அன்புள்ள ஜெ
கிளாஸிக் நாவல் பற்றிய உங்கள் உரை கேட்டேன். உரையைக் கேட்குமுன் நாவலின் வடிவம் பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் பேசியதெல்லாம் வாழ்க்கையைப் பற்றி.வாழ்க்கையின் பெருஞ்சித்திரத்தை நாவல் அளிக்கும்போது அது கிளாசிக் நாவல். அதை எப்படி அளிப்பது என்னும் கேள்விக்காகத்தான் அது பலவகையான வடிவங்களை நோக்கிச் செல்கிறது. வெறும் வடிவச்சோதனைகள் நாவல்கள் அல்ல. அவை வெறும் புதிர்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையை எந்த அளவுக்கு முழுமையாகக் காட்டுகிறதென்பதே ஒரே கேள்வி என புரிந்துகொண்டேன்
நன்றி
அர்விந்த்
அன்புள்ள ஜெ ,
உங்களது கிளாசிக் நாவல் பற்றி உரை கேட்டேன் , கிளாசிக் நாவலுக்கான இலக்கணங்கள் ரொம்ப பிடித்தது , சில நாட்களாக என் மனதில் இருந்த எண்ணம் வெறும் கிளாசிக் அதுவும் தேர்ந்தெடுத்த நூல்கள் மட்டும் வாசித்தால் போதும் என எண்ணியிருந்தேன் , முக்கியமா கம்பராமாயணம் ,அப்பறம் வெண்முரசு ,இது இரண்டை மட்டும் ஆழமா வாசித்தால் போதும் எனும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன் , இது தாண்டி வரலாறு வாசிக்க வேண்டும் என நினைத்தேன் , தமிழ் நில வரலாறுகள் , இந்திய மற்றும் உலக வரலாறுகள் , மிக சுருக்கமான ,தெளிவான சில நூல்கள் வழியாக என எண்ணி அது சார்ந்த நூல்களை தேட எண்ணியிருந்தேன் . மூன்றாவது ஜமண்ட் , யுவால் நூல்கள் வாசித்து பார்க்க ( இந்த ஜானர் ) ஆர்வம் இருந்தது , நவீன தமிழிலக்கியம் விட்டுடலாம் என எண்ணினேன் ,
இந்த உரை கேட்ட போது நவீன உரைநடை கிளாசிக் நாவல்களையும் வாசிக்கலாம் என தோன்றியது , முக்கியமான காரணம் நீங்கள் கிளாசிக் நாவலின் இயல்புகள் என உரையில் குறிப்பிட்ட அம்சங்கள், மேலும் நீங்கள் 17-18 நூற்றாண்டில் தமிழ் இஸ்லாமிய பரப்பில் நிகழ்ந்த மாற்றங்கள், அய்யா வைகுண்டர் பற்றி சொன்னபோது இதை போன்ற ஒரு பரப்பை வைத்து நானும் ஒரு நாவல் எழுத வேண்டும் என நினைத்தேன் :)
மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ் உரைநடையில் நிகழ்ந்த மாற்றங்கள் என நீங்கள் முன்வைத்ததெல்லாம் கேட்க ஆர்ச்சிர்யமாக இருந்தது
ராதாகிருஷ்ணன்