கல்குருத்து- கடிதம் -13

கல்குருத்து- சிறுகதை

பேரன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்தக் கதையை வாசிக்கும் பொழுது எனது குழந்தைப் பிராயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அப்பொழுதெல்லாம் அம்மிக்கல் மற்றும் குழவியை மாட்டு வண்டியில் ஏற்றி விற்பனைக்கு கிராமத்து தெருக்களின் மீது கொண்டு வருவார்கள். அவர்களிடம் புதியதாக வாங்கிக் கொள்ளலாம், சில நேரங்களில் குழவி தேய்ந்து போயிருந்தால் சில வீடுகளில் வேறு குழவிக் கல்லை வாங்கிக்கொள்வார்கள். பழைய அம்மியை பொளிபோட்டு புதிய குழவியோடு இணைத்து பயன்படுத்துவார்கள். உரலில் இருக்கின்ற குழவியும் இதேபோல்தான். பழைய குழவியை எடுத்துவிட்டு புதிய குழவி போட்டு பயன்படுத்தப்படும். உரலுக்கு மட்டும் கொஞ்சம் பொளி போட்டால் போதுமானது.

எனது தாய் வழிப் பாட்டி அலர்மேலுமங்கை நான் கண்ட பெண்களிலேயே உன்னதமான ஒரு மனுஷி. என் நினைவிலிருந்து அன்று நடந்த அந்தக் காட்சியை நான் மீட்டிப் பார்க்கிறேன். அம்மியும் குழவியும் தேய்ந்து போயிருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருந்தாள். அன்று தெருவிலே அம்மிக்கல் விற்பவர்கள் வந்திருந்தார்கள். தாத்தா சொன்னார் அம்மியை பொளி போட்டு வைத்துக்கொண்டு குழவி மட்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்று. பாட்டி ஆடினாலே ஒரு ஆட்டம் அன்று அதை என்னவென்று சொல்வது. அம்மியையும் குழவியையும் பிரிப்பதை அவள் கடைசிவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அந்தப் பழைய அம்மி மற்றும் குழவிக் கல்லை கிராமத்தில் பல வீடுகளில் செய்வது போல அம்மன் கோயிலில் மதில் சுவர் ஓரமாக வைத்துவிட்டு புதிய அம்மி மற்றும் புதிய குழவியை வாங்கிப் பயன்படுத்தத் துவங்கினாள். பிரிக்கக்கூடாத கணவன்-மனைவி ஜோடி என நினைத்தாளோ அல்லது தாயும் குழந்தையும் என நினைத்தாளோ என்பதை நான் அறியேன் ஆனால் எந்த ஒரு பொருளுக்கும் அதற்கான ஒரு ஜீவன் ஒரு உணர்வு நிலை இருக்கின்றது அதை எவ்வகையிலும் எதன் பொருட்டும் குலைத்து விடக்கூடாது என்ற பெரிய பாடத்தை என் பாட்டி அந்த சிறு வயதிலேயே எனக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருந்தாள். கல் எனப் பார்த்தால் கல். உணர்வுள்ள ஒரு பொருள் எனப் பார்த்தால் அது ஜீவன். சரியான கண் கொண்டு பார்த்தால் அதுவே கடவுள். ஆஹா எத்தனை பெரிய ஞானம் அம்மிக்கல்லுக்குள். எங்கள் கிராமங்களில் இன்றைக்கும் கூட செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மிக் கல்லுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து மற்ற தெய்வங்களுக்கு ஆரத்தி காட்டுகின்றது போல அம்மிக்கும் காட்டுகிறார்கள். எங்கள் கிராமத்து அம்மன் கோவிலிலே எத்தனையோ பழைய அம்மிக்கற்களும் குழவிகளும் இன்றைக்கும் அம்மன்களாய் பல நூறு ஆண்டுகள் கழிந்தும் தவமியற்றிக் கொண்டிருக்கின்றன, வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றன.

தாணுலிங்க ஆசாரியின் வார்த்தைகளாய் வெளிப்பட்ட ஞானம் வாசிக்கும் பொழுது கண்களில் நீரை வரவைத்தது. அம்மியும் கடவுள்தானே அதில் என்ன ஐயம்! “மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்” என்று சொன்ன திருமூலப் பாட்டனின் வாரிசு அல்லவோ அந்த ஆசாரி!

