விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இயக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இணையதளம்

அன்புள்ள ஜெ

சென்னையில் சென்ற 14-11-2021 அன்று யாவரும் பதிப்பகம் சார்பில் நிகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். நான் கூடுமானவரை சென்னையில் நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் செல்பவன். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு 2013 முதல் நான்கு முறை வந்திருக்கிறேன்.

இலக்கியக்கூட்டங்கள் எப்படி நடக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் ஒன்று தயாரிப்பில்லாமல் வந்து சகஜமாகப் பேசுகிறேன் என்ற பாவனையில் இலக்கியவம்பும் அரசியலும் பேசுவார்கள். அல்லது படைப்பிலுள்ள உள்ளடக்க என்னவோ அதையே விரிவாகப் பேசுவார்கள். ஆனாலும் இலக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வது அங்கிருக்கும் அந்த ‘மூட்’ எனக்கு மிகவும் தேவை என்பதற்காகத்தான். நான் மூளைசூடாகும் வேலை செய்பவன். ஆகவே ஒரு மாறுதலுக்காகச் செல்கிறேன். பெரிய எதிர்பார்ப்புகள் வைத்துக்கொள்வதில்லை

அன்றைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பு ஒருங்கிணைத்ததா என்ற சந்தேகம் வந்தது. நான் விஷ்ணுபுரம் அமைப்பின் மேடைகளில் அமைப்பாளர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் பார்த்தவர்கள் பலர் பேசினர். இளம் எழுத்தாளர்களாக விஷ்ணுபுரம் மேடைகளில் தோன்றியவர்கள் பேசினர். விஷ்ணுபுரம் உறுப்பினர்களின் ஒரு பேச்சுகூட சோடைபோகவில்லை. எவருமே பேசுபொருளை விட்டு வெளியே செல்லவில்லை. எவருமே நூலைச் சுருக்கிச் சொல்லவில்லை. நூல்களை ஆழ்ந்து படித்து, அவற்றின்மேல் தங்கள் வாசிப்பையும் மதிப்பீட்டையும் முன்வைத்தனர்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த உரைகள் மிகப்பெரிய கௌரவம் என நினைக்கிறேன். சுரேஷ்பிரதீப், கடலூர் சீனு இருவருடைய உரைகளையும் கிளாஸிக் உரைகள் என்று தயங்காமல் சொல்லமுடியும். சௌந்தர்ராஜன், காளிபிரசாத், மயிலாடுதுறை பிரபு, சுரேஷ்பாபு ஆகியோரின் உரைகள் ஒவ்வொன்றும் ஒரு சொல்கூட மிகையோ குறையோ இல்லாத இலக்கிய உரைகள். வியப்பாக இருந்தது.  அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியே இதை எழுதுகிறேன்

எம்.சந்திரசேகரன்.

அன்புள்ள சந்திரசேகரன்,

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களின் இலக்கிய அமைப்பான நற்றுணை கலந்துரையாடல் குழுமம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. ஆகவே அவ்விழாவில் பார்வையாளர்களிலும் பாதிக்குமேல் விஷ்ணுபுரம் நண்பர்கள்தான்

இவ்விழா என்றில்லை, இன்று தமிழகத்தில் சில்லறை அரசியலுக்கு அப்பாற்பட்டு இலக்கியம் பற்றிப் பேசவேண்டும் என்றால் விஷ்ணுபுரம் நண்பர்களே இருக்கிறார்கள். இன்று எந்த இணைய இதழிலும் பாதிக்குமேல் அவர்களே எழுதுகிறார்கள். எந்த இலக்கியக்கூட்டத்திலும் அவர்களே பேசுகிறார்கள், பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.

இன்று எந்த ஓர் இலக்கிய ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல கட்டுரையோ உரையோ தேவை என்றால் விஷ்ணுபுரம் நண்பர்கள்தான் முன்வந்தாகவேண்டும்.இதை கண்கூடாகவே பார்க்கலாம். ஏனென்றால் அத்தனை பேரையும் அவர்களே ஆர்வம்கொண்டு, ஊன்றி படித்திருப்பார்கள்.

வெறுப்பரசியலுக்கும் அசட்டுக் கோட்பாட்டுச் சலம்பல்களுக்கும் அப்பாற்பட்டு அழகியலை முன்வைத்து, இலக்கியத்தின் உலகளாவிய மரபை அறிந்து பேசுவதற்கு அவர்களன்றி வெளியே மிகச்சிலரே உள்ளனர் என்னும் நிலை இன்று மெல்ல உருவாகி வந்துள்ளது.

