விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

விஷ்ணுபுரம் விருது 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. இது பன்னிரண்டாவது விருது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதின் கொண்டாட்டமும் மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. மூத்தபடைப்பாளிகள் இங்கே கௌரவிக்கப்படுவதில்லை, அமைப்புக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்னும் ஆதங்கத்தில் இருந்து வாசகர்களால் உருவாக்கப்பட்டு அளிக்கும் விருது இது.

விஷ்ணுபுரம் விருது இலக்கிய விருதுகளை அளிப்பது எப்படி என தமிழ்ச்சமூகத்திற்குக் காட்டியது என்று துணிந்து சொல்லமுடியும். முன்பெல்லாம் இலக்கியவிருது வழங்கும் நிகழ்ச்சியை வேறு நிகழ்ச்சிகளுடன் கலந்துவிடுவது பொதுவாக நிகழ்வது. விழாவின் ஒரு பகுதியாக இலக்கியவாதியை அழைத்து விருதை ஒரு ‘விஐபி’ கையால் வழங்கச்செய்வார்கள். விருது பெறுபவர் அவ்விழாவில் பொருந்தா விருந்தாளியாக அமர்ந்திருப்பார். அவரைப்பற்றி அங்கே ஒரு சொல் பேசப்படாது.

விருதுகளை பல படைப்பாளிகளுக்கு சேர்ந்து அளித்து அவர்களை மேடையருகே வரிசையாக நிற்கச்செய்து விருதுபெறச் செய்வது இன்னொரு வழக்கம்.விருது வழங்கும் விழாவில் முக்கியப்பிரமுகர்கள் வந்தால் அவர்களுக்கு போஸ்டர்கள், விளம்பரங்கள் வைப்பதும் அவர்களை கொண்டாடி வரவேற்பதும் படைப்பாளிகளை பொருட்படுத்தாமலிருப்பதும் சாதாரணமான நிகழ்வுகள். சில நிகழ்வுகளில் பரிசு வாங்கும் படைப்பாளிகளையே முக்கியப்பிரமுகர்களை வரவேற்று அழைத்துவர கூட்டிச்செல்வதும் உண்டு.

மேடையில் அந்த முக்கியப்பிரமுகர்களை மட்டுமே அத்தனை பேரும் போற்றிப்பேசுவார்கள். பரிசுவாங்கும் படைப்பாளியைப் பற்றி பேசமாட்டார்கள். பரிசு கொடுக்கும் அமைப்பு அல்லது நபர் பற்றி போற்றிப்பேசுவார்க்ள். பரிசுவழங்க வந்தவர் பரிசுபெறுபவர்களைப் பற்றி ஒரு சொல்கூட பேசாமல் சென்ற நிகழ்வுகளும் இங்கே நடந்ததுண்டு. தங்கள் பிறந்தநாளை பரிசுநாளாக அறிவித்து ‘கொண்டாடும்’ பெரும்புள்ளிகள் பரிசுபெறுபவரை பாடிப்பரிசுபெறும் பாணனாக மாற்றிவிட்டிருந்தனர்

விருதுக்கு ஆவணங்களுடனும் நூல்களுடனும் உறுதிமொழியுடனும் முறையாக விண்ணப்பிக்கவேண்டும் என நிபந்தனை உடைய விருதுகள் இங்கே உண்டு. விருதுபெறுபவர் கொடுப்பவரை புகழ்ந்துபேசவேண்டும் என முன்னரே அழைத்து நிபந்தனை அளிக்கும் வழக்கமும் இருந்தது. ஆகவே இலக்கிய விருது பெறுவதே ஓர் அவமதிப்பு என்னும் எண்ணம் இலக்கியவாதிகள் நடுவே உருவாகியது.

