லொரென்ஸா டி மெடிசியும் கேதுமாலனும்

இமைக்கணத்தின் முன் பாகஙகளின் நரக வர்ணணைகள் தாந்தே அலிஜிரியின் டிவைன் காமெடி யோடும், கருட புராணத்தோடும் ஒப்பிட்டு படித்து பாருங்கள் என்று நண்பர்கள் சொன்னதை ஒட்டி தாந்தேயின் விண்ணோர் பாடலும், டான் ப்ரெளனின் இன்பர்னோவையும் படித்து கொண்டிருந்தேன்.

இன்பர்னோவில் லாங்டனும் , சியன்னாவும் ப்ளோரென்ஸின் நகர தெருக்களிலும், பபோலி தோட்டத்திலும், வாசரி தாழ்வாரத்திலும் , அதோடு வரலாற்றின் குறுக்கேயும், பொட்டிசெலி, மைக்கேல் ஏஞ்சலோ, Bernardo buotalenti, தாந்தே இவர்களின் படைப்புகளினூடாகவும் செல்லும் போது மெடிசி பற்றி பேராசிரியர் சொன்னதை தொடர்ந்து படித்தால், லொரென்ஸோ டி மெடிசியின் கலை தாகம், மறுமலர்ச்சியில் அவரின் பங்களிப்பு தன் செல்வங்களை கலைக்காக அர்ப்பணித்தது என்று வந்து கொண்டே இருக்கிறது.

மெடிசி பேணிய கலை பொக்கிஷஙகள் இன்றும் அமரத்துவத்தோடு இருக்கின்றன. அவர் பற்றிய டாக்குமென்டரிகள், இமைக்கணத்தின் கேதுமாலனை நினைவு படுத்துகின்றன. இருவரையும் ஓர் ஆழ்ந்த தாகம் அழகு , அழகு என்று தேடி தேடி செல்ல வைக்கிறது . கலை ஆர்வத்தின் பொருட்டு தன் வாழ்வைவே அர்ப்பணித்து வரலாற்றிலும், காலத்திலும் நிலை பெற்று ஒளிரும் மெடிசி அதன் வழியே மெய்மையை அடைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் கிழக்கத்திய தத்துவ புலத்தில் மலரும் கேதுமாலன் அழகு வழியாக மெய்மையை, எது தூய அழகு என்பதை உணர்ந்து அருகராக மலர்கிறார்.

மெடிசி குடும்பம் மறுமலர்ச்சி கலையின் உருவாக்கத்திலும், மறுமலர்ச்சி ஓவியர்களை பேணியதிலும், களம் ஒருக்கி கொடுத்ததிலும் மிகுந்த தாக்கம் கொண்டது. ஆனால் மெடிசி குடும்பத்தில் நிகழ்ந்த கொடும் வன் முறைகள், நஞ்சூட்டல், அரசுசூழ்கையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வஞ்சங்களும் அதே அளவு எதிர்மறை முக்கியத்துவம் வாய்ந்தவை. கிழக்கத்திய மனஙகள், கிழக்கத்திய சிந்தனைகள் ,கலைஞர்கள், கலை பேணுநர்கள் சிலர் தவிர்த்து கலையை ஆன்மீகமாக மாற்றிக்கொண்டு முன் நகர்ந்து தானே இருக்கிறார்கள்.

இப்படி ஒரு மகத்தான கலையை பேணி , வாய்ப்பளித்து அமரத்துவம் பெற்ற கலைகளின் பாதுகாவலன் கொலைஞனும் கூட என்பது மிகப்பெரிய முரணாக இருக்கிறதே… இதன் ஆரம்ப பிரச்சினை மேற்கத்திய தத்துவ மூலத்தில் இருந்து தானே துவங்கி இருக்க வேண்டும். இங்கு பாகுபலி, மகாவீரன் மிகுந்த அமைதியும் புல், பூண்டுக்கும்  தீங்கிழைக்காதவர். மேற்கே அறிவு அணுகுண்டாகவும், வீரம் போர்வெறியாகவுமே தானே மாறி இருக்கிறது. கிழக்கின் ஆன்மீகவயமான அனுபவத்திற்காக இருக்கும் பல நுழைவுகளில் கலையும் ஒன்று. ஆனால் மேற்கிலும் அது அப்படி தான் பொருள் கொள்ளப்படுகிறதா?

ராஜமாணிக்கம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அடுத்த கட்டுரைகல்குருத்து -கடிதங்கள் 10