உறவுகளின் பொருள்

Relation- Amit Ghosh

அன்புள்ள ஜெயமோகன் சார்,

என் சிறு வயது முதலே, என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் உறவினர்களைப் பற்றி. என்னுடைய பெரியப்பா 1950 களில் கல்லூரிப் படிப்பை முடித்து, சிறந்த மாணவருக்கான விருதும், நல்ல பழக்க வழக்கங்களுக்காக சொந்தங்களின் மத்தியில் மரியாதையுடனும் வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் மூத்த மகன், அவருக்கு பின் நான்கு தம்பிகள் ஒரு தங்கை. நல்ல செல்வாக்கான குடும்பம் தான். இவர்கள் அனைவரையுமே ஒரு தந்தையின் நிலையில் தான் வளர்த்து வந்திருந்திருக்கிறார். அவரின் அம்மாவைப் பற்றி ஒரு சொந்தக்காரர் தவறாக சொல்லிவிட்டார் என்ற காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இத்தனைக்கும் அந்த சொந்தக்காரர் எங்களின் பாட்டியின் உதவியால் தான் வாழ்க்கையே நடத்தி வந்தார். அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து, வீடு, நிலம் வாங்கி கொடுத்து வாழ வைத்தார் என் பாட்டி. இதைப் போன்ற நிறைய உதவிகளை நிறைய உறவினர்களுக்கு செய்துள்ளார். அப்படி உதவி பெற்று வாழ்ந்தவர்கள், ஏன் பாட்டியைப் பற்றியே இப்படி ஒரு அவதூறையும் சொல்ல வேண்டும்?

அந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பெரியப்பாவின் மேல் முதலில் எனக்கு மிகுந்த அனுதாபம் இருந்தது. ஆனால் நான் வளர வளர அவரின் மேல் கோபம் தான் வருகிறது. யாரோ ஒருவர் வார்த்தைக்காக உயிரை விடும் அளவுக்கா அவரின் மனம் பண்பட்டு இருந்தது? அப்படி பேசியவர்கள் திரும்ப உதவி கேட்கும்போது அதை செய்யாமல் அவர்களை ஒதுக்கி இருக்கலாமே? ஆனால் உறவினர்கள் என்பவர்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள். நாம் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவதில்லை நம்மை மேலும் பேசி பேசி கஷ்டத்துக்கு ஆளாக்குபவர்களாகவே இருக்கிறார்கள். அதே ஆட்கள் நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பதையே பெருமையாக நினைப்பதாகவும், நம்மிடம் இருந்து எந்தெந்த வகையில் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்கள்.

சுருக்கமாக என் கேள்வி இது தான், நம்முடைய கஷ்டத்தில் பங்கெடுத்து நமக்கு கை கொடுத்து உதவுபவர்கள் தானே உறவினர்களாக இருக்க முடியும்? நம்முடைய நிலைமையை இன்னமும் மோசமாக்கும் உறவினர்கள் இரத்த சொந்தமாகவே இருந்தாலும் ஒதுக்கி வைப்பதில் என்ன தவறு? ஆனாலும் எதுக்கென்னாலும் கூடப் பொறந்த வங்க வேணும் என்று பேசித் திரிவதில் என்ன பயன் இருக்கிறது?

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

***

அன்புள்ள மனோபாரதி,

இந்தக் கேள்வியை உரையாடல்களில் பலர் கேட்பதுண்டு. குறிப்பாக இளைஞர்கள். ஒரு நண்பர் தன் வாழ்க்கையின் கதையைச் சொன்னார். ”கஷ்டங்களின்போது உறவினர்களால் பேணப்பட்டதாகச் சொல்லும் எவருமே இல்லை. உறவினர்கள் கைவிட்டனர், ஏளனமும் செய்தனர், சில நல்லமனிதர்களின் உதவியால்தான் நான் மேலே வந்தேன் என்று சொல்லும் வாழ்க்கைக் குறிப்புகளையே கண்டிருக்கிறோம். அப்படியென்றால் உறவுகள் எதற்காக?”

