ஓராயிரம் பார்வை.. ஜா.தீபா

 

நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான் நதிக்குள் இழுபட்டேன். கால்களை நதியின் தரையில் உந்தி எழுந்தபோது எதிரில் தைப்பூச மண்டபம் தெரிந்து மறைந்தது. அதுகூட முழுக்கவுமே சந்தன நிறத்தைக் கொண்டது. மீண்டும் நீருக்குள் இழுபட்டிருந்தேன். அமலை போன்ற செடிகளும், மனிதர்களின் விசை கொண்ட கால்களும் தெரிந்தன. அவர்கள் நீந்துகிறார்கள். தேசலாய் கரையோரம் நின்றிருந்த மாடனும் தெரிந்தார். அந்த மாடனுக்கு என்னுடைய அப்பாவின் சாயல் இருந்ததை இத்தனை வருடங்களுக்குப் பிறகு  இப்போது தான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மாடன் தண்ணீருக்குள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார். மாடன் மறைந்து அப்பா மட்டுமே அங்கிருந்தார். பிறகு ஆனதை விழித்தபிறகு கோர்க்க முடியவில்லை. இவையுமே கூட கனவின் எச்சங்கள் தான். முழுமையல்ல.. முழுமையானதல்ல என்பதே கனவுகள். அந்த படித்துறையில் தான் அப்பா எனக்கு முதன்முதலாக நீச்சல் கற்றுத் தந்திருந்தார்.

அப்பா என்னுடைய கனவில் வந்தார் என்று அம்மாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. இது போன்ற கனவுகளுக்கெல்லாம் அம்மா விதவிதமான காரணங்கள் வைத்திருப்பாள். அம்மாவை நோக்கித் திரும்பும் கால்கள் எப்போதும் சமையலறைக்கே சென்றிருக்கிறது. அங்கு ஒரு ஸ்டூலில் கேஸ் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். நிற்க இயலாத மூட்டு வலி அம்மாவை எந்நேரமும் அமரச் செய்திருந்தது.

“அம்மா …அப்பா கனவுல வந்தாரு”

“அப்பாவா? என்ன சொன்னாரு?”

“ஒண்ணும் சொல்லல..சும்மா வந்துட்டு போனாரு..திருநெவேலில கைலாசபுரம் ஆத்தங்கரையில அவரைப் பார்த்தேன்”

“அங்க ஏன் போனாரு?” என்றாள் அம்மா இயல்பாக.

“அது அவருக்கு பிடிச்ச இடம் தானே. அதனால தான் அங்க போயிருக்கணும்” என்றேன்.

இருக்கும் என்பதாய் தலையாட்டிக் கொண்டாள். அந்த நேரம் அம்மாவுக்கு அதை விட தேநீருக்காக சீவிய இஞ்சித்தோல்களை சிறிதும் மிச்சமில்லாமல் சேகரித்து குப்பையில் போட வேண்டியிருந்தது.

சுதந்தர உரிமை கேட்கப்பட்ட காலத்தில் பாரதியாரும், வ.உ சிதம்பரனாரும், வ. வே.சுப்ரமணியரும் மக்களிடையே அதே தைப்பூச மண்டபத்தில் உரைகள் ஆற்றியிருக்கிறார்கள் என்றும், பல ரகசியக் கூட்டங்கள் நடந்திருக்கிறது எனவும் அப்பா சொல்லியிருக்கிறார். வேறு சில ரகசியக் கூட்டங்கள் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு நடந்து கொண்டிருப்பதை சுவரில் கிறுக்கப்பட்ட கரித்துண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தன.

“அந்தக் கைலாசபுரம் ஆத்துக்கரையில் தானம்மா மாடன் கோயில் இருக்கு”

“ம்..ஏன்? உங்கப்பா உன்னை அங்கப் போகச் சொன்னாரா?”