விஷ்ணுபுரம் விருது சில முன்னுதாரணங்களை அளித்தது. இது விருதுபெறும் படைப்பாளியை உரிய மரியாதையுடன் தேடிச்செல்கிறது. அவரைப்பற்றிய ஆவணப்படம், அவரைப்பற்றிய விமர்சன நூல் வெளியிடப்படுகிறது. அவரை முன்வைத்து இரண்டுநாள் இலக்கியவிழா நிகழ்கிறது. அவர் வாசகர்களுடன் உரையாடுகிறார். மொத்த விழாவும் அவரைச்சுற்றியே நிகழும். எந்த பெரும்புள்ளி விழாவுக்கு வந்தாலும் சரி அழைப்பிதழிலும் சரி, விளம்பரங்களிலும் சரி விருதுபெறும் படைப்பாளியே முதன்மையாக இடம்பெறுவார். படைப்பாளிக்கு பேனர்கள் வைக்கப்படும்.

இன்று, பிற விருதுவிழாக்கள் பலவும் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுகின்றன என அறியமுடிகிறது. மிகச்சிறந்த உதாரணம் சென்னை மையமாக்கி வழங்கப்படும் ஆத்மாநாம் விருது. இளம்படைப்பாளிக்கு வழங்கப்படும் இவ்விருது அவரைப்பற்றிய ஒரு விமர்சனநூலையும் வெளியிடுகிறது.

இன்று சிறுகச்சிறுக விஷ்ணுபுரம் விருது உருவாக்கியிருக்கும் மனநிலையை, முன்நெறிகளை பெருமிதத்துடன் நினைத்துக்கொள்கிறோம். இதன்பொருட்டு உழைத்த அத்தனை நண்பர்களையும் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறோம்.

விஷ்ணுபுரம் விருது 2010 ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. தமிழில் ஒரு தனியார் விருது அத்தகைய கவனத்தைப் பெறுவது அதுவே முதல்முறை. அதற்கு அவ்விருதுக்கு தன் செலவில் வந்து சிறப்பித்த மணி ரத்னம் ஒரு காரணம். விழாவை அனைத்து ஊடகங்களுக்கும் கொண்டுசென்ற நணபர்கள், விழா குறித்த செய்திகளையும் பேட்டிகளையும் வெளியிட்ட நண்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக இந்து கோலப்பன், குங்குமம் நா.கதிர்வேலன் மற்றும் சிவராமன், டைம்ஸ் ஆஃப் இந்தியா எம்.டி.சாஜு.

ஆ.மாதவன் இன்றில்லை. விழாவில் கலந்துகொண்டவர்களில் புனத்தில் குஞ்ஞப்துல்லாவும் வேதசகாயகுமாரும் மறைந்துவிட்டனர். காலம் வெகுவாக முன்னால் வந்துவிட்டிருக்கிறது.

1

இரண்டாம் விருது எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது. பூமணி நரம்பு நோயால் அவதிப்பட்டுவந்த காலம். நெடுங்கால உழைப்பால் அவருடைய பெருநாவலான அஞ்ஞாடியை எழுதி முடித்திருந்தார். பணி ஓய்வுபெற்று கோயில்பட்டிக்கே குடிவந்திருந்தார். இலக்கியம் சார்ந்த பொதுச்செயல்பாடுகளில் இருந்து அவர் ஒதுங்கி, அடுத்த தலைமுறையினரின் கவனங்களில் இருந்தும் அகன்றிருந்தார். கோயில்பட்டிக்குச் சென்று அவ்விருதுச்செய்தியை அவருக்கு அறிவித்தேன். பூமணி தொடர்ந்து சாகித்ய அக்காதமி உள்ளிட்ட விருதுகள் பெற்றார்.

2

2012 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு வழங்கப்பட்டது. பலவகையிலும் மறக்கமுடியாத விழா இது. இளையராஜா விழாவில் பங்கெடுத்தார். முழுக்கமுழுக்க அவருடைய சொந்தச்செலவில். கட்டுக்கடங்காத கூட்டம் வந்து அரங்கை திணறச்செய்தது.

