அன்புள்ள ஜெயமோகன் சார்,
தனித்தனியான விசயங்களை இந்த ஒரு கடிதத்திலேயே சேர்த்து எழுதி விட்டேன்.
வெண்முரசில் கிருஷ்ணின் குழந்தைப் பருவத்தைக் காட்டிலும், என் மனதிற்கு மிக நெருக்கமானது கடோத்கஜனின் குழந்தைப் பருவம் தான், தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் அரிதான நாட்கள் அவை, தன் குருதியில் முளைத்தவனை தன்னால் இயன்றவரையில் இந்த உலகத்தை எதிர் கொள்ளவும் , அதில் வாழவும், தன்னுடைய மூதாதையர்களைப் பற்றிய நினைவுகளை அவனில் விதைத்து விடவும் ஆசைப்படும் தந்தையாகவே பீமன் இருக்கிறான். அதே சமயம் மகன் தன்னை மிஞ்சி விடுவானோ என்று மனத்தின் அடியாழத்தில் எழும் மெலிதான கசப்பையும் காட்டுகிறான். அவர்களுக்குள் நடக்கும் இனிய உரையாடல்கள். அவற்றை ஒலிப்பதிவு செய்யும் போது , முழுமையாகவே கடோத்கஜனின் பேச்சாகவே மாறிப் போனேன். குழந்தைகளை கொஞ்சுவதற்கு அழகு சார்ந்தவைகளை மட்டுமே உவமையாக சொல்வதில் இருந்து, பீமனின் கொஞ்சல் “என் கரும்பாறைக் குட்டியல்லவா” என்று கடோத்கஜனை சொல்லும்போது வெடித்துச் சிரித்தேன்.வெண்முரசு_5_பிரயாகை_61:
இந்த ஒரு ஒலிப்பதிவை மட்டும் முதல் 5 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் எழுதியதை த்த்தந்தையே என்பதை அப்பிடியே கடோத்கஜன் போலவே வந்துள்ளது.எப்பிடி உங்களின் எழுத்துக்களை நீங்கள் எழுதியிருப்பீர்கள் என்பதை ஆழ்மனம் அப்பிடியே வெளிக் கொண்டு வருவதாகவே எண்ணுகிறேன்.
இதை தாங்கள் எழுதும் போது பீமனாகத் தான் உணர்ந்திருப்பீர்கள் என்றே தோன்றுகிறது. உங்களுக்கும் அஜிதன் அவர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலில் அவரின் மொழிகளை அப்பிடியே கடோத்கஜன் மொழியாக கொண்டு வந்ததாக தோன்றுகிறது. தன்மீட்சி புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் அஜிதன் அவர்களுக்கு, நீங்கள் மகாபாரதம் கதையை முழுமையாக சொல்லி முடித்ததாக எழுதியிருந்தீர்கள், அதை அப்பிடியே பீமன் கடோத்கஜனுக்கு கதையை சொல்வதுடன் ஒப்பிட்டுக் கொள்கிறது மனம். தங்களின் கதைகளில் வரும் குழந்தைகள் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாப்பா பாவம் என்றோ, கண்ணன் பாவம் என்றோ, தன்னைத்தானே பாவம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், யாரைப் பார்த்து இதை ரசித்தீர்கள், உங்களிடம் அப்படி பேசிய முதல் குழந்தை எது ?
பெரிய உருவம் கொண்டவர்கள் , நான் பார்த்தவரையில் பெருந்தன்மை உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள், வெண்முரசிலும் தாங்கள் அதையே தான் சொல்லிச் செல்கிறீர்கள், ஹஸ்தி , திருதாஷ்டிரர், பீமன், துரியோதனன், கடோத்கஜன் என நீளும் வரிசை, என் கணவரிடம் இதைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறிய ஒரு விசயம் இது, They never feel threatened.ஒரு மனிதன் எதைக் கண்டும் பயப்படாத போது, அல்லது அவனால் எதையும் வெற்றி கொள்ள முடியும் என்று எண்ணும் போது, அந்த முழுமை நிலையில் இருக்கும் மனிதர்களிடம் தான், பெருந்தன்மையும், கருணையும் இருக்குமா? கிருஷ்ணன் தன்னை தூற்றும் மனிதர்களிடமும், போற்றுபவர்களிடமும் ஒரே புன்னகையை தருவது, அவனின் முழுமையான ஆற்றலினால் தான் முடிந்ததா?
இதை நான் நிறைய முறை யோசித்து உள்ளேன், கொஞ்சமாக என்னுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி யோசித்து போது, எனக்கு தோன்றிய ஒரு விசயம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த சமயம், நான் தான் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று, பத்தாம் வகுப்பில் நுழைந்த முதல் கணம் முதல் , அனைத்து பாடம் புத்தகங்களையும் வேட்கையுடன் படிக்க ஆரம்பித்தேன்.எங்கள் கிராமத்தில் Private Tution எடுப்பவர்கள் இல்லை. அரசு பள்ளியில் தான் படித்தேன். அங்கே ஆசியர்களின் பாடங்கள் மட்டும் தான்.பள்ளிப் பரீட்சைகளில் நான் தான் முதல் மதிப்பெண் எடுத்தேன்.எந்த கேள்வி வந்தாலும் அதற்கான பதில் எனக்கு தெரிந்தே இருக்கும்.அனைத்து மாதிரி தேர்வுகளிலும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதும் அளவுக்கும் என்னுடைய வேகம் கூடியிருந்தது.
