அன்பிற்கு இனிய ஜெயமோகன் அய்யாவுக்கு,
வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் நண்பர்களை சந்திக்க ஆவலாக இருக்கும் நேரத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகிழ்ச்சியான மனநிறைவான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.edfz
தொடர்ச்சியான செயல்பாட்டினூடே ஒரு பெரும் காத்திருப்புக்கு பிறகு காத்திருந்த விடயம் செயல்பட தொடங்கும்போது அதனால் உண்டாகும் மகிழ்ச்சி எல்லையற்றது. அதனை உணரும்போது இந்த வாழ்விற்கான ஒட்டுமொத்த நிறைவை அது கொடுத்துவிடுகிறது. அப்படி என்னுள் நானே என் வேலைகளை பரிசீலனை செய்து மகிழ்ச்சியாய் உணர்ந்த தருணம்தான் இது.
நூற்பு ஆரம்பிக்கும்போது குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் சிவராஜ் அண்ணனுடன், வெரும் பொருள் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட வேண்டும், நெசவு சொல்லிகொடுக்கும் ஆசிரியராக மாறிவிடவேண்டும் என்று பேசிய வார்த்தைகளில் இருந்த கனவு மெல்ல மெல்ல மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் ஆண்டு தொடக்கமான சென்ற மாதத்தில் பெங்களூரிலும், அஸ்ஸாமிலும் இருந்து குடும்பமாக வந்திருந்த மூன்று பேருக்கு கைநூற்பு மற்றும் கைநெசவு சொல்லிக்கொடுத்து அவர்கள் தாகம் தீர்ந்து சென்றது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
நிசா வடிவமைப்பாளராக பெங்களூரில் பணிபுரிகிறார், நிரு மற்றும் நிக்கில் கணவன் மனைவி இருவரும் கோல் இந்தியாவில் பணிபுரிகின்றனர். நிசாவும் நிரும் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள்.இருவருக்கும் சிறுவயதில் இருந்து நெசவு செய்வதில் பெரும் விருப்பமாய் இருந்திருக்கிறது. அதன் பிறகு அவர்களது படிப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல் வேறொரு இடத்திற்கு செல்லவைத்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் நெசவு என்ற தீரா தாகம் அவர்களை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்க, பெங்களூரில் தன்னுடன் பணிபுரியும் தோழர் இராமிடம் ஒரு உரையாடலில் சொல்லியிருக்கிறார்கள்.
இராம் என்னுடன் தொடர்புகொண்டு , சிவகுரு நூற்பில் நெசவு பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்டார். என்னால் உடனே பதில்தர இயல்வில்லை. வெகு தொலைவில் இருந்து நெசவு கற்றுக்கொள்ள வருகிறார்கள் என்ற பதற்றமான மனநிலையே காரணமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கான தயாரிப்பு வேலைகள் சரியாக நிறைவுபெறாத நிலை எல்லாம் ஓர் ஆழ்ந்த மன அழுத்தத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டது.எல்லாவற்றையும் தாண்டி தொடர்ச்சியான செயல்பாட்டின் பலன் நிதர்சனத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது, எதற்காக இந்த பாதையில் பயணிக்கிறோமோ அதன் முழுநோக்கமும் செயல்பட ஆரம்பிக்கபோகிறது என்ற ஒரு வித மன உந்துதல் தொடர்சிந்தனையை ஏற்படுத்திகொண்டே இருந்தது.
சில நாட்கள் கழித்து இராமிடம், எங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறோம் என்று சொல்லி, இரண்டு வாரங்கள் கழித்து மூன்று பேரும் தொழிற்கூடத்திற்கு வந்து அங்கேயே தங்கி உள்வாங்கிக்கொண்டு சென்றனர். மூன்று பேரும் கற்றுக்கொள்வதற்கு அவ்வளவு தயாராக இருந்தனர். விடியற்காலையிலேயே எழுந்து யோகா மற்றும் தியானம், இயற்கை உணவு, இருவேலை உணவு என அவர்களின் தினசரி வாழ்வு முறை என்னுள் இருக்கும் மனசாட்சியை கேள்விகேட்டு அதன் தீவிரத்தை அதிகரித்தது. முதல் நாள் நூலின் வகைகளையும் துணியின் தன்மையையும் பகிர்ந்துகொண்ட பிறகு கைத்தறியின் பாகங்களை பற்றி விவரித்தேன். பிறகு கைராட்டையால் ஊடைக்கு நூல் சுற்றுவதையும் அதில் சந்திக்க நேரும் சவால்களை, தான் படித்த டிப்ளமோ ஆட்டோமொபைல் துறை சார்ந்த வேலைக்குச் செல்லாமல் சிறு வயதில் இருந்தே கைநெசவை நேசத்தோடு செய்து வரும் பாலுவும் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாம் நாள், முதல் நாள் பகிர்ந்துகொண்டவைகளை அவர்கள் மூவரும் செய்துபார்த்தனர். அதற்கு பிறகு அச்சு பற்றியும், பாவு சுற்றுவதை பற்றியும், நாடாவின் பயன்குறித்தும், எப்படி பாவு புணைப்பது பற்றிய விவரங்களை இருவரும் பகிர்ந்துகொண்டோம். நாளின் பாதிக்கு பிறகு கைத்தறியில் ஏறி உட்கார்ந்து நெய்துபார்க்க தொடங்கினர். இரவுவரை நேரம் பார்க்காமல் நெய்துபார்த்தனர்.
