எத்திசை செலினும்- சாம்ராஜ்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

”காடாறு மாதம் நாடாறு மாதம்” கவிஞர் விக்கிரமாதித்தியனின் அனுபவத் தொடரின் பெயர் இந்தத் தலைப்பு அவர் கவிதைக்கும் பொருந்தும். காடாறு  மாதமாக நாடாறு மாதமாக, இம்மைக்கும் உண்மைக்கும் இடையே பகுத்தறிவுக்கும் அதற்கு அப்பாற்பட்டவைக்கும் இடையே, சிறிது வெளிச்சத்துக்கும் பெரிய வெளிச்சத்துக்கும் இடையே லெளகீகத்துக்கும் லட்சியத்திற்க்கும் இடையே சோற்றுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே நன்மைக்கும் நரகத்திற்கும் இடையே அலைகின்றன அவரது கவிதைகள்.                                           

விக்ரமாதித்தியனின் கவிதையை புரிந்து கொள்ள அல்லது மேலும் அண்மிக்க அவை அப்படியொன்றும் பூடகமானது இல்லைதான். ஆனால் அவர் வரிகளிலே சொன்னால் ஏமாற்றும் எளிமை கொண்டவை.

இந்தக் கவிதை அவரை நெருங்குவதற்கு உதவலாம்.

 

“எப்போதும்

இவனைக் கூப்பிடுகிறது

நீலக் கடல்

முக்கியமாக

நட்சத்திரங்களும் நிலவும்

சுடர்விடும்

ராத்திரி நேரங்களில்தாம்

நீல நிறத்தைக் கண்டு

பயப்பட வேண்டாம்

கட்டு மரமேறி

வா

பிடித்தமில்லையென்றால்

திரும்பிவிடலாம்

வீடு

ரொம்ப தூரமென்று

யோசிக்காதே

வா”

 

விக்கிரமாதித்தியன் கவிதைகளின் சாரத்தை புரிந்து கொள்ள இந்த கவிதை உதவலாம்.

எப்போதும் தூரத்திலிருந்து அழைக்கும் கவிதை அல்லது லட்சியம், அலைகழிக்கும் வீடு திரும்பல், முதுகில் இறக்க முடியாத சுமையாய் அறம். கனவில் வரும் சிறகுகள். தெய்வங்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், தொன்மங்கள் அவரின் கவிதை பாதையில் சுதை சிற்பங்களாய் நிற்க விக்கிரமாதித்தியன் ஐம்பது வருடமாய் தனித்து நடந்து செல்கிறார்.

விக்ரமாதித்தனுக்குள் ஒரு திராவிடன் உண்டு தமிழ் தேசியனும் உண்டு. (தமிழ்தேசியன் என்ற சொல் சமகாலத்தின் பொருளில் அல்ல) தெய்வத்தை புறந்தள்ளாத தமிழ்தேசியன் கோவிலை ரசிக்கும் தமிழ் தேசியன் கோவில் வழிபட மாத்திரம் அல்ல என்று புரிந்து கொண்ட தமிழ் தேசியன். சிறு தெய்வமும் தானும் வேறு வேறு அல்ல என்று புரிந்து கொண்ட தமிழ் தேசியன் அல்லது கவிஞன். சிறு தெய்வங்களின் வாழ்வுதான் இங்கு சாமனியர்களின் வாழ்வு. சிறு தெய்வத்தை உணர்ந்து கொண்ட கவிஞனெனில் கூடுதல் துயரம். அவன் ஓடும்பொழுது அவைகளும் கூட வருகின்றன. சமயங்களில் அவன் தூக்கிக் கொண்டு ஓடுகிறான். விக்கிரமாதித்தியன் கவிதைகளில் அப்படி சிறு தெய்வங்கள் கூடவே வருகின்றன. சமயங்களில் பெருந்தெய்வங்களும். சமயங்களில் சிறு தெய்வங்கள் அவர் மீதே சாய்ந்து உறங்குகின்றன.

70களில் எழுதத் தொடங்கிய விக்கிரமாதித்தியனின் பிரத்யேகமான, பிரதியெடுக்க முடியாத தன்மை என்பது வானம்பாடிகளின் பிரகடனக் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பில் உரத்து ஒலித்து காலத்தில் அழகியலையும், கவித்துவத்தையும் வறுமையையும் சிறு தெய்வங்களையும் பெருந் தெய்வங்களையும், தொன்ம நம்பிக்கைகளையும் ஒருங்கே தன் கவிதைகளில் முன்வைக்கிறார் விக்கிரமாதித்தியன்.

