ஒலிபரப்பல்- சில நெறிகள்

வணக்கம் சார்,

நான் படிக்கும் சில புத்தகங்கள் ஒரு சில மாதங்களில் நான் மறந்து விடுவேன், அதை நினைவு குறிப்பாக மாற்ற ஒரு நாட்குறிப்பில் எழுத அதிக நேரம் எடுப்பதால் நான் சில நாட்களிர்க்கு பின் நாட்குறீப்பில் எழுதுவதையும் கை விட்டு விட்டேன். பின் இதை ஒரு ஒலியாக பதிவு செய்து சேமித்து வைக்க நான் இந்த podcast வசதியை  தேர்வு செய்தேன், இதை பகிரலாம் எனும் நோக்கம் வரும்போது அதை ஒரு புத்தகத்தின் அறிமுகமாக கருதினேன். இன்னும் நேர்த்தியான மற்றும் இயல்பான பேச்சை கொண்டு வர முயற்சிக்கிறேன். இந்த பதிவுகளில் நேற்று நான் படித்து முடித்த “முகங்களின் தேசம் ” புத்தக அறிமுகத்தை பதிவு செய்துள்ளேன்.

நன்றி வணக்கம்

குணசேகரன்

https://open.spotify.com/episode/0m8WiYMJ0EeJt0uJq4TE3b?si=xcMg1boGRmObzWYm5mDBbA&utm_source=copy-link&nd=1

அன்புள்ள குணசேகரன்,

நல்ல முயற்சி. அறிவார்ந்த செயல்பாடுகளுக்கான எந்த முயற்சியும் நன்றே. வாழ்த்துக்கள்.

சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொல்ல பொதுவான ஒரு பீடிகையை போடலாகாது. நீங்கள் பயணம் பற்றி பொதுவாகச் சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கிறீர்கள். அது கேட்பவர்களுக்கு தெரிந்தது. அதை ஏன் சொல்லவேண்டும்?

எந்த உரைக்கும் தொடக்கம் முக்கியமானது. உரையின் தொடக்கத்தை ஈர்க்கும் வகையில் அமையுங்கள். ஒரு நிகழ்வில் இருந்து, ஓர் உதாரணத்தில் இருந்து ஆரம்பியுங்கள். “ஜெயமோகன் அவரோட நண்பர்களோட ஆந்திராவிலே இருக்கிற நல்கொண்டா மாவட்டத்திலே ராமப்பா டெம்பிளை பார்க்கபோறார்’ என ஆரம்பியுங்கள். கேட்பவர் உள்ளே வந்துவிடுவார்.

அல்லது மேலும் தகவல்சேர்த்து ‘2020லே யுனெஸ்கோ ஆந்திராவிலே உள்ள ராமப்பா டெம்பிளை உலகக் கலைச்செல்வமா அங்கீகரிச்சிருக்கு. அந்த கோயிலுக்கு ஜெயமோகன் போன ஒரு அனுபவம் இந்த நூலிலே இருக்கு” என ஆரம்பிக்கலாம். ஈர்ப்பு முக்கியம்.

செய்தி இல்லாத, சுவாரசியம் இல்லாத எதையுமே சொல்லாமலிருக்கவேண்டும். அது மிக முக்கியம். வெறுமே சொற்றொடர்களைச் சொல்லக்கூடாது. அதேபோல ‘இப்ப பாத்தீங்கன்னா’  ‘அதேசமயம்’ போன்ற பொருளற்ற இணைப்புச் சொற்களையும் தவிர்க்கவேண்டும்.

வெறுமே உங்கள் அனுபவமாக மட்டும் அமையலாகாது. உங்கள் கருத்து – மதிப்பீடு இருக்கவேண்டும். கேட்பவருக்கு நீங்கள் எதையாவது திட்டவட்டமாகச் சொல்லவேண்டும். ஆர்வமூட்டும்படியும் சொல்லவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகதீட்ரல்- எனும் ஆடல் சபை
அடுத்த கட்டுரைமத்துறு தயிர்- ஒரு கடிதம்