இரவு உறங்குவதற்கு முன் அவர்களின் சிறுவயது வாழ்க்கை சூழல் அவர்கள் கடந்துவந்த பாதை என உரையாடல் போய்க்கொண்டிருந்தபோது காந்தி மற்றும் காந்தியம் நோக்கி உரையாடல் சென்றது. இங்கு மட்டுமில்லை நாடு முழுவதும் வெறுப்பின் மொழி மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. அந்த தருணத்தில் இன்றைய காந்தியில் படித்த உங்களின் வரிகள்தான் அவர்களை கண்விரித்துப்பார்க்க வைத்தது. உறையாடல் முடியும் சமயம் மெல்லிய நூல் கட்டுரையை வாசித்து என்னால் இயன்ற வகையில் மொழிபெயர்த்து அவர்களிடம் விவரித்துச்சொன்னேன். நான் படித்த வரிகளில் உட்பொதிந்திருக்கும் உண்மை காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் கட்டாயம் அவர்களின் மனதில் வேறொரு பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களின் காந்தியம் குறித்த சில கட்டுரைகள் மொழிபெயர்த்தால் வேற்றுமொழியில் இருப்பவர்களுக்கும் வேறொரு பரிமாணம் கிடைக்கும் என்று அந்த கணத்தில் தோன்றியது.
மூன்றாம் நாள் விடியற்காலையிலேயே எழுந்து நெய்து பார்க்க தொடங்கிவிட்டனர். ஓரளவிற்கு மூவருக்கும் வாட்டுபிடிப்பதற்கு கைவந்துவிட்டது. இதற்கு பிறகு தொடர்ச்சியாக நெய்துபார்த்தார்கள் என்றால் நெசவு கைவந்துவிடும்.
மூன்றுநாட்களில் நெசவு முழுமைபெற்றுவிடுமா என்றால் முழுமைபெறாது. உடல் மனம் என யாவும் இலயித்துப்போய் அதில் மூழ்க கட்டாயம் நாள்பிடிக்கும். அது அவரவர் அகவிருப்பத்தையும் உள்தீவிரத்தையும் பொறுத்தது. அறுபதுவயது கடந்தவ்ர்கள்கூட வேற எதாவது வடிவம் இதில் நெய்யனும்பா என்று ஏக்கப்படும் நெசவாளிகளும் இருக்கிறார்கள். மூன்று மாதம் காலம் இதில் இருந்தார்கள் என்றால் கட்டாயம் ஓரளவிற்கு கைதேர்ந்துவிடுவார்கள்.
எங்கள் இருவருக்கும் தெரிந்தவற்றை முதன் முறையாக நூற்பில் நடந்த பயிற்சியில் கைமாற்றியிருக்கிறோம். நாற்பது ஆண்டுகாலத்திற்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிற எத்தனையோ மனிதர்கள் அமர்ந்து கைகால்களை அசைத்து துணிகளை உருவாக்கிய கைத்தறியில் முதன் முதலாக தாகம் தீர்ந்து சென்றிருக்கிறார்கள் என்பது புதிய சக்தியை என்னுள் பிறப்பித்திருக்கிறது. இத்தருணத்தில், ஒரு பெரிய வெறுப்புக்கு இடையில் அன்பை விதைக்க முடிந்திருக்கிறதென்றால் உங்கள் வார்த்தையில் இருக்கும் சத்தியத்தின் வலிமையை அகம் வழுவாக இறுகபற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது.
என்றென்றைக்குமான நன்றியும்… இறைவேண்டலும்…
சிவகுருநாதன் சி,
நூற்பு கைத்தறி ஆடைகள்,
+919578620207.