“பந்துக்கள் சத்ருக்கள்” என ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு. உறவுகளே முதல் எதிரிகள். அப்படியென்றால் உறவுகளை ஏன் பேணவேண்டும்? உதறிவிடுவதல்லவா உளநலனுக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் நல்லது?

ஆனால் மறுபக்கம் குறள் போன்ற தொல்நூல்கள் உறவுகளை பேணவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றன. சுற்றந்தழால், உறவை பேணுதல் என ஓர் அதிகாரமே உள்ளது.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்துடன் கூடிப்பழகாதவன் வாழ்க்கையானது கரையில்லாத குளம்போன்றது. நீர் நிறைய நிறைய உடைத்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்கிறார் வள்ளுவர். ’வனம்சேர்ந்தாலும் இனம் சேர்’ என பழமொழியும் சொல்கிறது.

இதைப்போன்ற எந்த கேள்வியையும் வரலாற்றில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். நான் பழங்குடிச் சமூகங்களைக் கண்டிருக்கிறேன். அங்கே குருதியுறவு என்பது மிக ஆழமானது. அவர்கள் எவரும் தனியர்கள் அல்ல, ஒரே திரள். முன்பு ஒரு காணிக்காரரிடம் நீ யார் என்றால் காணி என்று பதில்சொல்வாரே ஒழிய அவருக்கான பெயரைச் சொல்லமாட்டார்.

இந்தியத் தேர்தல்முறையை பற்றி காந்திக்குப்பின் இந்தியா நூலில் எழுதும் ராமச்சந்திர குகா ஒன்று சொல்கிறார். 1952ல் முதல் பொதுத் தேர்தலின்போதுதான் இந்தியாவின் பழங்குடிகளுக்கு வாக்குரிமை வந்தது. அப்போதுதான் அவர்களை தனிமனிதர்களாக பார்க்கும் பார்வை அவர்களிடம் அறிமுகமாகியது. அவர்களில் பலருக்குப் பெயர்களே இல்லை. தங்களை குடிப்பெயராலேயே அறிமுகம் செய்துகொண்டனர். தேர்தலதிகாரிகளே அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்.

அது மானுடன் என்னும் உயிரின் இயற்கை. இது மந்தை விலங்கு. திரளாக வாழ்வது. தனிமையில் வாழ முடியாதது. குடி என அவர்கள் சொல்லும் அந்த திரளடையாளமே அவர்களின் அடையாளம். குடிகள் திரண்டு சாதிகளும் ஊர்களும் சமூகங்களும் சிற்றரசுகளும் நாடுகளும் ஆயின. ஆனால் அடிப்படையில் குடியே இருந்தது. குமரிமாவட்டக் கல்வெட்டுகளைப் பற்றி எழுதும் அ.கா.பெருமாள் இங்கே முதன்மையாகக் குடியடையாளத்தாலேயெ பெரும்பாலானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பலசமயம் பெயர்கள் இல்லை, குடிப்பெயர் மட்டுமே உள்ளது.

இன்று உறவுகள் என நாம் சொல்வதன் அடித்தளம் அந்த குடிமரபில் இருக்கிறது. உறவுகளை ஒட்டி நாம் அடையும் எல்லா உணர்ச்சிகளும் அந்த பழங்குடி வாழ்க்கையில் உருவானவை. மூத்தார் வணக்கம், தந்தையர் வணக்கம், அன்னைவர் வணக்கம், உடன்பிறந்தார் பற்று என அனைத்தும் அப்போதே உருவாகிவிட்டன. அவை அத்தனை தொன்மையானவை, ஆகவே அவை எளிதில் கடக்கக்கூடியன அல்ல.

