உணர்வுகள், உன்னதங்கள்

Sunset ca. 1850 Eugène Delacroix French

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெ

இன்று சோற்றுக்கணக்கு சிறுகதை இரண்டாவது முறையாக வாசித்தேன். கெத்தேல் சாகிப் கடைசி அந்த வெளிறிய நாயர் பசங்களுக்கு அதட்டி சாப்பாடு போடும் போது கண்ணீர் வந்துவிட்டது. ஒரு கணம் கெத்தேல் சாகிப் மாறி வாழனும்னு தோணுது. அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் வெங்கட்ராமன் ஐயா ஞாபகம் தான் வருது. அவர் இல்லனா இன்னிக்கி நிறைய பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் ஒன்னு, இலட்சியத்திலே உறுதியாக இருந்திருக்கிறாரு.ஒன்னும் சாப்பிட இல்லாம, ஒருவேளை மட்டும் கிடைக்கிறதை சாப்பிட்டுட்டு, கண்ணுல குழிவிழுந்து கஷ்டப்பட்டு படிக்கிற பசங்களுக்கு இவர் மாதிரி ஒருத்தர் இல்லனா நாய் கறி சாப்பிட்டு வாழவேண்டிய நிலைமை வந்திருக்கும், நினைச்சாலே நெஞ்சு பதறுது.

அவ்ளோ அருமையாக கறி பண்ற அவர் நினைச்சு இருந்தா பெரிய ஹோட்டல் போட்டு கோடிக்கணக்கில சம்பாதிச்சியிருக்கலாம். அதுல வர வருமானத்தில ஒரு சின்னபணம் மட்டும் எடுத்து அறக்கட்டளை மாதிரி வைச்சி இந்த மாதிரி பசங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கலாம்.(எவ்ளோ கீழா நினைச்சியிருக்கேன் னு தோணுது) ஆனால் அதில அவருக்கு நிறைவு கிடைச்சியிருக்காது.அவருக்கு பணம் மேலே லாம் ஆசை யில்லை. ஒருத்தன் பசியை போக்கிறதுல தான் அவருக்கு நிறைவு வருது. பசின்னா சொன்னேன், இல்ல. பசியோட சேர்த்து அவங்க மனசையும் நிறைக்கிறது தான் அவருக்கு நிறைவு. மொழி தெரியாம, ஆள் தெரியாம வெளியிருல இருந்து வந்து படிக்கிற பசங்களுக்கு நிராதரவா ஒருத்தர் கூட இல்லாதப்போ, ஒரு சின்ன மஞ்சள் கொழுப்பை எடுத்து வைக்கிறது மூலமா அவங்களுக்கு ரொம்ப நெருக்கமான ஆளா ஆகிவிடுகிறார். அந்த அன்பும், கனிவும், கணக்கு பார்க்காம சோறு போடுற கையும் அவரை ஒரு பெருந்தாயாக ஆக்கிவிடுகிறது.

ஆனால் கடைசி தோணுச்சு, ஏன் அவன் அத்தைபொண்ணு ராமலட்சுமியை கல்யாணம் பண்ணிக்கனும்னு. கைம்மாறு எதும் எதிர்பாக்காம கெத்தேல் சாகிப் சோறு போடுறப்போ, கைம்மாறு எதிர்பார்த்து சோறு போட்ட அத்தை சுப்பம்மாவுக்கு காசை கொடுத்து முடிச்சிருக்கலாமே..ஆனால் அது முறையாக இருந்திருக்காது.. பசியோட சேர்த்து  மனசையும் நிறைச்சாதானே சோற்றுகணக்கை கடக்க முடியும்.அதைத்தானே சாகிப் செய்திருக்கிறாரு.அப்ப அவன் அத்தைட்ட உள்ள சோற்றுகணக்கை கடக்கனும்னு ராமலட்சுமியை கல்யாணம் பண்ணுனது சரின்னு தோணுது. ஆனால் கெத்தெலுக்கு அவன் பணம் போட்டது சோற்றுகணக்கை முடிக்க இல்லை. தெய்வத்துக்கு ஏது கணக்கு, எல்லாம் காணிக்கை தானே.

பணிவுடன்

சண்முகசுந்தரபாண்டியன் த

பின்குறிப்பு: இப்படி உணர்வுப்பூர்வமாக சிறுகதையை வாசிப்பது சரியா? கதை வாசித்த பின்பு வரிகள் நினைவு இருப்பது இல்லை.காட்சிகள் தான் ஞாபகம் இருக்கிறது. என் வாசிப்பை எப்படி மேம்படுத்துவது?

