மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

         

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

கவிஞர் விக்ரமாதித்யனின் நிழற்படங்களை விடவும் அவரது முகம் கோட்டோவியங்களில் அதிக உயிர்ப்புடனும் உள்ளெழுச்சியின் ததும்பலுடன் இருப்பதாகத் தோன்றும். சொற்களின் சப்தமற்ற இடைவெளிகளில் கவிதை முகிழ்த்தெழுவதைப் போல. விக்ரமாதித்யனின் கவிதை வரிகளை ஏதோவொரு கோணத்தில் விதவிதமாக அடுக்கி வைத்தாலும் இறுதியில் அவர் முகமே வெள்ளந்திச் சிரிப்புடன் வெளிப்படவும் கூடும். கவிதைகளை நூல் பிடித்து மேலேறி நேரே கவிஞனைச் சென்றடையும் சாத்தியத்தை வார்த்திருப்பவர்கள் தேவதேவனும் விக்ரமாதித்யனும். இருவருமே குழந்தைமையின் அகக் குரல் கொண்டவர்கள்தான் எனினும் முதலாமவர் மோன நிலையில் ஆன்மிக அமைதியைத் தேடித் திரிபவர் பின்னவர் இயல்பெழுச்சியின் காத்திரமான வெளிப்பாடு கொண்டவர். கவி பாடுபவர்களாக மட்டுமே நின்றுவிடாமல் கவிஞனாகவே தன் வாழ்வைத் தரித்துக்கொண்டவர்களின் கவிதைகள் அத்தனையும் நம்மை கை பிடித்து கவிஞனிடமே மீண்டும் மீண்டும் கொண்டு சேர்க்கின்றன. கவிஞனின் முகம் சற்றேனும் நம் மனதில் எழாமல் அக்கவிதைகள் சில நேரங்களில் முழுமை கொள்வதில்லையோ என எண்ணச் செய்கிறது.

 

‘…சாக்லட்டே சாக்லட்டே

குழந்தைகள் விரும்பும் சாக்லட்டே

சிகரெட்டே சிகரெட்டே

நேரங்கெட்ட நேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே’

எனும் வரிகளில் உள்ளது ஒரு கவிஞனின் தவிப்பு எனும்போது அது தீவிரம் கொள்கிறது. கள்ளமற்ற, காரணங்களுமற்ற ஒரு குழந்தைத் தவிப்பைப் போன்றதுதான் ஒரு சிகரெட் கையில் இல்லாமல் போகும் கவிஞனின் தவிப்பும். அதுவும் அது அண்ணாச்சியின் கையில் அப்போது இல்லாமல் போவது பதற்றம் கொள்ளச் செய்வதும்கூட. துழாவிய கையில் ஒரு சிகரெட் அகப்படாமல் போன அந்நேரம் ஒரு கவிதை முளைக்கும் நேரமாக இருந்திருக்கலாம் அல்லது அக்கவிதை முழுமையடையும் கணமாகவும் இருந்திருக்கலாம்.

நவீனத் தமிழிலக்கிய வாசகனிடம் பல்வேறு சுவாரசியமான கதைகள் மூலம் கவிஞர் விக்ரமாதித்யன் புலப்பட்டுக்கொண்டேயிருக்கிறார். இலக்கிய முகாம்களிலும் தனிச் சந்திப்புகளிலும் அண்ணாச்சியின் குறும்புத்தனமான சொல்லாடல்களைப் பற்றியும் முகம் நோக்கி அவர் எழுப்பும் கேள்விகளைப் பற்றியுமான கதைகள் இலக்கியச் சூழலில் எப்போதும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.  அண்ணாச்சியை நேரில் சந்தித்திராதவர்கள் கூட அவரை வெகு அணுக்கமாக உணரச் செய்துவிடுகிறது அக்கதைகள்.