பழங்குடி உறவுமுறைகள், அவற்றின் குடியடையாளங்கள் பின்னர் நிலவுடைமைச் சமூக வாழ்க்கையிலும் நீடித்தன. அவை அன்றைய மக்களை திரளாக நின்று போராடி வாழ உதவின. குடிகளாகவே நம் சமூகம் செயல்பட்டிருக்கிறது. போர்களில், பஞ்சங்களில், இடப்பெயர்வுகளில் அன்றைய மக்கள் திரளாகவே இயங்கியிருக்கிறார்கள். தனித்தனியாக அவர்கள் ஏதும் செய்திருக்க முடியாது. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலை படியுங்கள், குடிகளாகவே மக்கள் புதியநிலம் கண்டு புது வாழ்கையை உருவாக்கிக் கொள்வதைக் காணலாம்

நிலவுடைமைச் சமூகத்தில் கூட தனிமனிதர்கள் என்னும் எண்ணமே பெரும்பாலும் இல்லை. நம் அன்னையரை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ‘தங்களுக்குரிய’ ஒரு வாழ்க்கையை எண்ணியே பார்த்திருக்க மாட்டார்கள். அக்காலத்தில் ‘நான்’ என நினைத்தவர்கள் ஆன்மிகமாக வெளியேறிச் சென்றார்கள். அன்றைய மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் தந்தையர் சொல்கேட்டு வாழ்ந்தனர். தங்கள் மைந்தர்களுக்காக முதுமையில் வாழ்ந்தனர்.

தனிமனிதன் என நாம் நினைக்கும் இந்த எண்ணங்களெல்லாம் இருநூறாண்டுகளுக்குள் உருவாகி வந்தவை. நவீன முதலாளித்துவச் சமூகத்தின் உருவாக்கங்கள். நூறாண்டுகளுக்கு முன்புகூட என் குடியில் தனிச்சொத்து என்னும் எண்ணமே இல்லை. சொத்து முழுக்க முழுக்க குடும்பத்துக்குரியது. ‘குடும்பசொத்து’ என்னும் சொல்லாட்சி இன்றும் ஆவணங்களிலுள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு வீடு, ஒரு நிலம் என்பதெல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. என் இளமையில் ‘தன் சொத்து என ஒருவன் நினைத்தானென்றால் அவன் பகவதி கோபத்துக்கு ஆளாவான்’ என்று சொல்லி சீறிய பல முதியவர்களைக் கண்டிருக்கிறேன்.

நவீன முதலாளித்துவம் தனிமனிதனை கட்டமைத்தது. அவன் ஓர் உழைக்கும் அலகு. ஆகவே அவன் ஓர் நுகர்வு அலகும்கூட. அவன் ஈட்டும் செல்வம் அவனுக்குரியது. தனிச்சொத்துரிமையே முதலாளித்துவச் சமூகத்தின் அடிப்படை. மேலும் மேலும் சொத்துசேர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் கடுமையாக உழைத்தால்தான் முதலாளித்துவம் இயங்க முடியும்.

என் நினைவிலிருந்தே சொல்கிறேன். என் இளமையில் பெரும்பாலானவர்களுக்கு சொத்துசேர்க்கும் எண்ணமே இல்லை. வாழ்வதுதான் முக்கியம். அவர்கள் சேர்த்த சொத்தை அவர்களே வைத்துக் கொண்டதுமில்லை. குடும்பத்தின் உரிமையாகவே அவை இருந்தன. காலம் மாறிவிட்டதை உணரா மனநிலை அது. அவர்கள் பின்னாளில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். வறிய குடும்பத்தில் பிறந்து, இருபதாண்டுக்காலம் துபாயில் வேலைசெய்து சேர்த்த செல்வத்தை குடும்பத்துக்கு அனுப்பிய என் நண்பரை சந்தித்தேன். அவர் அப்பா குடும்பப்பேரில் சொத்துக்களை வாங்கினார். ஆனால் பின்னர் அவர் தம்பிதங்கைகள் அதில் சமபங்கு கேட்டு அவரை நீதிமன்றத்துக்கு இழுத்தனர்.

நூறாண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல துளிக்குடும்பங்கள் உருவாகி வந்தன. அவை தனிமனிதன் என்னும் கருத்தின் அடுத்தபடி. எங்கள் குடும்பத்தில் முதல் துளிக்குடும்பம் என் அப்பா உருவாக்கிக் கொண்டது. அன்று அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் கூட்டுக்குடும்பம் வேண்டாம், தனிக்குடும்பமே அடுத்தகட்டம் என்னும் தெளிவு அவருக்கு இருந்தது.