“இல்ல..அந்த மாடன் முகத்தைப் பார்த்தா அப்பா முகம் மாதிரியே இருந்தது”

“இருக்கும்..இருக்கும்..எனக்கும் கூட அவரு கோபத்துல கண்ணை உருட்டி உருட்டி என் முன்னாடி நிக்கும்போது அவர் மேல மாடன் இறங்கின மாதிரி தான் தோணும்” என்றாள் கையில் தேநீரைத் தந்தபடி. இத்தனை எளிதாய் என் கனவுக்குள் அம்மா புகுந்து வருவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பாவின் கோபம் மாடனின் கண்கள் போல எப்போதும் சுருங்காதது. ஒருவர் ஒரே செயலை அடிக்கடி செய்து கொண்டிருந்தால் வருகிற இலாவகம் அப்பாவின் கோபத்தில் உண்டு.

அப்பா எங்களை விட்டுத் தவறிய இந்த முப்பது நாட்களில் அவர் எங்கள் உரையாடல்களில் வார்த்தைகளாய் மாறியிருந்தார். அப்பாவின் நீட்சியான எனது மனமும் உடலும் சிறிது சிறிதாக அவராகவே மாறிக் கொண்டிருக்கிறார் போலத் தோன்றியது. அவர் குறித்து பேசுந்தோறும் அவை துடித்ததபடி இருந்தன.

மிக அமைதியான விடைபெறல் அவருடையது. யாருக்கும் எந்த யூகத்தையும், அறிவிப்பையும் தராமல் அதிகாலைத் தூக்கத்தில் மரணித்திருந்தார். அவரின் குளிர்ந்த கைகளையும் விறைத்துப் போன விரல்களையும் நீவிவிடுகையில் நான் அழவில்லை. வியப்பாய், உள்ளுக்குள் அமைதியை உணர்ந்தேன். என் முன் ஒரு பெரும் வாழ்க்கையின் களைப்பைத் தீர்த்துக் கொண்ட ஒருவர் துயிலுருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்போது ஜன்னல் வழி வெளிச்சத்தில் என் நிழல் அவர் மேல் விழுந்திருந்தது.

அந்த நிழலை அவரோடு அனுப்பி வைத்திருந்தால் என்ன?

“அம்மா அப்பாவைத் தேடுது”

“அதனால தான் கனவுல வந்திருப்பாரு. உனக்கு அங்க தான நீச்சல் கத்துக் குடுத்தாரு..”

நான் கண்ட கனவினை அம்மா உள்ளுக்குள் இத்தனை நேரம் கட்டி எழுப்பி அர்த்தம் கண்டு கொண்டிருந்தாள் என்பது அவள் முகத்தின் தீவிரம் சொன்னது.

“ரொம்ப பிரியமனாவங்க யாரோ அவங்க கனவுல தான் இறந்தவங்க வருவாங்களாம்”

“உன் கனவுல வந்தாராம்மா?” என்றேன்.

அம்மா என் கையில் இருந்த காலியான டம்ப்ளரை ஸ்டூலில் இருந்து சிரமப்பட்டு இறங்கி வந்து வாங்கிப் போனாள்.

வாசல் பகுதியில் இருந்து குரல் கேட்டது. “பாட்டி…பாட்டி…”என்று அங்கிருந்து தடதடவென்று  ஓடிவந்தான். அவன் முகம் பரவசமும், எதிர்பார்ப்பும் கொண்டிருந்தது. “பாட்டி..பிஸ்கட் வேணும்..உப்பு பிஸ்கட் இருக்கா?” என்றான். அவன் கால்கள் ஒரு சேர தரையில் நிற்கவில்லை. அப்பா உப்பு பிஸ்கட்டின் ரசிகர்.

“உப்பு பிஸ்கட் காலியா?” என்றான் அவனே ஒரு டப்பாவைத் திறந்து பார்த்து. “இப்ப தாத்தாவுக்கு என்ன கொடுக்கறது?” என்றான் பரணி.

“எந்தத் தாத்தாவுக்குடா?”