அண்ணாச்சி தன்னையே வரித்து கவிதைகளில் முன்வைப்பதின் நீட்சியாகத்தான் அவரது சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன. அவர் செல்லுமிடமெல்லாம் கையில் காகிதம் வைத்திருப்பார். எச்சூழலிலும் அதில் கவிதைகள் எழுதுவார். அடைமழையில் நனைந்தாலும் அக்கவிதைத் தாளை மட்டும் பத்திரமாகக் கரை சேர்த்துவிடுவார் என்று அவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. பலநேரங்களில் அவர் சொல்லச் சொல்ல உடனிருப்பவர்கள் எழுதி கவிதைகள் கொண்டு சேர்த்ததும் உண்டு. எந்நேரமும் கவிதையில் உழல்பவர், மிக அரிதாகத்தான் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ‘அவன்-அவள்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கதைகள் அத்தனையும் தன்வெளிப்பாட்டின் நேரடி முகம் என்றே கொள்ளத்தக்கவை. சிறுகதைத் தொகுப்பின் இத்தலைப்பே கதைகளின் உள்ளியல்பை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. ‘அவனுக்கும்-அவளுக்கும்’ இடையில் சதா எழும்பி அமைந்து அலையடித்தபடி இருக்கும் உளக் கொந்தளிப்புகளின் ஊசலாட்டம்தான் இக்கதைகளின் மையம். அண்ணாச்சியை நெருங்கி அறிந்தவர்களால் இந்தக் கதைகளுக்கும் அவர் வாழ்விற்குமான நெருக்கத்தைப் புரிந்துகொள்ள இயலும். ‘இவன்’,’பூர்ணன்’,’கருப்பையா’, ‘நம்பி’ என்றெல்லாம் இக்கதைகளில் விளிக்கப்படும் பாத்திரங்களுக்கு நேரடியாகவே அண்ணாச்சியின் முகம்தான். ஆனால், கவிதைகளுக்கு இல்லாத ஒரு சுதந்திரம் சிறுகதைகளுக்குண்டு. படைப்பாளியின் முகமறியாதவன் கூட கதைகளுக்குள் வாழ்ந்து வெளிவரமுடியும். கவிதை கிளர்ந்தெழும் மெளனவெளி இக்கதைகளில் இல்லை. பின்னிப்பிணைந்திருக்கும் உறவுகளுக்கு இடையில் ஊசலாடும் மனங்களின் பதிவுகள்தான் இவை. பெரும்பாலும் ஒரே கதை மாந்தர்களே அத்தனை கதைகளிலும் வருகிறார்கள். சற்று அசந்து கதைகளை வேறு ஏதேனும் வரிசையில் மொத்தமாக வாசித்தால் சுயசரிதத்தன்மையிலான ஒரு நாவல் வாசிப்பனுபவத்தைப் பெறவும் வாய்ப்புண்டு. ஒரு குடும்பத்தின் வெவ்வேறு காலங்களைப் புகைப்படங்களாகப் பதிந்து சட்டகம் போட்டு வரிசையாகத் தொங்கவிட்டதைப் போன்றது இச்சிறுகதைகள். காந்திமதி, சிதம்பரம், சேகர் தம்பி, கமலா சித்தி, பெரியம்மைகள், மதினிகள், ஒன்றுவிட்ட அண்ணன்கள் அக்காக்கள் என உறவுகளால் நிறைந்து ததும்புகிறது இக்கதைகள்.

ஒரு சீட்டுக்கட்டை எவ்வளவு நேர்த்தியாகக் கலைத்து வெவ்வேறு விசை கொண்டு அடுக்கிச் சேர்த்து பின் விரித்துப் பார்க்கும்போது அது மீண்டும் எண் வரிசை பிசகாமல் வந்து நிற்கும் மாயம் போன்றது இக்கதைகள் சென்று முடியும் இடங்கள். எவ்வளவு வறுமையும், உறவு விரிசல்களும், மெல்லிய வன்முறைகளும், சாபங்களும் நிறைந்த இவ்வாழ்க்கை இறுதியில் ஒரு பெருமூச்சுடனோ அல்லது ஒரு புன்னகையுடனோ மீண்டும் அதே நேர்க்கோட்டுக்கு வந்துவிடுகிறது.

அடிப்படையான இரு உணர்வுத் தளங்களில் இக்கதைகளைப் பிரித்து வைத்துவிட முடியும். சிறுவனாக, குட்டி கருப்பையாவாக தக்கவைக்கும் கள்ளமின்மையும் ‘பூர்ணனாக’ வளர்ந்து கணவனாக அடையும் கையறுநிலையும் இச்சிறுகதைகளில் வெளிப்படும் ஆதார உணர்வுகள். நிலை தடுமாறும் உறவுகளை ஒரு குழந்தைமையின் கள்ளமற்றதனத்துடன் சாட்சியாகச் சொல்லப்படும் கதைகள் ஒருபுறமும் அலைபாயும் தெருக் கவிஞனின், போதை உடுத்தி தன்னை இவ்வுலகிலிருந்து வெளியேற்றி பொத்தி வைக்கும் முயலும் கையறுநிலையின் கதைகள் மறுபுறமும் என பிரபஞ்சத்தின் முன் சடை விரித்து, கை விரித்து நிற்கின்றன இக்கதைகள்.