இன்றைக்கு மிக்ஸி கிரைண்டர் என வந்துவிட்ட போதும் அவற்றை மிதித்தா மணவாழ்க்கை துவங்குகிறோம்! இன்றைக்கும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தானே மங்கலமான மணவாழ்க்கை துவங்கப்படுகிறது. கல்குருத்து கதையின் மூலம் அம்மிக் கல்லுக்கு இலக்கியத்தில் ஒரு நீங்காத இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்.

கல்லெழும்ம் விதை என்பது வேறு கல்குருத்து என்பது வேறு. கல்குருத்து என்பதை கல் கனிந்து குழவி ஆகும் தருணம் என்று எடுத்துக் கொண்டால் எவ்வளவு அழகான ஒரு காட்சியை அது நம் அகத்துள் உருவாக்குகிறது. கல்லெழும் விதையில் அத்தனை சிறப்பும் விதைக்குத்தான் ஆனால் கல்குருத்து என்பதிலோ முழுக்க முழுக்க கல்லே குழைந்து குழைந்து உருமாறி குழவியாவது. அழகம்மைக்கு இருப்பது என்னவோ ஒரே ஒரு மனம் தான். அம்மி உருவாகி வருவதற்கு முன்பாக இருந்த அவள் மனம் அம்மி உருவாகி வந்ததை கண்ட அந்த கணத்தில் ஜென் குறிப்பிடும் சடோரி போல சட்டென்று ஒரு ஞான மின்னல் தாக்கி வேறொரு மனமாக ஆகிவிடுகிறது. அந்த அம்மிக்கல்தான் அவளது கடவுள். தாணுலிங்க ஆசாரி தான் அவளது ஜென் குரு.

எத்தனையோ வாழ்வின் ஆதார விஷயங்களில் அவற்றின் புரிதல்களில் நம் மனம் இறுகி கல்லாகிப் போயிருக்கிறது. முன்முடிவுகளும், நமது இயலாமைகளும், புலன் நுகர்ச்சி மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுயநல வாழ்க்கை போக்குகளும் உன்னதமான பலவற்றை நாம் புரிந்து கொள்வதில் இருந்து நம்மை தடுத்து வைத்திருக்கின்றன. ஏதோ ஒரு நிமித்தம், ஒரு சிறு தட்டல், ஒரு பொறி அல்லது ஒரு மின்னல் தேவைப்படுகிறது நம் மனம் திறந்து கொள்வதற்கும் உன்னதமானவற்றின் உண்மையை உள்வாங்கிக் கொள்வதற்கும். மனம் மலரும் அந்த அரியக் கணம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக மிக முக்கியமானது. இறுகிக் கிடந்த எண்ணப் பாறைகள் குழைந்து குருத்து என உருக்கொண்டு தழைக்க ஏதோ ஒரு பழுத்த ஞானக்கரம் சிறு உளிக்கொண்டு நம்மை தட்ட வேண்டியிருக்கிறது. அழகம்மை என்னும் கல் குருத்தாகி எழுந்த கணத்தை ஜெயமோகன் என்னும் ஆசாரி எழுத்தில் தட்டி இலக்கியமாக்கி எடுத்த விதம் மிக மெச்சிப் போற்றத்தக்கது. இந்தக் கதை எங்கோ மன உள் ஆழத்தில் தட்டி வயதான மூத்தோரை இல்லத்தில் வைத்து பராமரிக்க வேண்டியதின் அவசியம் குறித்த தெளிவை சிலருக்கேனும் நிச்சயம் கொடுக்கும். ஒரு சில கல் நெஞ்சங்களிலேனும் இதற்கான குருத்து முளைவிடும். எந்த வகையில் பார்த்தாலும் இந்தக் கல்குருத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வேண்டிய ஒரு அருமையான கதை. கரடி நாயர் காலத்தை கதை பேசினாலும் கிரிப்டோகரன்சி காலத்து முதியோர் பராமரிப்பு பிரச்சனைக்கும் வெளிச்சம் காட்டி நிற்கிறது. கல் மனங்கள் கனிந்தால் அவற்றில் கொஞ்சம் கருணை குருத்து விட்டால் உடல் தளர்ந்த முதியோர் சற்றே மரியாதையோடு தங்கள் அந்திம காலத்தை வாழ்ந்து முடிக்க வழி கிடைக்கும் அல்லவா?.