“என்னோட தாத்தாவுக்குத் தான். அவர் வாசல்ல வந்து நிக்கறாரே” என்றான். நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இரண்டு நாட்களாய் அவன் இப்படித் தான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ‘என் கூட வர்றீங்களா..தாத்தாவைக் காட்டட்டுமா” என்றான் என்னிடம் முந்தைய நாளின் மதியப் பொழுதில். நான் அவனுடன் போகவில்லை. ஏழு வயதுக்கு அவனுடைய கற்பனைத்திறனைக் கண்டு நாங்கள் எப்போதும் வியப்போம். என் அண்ணன் வாசித்த கதைகளின் தொகுப்பு போல அவன் மகன் பரணி யாவற்றுக்கும் எதையும் பதிலாக இல்லாமல் கதையாகவே சொல்லிப் பழகியிருந்தான். அடுத்தத் தெருவில் அண்ணன் வீடு. என் அப்பாவுக்கு சரியான சிநேகிதன்.  பல நேரங்களில் இருவரும் கோதாவில் சந்திக்கும் வீரர்களும் கூட.

“பாட்டி காசு குடுங்க..கடையில போய் நானே உப்பு பிஸ்கட் வாங்கிட்டு வர்றேன்..தாத்தா காத்துட்டு இருக்காரு” என்றான் பிடிவாதமாக. அவன்  முகத்தின் தீவிரம் கண்டு நானும் அம்மாவும் சிரித்துவிட்டோம். “உனக்கு பிஸ்கட் வேணும்னா கேளேண்டா..எதுக்கு எதையோ உளர்ற? “ என்றாள் அம்மா. நானும் அதற்கு சிரித்து வைத்தேன், அவன் புருவம் சுருக்கி இடுப்பில் கை வைத்தான். அவன் கோபம் கொள்ளும் தருணத்தின் வெளிப்பாடு அது. எங்கள் இருவரையும் ஒரு பெரிய மனுஷத் தோரணையோடு பார்த்தான். ஒரு நொடி அவன் முகச்சாயலில் கனவின் மாடனும், என் அப்பாவும் வந்து போனார்கள். . அவனை சரிசெய்ய வேண்டி, “தாத்தா ஞாபகம் வந்துருச்சா? இங்க வாடா கண்ணா..” என்றதும் அவனுடைய அகம் கிளறப்பட்டுவிட்டது. “ஒண்ணும் வேண்டாம்” என்று போய்விட்டான்.

ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பெரும்பாலான நேரம் என் அப்பாவுடன் தான் பொழுதைக் கழித்தான். இருவருமாக தொலைகாட்சிக்கு சண்டை போடுவார்கள். சில நொடிகளில் இருவரும் ஒரு மான் புலியால் துரத்தப்படுவதை புலியின் மனநிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போது தான் தோன்றுகிறது, பரணி என் அப்பா இறந்த அன்றும் பிறகும் கூட அழவேயில்லை. உறவினர்களும், நண்பர்களுமாய் ஒவ்வொருவராய் வர, அவர்கள் மேல் கவனம் கொண்டிருந்தான். ‘உங்க தாத்தா உன்கிட்ட தானடா பிரியமா இருப்பாரு’ என்று யாரேனும் அவனைத் தன பக்கம் இழுக்கும்போது தன்னை விடுவித்துக் கொண்டு அவன் விலகிய காட்சி இப்போது தோன்றுகிறது. அவன் அன்றைய தினத்தில் இருந்து விடுபட நினைத்திருக்கிறான். எல்லாவற்றிலும் இருந்து அவன் தன்னை கழற்றிக்கொள்ள முயன்றிருக்கிறான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கும் அப்பாவுக்குமான உறவையும், பரிவையும், சண்டையையும், சமாதானங்களையும் நினைத்தும் பேசியும் உள்ளே ஒன்றுமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கையில் அவனை அழைத்துப் பேச நாங்கள் மெனக்கிடவில்லை. அப்படிப் பேசிய சொற்ப சந்தர்ப்பங்களையுமே கூட அவன் புறக்கணித்திருந்தான்.

பரணியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவனைத் தேடிக் கொண்டு போனபோது வீட்டின் சுற்றுசுவருக்கு அப்பால் குத்துகாலிட்டு சாலையின் ஓரம் அமர்ந்திருந்தான். அவன் எதிரே ஒரு நாய் படுத்திருந்தது. அது தன் கழுத்தையும் முகத்தையும் பரணியை நோக்கி நீட்டியிருந்தது. பரணி எதைச் சொன்னாலும் மறுக்காத ஒரு சேவகனின் உடல்மொழி அதற்கு.

“பரணி இங்க என்னடா பண்றே? வா கடைக்குப் போகலாம். என்ன பிஸ்கட்டோ வாங்கிக்கோ”

“அந்த நாய் நான்  வந்ததும் என்னருகில் வந்தது. முகர்ந்தது.

“உன் புது பிரெண்டா?”

“இல்லை..என்னோட தாத்தா” என்றான். அவன் முகத்தின் தீவிரம் இதற்கு முன்பு கண்டிராதது.

நாய் தன் வாலை வேகமாக ஆட்டியது.

“இதைத் தான் தாத்தனு சொல்லிட்டு இருக்கியா? சரி தான்”

“இது நம்ம தாத்தாவே தான். இறந்தவங்க காக்காவாவும், நாயாவும் வருவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“அப்படியெல்லாம் இல்லடா”

“அப்படித் தான்” என்றான்.

பேச்சை மாற்ற வேண்டி “வா கடைக்குப் போகலாம்” என்றேன்.

“வேண்டாம்..” என்றான். சுற்றுசுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அவன் சைக்கிளில் ஏறினான். அந்த கருப்பு நாய் வாலை ஆட்டிக் கொண்டு எங்கள் இருவரிடையே நின்றது. என்னருகே வருவதா, அவனுடன் செல்வதா என்ற குழப்பம் கொண்டிருந்தது. பரணி சைக்கிளை அழுத்தத் தொடங்கியதும் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் சைக்கிளின் பின்னால் ஓடியது. என்ன காரணமோ அவர்கள் பின்னாலேயே நானும் சென்றேன். ஓடிய நாய் நின்றது. திரும்பிப் பார்த்தது. என்னை நோக்கி வந்தது. மீண்டும் என்னை முகர்ந்தது. திரும்ப பரணியின் சைக்கிளின் பின்னால் ஓடியது.

பரணி அவன் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான், நாய் தன வாலாட்டலை நிறுத்தவில்லை. அதோடு ஒரு வித பரபரப்பில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது.

பரணியின் கண் கொண்டு பார்த்தால் என் அப்பா பரபரப்படையும் பொது கொண்ட உடல்மொழியை அந்த நாய் நினைவுபடுத்தியது.

அவனுடைய சைக்கிளைப் பிடித்தபடியே அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நீங்க நம்பலியா?” என்று அவனே பேச்சைத் தொடங்கினான்.

அவன் கேக்கும்போதும அந்த நாயையே பார்த்தபடி இருந்தேன். அது தன பரபரப்பை விட்டு எங்களருகில் வந்து நின்றது. மீண்டுமொரு முறை என்னை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது.

“நம்ம தாத்தா இறந்ததுக்கு மறுநாள் இந்த நாய் வந்தது. தாத்தா வீட்டு வாசல்ல தான் படுத்தே இருந்தது. நம்ம வீட்டையே பார்த்துட்டு இருந்தது. எது கொடுத்தாலும் அது சாப்படவே இல்ல”

“ஓ”

நாய்க்கு தன்னைப் பற்றிய பேச்சு என்று தெரிந்திருக்க வேண்டும். சைக்கிளின் கீழ் எங்கள் இருவருக்கும் இடையில் இன்னும் நெருக்கமாக வந்து நின்றது. எங்கள் இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமே கொண்ட குணம் இது. தெருவில் வளரும் நாய்களுக்கு மனிதர்களின் உரையாடல் ஒரு பொருட்டேயல்ல. விதவிதமான் மனிதர்களின் ஒலிகளை கேட்டு அடைந்த சலிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த நாய் எங்களைக் கூர்ந்து கவனித்தது.