“குரு மகராஜ்

ஜோதி வளர்க்க

குடும்பம்

பட்டினி கிடக்க”

 

”பூமியில் கால் பாவாமல்

மஹாகவியென இறுமாந்திருக்குமவன்

உச்சிவெயில் உறைக்கும் நேரம்

மனிதனாவான் சமயத்துக்கு”

 

தக்‌ஷணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டை யடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடைவராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர் ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டு தேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகால கைத்த நினைவுகள் வருந்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

 

 

வீடு பத்திரமான இடம்

”புலிப்பால் கொண்டு வர

போனான் ஐயப்பன்”

புத்தி வளர

பேச்சு குறைய

அத்தம் கண்டது மெளனம்

 

காய்த்து வெடித்ததும்

அனாதையாக

காற்றில் அலைக்கழியும்

இலவம் பஞ்சு

 

ஊருக்கும் வெளியே

தாமரைக் குளம் தனியே

பூத்துக் கிடக்கும்

வெறிச்சோடி

 

எனக்கில்லை

என் சந்ததிக்கேனும்

தப்பித்தல் அல்லாமல்

விடுதலை எப்போது பூக்கும்

 

நிலை

மலையேறும் வாழ்க்கையில்

மஹா உன்னதம் தேடியென்ன லாபம்

கடல்

உளுந்தங்களி

கிண்டிப் போட

அரிசிப்புட்டு

அவித்துத் தட்ட

ஆண் மனத்தில்

ஆசை எரிய

சமைந்த பெண்

உள்வீட்டில் உட்கார்வார்வாள்

பிரச்னையாக

 

ஒளவைக்கும் காரைக்காலம்மையார்க்கும்

கழறாத

கொலுசு உண்டா

 

அல்லாத

சங்கிலி இல்லை

 

தொலையாத

மோதிரம் ஏது

 

எதில் செய்தால்

கெட்டித் தாலி

 

ஒளவைக்கும் காரைக்காலம்மையாருக்கும்

அத்தனையும் தெரியும்

 

அழகியலும் வறுமையும் லட்சியமும் தொன்மமும் சந்திக்கும் அல்லது மோதும் புள்ளிகளில் விக்கிரமாதித்தியன் கவிதைகள் பிறக்கின்றன.

 

விக்கிரமாதித்தியனுக்கு பிரகடனங்கள் மீதும் பொய்யான மக்கள் கவிதைகள் மீதும் பெரும் கோபம் உண்டு.

 

யதார்த்தம்

தத்துவம் பேசும் கிளிகள்

சிவந்த மூக்கின் நுனியில்

கவிழ்ந்து கிடக்கும் பூமியை

புரட்டிப் போட ஆசைப்படும்

 

மரப்பொந்துகள் மறந்து

தத்துவ தாக விடாயில்

வயிறு வீங்கிச் சாகும்

 

பழங்களைத் தேடியலையாமல்

பட்டினி கிடக்கப்

பழகிக் கொள்ளும்

 

பருவகால ஓர்மை கெட்டு

துணை ஞாபகமற்று

குஞ்சு முகம் பாராமல்

 

சில கிளிகளைச் சேர்த்துக் கொண்டு

திகம்பரனைப் போலத் திரியும்

 

ஆலோலம் பாடி

கவன் எறிந்து

விரட்டியடிக்கும்

யதார்த்தம் தெரியாது

மறுபடியும் மறுபடியும்

சிவந்த மூக்கின் நுனியில்

புரட்டி போடும் கனவு காணும்.

 

மக்கள் கவிதை

மக்கள் பழம் சாப்பிடுவதை எழுதினால்

மக்களைப் பற்றி எழுதியதாகுமென்று நம்புகிறான் கவிஞன்

மக்கள் பால்குடிப்பதை எழுதினாற்கால்

முற்போக்குக் கவிதை ஆகிவிடும்தானே

மக்கள் பாலும்பழமும் சாப்பிடுவதை விவரித்தால்

புரட்சிக்கவிதை பூத்துவிடாதா பின்னே

 

விக்கிரமாதித்தியனும் ’மக்கள் கவிதை’ எழுதுகிறார்.

 

பீடி சுற்றும் இயந்திரங்கள்

 