‘அவன் அவள்’ எனும் சிறுகதை ஒரு நீள்கவிதை. அண்ணாச்சியின் கவிதைகளிலிருந்து அவரின் சிறுகதை உலகிற்குள் நுழைவதற்கான பிடி கயிறு என்றே இதைக் கொள்ளாலாம். நீண்ட வசன கவிதை மொழியில் ‘அவன்’ பார்வையில் அவனும் அவளும் நிகழ்த்தும் இந்த நீடித்த யுத்தம் விவரிக்கப்படுகிறது. அவன் மீது அவள் வாசிக்கும் குற்றப்பத்திரிக்கையை அவனால் தாளமுடியவில்லை, அவளது புகார்கள் அவனைச் சுட்டெரிக்கின்றன. பெண்தெய்வங்களிடம் மன்றாடுகிறான். ஆண்களின் மீது கோபமெழுகிறது. அத்தனை ஆண்களையும் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொதிக்கிறான். ‘என்னை விட்டுவிடு’ என்கிறாள். அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்கூடியவள் ஆனால் அவனால் அது முடியாது. சினிமாவிற்கு கூட ஒற்றையாய் போக முடியாதவன். தனித்துப் படுத்து பழக்கமில்லை. ஒரு அடிமையைப் போல இப்போது மண்டியிடுகிறான். ஆனால் திருமணமான முதல் நாளிலேயே அவனுக்குத் தெரிந்துவிட்டது. இவள் ராணி. இவள்தான் ஆளப்போகிறாள். தன்முனைப்பு கொண்ட ஈருயிர்கள் கட்டித் தழுவுதல் கூட போர்முனை விசையில்தானே அமையும். ஆணுக்கேயான அகம்பாவம் ஆளுகையை ஏற்க மறுத்தது. அவள் மனசை மாற்ற முடியவில்லை, எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியிருந்தது. குடித்துவிட்டு வெளியே வந்தவன் ‘அன்புக் கழிவில்லை காண்’ என்று உரக்கப் பாடுகிறான். நடை தூரத்திலிருக்கும் வீட்டிற்கு நிலாவின் துணை கொண்டு மீண்டும் நடந்து செல்கிறான். அவனால் அக்கதவுகளைத் தட்டாமல் இருக்க முடியாது, அவனை உள்ளே சேர்க்கவும் வெளியே தள்ளி அல்லாடவிடவும் அவளால் கதவுகளைத் திறக்காமல் இருக்க முடியாது.

“…

கோயிலுக்கென்று புறப்பட்டு ஒயின்ஷாப்புக்குப் போகிறவனிடம்

ஒரு

ஒழுங்கை

எதிர்பார்த்தால்

ஏமாந்துதான் போவாய்

எனில்

கிளம்பிவிட்டிருந்த உறுத்தலில்

ஒருநாள்

போய்

வந்து

பிரசாதத்துடன் நிற்கும் பொழுதும் ஏமாந்துதான்

போவாய்

நதியின் போக்கு

நற்போக்கா முற்போக்கா பாப்பா”