John Martin

அன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,

கடிதங்களை நேர்த்தமிழில் எழுத முயல்க. அது எதற்கென்றால் அது நம் சிந்தனைகளை மெல்லமெல்ல ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும். நம்மை சீராக சிந்தனை செய்ய வைக்கும். நம் உரைநடையை நாமே படித்துச் செப்பனிட்டுக்கொண்டே இருந்தால்போது, நம் உள்ளம் அதற்கேற ஒழுங்கும் கூர்மையும் கொள்வதைக் காணலாம்.

சோற்றுக்கணக்கு கதை சொல்வது என்ன என்பதை நீங்களே எண்ணிப்பார்க்கலாம். எல்லாவகையான எண்ணங்களும் முக்கியமானவை. அவற்றினூடாக நீங்கள் உங்களை தெளிவுபடுத்திக்கொள்கிறீர்கள். ஆகவே இப்படிச் சிந்திக்கலாமா, இது சரிதானா என்றெல்லாம் கேட்பதில் பொருளில்லை. ஒரு கதையை வாசித்தபின் அதைப்பற்றி யோசிப்பதும், அதிலிருந்து வாழ்க்கைபற்றி எண்ணுவதும் மிகமிக உகந்த செயல்தான். அவ்வாறு சிந்திக்காமலிருப்பதே பிழையானது.

இக்கதையை இப்படி எண்ணிப்பாருங்கள். சோற்றுக்கணக்கு. சோற்றில் கணக்கு பார்க்கும் மனநிலைக்கு எதிராக சோற்றில் என்ன கணக்கு இருக்க முடியும் என்று கேட்கும் கதை இது, இல்லையா? நீங்கள் பேசுவதே சோற்றுக்கணக்குதான். சோற்றை நல்ல விலைக்கு விற்று அதில் ஒருபகுதியை தானம் செய்யலாமே என்பது வணிகக்கணக்கு. அந்தக் கணக்கு கொண்டவர்கள் வெற்றிகரமான வணிகர்கள் ஆவார்கள். அவர்களால் மனமுவந்து தானம் செய்யமுடியாது. அவர்களுக்கு வணிகம்தான் முக்கியம்.

வணிகத்தில் ‘மிச்சம்’ வந்தபின் தானம் செய்யலாம் என நினைப்பது பெரும்பாலும் நடக்காது. ஏனென்றால் எந்த வணிகத்திலும் அவ்வண்ணம் மிச்சம் என ஏதும் திரண்டு கண்முன் நிற்காது. ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் புதுமுதலீட்டுக்கான தேவை இருக்கும். அந்த முதலீட்டைச் செய்தே ஆகவேண்டும், இல்லையேல் வணிகப்போட்டியில் நிலைகொள்ள முடியாது. எப்போதும் வணிகத்தின் நிலை இதுதான். அது ஒரு சுழல்.

அத்துடன் வெற்றிகரமாக வணிகம் செய்ய ஒவ்வொரு ரூபாயாக கணக்குபோட்டு சேமிக்கும் மனநிலை வேண்டும். அது திரட்டும் மனநிலை. அந்த மனநிலை கொண்டவரால் கொடுக்க முடியாது. அவருடைய கனவெல்லாம் கைக்கு வரப்போகும் அடுத்த பணவரவு பற்றியேதான் இருக்கும். மேலும் மேலும் கனவுகளும் இலக்குகளும் வந்துகொண்டிருக்கும்.

ஆகவேதான் பெரும்பாலான வணிகர்கள் கொடை என ஏதும் செய்வதில்லை.. அவர்கள் செலவழிப்பதெல்லாம் அச்சத்தின் விளைவாகத்தான். ஆகவே சாமிகளுக்கு கொடுப்பார்கள். பரிகாரங்களுக்கு அள்ளிக்கொடுப்பார்கள். சோதிடர்களுக்கு அளிப்பார்கள். அறத்திற்காக, கருணைக்காக, கலையிலக்கியங்களுக்காக கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் ஆண்டுவணிகம் கொண்ட நிறுவனங்கள் பத்தாயிரத்துக்குமேல் உள்ளன. ஆனால் இங்கே எந்த கருணைச்செயலுக்கும் கலாச்சாரச் செயலுக்கும் நிதிக்கொடை வந்து சேர்வதில்லை

இந்தக்கதை பேசுவது கணக்குக்கு நேர் எதிரான மனநிலையை. கெத்தேல் சாகிப்பின் கொடை பற்றியதல்ல கதை. அவருடைய கணக்கற்ற உள்ளம் பற்றியது. கதைசொல்பவர் தனக்கு சாப்பாடு போடாதவர்களை மனதில் குறித்து வைத்திருந்தால், வஞ்சம் கொண்டிருந்தால் அதுவும் கணக்குதானே? அந்தக்கணக்கும் கீழானதே என அவன் உணர்வதே கதையின் மையம்.