இவ்வாறு அடுத்த காலகட்டம் வந்தபோது உறவுகள் பற்றிய எண்ணங்கள் மாறின. ஒவ்வொருவரும் தனியாக உழைக்க, தனியாக சேர்க்க, தனியாக வாழ முயல்கிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு போட்டியாக ஆகிவிடுகிறார்கள். பழங்குடிச் சமூகங்களில் ஒருவர் இன்னொருவருக்கு போட்டி அல்ல. பழைய சமூகங்களில்கூட அதன் உறுப்பினர் நடுவே இத்தகைய போட்டி இல்லை. போட்டியாளர்கள் நடுவே நல்லுறவு இருக்க முடியாது. சுரண்டல், தோற்கடிக்கும் முனைப்பு ஆகியவையே இருக்கும். வென்றால் மிதப்பும் தோற்றவனை இளக்காரம் செய்யும் மனநிலையும் உருவாகும். தான் ஈட்டியது தனக்கே என்னும் மனநிலை உருவாகும்.

ஒருமுறை தமிழறிஞர் ம.ரா.பொ.குருசாமியிடம் பேசும்போது சொன்னார். ‘தனக்கு மிஞ்சியே தானம்’ என்னும் பழமொழியைப் போன்ற சிந்தனை எந்த பழையநூலிலும் இல்லை. அது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகி வந்த பழமொழி என்று. மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர் ஆகியோருக்கு செலவழித்த பின்னரே தனக்காகச் செலவழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ”அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் மனநிலை உருவாகி வந்ததை நாமே நம் வாழ்க்கையின் ஐம்பதாண்டுகளை நினைவுகூர்ந்தால் காணமுடியும்.

ஆகவே உறவுகள் இன்று இப்படி இருப்பது அவற்றின் பழைய இயல்பு திரிந்தமையால்தான். உறவுகளைப் பற்றிய நம் உணர்ச்சிநிலைகளும் சரி, சடங்குநெறிகளும் சரி, மிகத்தொன்மையானவை. பழங்குடி வாழ்க்கையில் உருவாகி நிலவுடைமை வாழ்க்கையில் நிலைகொண்டவை. ஆனால் இன்று உறவுகள் தனிமனிதர்களாகி, போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். ஆகவே நாம் உறவுகளை கையாளும்போது நம் உணர்வுகள் தொடர்ந்து யதார்த்தத்தை சந்தித்து புண்படுகின்றன, ஏமாற்றம் அடைகின்றன. விளைவாகப் பூசல்கள் உருவாகின்றன. காழ்ப்புகளும் கசப்புகளும் எஞ்சுகின்றன. உங்கள் பெரியப்பா பழங்கால மனநிலையில் புதிய காலகட்டத்தில் வாழ்ந்தவர். அவர்மேல் கசப்பு கொள்ளவேண்டியதில்லை. அவருக்கு இன்றைய சூழல் புரியவில்லை, அவ்வளவுதான். அவர் அனுதாபத்துக்குரியவர். அத்தகைய பலர் இன்றும் உள்ளனர்.

ஒரு நவீனச் சமூகத்தில் குருதியுறவுகளுக்குப் பெரிய இடமில்லை. நாம் பழங்காலம் போல குருதியுறவுகளுடன் சேர்ந்து வாழ்வதில்லை. பலரைச் சந்திப்பதே இல்லை. நம் ரசனையும் மனநிலையும் வளர வளர பெரிதும் மாறிவிடுகின்றன. ஆகவே உறவினர் நமக்கு அன்னியர்களாக, ஒவ்வாதவர்களாகத் தெரிகின்றனர். இன்று நவீன வாழ்க்கைச்சூழலில் நவீன உறவுகள் உருவாகின்றன. சமானமான உள்ளம் கொண்டவர்களுடன் நாம் கொள்ளும் உறவுகள் அவை. அவையே நமக்கு உகந்தவையாக உள்ளன.