என்று குறும்புத்தனத்துடன் கேட்கும் கவிஞன் ஒரு நதியைப் போன்றவன். தன் திசை எதுவென்று அறிந்தவனில்லை. தன் போக்கைக் குறித்து அவனுக்கு ஒரு புகாரும் இல்லை, அதை நியாயப்படுத்துவதற்குப் பெரிய காரணமும் கைவசம் இல்லை. ஆனால் அவள் அருவி. ‘பாலருவி’ சிறுகதையில் சங்கரியைப் பேரருவி என்கிறான் அவன். எப்படி எப்படியெல்லாம் காதல் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்ற பின் இப்போது விவாகரத்து கேட்டிருக்கிறாள். மீண்டும் அவள் கதவைத் தட்டுகிறான். தோடு தெறித்து விழ அவளை அவன் அடித்த காலங்கள் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் அவன் விட்டு எத்தனை வருஷமாச்சு. அவளின் முன் கோபமும், பதிலுக்குப் பதில் பேசும் வாய் தானே அதற்குக் காரணம். சென்னையில் பத்திரிக்கையில் வேலை பார்த்து மிச்சம் பிடித்து அனுப்புவது வெகு சிரமம். சமாதானம் செய்துவிடலாம், பார்த்துப் பேசினால் சரியாகிவிடுமென்றுதான் சாத்திய கதவை மீண்டும் தட்டுகிறான். ஆனால் இந்த முறை அக்கதவு திறக்கவில்லை. “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்ற சொல்லுக்கு மறித்துப் பேச இவனிடம் வார்த்தை ஏதுமில்லை. தோல்வியுற்றுத் திரும்பி பேருந்திலேறி ஊரின் எல்லையைத் தாண்டியதுமே நினைவுகள் வந்து மோதுகின்றன. நிச்சயம் இன்றைக்கும் இவனால் குடிக்காமல் இருக்கமுடியாது. இவனைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும். காற்றின் வீச்சில் கலைந்து பறக்கும் சிகையைப் போலவே விதியின் போக்கிற்கு ஒப்புக்கொடுத்தவனாய் முடிகிறது இக்கதை. ஆனால் இவையெல்லாவற்றையும் விடுத்து மீண்டும் தன்னைக் கேலி செய்த கதவின் முன்னே இவன் போய் நிற்பதற்கு வெகு காலமாகாது என்பதும் உண்மையே.

‘இன்னொரு நாள்’, ‘மனசு’ சிறுகதைகள் கணவன் மனைவியிடையே உருவாகும் மெல்லிய விரிசலைச் சத்தமின்றி சுட்டிக்காட்டும் கதைகள். பூர்ணன் வருவதற்குள் சங்கரி தூங்கிவிட்டாள். அவன் இன்னும் சாப்பிடவில்லை, தானே எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது கொடுமை. ஆனால் அவளை எந்த ஓசையும் எழுப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது படிப்பதெல்லாம் அரிதாகிப் போனது. அடுக்களை விளக்கில் ஒதுங்கியமர்ந்து படித்து என்ன ஆகப் போகிறது என்றுகூட நினைக்கத் தொடங்கிவிட்டான். ஓசை படாமல் இரவில் ஒழுகிச் செல்லும் இவன் வாழ்வில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது பக்கத்து வீட்டு தாடி அண்ணாச்சியின் குரல். வடிவு மதினியை வசவுச் சொற்களால் ஏசுகிறான். தான் ஒருவனே எத்தனை விவகாரங்களைப் பார்ப்பது, பிள்ளைகளையும் வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள முடியாது என்று சத்தம் போடுகிறார். பூரணனுக்கு தன் மீதே கோபம் வருகிறது. தன் குரலுக்கான சுதந்திரத்தை ஒரு வேலைதான் பெற்றுத்தர முடியுமென்று யோசிக்கிறான். பெண்டாட்டி உழைப்பில் சாப்பிடுவது ஒரு பிழைப்பா என்று சிந்தித்தபடியே தூங்கிப்போகிறான். ஒரு கவிஞனாக தினம் தினம் விழிப்பவனுக்கு இரவுகள் கொடுமையானவைதான். ஒரு வியாபாரியின் சப்தம் இவன் சிந்தையின் ஓசையைச் சமன் செய்யுமா என்ன? இன்னொருநாளை எதிர்பார்த்து இவன் உறங்கிப்போகிறான்.

இந்த கையறுநிலையை வெகு நுணுக்கமாக வெளிப்படுத்தும் சிறுகதை ‘மனசு’. இச்சிறுகதையில் பெயர்கள் புதியவை. ஆனால் இச்சிறுகதைத் தொடரை வாசிக்கும் வாசகனுக்கு ராஜுவும் பூர்ணனும் ஒருவரே என்று தெரியும். தன் மனைவி அலமேலுவை சதா வந்து சந்தித்துக்கொண்டிருக்கும் அவளின் அலுவலகத் தோழன் தினகரனை இவனால் தடுக்க முடியவில்லை. வீட்டிற்கே வந்துவிடுகிறான். கணவனும் மனைவியுமாக வெளியே சென்றாலும் அங்கே எதேச்சையாக வந்து சந்தித்துப் பேசுகிறான். நிரந்தரமான வேலையில்லை இவனுக்கு. இவளின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அலுவலக விவகாரங்களைக் காரணம் காட்டி தினகரன் அலமேலுவை இவன் கண் எதிரிலேயே இத்தனை முறை சந்தித்துப் பேசி வழிகிறான். தன் சங்கிலியை விற்று இவர்களுக்கு உதவக்கூட தயாராக இருக்கிறான். இவன் எரிச்சலைடையும்போதெல்லாம் மனைவியின் பாவமான முகம்தான் இவனை ஆசுவாசப்படுத்துகிறது. இவனுக்கான அவில் மாத்திரை அவளின் இந்த முகம்தான். சமாதானமடைந்து உறங்கப் போகும் இவன் தன் மனைவியின் மீதான பிடியை ஒரு மெல்லிய நூலிழையாகத்தான் பிடித்திருக்கிறான். எதையும் இறுகப் பிடித்து முறித்துவிடும் நிலையில் அவன் வாழ்வு இல்லை.

