெரிய பாய்ச்சல்… பாவம் வீட்டிலேயும் சமூகத்திலேயும் சரியான அடிவாங்குவார். இல்லேன்னா பரம ரகசியமா படிப்பார்’ . வந்தவர் என் வாசகர் அல்ல, வைரமுத்து வாசகர் என்பதையும் சொல்லியாகவேண்டும்.

இடதுசாரி நண்பர் சொன்னார் “அவங்க மதம் டீனேஜிலேயே கடுமையாக டிரெயினிங் குடுத்திடுது… மதத்தேவைக்காக அவங்க தற்காலிகமா இடதுசாரி ஆதரவாளர்களா ஆகலாம். இடதுசாரியா ஆகிறது அனேகமா நடக்கவே நடக்காது”

நீங்கள் என்ன சொன்னாலும் இதுவே பொதுவான மனப்பதிவு. சமூக வலைத்தளங்களின் வசைப்போக்குகள் இதை நிறுவிக்கொண்டே இருக்கின்றன. இதை உருவாக்குபவர்கள் சிறுபான்மையினரில் அதீதவெறி கொண்ட சிலர். அவர்கள் உருவாக்கும் சித்திரத்துக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது என்பதை சிறுபான்மையினல் உள்ள ரசனையும், நுண்ணுணர்வும், சமநிலையும் கொண்டவர்கள் யோசிக்கவேண்டும். அதற்கான காலம் நெருங்கிவிட்டது. அதை வலுவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆம், இதேபோல இந்துத்துவ வெறியர்களும் வெறுப்பைக் கக்குகிறார்கள். ஆகவே அந்தக் கடிதமெழுதிய அரவிந்த்குமார் கூட ஒருவார்த்தை அவர்களை கண்டித்த பிறகுதான் பேசவேண்டியிருக்கிறது. அந்த ஒரு வரியையாவது சிறுபான்மையினர்ல் உள்ள சமநிலையும் ரசனையும் கொண்டவர்கள் அவர்கள் மதம்சார்ந்த வெறியர்கள் பொதுஆளுமைகள் மேல் கட்டவிழ்த்துவிடும் வசைகளின்போது பதிவுசெய்ய வேண்டும். இனிமேலும் அவர்கள் பம்மிக்கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே உருவாகும். அவர்கள் பேசுவதற்குரிய பொதுக்களங்களே இல்லாமலாகும்.

பொதுவாக நான் எவ்வகையிலும் அரசியல்சரிகளை கணக்கில்கொண்டு பதுங்கியும் மழுப்பியும் எதையும் சொல்பவன் அல்ல. இதைச்சொன்னதும் இதே வெறியர்கள் என்னை சிறுபான்மையினரின் எதிரியான ‘சங்கி’ என மேலும் கூச்சலிடுவார்கள் என தெரியும். அவர்களை எப்போதும் தூசெனவே கருதி வந்திருக்கிறேன்.ஆனாலும் கவனத்தில் கொள்ளப்பட்டேயாக வேண்டிய குரல் என நினைத்தே அதை வெளியிட்டேன்.

முன்பொருமுறை இதேபோல இஸ்லாமியர் தங்கள் இல்லத்திருமணங்களுக்கும் ரம்ஸான் போன்ற விழாக்களுக்கும் மாற்றுமதத்தவரை வீட்டுக்கு அழைக்கலாகாது என பல இடங்களில் உருவாகும் கெடுபிடிகளை பற்றி கவலை தெரிவித்து எழுதியிருந்தேன். என்னை சிறுபான்மையினர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்துகிறவன் என வசைபாடினர். வசைபாடியவர்கள் பலர் இடதுசாரிகள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்களில் பலர் அதையே மேலும் கவலையுடன் எழுதினர். இதையும் சில ஆண்டுகளுக்குப்பின் எழுதுவார்கள்.

எப்போதுமே மதவெறியர் ஒட்டுமொத்த மதத்தின் பிரதிநிதிகளாக தங்களை பாவனை செய்துகொண்டு, மதக்காவலர்களாக எண்ணிக்கொண்டு பொதுவெளியில் பேசுவார்கள். அதை ஆணித்தரமாக மறுக்கவேண்டியது, அவர்கள் மதத்தின் முகங்கள் அல்ல என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது, மதத்தின்மேல் நம்பிக்கை கொண்டவர்களின் தலையான கடமை. இல்லையேல் அவர்கள் மதவெறியரசியலுக்கு தங்கள் மதங்களை காவுகொடுக்கிறார்கள். அதை இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தவர் அனைவருக்கும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபுத்தனாகும் புழுக்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதை இணையதளம் -கடிதம்