வருங்காலத்தில் அவையே மெய்யான உறவுகளாக இருக்கும். ஐரோப்பிய சமூகங்களில் அத்தகைய உறவுகளே முதன்மையானவையாக உள்ளன. ஒரே வகையான வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் கொண்டவர்கள் சிறிய உறவுக்குழுமங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும் காணக்கிடைக்கிறது. அங்கே குருதியுறவுகள் மெல்லமெல்ல மறைந்தே வருகின்றன.

இங்கும் அவ்வாறு நவீன உறவுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டியது இன்றியமையாதது. அவையே நமக்கு இனியவை என்பதுடன் நம்முடைய தேவைகளுக்கு உடனிருப்பவையும் ஆகும். அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

ஆனால் நாம் இன்னமும்கூட பாதி நிலவுடைமைச் சமூகத்தில்தான் வாழ்கிறோம். ஆகவே இன்றும்கூட நாம் குருதியுறவுகளில் இருந்து எளிதில் விலகிவிடமுடியாது. இந்தியாவின் ‘பெருங்குடும்ப’ அமைப்பு நமக்கு மிகப்பெரிய பொருளியல் பாதுகாப்பை அமைக்கும் ஒரு சமூகக்கட்டுமானம். நம்மில் பலரை மூத்த அண்ணன்கள் படிக்க வைத்திருப்பார்கள். நம் குடும்பத்துப் பெண்கள் மூத்தவர்களால்தான் மணவாழ்க்கையை அமைக்க முடிகிறது. குடும்பத்தினரின் உதவி இல்லையேல் இங்கே பலர் பொருளியல் அனாதைகளாக ஆகிவிடுவார்கள்.

இங்கே தனிமனிதர்களுக்கு அரசு எந்த பாதுகாப்பையும் அளிப்பதில்லை. எந்த பொருளியலுதவியும் கிடைப்பதில்லை. அவர்கள் குடும்பத்தை நம்பியே உள்ளனர். ஆகவே இந்தப்பெருங்குடும்ப அமைப்பும் அதன் மனநிலைகளும் இன்னும் சில காலம் நீடித்தாகவேண்டும். தம்பிதங்கைகளை படிக்கவைப்பது, மணம்புரிந்து வைப்பது ஆகியவை மூத்தவர்களின் கடமைகளாகவே நீடிக்கவேண்டும். சித்தப்பா பெரியப்பா தாய்மாமன் உறவுகள் நீடித்தாகவேண்டும். அந்த உறவுகள் இல்லாமலானால் பலகோடிப்பேர் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் அவை சென்றகாலத்தில் இருந்த அதே உணர்வுகளுடன் இனிமேலும் நீடிக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஓர் அண்ணா இன்று தம்பிகளை படிக்க வைக்கவேண்டும். அது அவர் கடமை. அதை தவிர்க்கக்கூடாது. ஆனால் அந்த தம்பிகள் பழங்காலத் தம்பிகளைப் போல அண்ணனுக்கு அடிபணிந்தவர்களாக, தங்கள் சம்பாத்தியத்தையும் அண்ணனையும் பிரித்துப் பார்க்காதவர்களாக இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது என்பதையும் உணர்ந்தாகவேண்டும். அந்த தம்பிகள் இன்றைய முதலாளித்துவச் சூழல் உருவாக்கிய தனிமனிதர்கள், தனிப் பொருளியல் அலகுகள். அவர்கள் தங்கள் சொத்துக்கள் மேல் குறியாக இருப்பதும், அண்ணனுக்கு பொருளியல் போட்டியாளர்களாக இருப்பதும்தான் இயல்பானது.