அண்ணாச்சியின் கவிதைகளைப் போலவே அவரின் சிறுகதைகளிலும் உள்ளார்ந்து எழும் குறியீடுகளோ, பெரும் படிமங்களோ, உருவகங்களோ இல்லை. நேரடியான உணர்ச்சி சித்தரிப்புகள்தான். எந்தப் பூச்சுமற்ற கதைகள். மெய்யான வாழ்வுத் தருணங்களாலேயே அவை உச்சம் பெறுகின்றன. உறவுகளின் விதி மீறல்களுக்கும் அதைச் சமன் செய்யும் மன்றாடல்களுக்கும் சாட்சியாக நிற்கும் இளவயது பூர்ணனின் கதைகள் பெரும்பாலும் கொதிநிலையில் சொல்லப்பட்டவை. வீட்டிற்கு வராமல் நின்றுவிட்ட அப்பாவுடனான அம்மாவின் போராட்டங்களும், உடன் பிறந்தவர்களின் மரணங்களும், திரிபடையும் மனங்களும், இரண்டாம் தாரமாகி வேரோர் வீட்டில் பிடிப்பின்றி தங்கியிருப்பவளின் விழியோர கண்ணீருமென ஒழிவின்றி ஊசலாடும் கணங்களே கதைகளாகியிருக்கின்றன. ஆனால் அத்தனை உச்ச தருணங்களையும் சிறுவயது பூர்ணன் தன் குழந்தைமை மாறாமல்தான் காண்கிறான். அப்பாவுடன் தனி வீடு புகுந்த கமலா சித்தி இவன் கண்களுக்குக் காவிய நாயகி. அவளின் குடும்பக் கஷ்டம்தான் இவர்களுக்கு வில்லியாகிவிட்டாள் என்று எண்ணுகிறான்.

இந்தக் கதை வரிசையில் பூர்ணனின் சிறுவயது கதைகளையும் நாடோடியாய் வளர்ந்து கையறுநிலையில் தவிக்கும் கதைகளையும் இணைப்பது ‘சாபம்’ எனும் சிறுகதை. அப்பா கமலா சித்தியுடனே வீடெடுத்து தங்கிவிடுகிறார். அம்மாவும் போராடிப் பார்த்து ஓய்ந்துவிட்டாள். தன் பிள்ளைகளை ஆளாக்கினால் போதுமென்று அமைந்துவிட்டாள் அவள். அப்பாவிடம் ஒத்தாசையாக வேலை பார்க்கும் அழகப்பனின் அம்மைதான் இவன் அம்மா தேடிச் சென்று மனம் பகிரும் இடம். இதற்கு வினை வைத்தது போல் அழகப்பன், சித்தியின் அக்காவுடன் பழக்கமாகி தனி வீடெடுத்து தங்க ஆரம்பித்தான். அப்பாவை நம்பி தன் பையனை அனுப்பி ஏமாந்துபோனதாய் ஆச்சி முறையிட்டு அழுதாள். அம்மாவும் அப்பாவிடம் சண்டையிட்டாள். ஆனால், அழகப்பன் வீடு திரும்புவதாக இல்லை. இதன் பிறகு, ஆச்சி வீட்டிற்கு அம்மா பழையபடி போகும்போதெல்லாம் ஆச்சி கரிசனமாய் நடந்துகொண்டாலும் இடையில் ‘அவன் பிள்ளகொள்ளி விளங்குமா’ என்று சாபமிடுவாள். அம்மாவிற்கு மனம் கொள்ளாது. “அவரை என்ன வேணாலும் சொல்லுங்க… பிள்ளையள் என்ன செஞ்சாங்க” என்று கெஞ்சுவாள். அம்மா போவதற்கு எத்தனையோ உறவினர்களின் வீடு இருந்தும் அம்மா ஏன் ஒவ்வொருமுறையும் இந்த ஆச்சியின் வீட்டிற்குச் சென்று சாபத்தை வாங்கிக்கொள்கிறார்கள் என்று இவனுக்கு விளங்குவதில்லை. அந்த சாபச் சொற்களில் முங்கித்தான் அம்மா தன்னை மீட்டுக்கொள்கிறாளாக இருக்கும். ஆனால் அத்தனை சாபமும் இவன் தலை மீது கவிந்து பலிக்கத்தான் செய்தது. குடிகாரனாக, குடும்பத்தைக் காக்கத் தெரியாதவனாக, பிழைக்கத் தெரியாதவனாக நாற்பத்தைந்து வயதில் வளர்ந்து நிற்கிறான். தன் வாழ்வு இப்படித் தறிகெட்டு ஓடும் நிலைக்குப் பால்ய வயதில் அழகப்பன் ஆச்சி விடுத்த சாபம்தான் காரணம் என்று தன் மனைவியின் மடியில் விழுந்து கலங்கி அழுகிறான் இவன்.