3தெளிவத்தை ஜோசப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் இலக்கியவிருதுகளுக்கு ஈழப்படைப்பாளிகள் கருத்தில் கொள்ளப்படாத நிலையே அதற்குமுன்பு இருந்தது. அதை மாற்றியது அவ்விருது. தெளிவத்தை ஜோசப் குடும்பத்துடன் வந்திருந்தார். அவருடைய பூர்விக கிராமம் தஞ்சாவூரில் இருந்தது, அங்கே சென்றுவந்தார். விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இலங்கை தமிழ் இதழ்கள் தெளிவத்தை ஜோசப்புக்குச் சிறப்பு மலர்கள் வெளியிட்டன

VP Invitation 2013

ஞானக்கூத்தனுக்கு 2014ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது அவர் சற்று சோர்ந்த நிலையில் இருந்தார். அவருடைய மனைவியின் உடல்நிலைச்சிக்கலும் சிகிழ்ச்சைகளும் அவரை துயருறச் செய்திருந்தன. விழாவுக்கு தன் நண்பர் சா.கந்தசாமியுடன் வந்தார். விழாவில் அவர் நீண்ட கருத்துப்போர் நடத்திய புவியரசுவை அவருடன் மேடையேற்றினோம். அவர்களின் உரையாடல் உற்சாகமூட்டுவதாக இருந்தது. முதல்முறையாக விஷ்ணுபுரம் விருதுடன் ஓர் ஆவணப்படமும் எடுக்கப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆவணப்படம் அசோகமித்திரனால் ஆவணப்படங்களில் ஒரு கிளாஸிக் என்று சொல்லப்பட்டது. ஞானக்கூத்தன் இன்றில்லை

unnamed

பூமணிக்கு விருதுவழங்கும் அறிவிப்பை அவரிடம் சொல்ல என்னை அழைத்துச் சென்றவர் தேவதச்சன். நான் என்றும் என் ஆசிரியர்களில் ஒருவராக எண்ணுபவர். கோயில்பட்டியின் இலக்கிய மையம். எப்போதும் குன்றாத உற்சாகம் கொண்ட மனிதர்.

விஷ்ணுபுரம் விருது விழா ஒருநாள் நிகழ்வாக தொடங்கியது. ஆனால் முந்தையநாளே நண்பர்கள் வந்து கூட ஆரம்பித்தோம். ஆகவே மெல்ல முந்தையநாள் சந்திப்பும் உரையாடலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக ஆயின. அவற்றை தன்னிச்சையான உரையாடலாக நிகழ விட்டுவிட்டிருந்தோம்.

தேவதச்சன் வாசகர்களுடன் உரையாடியது மறக்கமுடியாத நிகழ்வு. ஒரு நாற்காலியை சட்டென்று எடுத்து கவிழ்த்தார். ”இந்த நாற்காலி இப்ப இன்னொரு பொருளா ஆயிடுச்சுல்ல? இதான் பன்முக வாசிப்பு. ஒரு பொருள் ஒரு பயன்பாட்டாலே ஒரு வகையா பார்க்கப்படுது. ஆனா அந்தப்பொருள் அந்தப்பயன்பாடு மட்டும் இல்ல. அது முடிவில்லாதது. அந்த முடிவின்மையைத்தான் கவிதை காட்டுது அதுக்காக நாம பழகியிருக்கிற வழக்கமான அர்த்தத்தை ரத்து பண்ணிடுது” என்றார்.

5

வண்ணதாசன்

வண்ணதாசன் நிகழ்வு விஷ்ணுபுரம் விருதுகளில் ஒரு பாய்ச்சல். முந்தைய ஆண்டு விழாநிகழ்வுகளில் ஒரு சிறு சோர்வு இருந்தது என எண்ணினேன். பழகிய முகங்களாக வந்துகொண்டிருந்தனர். ஆகவே புதிய வாசகர் சந்திப்புகளை அவ்வாண்டுமுதல் தொடங்கினேன். 2016ல் மட்டும் நான்கு புதுவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. நூற்றியிருபது இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் பங்கேற்பு விழாவை பொலிவுற்றதாக்கியது.