கதையை வாசித்து உணர்வெழுச்சி கொள்ளலாமா? ஒரு கதை வாசகனை உணர்வெழுச்சி  அசையச்செய்து அதன் வழியாக ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை அளிக்க முயல்கிறது என்று கொள்வோம். அதன் முன் ஒரு வாசகன் ’இல்லை, நான் உணர்வெழுச்சி கொள்ள மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பான் என்றால் கதையை அவன் தவிர்க்கிறான் என்றுதான் அர்த்தம். அதற்கு அவன் அக்கதையை படிக்காமலேயே இருந்திருக்கலாமே?

இசையை செவிகளை மூடியபடி கேட்பதுபோல, ஓவியத்தை கண்களைமூடி தடவிப்பார்ப்பதுபோல ஓர் அபத்தமான முயற்சி அது. சில அறிவிலிகள் அதை தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களில் இருந்தே இக்கருத்து நம் சூழலில் பரவுகிறது. இலக்கியத்துக்கே எதிரான கருத்து அது. உலகப்பேரிலக்கியங்களில் மிகப்பெரும்பகுதியை உணரமுடியாத மொண்ணைத்தனத்தையே இந்த மனநிலை நம்மிடம் உருவாக்கும்.

John Martin

இந்த மனநிலையை அடைந்திருப்பவர்கள் யார்? இயல்பாகவே மெல்லுணர்வுகளும் அழகுணர்வுகளும் இல்லாதவர்கள். இவர்கள் இரு வகையினர். அறிவுக்கூர்மை அற்ற வம்பர்களிடம் அந்த உயரிய உணர்வுகள் இருக்காது. எதையும் எதிர்மறையாக மட்டுமே அவர்களால் அணுக முடியும். வம்புகளிலேயே அவர்களின் உள்ளம் திளைக்கும். எங்கும் அவர்கள் இழியுணர்வுகளை, தீங்கை, அவநம்பிக்கையை, கசப்பை மட்டுமே காண்பார்கள்.

மிதமிஞ்சி தர்க்கபுததியை தீட்டிக்கொண்டு, வெற்றுத்தர்க்கவாதிகளாக ஆனவர்கள் இரண்டாம் தரப்பினர். அவர்களுக்கு அறிவுசார்ந்த ஓர் ஆணவம் உண்டு. எதை வாசித்தாலும் எதைக் கேட்டாலும் அந்த ஆணவத்தையே முன்னிறுத்துவார்கள். ஆணவத்தால் எல்லா உணர்வுகளையும் தடுத்துவிடுவார்கள். எந்த உன்னதத்தையும், வெற்றியையும் காணச்சகிக்காதவர்கள். உள்ளம் எப்போதுமே கீழிறங்கிக்கிடக்கும் தீயூழ் கொண்டவர்கள்

இவர்கள் எங்கும் தங்களையே முன்வைப்பார்கள். இலக்கியமே முக்கியமல்ல, தாங்கள் அதில் சொல்வதென்ன, தங்கள் இடமென்ன என்பதே முக்கியம். அதன்பொருட்டு எதையும் வளைக்கவும் திரிக்கவும் பிழையாக்கவும் இவர்கள் துணிவார்கள். இவர்களில் தங்களுக்குச் சாதகமாக அறிவுக்கருவிகளை உருவாக்கிக்கொள்பவர்கள் உண்டு. சென்றகாலங்களில் மதம், இலக்கணம் ஆகியவை இவர்களின் ஆயுதங்கள். இப்போது அரசியல் நிலைபாடுகள், அரசியல்சரிகள், கோட்பாடுகள் இவர்களுக்குப் பயன்படுகின்றன. அதற்கெல்லாம் தேவையான அடிப்படை வாசிப்பில்லாதவர்கள் சொற்பிழை, அச்சுப்பிழை தேடி அலைகிறார்கள்.

இவ்விரு சாராரும் இலக்கியம் வாசிக்க நேர்ந்தவர்கள், இலக்கிய வாசகர்கள் அல்ல. அவர்கள் இலக்கியம் வாசிப்பதென்பது இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் துரதிருஷ்டம்தான். அரசியல்சார்பு, ஒழுக்கச்சார்பு, அறச்சீற்றம் உட்பட பல பாவனைகளைக்கொண்டு இவர்கள் தங்களுக்கு இலக்கியம் பிடிகிடைக்காது, வெறும் பொதுக்கருத்துக்களைத்தான் எந்த இலக்கியத்திலிருந்தும் எடுத்துக்கொள்ள முடியும் என்பதை மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.