“தாத்தா கூட இப்படித் தான நாமள்லாம் பேசும்போது நம்ம முகத்தையே பார்த்துட்டு வந்து நிப்பாரு” என்று நான் சொன்னதும் அவன் சொல்லை  நம்புகிறேன் என்பதான உற்சாகத்தை பரணிக்குக் கொடுத்தது.

“நான் தான் சொல்றேன்ல..சும்மா சொல்றேன்னு நினைச்சீங்களா எல்லாரும்?..இப்பப் பாருங்க என்றவன் “தாத்தா இங்க வாங்க” என்றான்.

என் கண் முன் அதிசயம் போல அந்த கருப்பு நாய் பரணியின் அருகில் நின்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அவன் இடும் கட்டளைக்கு காத்திருந்ததை அதன் கண்கள் சொல்லின. பரணி சொல்லப்போவதை அடுத்த கணமே செய்யத் துடிக்கும் பரபரப்பை அது தன் கால்களில் காட்டிக் கொண்டிருந்தது.  காதுகள் நீண்டு பரணியை நோக்கி  திரும்பியிருந்தன.

அதன் கரிய நிற உடலில் கழுத்தில் இருந்து புறப்பட்ட வெள்ளை நிறம் அதன் வலது காலுக்கு இறங்கியிருந்தது. வயிறு நன்றாய் உள்ஒடுங்கிய தோற்றம். எல்லாமே நாய்க்கு உரிய இலட்சணங்கள் தான். ஆனால் அதன் பார்வையில் மட்டும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது, அலல்து தெரிந்தாற்போல் தோன்றியது.

பரணி அதனிடத்தில் வாஞ்சையுடன் சொன்னான். “இங்கேயே இருக்கணும். நான் போய் உப்பு பிஸ்கட் வாங்கிட்டு வர்றேன்”

அது சட்டென தன் காதுகளை தணித்தது. அதவாது செவிமடுத்தது. தன் நான்கு கால்களையும் பரப்பி தரையோடு தரையாக படுத்துக் கொண்டது. ஒரு சரணாகதி போல. அது தற்செயலென என்னால் சொல்ல இயலவில்லை. இதெல்லாம எங்களுக்குள் சகஜம் தான் என்பது போல பரணி என்னைப் பார்த்தான். “வாங்க கடைக்குப் போகலாம்” என்றான். நான் காசினைக் கொடுத்து அவனை மட்டும் அனுப்பி வைத்தேன்.

நாய் அதே நிலையில் பரணி சென்ற திசை பார்த்துப் படுத்திருந்தது. பரணி வரும்வரையிலும் அப்படியே தான் இருக்கும் போல இருந்தது. எதற்காக இதனுடன் தனித்து இருக்க விரும்பினேன் என்று தெரியவில்லை. ஒரு விளையாட்டு போல அதனை நோக்கி, “அப்பா” என்று அழைத்தேன். அது நொடியும் தாமதிக்காமல் என்னைத் திரும்பிப் பார்த்தது. உள்ளுக்குள் தூக்கி வாரிப்போட்டது.

இல்லை..இது தற்செயல்..என்னிடத்தில் இருந்து எந்த சொல் வந்திருந்தாலும் அது என்னைத் திரும்பிப் பார்த்திருக்கும்.

சோதிக்க விரும்பி, “சீசர்” என்றேன். ஒரு தீபாவளி நாளில் மழையில் நனைந்து கிடந்த தெருநாயின் குட்டியினை எடுத்து வளர்த்தோம். அப்போது எனக்கு ஐந்து வயது. அதன் பெயர் சீசர்.

நாய் என்னையே பார்த்தது.

நாயின் கவனத்தை வேறெங்கேனும் அனுப்பி மீண்டும் அழைக்கலாம் என்று தோன்றியது.

சும்மாவேனும் ‘ச்சூ..போ’ என்று யாரையோ பார்த்து சொல்வது போல கைகளை ஆட்டினேன். நாய் என்னிடத்தில் இருந்து கவனத்தை எங்கும் திருப்பவில்லை.

