கல்குருத்து -கடிதங்கள் 10

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

மீண்டும் ஒரு ஆழமான அற்புதமான சிறுகதை.

அம்மியும் குழவியுமாக, இழைந்து இழைந்து வாழ்ந்து, இப்போது தேய்ந்து குழியானாலும் பழைய நினைவுகளின் கருப்பட்டித் தித்திப்பில்  வாழ்ந்து கொண்டிருக்கும்  கண்ணப்பனின் தாத்தா பாட்டியையும் அவர்களுக்கிடையில் இருக்கும் அந்த நினைவுகளின், உறவின், அன்பின் பிணைப்பையும் வாசிக்க வாசிக்க மனம் நிறைந்துகொண்டே இருக்கிறது. பல முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும்  அழகம்மையை போலவே நானும்  நிறைவாக  புன்னகைக்கிறேன்.

ஒரு சிறுகதை, வாசிப்பு மனதிற்கு இத்தனை நிறைவையும், அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என உங்கள் கதைகளை வாசிக்கும் முன்பு நான் நினைத்ததில்லை.

இரவில் அம்மிக்குழியில் நிலவு தேங்கி நீர்போல பளபளப்பது வாசிக்கையில் அத்தனை அழகாக இருந்தது. அந்த வயதான தம்பதிகளின் அத்தனை வருட இல்வாழ்க்கையை அந்த காட்சி அழகாக  சொல்லி விடுகிறது

கதையை வாசிக்கையிலேயே மனம் அங்கிருந்து எப்படியோ தாவி அயினிப்புளிக்கறிக்கு போனது. ஆசானின் ஓலைக்கூரையிட்ட குடிசையில் கூரை வழியே சாணி மெழுகிய மண் தரையில் விழுந்துகிடந்த நிலவு வெளிச்சத்தை நினைத்துக்கொண்டேன்.

கிழவனும் கிழவியும் மட்டுமல்லாமல், இரவில் நெகிழ்ந்து கைவிரல்களை சொடக்கு எடுத்துவிடும், வெளிச்சம் வந்ததும் எரிந்துவிழும் கண்ணப்பனும் அழகம்மையும்,  மனைவியின் காப்பியையும் தான் வாங்கி குடிக்கும் தாணுலிங்கமும் காளியம்மையும் என்று இவர்களும் அம்மியும் குழவியுமாகத்தான் இருக்கிறார்கள்.  மேடுகள் சமமாகும் வரைதான் கரடும் முரடும் அதன் பிறகு ஒன்றோடொன்று இழையும் கனிவும் காதலுமாகிவிடுகிறது

அந்த  பழைய அம்மியின் காலம் முடிந்து அது பயனற்றுப்போனாலும், வாழ்ந்த காலத்தின் நினைவுகள் அந்த குழியில்  பளபளத்து தேங்கிக்கிடக்க இருவருமாக தமக்குள் பேசிக்கொள்வதும், காலடியில்அமர்ந்திருப்பதும் கிழவிக்கென்று கிழவர் இனிப்பு கேட்பதுமாக அழகான காதல்கதை.

அழகம்மை அன்று கல்லிலிருந்து அம்மியும் குழவியும் உருவாவதை பார்க்கிறாள், கன்று சொக்கி அகிடுமுட்டி பாலருந்துவதை மலர்ந்து கவனிக்கிறாள் தாணுலிங்கம் காளியம்மையையும் கவனிக்கிறாள், கல்லுக்குள் இருக்கும் கனிந்த  இன்னொன்றை, ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் வாழ்வின் அர்த்தத்தை எல்லாம் அன்றுதான் அறிந்துகொள்கிறாள்

கண்ணப்பன் கல் மட்டுமல்ல அவனுக்குள்ளும் கனிந்து பளபளக்கும் அன்பிருப்பதையும், அக்குடும்பத்தின் வேர்களாக பெரியவர்கள் இருப்பதையும் உணரும் அவளுக்குள்ளும்  முளைத்திருக்கிறது ஒரு கல் குருத்து.

அழகிய கதை அழகம்மையும் கண்ணப்பனும் கூட இப்படி ஒருவருடன் ஒருவராக இழைந்து தேய்ந்து குழியாகி பல ஆண்டுகள் வாழ்வார்களாயிருக்கும்.அந்த கருப்பட்டியின் தித்திப்பு கதையை மனதுக்கு நெருக்கமாக்கி விட்டது.

’’பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது, இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”

அயினிப்புளிக்கறியை மீண்டும் வாசிக்க வேண்டும்

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள ஜெ

கல்குருத்து அழகான கதை. பிரதமன், அயினிப் புளிக்கறி, என இத்தகைய கதைகளின் ஒரு வரிசையே ஞாபகத்துக்கு வருகிறது. எல்லாமே உறவின் நறுமணம் கொண்ட கதைகள். ஆனால் எவற்றிலுமே செண்டிமெண்ட் இல்லை. செயற்கையான சந்தர்ப்பங்களும் இல்லை. பிரதமனில் அந்தப் பாயசம் திரண்டு வரும் தருணம் போன்ற இனிமைதான் இந்தக்கதையிலும் அம்மி உருவாகும்போது உள்ளது. மனித உள்ளத்தில் அன்பு நிகழ்வும் உயர்ந்த நிலையை கலையால் சொல்லிவிட முடிகிறது. அதுதான் இந்தக்கதைகளை இத்தனை இனிமையானவையாக ஆக்குகின்றது

செல்வன் பிரகாஷ்

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து- கடிதம்- 6

கல்குருத்து கடிதம்- 7

கல்குருத்து- கடிதம் -8

கல்குருத்து -கடிதம் -9

முந்தைய கட்டுரைலொரென்ஸா டி மெடிசியும் கேதுமாலனும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்.