இது ஒரு தொடர்செயல்பாட்டின் விளைவு. இந்த தளத்தையே எடுத்துப் பாருங்கள். இன்று தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பாளியின் பெயரையும், எந்த ஒரு தமிழறிஞரின் பெயரையும் இணையத்தில் தேடுங்கள். இந்த தளத்திற்கே பெரும்பாலும் வந்து நிற்பீர்கள். இடைவெளியே இல்லாமல் நாள்தோறும் பன்னிரண்டு ஆண்டுகளாக இது வெளிவந்து கொண்டிருக்கிறது. பதினேழாயிரம் வெளியீடுகள் இதிலுள்ளன. பல்லாயிரம் கட்டுரைகள். பல்லாயிரம் வாசகர் கடிதங்கள். அவற்றினூடாக நீளும் தொடர்ந்த இலக்கிய விவாதங்கள்.

இன்றுவரை தமிழில் வெளிவந்த எந்த ஓர் இதழிலும் இத்தனை விரிவான இலக்கிய அறிமுகம் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு இலக்கிய விவாதம் நடந்ததும் இல்லை.இது எந்த ஒரு பல்கலைகழகத்தின் கல்விநிரலையும் விட பலநூறு மடங்கு பெரியது. ஒவ்வொருநாளும் வெளிவருகிறது என்பது முக்கியமானது. அது இடைவெளியே இல்லாத உரையாடலை இயல்வதாக்குகிறது. தொடர்ச்சியான வாசிப்பை உருவாக்கி அடிப்படைப்புரிதலை உருவாக்குகிறது.

இவற்றுக்குமேல் ஆண்டுக்கு இரண்டு இலக்கிய விழாக்கள். ஒரு பயிலரங்கு. குறைந்தது ஐந்து வாசகர் சந்திப்புகள் மற்றும் இலக்கியக்கூட்டங்கள் விஷ்ணுபுரம் அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இவை அளிக்கும் நட்பார்ந்த சூழல் தனிப்பட்ட இலக்கியத் தொடர்புகளை உருவாக்குகிறது. விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புக்கு வந்த நண்பர்கள் இணையுள்ளங்களை கண்டடைந்து தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களில் இருக்கிறார்கள்.

அவர்கள் உள்ளூர்களில் தங்களுக்கென சிறு இலக்கிய அமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்புக்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றன. சந்திப்புகளையும் உரையாடல்களையும் நடத்துகிறார்கள். நூல்களை விவாதிக்கிறார்கள். ஆசிரியர்களை வரவழைத்து பேசவைக்கிறார்கள்.

விஷ்ணுபுரம் அமைப்புக்கு அரசியல் இல்லை. அது மிகக்கறாராகவே வரையறை செய்யப்பட்டு பேணப்படுகிறது. இலக்கியக் கொள்கைகள் என்றும் ஏதுமில்லை. இலக்கிய அழகியலை முன்வைக்கும் பார்வை மட்டுமே பொதுவானது என்று சொல்லலாம். இதில் நண்பர்கள் மட்டுமே உள்ளனர். பொறுப்பாளர்கள் இல்லை. இறுக்கமான இன்னொரு நெறி உண்டு, நாங்கள் புண்படுத்தும் விமர்சனங்ககளோ கசப்புகளைக் காட்டுவதையோ தனிப்பட்ட விரோதங்களை முன்வைப்பதையோ அனுமதிப்பதில்லை.

ஏனென்றால் நட்புச்சூழல் இல்லாத எந்த விவாதமும் பயனற்றது. அது ஆணவங்களை மட்டுமே மேலெழச்செய்கிறது. அதன்பின் ஆணவம் மட்டுமே முன்நிற்கும். அங்கே மெய்யான உரையாடல் உருவாகாது, அங்கே எந்தக் கல்வியும் நிகழ்வதில்லை. கல்வி எந்நிலையிலும் பெருங்கொண்டாட்டமாகவே நிகழமுடியும்.