இவ்வாண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள் முறையான எழுத்தாளர் சந்திப்பு அரங்குகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. வசதியான பெரிய அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது முதன்மைக்காரணம். வாசகர் பங்கேற்பும் பலமடங்காக ஆகிவிட்டிருந்தது

சுருதி டிவி விஷ்ணுபுரம் விழாக்களை ஆவணப்படுத்தத் தொடங்கியதும் இவ்விழாவை ஒட்டியே. ஆகவே விழாவை திரும்ப அப்படியே பார்க்கும் உணர்வை காணொளிகள் வழியாக அடைய முடிகிறது.

தெளிவத்தை ஜோசப் விருது பெற்ற பின் அயலக எழுத்தாளர் ஒருவர் விருது பெறுவது 2017ல்தான். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அங்கே தீவிரமான இலக்கிய நம்பிக்கையுடன் எழுதியவர். பெரிதும் கௌரவங்களை அடையாதவர். அங்குள்ள பொதுவான சூழல் வணிக இலக்கிய முன்மாதிரிகளை, பிரச்சார இலக்கிய முன்மாதிரிகளைக் கொண்டது. விஷ்ணுபுரம் விருது தகுதியானவரை அடையாளம் கண்டுகொள்வதுடன், எது மெய்யான இலக்கியம் என அடையாளம் காட்டுவதாகவும் அமைந்தது.

விழாவில் கலந்துகொள்ள சுவாமி பிரம்மானந்தா தலைமையில் ஒரு மலேசிய குழுவினர் வந்திருந்தனர். மலேசிய இலக்கியம் பற்றிய ஒரு மிகச்சிறந்த இலக்கிய அமர்வும் நிகழ்ந்தது. அரங்கில் ம.நவீன் மலேசிய இலக்கியத்தின் குறுக்குவெட்டு பற்றி அளித்த உரை ஒரு முக்கியமான பதிவு.

6

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது நாவலாசிரியரும் இலக்கிய விமர்சகருமான ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் தலித் அரசியல் மற்றும் இலக்கியம் பற்றி உரையாடியமை நிறைவடையச்செய்தது. மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத்தின் பங்களிப்பு உற்சாகமூட்டியது.

பின்னர் ஆங்கில இதழ்களில் இவ்விழா பற்றி எழுதிய ஜேனிஸ் இதற்கிணையான ஓர் இலக்கிய விழா இந்தியாவில் வேறில்லை என்றும், இத்தனை வாசகர்களும் இவ்வளவு ஊக்கமும் எங்குமே தென்பட்டதில்லை என்றும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

2019 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விழாக்களிலேயே அளவில், பங்கேற்பில் மிகப்பெரிய விழா இதுதான். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் அபி விழாவுக்கு வந்திருந்தார். வாசகர்களுடன் ஆழ்ந்து உரையாடினார்.

2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா கோவிட் தொற்றுக்காலம் காரணமாகக் கொண்டாடப்படவில்லை. சிறுகதை ஆசிரியர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மதுரையில் ஒரு தனியார் விடுதியறைக்குள்ளே நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் என எவருமில்லை. விஷ்ணுபுரம் நண்பர்களே உரையாற்றினர்.நண்பர் ராம்குமார் ஐ.ஏ.எஸ் விருதளித்தார்.

விஷ்ணுபுரம் விருது நினைவுகள்

 

முந்தைய கட்டுரைசுஷில்குமாரின் கதைகள்- இரம்யா
அடுத்த கட்டுரைபதக்கம் பாலாஜி பிருத்விராஜ்