அது என் மேல் முன்னிலும் கூர்மையான பார்வையை செலுத்தியது. ஒரு கண்டிப்புடன் என்னைப் பார்க்கிறதோ, “நீ என்னை சோதிக்கிறாயா?” என்கிறதா?

நான் அமைதிய்டோன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க,அ துவும் என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தது. அதன் உடல் அபப்டியே படுத்திருக்க, கண்களும், முகமும் மட்டும் உயர்ந்து என்னைப் பார்ததிருந்தது. இப்போது கூர்மை தணிந்து அதன் பார்வை சகஜமாயிருந்தது.

அதனுடனான சோதனையை இன்னும் கூர்படுத்த விரும்பினேன். என்னுடைய மொபைலில் அப்பாவுக்குப் பிடித்த ஒரு பழைய பாடலைத் தேடி ஒலிக்கவிட்டேன்.

“துயிலாத பெண்ணொன்று கண்டேன்..”

ஏ.எம் ராஜாவும் பி.சுசிலாவும் வலது காலில் வெள்ளை கோடு கொண்ட கருத்த நாய் ஒன்றிற்காகவே பாடுவது போல உருகிக் கொண்டிருந்தனர். ஏனெனில் நான் சோதிக்கும் மனதுடன் இருக்க, நாய் நீட்டிய காலின் மேல் கண்களை மூடி படுத்திருந்தது. அதன் காதுகள் உயர்ந்திருந்தன. சிறு பூச்சியை விரட்டுவது போல காதுகள் மெல்ல அசைந்து கொடுத்தன. அது ரசிப்பின் லயத்தில் உள்ளதோ..அது புன்னகைக்கிறது என்று கூட தோன்றியது. ‘இந்தக் கண் தந்த அடையாளம் போ…..தும்” எனுமிடத்தில் ஆஹா என்று சொல்லிவிடுமோ என அதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கண்களை மூடியபடி இருந்தது. பாட்டினை நிறுத்தினேன். அது அபப்டியே கண்மூடி இருந்தது. அதன் மூடிய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளுக்குள் சிறு அசைவு தெரிந்தது. அது மெதுவாகக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தது.

இந்த மதிய வேளையில் யாருமற்ற தெருவில் ஒரு நாயுடன் என்ன பேசுவது என்று திண்டாடிக் கொண்டிருக்கிறேன். முந்தைய நிமிடங்கள் வரை இபப்டியான ஒரு செயல் நிகழும் என யோசித்திருக்கவில்லை.

“நீங்கள் என்னுடைய கனவில் வந்தீர்கள்? என்னவோ சொல்ல வந்தீர்களா?  உண்மையிகுள் இது நீங்கள் தானா?” என்று கோர்வையாக இல்லாமல் எண்ணங்களாக உரையாடல் தொடங்கியிருந்தது. அதிசயம் போல நாய் என்னையே பார்த்தது. அதன் கண்கள் கூட பளபளப்பாக மாறியதோ என்ற எண்ணம் வந்தது. நீரின் மெல்லிய அசைவா அது என்று கண்களையே பார்த்தேன். ஒரு நாயின் கண்களை இப்படிப் பார்ப்பது இது தான் முதன்முறை.

அந்த நாய் தன் உடலை அசைத்தது. மெதுவாக எழுந்தது. சோம்பல் முறித்தது. என் காலருகில் வந்து நின்றது.

அதைத் தொட்டு தடவவேண்டுமாய் தீர்மானம் உள்ளுக்குள் உருவானது. அதனை நோக்கி கைகளை நீட்ட, அது முகர்ந்து பார்த்தது. கால்களை ஒட்டியபடி நின்ற அதன் நெற்றியைத் தான் முதலில் தொட்டேன். மெதுவாக தடவிக் கொடுத்தேன். விலங்குகளின் கழுத்தைத் தடவினால் அதற்கு மிகப்பிடிக்கும் என்பார் என் அப்பா. இப்படி நான் நினைக்கையில் அது தன் கழுத்தை என்னை நோக்கி நீட்டியது. அதன் கழுத்துப் பகுதியை வருடிக் கொடுத்தேன். அது என்னையே பார்த்தது. அந்த மினுமினுக்கும் கண்களின் கருணை கொண்ட பார்வை என்னை நெகிழ வைத்தது.