ஆகவே விஷ்ணுபுரம் நண்பர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்கள் மேல் பொதுவான கட்டுப்பாடு என ஏதுமில்லை. அவை முழுக்கமுழுக்க சுதந்திரமானவை. முன்பு க.நா.சு வரையறை செய்ததுபோல இது இலக்கிய இயக்கமே ஒழிய இலக்கிய நிறுவனம் அல்ல. இக்காரணத்தால் நிலையான நிதி வைத்துக்கொள்ளவே தயங்குகிறோம்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் எந்த ஒரு முக்கியமான படைப்பாளிக்கும் மிகச்சிறந்த வாசகர்கள் இங்குதான் உள்ளனர். தொடர்ந்து சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், தேவிபாரதி, இரா.முருகன், பாவண்ணன், இமையம், நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், சோ.தர்மன் என அனைவருக்கும் தீவிர வாசகர் இங்குள்ளனர்.

ஓர் எழுத்தாளர் ஏதேனும் ஓர் ஊருக்குச் சென்றால் அங்கு அவரை எவரும் கவனிக்கவில்லை என்னும் நிலை வரக்கூடாது என்பது விஷ்ணுபுரம் நண்பர்களிடம் என் உறுதியான கோரிக்கைகளில் ஒன்று. ஆகவே எந்த இலக்கியவாதியானாலும் தங்கள் ஊருக்கு வந்தால் சென்று கண்டு உபசரித்து உரையாடுவது விஷ்ணுபுரம் நண்பர்களால் ஓரு கடமையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.

படைப்பாளிகளுக்கான தனிப்பட்ட நிதியுதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களுக்கு கார்ப்பரேட் நிதியோ, தொழிலதிபர்களின் ஆதரவோ இல்லை. முழுக்க முழுக்க விஷ்ணுபுரம் நண்பர்களின் நிதியால் அவ்வுதவிகளைச் செய்து வருகிறோம். இந்த கோவிட் காலகட்டத்தில் இவ்வியக்கத்தின் தொடர்புகளே ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தன. பல தனிப்பட்ட உதவிகளையும் செய்யவேண்டியிருந்தது, தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது.

இவையனைத்தும் இலக்கியம் மீதான பெரும் பற்று கொண்ட வாசகர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. அவர்களை வெளியே இருக்கும் அரசியல் சழக்கர்கள் தொடர்ந்து வசைபாடுகிறார்கள். சிறுமதியாளர்களான சில்லறை இலக்கியவாதிகளும் இணைய வம்பர்களும் இழிவு செய்கிறார்கள். இலக்கியம் அளிக்கும் பெருமிதப் பார்வையால், தன்னம்பிக்கையால் அவற்றை மெல்லிய ஏளனச் சிரிப்புடன் கடந்துசெல்லவும் விஷ்ணுபுரம் நண்பர்களால் இயல்கிறது. அவ்வாறு இழிவுசெய்பவர்களுக்கே உதவிசெய்கையிலும் அவர்களிடம் அந்தப் பெருந்தன்மை வெளிப்படுவதை நான் பெருமிதத்துடன் பார்க்கிறேன்.

இங்கே ஓர் இலக்கிய ஆர்வலர் எளிய வாசகராக நட்புக்குழுமத்துக்குள் வந்தால் அவர் தொடர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நூல்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன. ஈரோடு, கோவை நட்புக்குழுமங்களில் நீடிக்க மாதம் ஒரு நூலையாவது படித்தாகவேண்டும். அந்நூல்களைப் பற்றி விவாதங்களில் பேசவேண்டும். பின்னர் அமர்வுகளில் பேசவேண்டும். சிறிய மேடைகள் அமைகின்றன.

வாசகர்களாக கடிதங்கள் எழுதுகிறார்கள். அக்கடிதங்களை குழுமங்களில் விவாதிக்கிறார்கள். மெல்ல கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கிறார்கள். அத்தனை எழுத்துக்களுக்கும் உடனடியான, நட்பான ஆனால் கறாரான எதிர்வினைகள் வருகின்றன. அவற்றினூடாக அவர்கள் வளர்ந்து எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆகிறார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இலக்கிய மேடை இதுவே.

ஆனால் இலக்கியம் மீதான பற்று இங்கே முதல்நி பந்தனை. இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக கொள்பவர்களுக்கு இடமில்லை. அல்லது வெற்றரசியல் பேசுபவர்களுக்கு இடமில்லை. இங்குள்ள தீவிரச்செயல்பாடு காரணமாக அவர்கள் உடனடியாக வெளியேற நேரும்.