அந்தப்புரிதல் இருந்தால் கசப்புகளை தவிர்க்கலாம். அது பழையகால மரபின்படி செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும். அதே சமயம் பழையகால வழக்கப்படி திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. பிறரை ஆதிக்கம் செலுத்தவும் வழிநடத்தவும் முயலக்கூடாது. பழையகால ‘மரியாதைகளை’ எதிர்பார்க்கக் கூடாது. இப்படி கடமைகளில் நிலவுடைமை ஒழுக்கமும் அன்றாட வாழ்க்கையில் முதலாளித்துவ ஒழுக்கமும் கடைப்பிடிக்கப்படுமென்றால் சிக்கலே இல்லை. ஏனென்றால் உண்மையில் நம் வாழ்க்கையின் ஒரு முனை நிலவுடைமை சமூக மனநிலையிலும் இன்னொரு முனை சமகால முதலாளித்துவ மனநிலையிலும் உள்ளது. அந்த முரண்பாடே கசப்புக்கு ஆதாரம்.

கடைசியாக இன்னொன்று. குருதியுறவுகளில் ஓர் உறுதிப்பாடு உண்டு. என் அண்ணனை நான் எந்நிலையிலும் அண்ணன் இல்லை என சொல்லிவிடமுடியாது. பிரியலாம், பிரிந்தாலும் அண்ணனே. பல்வேறு சடங்குகள் நம் குருதியுறவுகளை இணைக்கின்றன. ஒரு திருமணத்தில் சடங்குகளை தாய்மாமனே செய்யவேண்டும். ஆனால் நவீன உறவுகளில் இந்த உறுதிப்பாடு, மாறாத அம்சம் இல்லை. அதாவது நம்மை மீறிய அம்சம் இல்லை. ஆகவே எல்லாம் சிறப்பாக இருந்தால் உறவைத் தொடர்வோம், இல்லையென்றால் பிரியவேண்டியதுதான் என்னும் மனநிலையிலேயே நாம் நம் நவீன உறவுகளை அமைத்துக் கொள்கிறோம். அப்படி அமைக்கப்படும் எந்த உறவும் நீடிக்காது. அது மானுட உள்ளத்தின் இயல்பு

ஏன்? ஓர் உறவில் எங்கோ வெளியேறும் வழியையும் கணக்கிட்டு வைத்துக்கொண்டு நுழைவோம் என்றால் எல்லா எதிர்மறைத் தருணத்திலும் அதிலிருந்து வெளியேறிவிடலாமா என்னும் எண்ணம்தான் முதலில் உருவாகும். ஆயிரம் முறை அவ்வெண்ணம் நம்மால் தவிர்க்கப்படலாம். ஒருமுறை அது நிகழ்ந்தே தீரும். இது மணவுறவுகளுக்கும் பொருந்தும். ஆகவேதான் மணவுறவுகளையும் மானுடனை மீறிய தெய்வங்களின் ஆணை என்றும், பிறவிபிறவியாக வரும் தொடர்பு என்றும் பழங்காலத்தில் சொல்லி நிறுவினார்கள். இன்று திருமணம் ஓரு சட்டபூர்வ ஏற்பாடு மட்டுமே என்னும் மனநிலை உருவாகியிருப்பதனால் எப்போது வேண்டுமென்றாலும் பிரியலாமென்னும் எண்ணம் முதலிலேயே உருவாகிவிடுகிறது. இயல்பாக அது பிரிவு நோக்கி இட்டுச்செல்கிறது.

எல்லா நவீன உறவுகளிலும் நாம் அவ்வுறவை ஒருபோதும் இழப்பதில்லை, என்ன நிகழ்ந்தாலும் சரி என்னும் ஓர் உறுதிப்பாட்டை கொள்ளவேண்டும். நம் குருதியுறவு என்றால் அப்படி ஒரு சிறு பூசலுக்கே தொடர்பை நிறுத்திக்கொள்வோமா என்னும் எண்ணம் இருந்தால் பல உறவுகளை தொடரமுடியும். நீடிக்கும் உறவுகளே உண்மையான உறவுகள்.

ஜெ

முந்தைய கட்டுரைபுவிமாற்றம் நிகழ்ந்த ஆண்டு- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஎழுத்துரு -அனுபவத்தில் இருந்து…