“என்னப்பா” என்றேன் என்னையுமறியாமல்.

அது முதன்முதலாக குரல் கொடுத்தது.

மெல்லிய குரல். “ஒவ்’ என்றது.

உடல் சிலிர்த்தது. பின்னர் அதிரத் தொடங்கியது. யாரேனும் கூட இருக்க வேண்டும் போலத் தோன்ற திரும்பிப் பார்த்தேன்.

என்ன நடந்து கொண்டிருகிறது என எவரேனும் கூட அறிய வேண்டுமாய்ப்பட்டது.

நாய் கால்களை சுற்றி வந்து முகத்தையே நிமிர்ந்து பார்த்தது.

என்னுடல் அதிர்ந்தபடி இருப்பதை உணர்ந்தேன்.

“எனக்கு பயமாக இருக்கிறது” என்றேன் அதனிடத்தில்.

அதன் கண்களின் மினுமினுப்பு மறைந்தது. வெற்றுப்பார்வை பார்த்தது.. அந்த பார்வை என்னை என்னவோ செய்தது.

“தண்ணியைப் பார்த்து பயப்படாத..நான் இருக்கேன்ல..கையையும் காலையும் மட்டும் அசைக்கனும்..மீதியை தண்ணீர் பார்த்துக்கும் ..பயப்படாத” இது தான் என்னுடைய அப்பா முதன்முதலில் நீச்சல் சொல்லிக் கொடுத்தபோது எனக்கு சொன்னது. அவரது குரலும், நதியின் ஒலியும், நீரின் ஓட்டமும் துல்லியமாய் என்னைச் சுற்றி நிறைந்தது. நான் நின்று கொண்டிருபப்தே நீருக்குள் தான் என்பது போல ஒரு உணர்வு.

நாய் இரண்டடி திரும்பிப்பார்க்காமல் அப்படியே பின்நகர்ந்தது.

நான் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது தெருமுனை வரை சென்றதைப் பார்த்தேன், ஒரு சாட்சி போல நின்றிருந்தேன். அந்தத் தெருவில் அப்போது வரை நடமாட்டம் எதுவுமில்லாமல் இருந்தது. நாய் மறைந்ததும் வயதான ஒருவர் சைக்கிளின் பின்னால் கூடையில் எதையோ வைத்துக் கொண்டு சென்றார்.

நடுரோட்டில் எந்த இலட்சியமும் இல்லாமல் நான் நின்று கொண்டிருப்பதை பார்த்தபடியே போனார்.

பிறகு ஒரு பைக்கில் தம்பதியினர் சென்றனர். அந்தப் பெண்ணின் கைகளில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

பரணி வந்து சேர்ந்தான்.

வந்ததும் நாயைத் தேடினான்.

“அது போயிடுச்சு” என்றேன். அவன் ஒருகணம் என்னை நம்பமுடியாமலும், சந்தேகத்துடனும் என்னைப் பார்த்தான். அந்த சந்தேகம் நாய் மேல் எழுந்ததல்ல, என் மேல் என்பது எனக்குத் தெரிந்தது.

“இங்கேயே இருக்கணும்னு சொன்னேனே” என்றான்.

“தெரியல… போயிடுச்சு”

“நான் போய்த் தேடிக் கூட்டிட்டு வர்றேன்”என்று சைக்கிளை அழுத்தினான்.

அப்பா இனி பரணியின் கனவுகளில் மட்டுமே வருவார் என்று அப்போது உறுதியாகத் தோன்றியது.

தினகரன் தீபாவளி மலர்

முந்தைய கட்டுரைஅழகிலமைதல்
அடுத்த கட்டுரைகல்குருத்து கடிதங்கள்-9