பீடி சுற்றும் இயந்திரங்கள்

எங்கள் பக்கம் அதிகம்

விடிந்ததும் அவை

ஓட ஆரம்பிக்கும்

இரவு வரை இயந்திரங்கள்

இடைவிடாது சுற்றிக் கொண்டிருக்கும்

நடுநடுவே எழுந்துபோய்

நல்ல தண்ணீர் பிடிக்கும்

ஏனம் கழுவும்

பல் தேய்க்கும்

குளிக்கும்

துணி துவைக்கும்

சாப்பிடும்

மதியத்தூக்கம் தூங்கும்

வீட்டு வேலைகள் எல்லாம்

செய்து  முடிக்கும்

கடைக்குப் போய்

காய்கறி உப்பு புளி மிளகாய் வாங்கிவரும்

சமையல் பண்ணும் நிற்காமல்

சூர்யன் எஃப்.எம் கேட்கும்

சன் டிவி

பார்க்கும்

சிரித்து

பேசிக்கொள்ளும்

தலைவாரி

பூச் சூடும்

பவுடர் போடும் பொட்டு வைத்துக் கொள்ளும்

புருஷனுக்கு பிள்ளைகளுக்கு

சோறெடுத்து வைக்கும்

விருந்தின வந்தால்

உபசரிக்கும்

வெள்ளிக்கிழமை

பூஜை செய்யும்

திருவிளக்கு ஏற்றும்

கோயிலுக்குச் செல்லும்

தேர்த்திருவிழாவுக்குப் போவதுபோல

அலங்கரித்துக்கொண்டு பீடிக்கடைக்குப் போய்வரும்

வாரச்சம்பளம் வாங்கும் நாளில்

வெகுவாக சந்தோஷப்படும்

போனஸ் போடும் காலம்

பூரித்துப் போகும்

பிள்ளைகள் படிப்புக்கு

பணம் தருகிறார்களென்று பெருமை பேசும்

லோன் பென்ஷன் பேங்க் என்றெல்லாம்

கதைத்துக் கொண்டிருக்கும்

பாளம்பாளமான பீடி இலைகளை

காலையில் ’டப்’பில் போட்டு ஊறவைக்கும்

பிறகு காயப்போட்டு சீராக வெட்டியெடுத்து

சேர்த்து  வைத்துக் கொள்ளும்

வராண்டா திண்ணை மரநிழல்

இப்படி இடங்களில் அமர்ந்து கொள்ளும்

அப்புறம் காலை நீட்டி

சுவரில் சாய்ந்து கொண்டு சுற்றத்தொடங்கும்

அனேகமாக கூட்டுச் சேர்ந்துதான் அமர்ந்திருக்கும்

ஒன்றிரண்டு கொறிக்க

ஏதாவது வைத்திருக்கும்

காண்பதற்கே அதிசயமான இயந்திரங்கள்

இவையல்லாமல் லேபிள் ஒட்டும்

இயந்திரங்கள் சிலவும் உண்டு

பண்டல்போடும் இயந்திரங்களோ விசேஷமானவை

 

தமிழில் அரிதினும் அரிதான சேர்மானம் விக்கிரமாதித்யன் வள்ளுவர் கோட்டம் தேர் எழுதும் விக்கிரமாதித்யன்தான் இந்தக்கவிதையும் எழுதுகிறார்.

 

”நன்னிலம்

நடராஜன் பேச்சு

 

ராஜேஷ்

குமார் எழுத்து

 

தினத்
தந்தி பேப்பர்

 

ரஜினி

படம்

 

கங்கை

அமரன் பாட்டு

 

குமுதம் குஷ்பு

தமிழ்த் திராவிட வாழ்வு”

 

இதே விக்கிரமாதித்தியன்தான்

 

”பதினெட்டு கிராமம்

பாங்குடன் இருந்த ஊர்

 

வாய்க்கால் தாண்டி

ஊர்

 

பச்சைவயல் மனசு படைத்த

ஜனங்கள்

 

அக்ரஹாரம் எடுபட்டதும் ஊர்

அம்சமே அழிந்து போயிற்று

 

பஞ்சம் பிழைக்கப் பட்டணக்கரைகளுக்கு

போய்ச்சேர்ந்தன பிராமணக்குடிகள்

 

வரலாற்றுச் சக்கரச் சுழற்சியில்

வந்தது வேதியர்களுக்குப் பின்னடைவு

 

ராஜரிகம் நசிந்ததுபோல

நசிந்துபோயிற்று பிராமணியமும்”

 

கடந்தகாலம்

 

பொதிகைமலை உச்சியிலிருந்து

புறப்பட்டுவரும் ஆறு

 

மலையில் சமைந்தகுமரி

சமவெளியில் புதுப்பெண்

 

எங்கள் தாமிரவருணிக்கு

எத்தனை சாயல்கள்

 

காட்டுக்குள் தனியே

குடிகொண்டிருக்கிறான் சொரிமுத்தையன்

 

ஆடி அமாவாசை நாளில்

ஆடுவெட்டிக் கும்பிடுவார் வீர மறக்குடிமக்கள்

 

நதியின் செம்மண்நீரோடு சேர்ந்து

ரத்தநதியும் கலந்து ஓடும் புதுவர்ணத்தில்

 

தர்பார் உடையுடன் வந்து

காட்சி தருவார் சிங்கம்பட்டி மகாராஜா

 

இந்தக் கவிதைகளையும் எழுதுகிறார்.

 

கவிதையில் எதைவேண்டுமானாலும் அவரால் எழுத முடிகிறது.