ஒரு சமயத்தில் எனக்கே என் Preparation மேல் நல்ல நம்பிக்கை வந்து விட்டது. அப்போது தான், தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் இருப்பவர்களை கவனித்தேன்.எப்பிடி இவர்களால் இது முடியவில்லை, மதிப்பெண் எடுப்பது வெகு சுலபம் தானே என்று எனக்குத் தோன்றியது.அன்று முதல் அந்த 13 மாணவ, மாணவிகளுக்கு (அவர்களிடம் அதற்கு முன் நான் பேசியதில்லை) தினமும் மாலை பள்ளி முடிந்தவுடன் அவர்களுக்கு என்று புரியும் வகையில் அனைத்துப் பாடங்களையும் சுலபமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் எப்பிடியாவது தேர்ச்சி மதிப்பெண் எடுத்து விட்டால் போதும் என்று தான் தோன்றியது. பரீட்சைக்கு 3 மாத காலம் இருக்கும் போது , இந்த பயிற்சியை தொடங்கினேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எங்கள் பள்ளியில் நூறு சதவீதம் தேர்ச்சி . அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டனர்.
நான் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் தான் பெற்றேன், மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஆயினும் நிறைவுடனே இருந்தேன், மனதில் எந்த சிறு வருத்தமும் இல்லாமல், எனக்கே ஆச்சரியமாக இருந்தது, ஒரு மதிப்பெண் குறைந்தாலே அழுது விடும் நான், இப்போது எப்பிடி நிறைவாக இருக்கிறேன் என்று?முதல் மதிப்பெண் பெற ஆரம்பித்த என் பயணம், அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வது , என்று திசை மாறியதன் காரணம் என்ன வென்று அப்போது தெரியவில்லை.ஆனால் வாசிக்க தொடங்கிய பிறகு, உங்களின் எழுத்துக்களில் அதை நான் கண்டு கொண்டேன். இதை இவ்வாறு நான் நினைப்பது சரியா என்று கூட தெரியவில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் பெருந்தன்மையும், கருணையும் தோன்ற வேண்டுமெனில், அவன் அனைத்திலும் நிறைவு பெற்றவனாக இருந்தால் மட்டும் தான் முடியுமா?
நீலம் நாவலில் ராதைக்கு கண்ணனின் மீதிருந்த தீராப் பெருங்காதலை காட்டிலும், தங்களுக்கு ராதையின் காதலின் மேல் பெருங்காதல் இருப்பதாகவே தோன்றுகிறது.அது தான் , “பிரம்ம கணத்தில் அவன் பெயர் அழிந்த பிறகும், அடுத்த அரைக் கணமேனும் உன் பெயர் நிலைப்பதாக ” என்று ராதையை வாழ்த்தியதில் இருந்து நான் கண்டடைந்தது.
இந்த ஒரு பிறப்பில் தங்களின் கதைகளின் மூலமாக , எத்தனையோ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஒலிப்பதிவு செய்யும் போது கணக்கிலடங்கா மனிதர்களாகவே மாறினேன். அரசனாக , அரசியாக , அவர்களின் சேவகர்களாக , அசுரர்களாக , சூதர்களாக , ரிஷிகளாக, இளவரசியாக, படைத் தளபதிகளாக, எண்ணற்ற வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அனைத்திற்கும் மிக்க நன்றி.
தங்களின் எழுத்துக்கள் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவருவதை பார்க்கும்போது மனம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது.உங்களின் எழுத்துக்கள் எல்லாமே வாசிக்க ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் இலவசமாகவே தங்களின் தளத்தில் பதிவிடுகிறீர்கள்.ஆனால் இதன் மூலம் உங்களுக்கு என்று எந்த பொருளாதார பலனும் இல்லையே என்று என் கணவரிடம் , இதைப்பற்றி வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.ஆனால் இப்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆரம்பித்திருக்கும் இந்த சமயத்தில், அமேசான் kindle போல தங்களின் எழுத்துக்கள் ஒலி வடிவிலும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதையும் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பிலே உங்களின் அதிகாரப் பூர்வமாக வந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
தங்களின் புத்தகங்களை வாங்குவதைப் போல் , இந்த ஒலிப் புத்தகத்தையும் வாங்க விருப்பப் படுவர்கள் வாங்கலாமே. புத்தகம் படிக்க இயலாதவர்களுக்கு இது ஒரு வரட்பிரசாதமாகவே அமையும். என்னால் இயன்றவரையில் தங்களின் எழுத்துக்களை ஒலிப்பதிவு செய்து வருகிறேன். இதில் என்னுடைய பொருளாதார நோக்கம் எதுவும் இல்லை என்பதை தெளிவாகவே சொல்லி விடுகிறேன். உங்களின் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்யும் வாய்ப்பை மட்டுமே நிறைவாக நினைக்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
மனோபாரதி விக்னேஷ்வர்.