“…

சந்திரனுக்கே தெரியும்தானே

சூரியனுக்கு அப்புறம்தான் தானென்று

சந்திரன் பக்கம்தானேயிருப்பான்

கவிஞன்

சூரியனுக்கே இந்த

சூட்சுமம் புரியும்…”

சூரியசந்திரர்கள் எனும் இக்கவிதையின் தலைப்பிலேயே உள்ள சிறுகதையில் பூர்ணனுக்கு தான் யார் பக்கம் என்பதில் குழப்பம் வந்துவிடுகிறது. அம்மா ஏசும் ‘தே..டியாளைப்’ முதன்முறையாகப் பார்க்கிறான். அப்பா இவனைத் தனிமையில் அழைத்து அறிமுகப்படுத்துகிறார். இவன் கிளம்புகையில் சட்டென்று அணைத்துக் கன்னத்தில் முத்தமிடுகிறாள், நிமிர்ந்து பார்த்தால் அவள் கண்ணோரம் நீர் திரண்டிருக்கிறது. அவளின் கலக்கம் இவனுக்கு விளங்கவில்லை. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நடந்ததைச் சொன்னால் அம்மா கொள்ளும் கோபம் இவனை மேலும் குழப்புகிறது.

சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதைகளில் வெளிப்படும் கள்ளமின்மை உணர்ச்சி மேலிடும் கதைகளுக்கு ஒரு தனிச்சுவையைக் கூட்டிவிடுகிறது. ‘கடன்’ சிறுகதையில் அப்பாவிடம் வாங்கிய சைக்கிளுக்கான காசு கடனாக நின்றுவிட அதை மீட்டு வருமாறு சிறுவனை அனுப்பி வைக்கிறாள் அம்மா. பெரியவனின் தோரணையில் பெரியம்மையின் வீட்டு வாசலில் நின்று காசு இல்லாமல் திரும்புவதில்லை என்று அடம் பிடிக்கிறான். வழக்கமாக வந்து போகும் பெரியம்மை வீடு இன்று அவனுக்கு வென்று எடுக்க வேண்டிய போர்க்களம் போலாகிவிடுகிறது. பாதி காசாவது கொடுத்து விடுகிறேன் நீ வந்து சாப்பிடு என்று அண்ணன் அதட்டி அழைத்த பின்னரே அவன் இலையில் கை வைக்கிறான். விருந்தைப் போன்ற ஒரு நல் உணவை உண்டு முடித்தபின்தான் கவனிக்கிறான், இதுநாள் வரை அங்கிருந்த ஒரு செப்பானை காணாமல் போயிருப்பதை. அப்பாவின் கடையில் ஒவ்வொரு சைக்கிளாய் காணாமல் போனதிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

இவனை அழைத்துக்கொண்டு அப்பாவைத் தேடிப் போய் பார்க்கிறாள் அம்மா, ‘கொதி’ சிறுகதையில். கண்களில் நீர் ததும்ப தன் வாழ்விற்கும் பிள்ளைகளுக்கும் ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று அடம் பிடிக்கிறாள். அப்பா அவளை மிகப் பொறுமையாக சமாதானப்படுத்த முயல்கிறார். அம்மாவின் ஆங்காரமும் அப்பாவின் நிதானமும் இவனுக்குப் பதற்றத்தைக் கொடுக்கிறது. அப்பாவின் தோளைப் பற்றிய அம்மாவை ஏதோவொரு வேகத்தில் நெட்டித் தள்ளியதில் சுவரில் முட்டி அவள் தலையிலிருந்து இரத்தம் வழிகிறது. அம்மா கண் விழித்து எழுந்து நின்று நேரமாச்சு போகலாம் என்று சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.