இங்கே இலக்கியவாதிகளாக எழுந்தவர்களையே நீங்கள் காண்கிறீர்கள். தொல்லியல், நாட்டாரியல் துறைகளில் தொடர்ச்சியாக எழுதுபவர்கள் உள்ளனர். உயிரியல் தாவரவியல் விலங்கியலில் எழுதுபவர்கள் உள்ளனர். நிர்வாகவியலில் எழுதுபவர்கள் வந்துள்ளனர். இந்தியாவெங்கும் பயணம் செய்யும் பல நட்புக்குழுமங்கள் உள்ளன.

இது இலக்கிய இயக்கமே. ஆனால் இதனூடாக இயற்கைவேளாண்மை நோக்கிச் சென்றவர்கள் உண்டு. சமூகப்பணியாற்றுபவர்கள் பலர் உண்டு. அன்று பேசிய மயிலாடுதுறை பிரபுவே ஓர் உதாரணம். முழுக்கிராமத்தையே நண்பர்களுடன் தத்தெடுத்து பணிகள் செய்பவர். விருதுகள் பெற்றவர். அன்றுகூட புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான உணவுப்பொட்டலங்களை அனுப்பிவிட்டுத்தான் பேச வந்திருந்தார்.

இத்தனையும் நிகழ்வதற்கு அடிப்படையாக அமையும் நெறி, நான் இதில் மையம் அல்ல என்பதும் என்னை எவ்வகையிலும் முன்னிறுத்திக் கொள்வதில்லை என்பதும்தான். என் நூல்களின் பொருட்டோ என் பொருட்டோ விஷ்ணுபுரம் அமைப்பு இன்றுவரை எந்த விழாவையும் ஒருங்கிணைத்ததில்லை. முழுக்கமுழுக்க மற்ற படைப்பாளிகளுக்காகவே விஷ்ணுபுரம் செயல்பட்டுள்ளது.

ஓர் இயக்கம், புதுமைப்பித்தன், க.நா.சு, செல்லப்பா, ஜெயகாந்தன், பிரமிள், சுந்தர ராமசாமி என பலர் கனவுகண்ட செயல்பாடு கண்கூடாக நிகழ்கிறது. முழுக்கமுழுக்க அதற்கு இணையம் என்னும் நவீனத் தொழில்நுட்பமே காரணம். அதை திறம்படப் பயன்படுத்திக்கொண்டதும், தொடர்ச்சியான நீடித்த செயல்பாடும், முற்றிலும் எதிர்மனநிலை கொண்ட தமிழ்ச்சூழலிலும் நாங்கள் எதிர்மறைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளாமல் எப்போதும் நேர்நிலையாகவே எண்ணம்கொண்டதும் காரணங்கள்.

ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் உருவாக்குவதே உச்சகட்ட அளவுகோல். எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படம் என்றால் கே.பி.வினோத் எடுப்பவையே மிகச்சிறந்தவை. இசையமைப்பு என்றால் ராஜன் சோமசுந்தரம். ஏனென்றால் அவர்கள் அத்துறையின் மிகச்சிறந்த நிபுணர்கள். பயில்முறையாளர்கள் அல்ல. முறையான பயிற்சி எடுத்தவர்கள். ஒரு நாளிதழுக்கு நிகரானது இந்த இணையதளம். ஆனால் இதற்கு ஊழியர் என எவருமே இல்லை. ஆனால் மிகமிகத்தேர்ந்த நிபுணர்களால் இது பராமரிக்கப்படுகிறது.

இன்று அமெரிக்காவில் விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் பரவி வருகின்றன. நண்பர் ஆஸ்டின் சௌந்தர் ஒருங்கிணைக்கிறார். உலகின் பல நகர்களில் விஷ்ணுபுரம் நண்பர்குழு உண்டு. அங்கு செல்லும் எந்த தமிழ் எழுத்தாளரும் இன்று அவர்களாலேயே வரவேற்கப்படுகிறார். இனி பதிப்புத்துறையிலும் தீவிரமாக இறங்கவிருக்கிறோம். மேலும் பெரிய சில திட்டங்கள் ஒருங்கிணைப்பில் உள்ளன.

அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. அது குருவருள். நித்யாவின் சொல். அவ்வண்ணம் ஒரு பாதம் அமைந்து ,அதைப் பணியும் அடக்கமும் விவேகமும் நமக்கு இருக்குமென்றால் அது ஒரு நல்லூழ். சில சொற்கள் வீணாவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ்.வி நவீன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்- கடிதங்கள்