”சுடலையாண்டி சரக்கு

ஜோதிமணி விளக்கு

சுலோசனமுதலியார் பாலம்

சுந்தரிமார் நடமாட்டம்”

 

”நேத்து ராத்திரி

பார்த்த கும்பக்காரி

உதயத்துக்கு முன்ஜாமம்

படுக்கையில் சர்ப்பம்”

 

“அம்மாவைப் போல

வாழும் மனசு அமைந்துவிட்டால்

ஏதாவது சாதிக்க முடியுமெனத் தோன்றும்

 

அம்மாவின் பிம்பம்தான்

’சக்தி’யென்றாகியிருக்கும் போல

 

ஆனாலும்

வருஷத்துக்கொரு தரம் கைத்தறிப்புடவை

வாங்கிக்கொடுக்கத்தான் இவனுக்கு வக்கில்லை

 

கற்றுக்கொண்டுவிட்ட தமிழ்

கவிதையெழுத மட்டும் உதவும்”

 

”வெயில் தாளாமல் நிழல் தேடும்

வெற்றுப் பாதங்கள்

எரிச்சலில் சாபமிட

எங்கே போய்க் கவியும் கதிர்வானம்”

 

“வார்த்தைகள்

புழங்கித் தேய்ந்த

ஏனங்கள் போல”

 

“தருமன் சூதாட

தாயும் பத்தினியும் சேர

தட்டழிந்தது ஆறுபேர்”

 

நவபாஷாணம்

குற்றாலநாதருக்கு

ஓயாத மண்டையிடி

 

சுக்குவென்னீர் குடித்தால்

சொஸ்தப்படுமா

 

அருவிக்கரையிலிருந்து

அவன் காலி பண்ணினாலென்ன

 

தலைவலிக்காரனோடு எப்படித்தான் காலம்

தள்ளுகிறாளோ குழல்வாய்மொழி”

 

“கனிகளும்

கிளிகளும்

வேறுவேறு திசையில்”

 

”கவிதைக்குள் படியுமா

காதோரச் சுருள்முடி

 

வார்த்தைக்குள் வருவாளா

வாயாடிச் சுந்தரி”

 

துரித உணவுக் கடைகளில் எதையெதையோ வாணலியில் இட்டு குபீரென நெருப்பு எழ வாணலியை கையில் தூக்குவார்கள். விக்கிரமாதித்தியனும் எதையெதையோ கவிதையில் இடுகிறார். குபீரென எழுகிறது கவிதை

 

அவரது கவிதை ஊஞ்சல் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கிறது.

நவபாஷாணம், கடல், போன்ற நெடுங்கவிதைகள் தமிழ்க்கவிதை சேர்த்துக் கொண்ட செல்வம்.

அவருடைய மொத்தக் கவிதையும் வாசிக்கும்போது அவருடைய உச்சபட்ச வெளிபாடுகள், சாதனைகள், அவருடைய தொடக்க கால கவிதைகளிலே நிகழ்ந்து விட்டதாக தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் தொடர்ந்து அதை எட்ட முயல்கிறார். கமலஹாசன் ஒரு நேர்காணலில் சொல்வார். “பராசக்திக்கு பிறகு சிவாஜி கணேசன் நடிக்கவே இல்லை. அதை தக்க வைத்தார்.” அது அண்ணாச்சிக்கும் பொருந்தும்.

 

ஆகாசம்

நீலநிறம்

கிழக்கு வந்து

கூப்பிட்டுப் போகும்

சிந்திச் சீரழித்ததை

சேர்த்து விடலாமென்று

நம்பிக்கை தரும்

நல்லபுத்தி சொல்லும்

 

மேற்கு

கொஞ்சம் ஆறுதலாக

காத்திருக்கச் சொல்லும்

“முடியாதென்றால்

போய்த் தொலை”யென்று கோபிக்கும்

தெற்கு

மனத்துக்குள் நினைக்கும்

”வர வேண்டிய இடம்  தப்பி

போவதுதான் முடியுமோ இனி’ யென்று

நிச்சயத்துடன் எதிர்பார்த்திருக்கும்

 

வடக்கு

திரும்பத்திரும்ப அழைத்து தொந்தரவு செய்யும்

”இப்போதைக்கு

என்னிடம் வந்து இரு”வென்று

கட்டாயப் படுத்தும்

 

திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீல நிறம்

 

”எத்திசை செலினும் அத்திசைச் சோறே” என்பாள் அவ்வை

கவிஞர் விக்கிரமாதித்தியனுக்கு எல்லாத் திசையும் கவிதையே.

முந்தைய கட்டுரைஎன் வாழ்வில் இன்றைய காந்தி – சிவகுருநாதன்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தை விலைபேசுதல்…