ஆங்காரப் பேச்சுகளுக்கும் திரிபடைந்த மன வெளிப்பாடுகளுக்கும் அஞ்சி வளரும் கள்ளமற்ற சிறுவனாகத்தான் பூர்ணன் வெளிப்படுகிறான். தக்க வைத்துக்கொண்ட கவிமனம்தான் பிற்காலத்தில் அவனை பகவதி அம்மையிடம், குழல்வாய்மொழி அன்னையிடம், கன்னியாகுமரி தேவியிடம் வெற்று கைகளை ஏந்தி கவிபாடித் திரியும் நாடோடி பாணனாக உருமாற்றியிருக்கிறது.

“இன்றைய கவிதை – எதிர் கவிதை” என்று எந்த கட்டுக்குள்ளும் அடங்காத கவிதைகளை எழுதிக் குவித்தவர்தான் என்றாலும் அண்ணாச்சிக்கு சிறுகதைகள் சற்று அதிகமான சுதந்திரத்தைக் கொடுத்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. 90களின் தொடக்கம் முதல் 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் அத்தனையிலும் ஒற்றை வாழ்வின் பல்வேறு பக்கங்களைத் தொட்டுத் திறந்து காட்டியபடியே இருக்கிறார். பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு கதை மாந்தர்கள் இச்சிறுகதைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவி வந்து நிற்கிறார்கள், பாத்திரங்களின் ஒருமை குலையாமல். தன் நீண்ட நெடிய வாழ்வில் கடந்து வந்த வினோதமான மனிதர்களும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கதையில் ஒரு புதிய வண்ணத்தைப் பாய்ச்சிவிட்டுப் போய்விடுகிறார்கள். உதாரணமாக, ‘எலிஸபெத்ராணி’ சிறுகதையில் பழைய இறும்புக் கடையில் பணிபுரியும் வண்டிக்காரர்கள்.

இன்று கிட்டத்தட்டத் தொன்மக் கதைகளாகவே மாறிவிட்டன அண்ணாச்சி பற்றிய பேச்சுகள். கவிதைகளிலும் கதைகளிலும் அவர் தன்னையே முன்வைக்கும் தோறும் அவர் மீது மர்மங்கள் வந்து கவிந்தபடியே இருக்கின்றன. திறக்கத் திறக்க உள்ளே ஒரு புலப்படாத மர்மம் தன்னை மூடிக்கொள்வதைப் போல. குழந்தை மனமே நேரெதிரான மாயக் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. நேரடித்தன்மையும் எளிமையும் கொண்டே அம்மாயத் தருணங்களை மீட்டெடுக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். ‘பிழை’ சிறுகதையில் அம்மாவும் ‘இவனும்’ சாலையில் நீர் அரித்து வெங்காயம் முளை தெரிய இரைந்து கிடப்பதைக் கண்டு, துண்டு நிறையச் சேகரித்துக் கட்டி வைத்துக்கொள்கிறார்கள். வழியில் ஆட்டிடையர்களிடம்  ‘வெங்காயம் இப்படி வெள்ளையாக இருக்கிறதே’ என்று விசாரிக்க, அவர்கள் ‘விஷப் பூண்டை ஏன் கட்டி வெச்சிருக்கீங்க, யாரும் தின்னுடலையே’ என்று கேட்பார்கள். இவர்கள் பதைத்து அவற்றைக் கொட்டிவிட்டுப் போவார்கள். வெங்காயமும் விஷப்பூண்டும் கண நேரத்தில் இடம் மாறுவதைப் போன்ற மாயத் தாண்டவம்தான் இவ்வாழ்க்கை. ஊழுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவன், மாய வசீகரத்தில் சிக்குண்டு தன்னையே பணயம் வைத்துச் சூதாடும் குழந்தைக் குறும்புடையவனை அந்தப் பூண்டும்தான் என்ன செய்துவிடும்?

நரேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைதிருவெள்ளறை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதெய்வச்சொல்