ஒரு நல்ல துணைவி என்பவள் எப்பொழுதும் ஒரு மிகச்சிறந்த தாயும் தானே? அழகம்மை உண்மையில் தாயான சூல் கொண்ட கணத்தைச் சொன்னதோ அல்லது கண்ணப்பனுக்கும் அவன் அம்மை வழி கொள்ளுத் தாத்தா மற்றும் பாட்டிக்கும் தாயென அவள் இனி வாழ்வு மொத்தத்திற்குமாய் உருகி கனிந்த கணத்தைச் சொன்னதோ எதைச் சொன்னபோதும் இந்தக் கதை அவள் பேரன்னை என தன் உள்ளத்தில் தன்னை உணர்ந்து முளைவிட்ட கணத்தைச் சொன்னது.

அழகம்மைக்கும் அவள் கணவனுக்கும் இடையேயான உறவு புரிதலின் மூலம் மேம்படும் தருணத்தை கதை பேசுகிறது என எடுத்துக்கொண்டாலும் கூட அழகாகத்தான் இருக்கிறது. உரசல்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. உரசல் இல்லாத உறவென்று ஏதேனும் உள்ளதா இங்கு?. அந்த ஆண்டவனுக்கும் பக்தனுக்கும் இடையில் இருக்கின்ற உரசல்தானே அவனைத் தேய்த்து தேய்த்து அகந்தை முற்றழித்து ஞானக் குழவி என்றாக்குகிறது. பழுத்த பழமான முதிய துறவி ஒருவர் இங்கே அடிக்கடி என்னிடம் சொல்வார், “அம்மிக் கல்லில் வைத்து அரைப்பது போல் அண்ணாமலை நம்மை அரைக்குது சாமி, சந்தனமாய் குழையாத வரை அவன் அரைப்பதை நிறுத்தப் போவது ஏது சாமி?, அவன் அரைப்பது நம்மை இல்ல சாமி நம்ம அகந்தையை”. அழகம்மையும் இனி வாழ்வைப் புரிந்து கொண்டு தன்னை குடும்பத்திற்கென ஒப்புக்கொடுத்து அரைபட்டு அரைபட்டு, சந்தனக் குழம்பு போல், முதிர்ந்த பனை மரக் கழியின் மேல் பரப்பு போல் மெல்ல மெல்ல மிருதுவானவளாவாள். யாருக்குத் தெரியும், ஆல்போல் கிளைத்து, நிறைவாழ்வு வாழ்ந்து எங்கோ தனது பேரனாலோ பேத்தியாலோ தாங்கப்பட்டு கொண்டிருக்கிறாளோ என்னவோ? எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கை இங்கே ஒரு வட்டம்தானே! கொடுத்ததுதானே திரும்பி வரும் விதைத்தது தானே முளைக்கும்!

சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய ஸ்வாமி இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்று சித்த வைத்தியத்தில் சொல்வார்கள். கதையின் போக்கில் சுக்கின் புகழை சுவைபட பாடியிருந்தீர்கள். அப்படியாவது பீட்சா பர்கர் என, அஜீரண வயிறுமாய், ஒரு வாய் உணவுக்கு ஒரு குடி கொக்ககோலா பெப்சி என்பதுமாய் நோய்ப்பட்டு கிடக்கும் நவீன மோஸ்தர் துரித உணவுக் கூட்டம் கொஞ்சம் சுக்குநீர் அருந்தி சுகித்து இருக்க முயன்றால் சரி.

கேளாச்சங்கீதம், கல்குருத்து என அடுத்தடுத்து உணர்வெழுச்சி கொள்ளச்செய்த கவிதைத்தருண கதைகள் தந்த கைகளுக்கு நெஞ்சம் நிறை நன்றிகள்.

 

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து- கடிதம்- 6

கல்குருத்து கடிதம்- 7

கல்குருத்து- கடிதம் -8

கல்குருத்து -கடிதம் -9

கல்குருத்து கடிதம் 10

கல்குருத்து கடிதம் 11

கல்குருத்து கடிதம் 12

முந்தைய கட்டுரைதமிழ்நூல்தொகையா, திராவிடக் களஞ்சியமா?
அடுத்த கட்டுரைமகிழ்ச்சி- கடிதம்