இலக்கிய வாசகன் என்பவன் இலக்கியத்தின் முன் நுண்ணிய உணர்வுநிலைகளுடன், கற்பனைத்திறனுடன், அறிவுபூர்வமான கவனத்துடன் நிலைகொள்பவன். தன் வாழ்க்கையனுபவங்களை இலக்கியம் வழியாக வளர்த்துக்கொள்பவன்.தன் உணர்வுநிலைகளை இலக்கியம் வழியாக தீட்டிக்கொள்பவன். தன் அறிவை இலக்கியம் வழியாக பெருக்கிக் கொள்பவன். அவ்வாறு இலக்கியம் வழியாக கிடைத்த பயிற்சியைக்கொண்டு மேலும் இலக்கியத்தை வாசிப்பவன்.

வாழ்க்கையே இலக்கியத்தை அறியவும் மதிப்பிடவும் அளவுகோல். ஒரு மெய்யான வாழ்க்கையனுபவத்தை அடைகிறீர்கள் அல்லது அறிகிறீர்கள். அப்போது உள்ளம் உருகுவீர்களா? ஆம் என்றால் அதேபோல அத்தகைய வாழ்வனுபவத்தை அளிக்கும் படைப்பை வாசிக்கையிலும் உளம் உருகலாம். அவ்வளவுதான் அதற்கான அளவுகோல். இலக்கியம் என்பது மொழியின் வழியாக நமக்கு அளிக்கப்பட்டு, நம் கற்பனை வழியாக நம்முள் விரியும் வாழ்க்கை அனுபவம். அதை நிகர்வாழ்க்கை என்கிறோம்.வாழ்க்கையிலுள்ள எல்லா உணர்ச்சிகளுக்கும் அங்கே இடமுண்டு.

உண்மையான உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் நம்மிடம் இயல்பிலேயே உண்டு. கூடுதலாக ஒரு நுண்ணுணர்வும் கூர்மையும் கொண்டவரே இலக்கிய வாசகர். ஒருவர் நம்மிடம் பொய்யாக உணர்ச்சிகளை உருவாக்க நினைத்தால், மிகையான உணர்ச்சிகளை காட்டினால் நம்மால் எளிதில் அடையாளம் காணமுடியும். உணர்ச்சிகளுக்கும் உணர்ச்சிநடிப்புக்கும் இடையேயான வேறுபாடு தெரியாதவர்கள் அல்ல நாம். அதுவே இலக்கியத்திற்கும் அளவுகோல். இலக்கியம் என்றபேரில் செயற்கையான, போலியான, மிகையான உணர்ச்சிகள் முன்வைக்கப்பட்டால் இயல்பாகவே அவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம், அவ்வளவுதான்.

John Martin

அவ்வாறு சில எழுத்துக்களில் போலியான, மிகையான உணர்ச்சிகள் வெளிப்படுகையில் அவற்றை இலக்கிய விமர்சகர்களும் படைப்பாளிகளும் நிராகரிப்பதுண்டு. போலியும் அசலும் கண்டுபிடிக்க முடியாத பாமரர்கள் அவற்றை கண்டு எல்லா உணர்ச்சிகளையும் நிராகரிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதுண்டு, பேசுவதும் உண்டு. உலகப்பேரிலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிகரமானவை, வாசகனை மெய்யான உணர்வுவேகங்களை நோக்கிக் கொண்டுசெல்பவை என்பதை மறக்கவேண்டாம்.

கடைசியாக ஒன்று, உணர்ச்சிகள் பலவகை. வாழ்வின் துயரங்களையும், இடர்களையும், தனிமையையும், பொருளின்மையையும் கண்டு நமக்கு உருவாகும் உணர்ச்சிகளை pathos என்கிறார்கள். அவை இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகள். இலக்கியம் அவற்றைக்கொண்டே நெய்யப்படுகிறது. ஆனால் வாழ்க்கையின் உன்னதங்கள், மானுடத்தின் உச்சங்கள், இயற்கையும் பிரபஞ்சமும் உருவாக்கும் பேருணர்வுகள் ஆகியவை நம்மில் உருவாக்கும் உளஎழுச்சியும் நம்மை கண்கலங்க வைக்கும். அதை sublime என்பார்கள். இரண்டும் வேறு வேறு. இரண்டாவது ஒரு படி மேலானது.

சோற்றுக்கணக்கு வாசித்தால் நீங்கள் அடைவது துயரை கண்டு அடையும் துயர் அல்ல. அதன் விளைவான கண்ணீர் அல்ல. மானுட உச்சம் கண்டு அடையும் பெருநிலை, அதன் விளைவான நெகிழ்வு. அதை உன்னதம் sublime என்றே சொல்ல முடியும்.அதை அடைவதற்கு நமக்குள்ளும் ஒரு நல்லியல்பு இருக்கவேண்டும்.நாமும் மானுடப்பெருநிலை நோக்கி நம் கற்பனையால் எழமுடிந்திருக்கவேண்டும். அனைவராலும் இயல்வது அல்ல அது.

ஜெ

https://steemit.com/art/@steemswede/art-john-martin-s-sublime-landscapes

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி நாளை எப்படி இருப்பார்?