தமிழ், குறிகளும் ஒற்றும்

அன்புள்ள ஜெ..

எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய”  ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார்

வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து  சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்படுத்துவதை சிலர் செய்கிறார்கள்.இந்த அலங்காரங்கள் தேவை இல்லை என்று சொல்வோரும் உண்டு

உங்கள் நிலைப்பாடு என்ன

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

நலம்தானே?

மொழியின் எழுத்து வடிவத்திற்கும் அதன் உச்சரிப்பு வடிவத்திற்கும் உள்ள உறவென்பது நேரடியானது அல்ல. உச்சரிப்பு என்பது வேறு எழுத்து வேறு. ஓர் எழுத்துவடிவத்தை இன்ன உச்சரிப்பு என ஒரு சூழலில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வதனால் அப்படி பயன்பாடு கொள்கிறது. இந்த பொதுப்புரிதலால்தான் மொழி இயங்குகிறது.

முகம் என்னும் சொல்லில் உள்ள வும் கலம் சொல்லில் உள்ள வும் வேறு வேறு. சம்ஸ்கிருதம், அதைப் பின்பற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வேறு வேறு உண்டு. நமக்கு இல்லை. சிலர் அதை தமிழின் பெரிய குறையாகக் கண்டு  எழுத்துக்களின் மேலே அடையாளம் போடுவது, கீழே கோடு போடுவது போன்று பல முயற்சிகளை முன்வைத்ததுண்டு. ஆனால் நமக்கு வெவ்வேறு ஆக அதை வாசிக்க எந்த தடையும் இல்லை.

உச்சரிப்பை அப்படியே எழுதிவிடவேண்டும் என்பவர்கள் மொழி செயல்படும் விதத்தை அறியாதவர்கள். மொழியின் எழுத்துவடிவம் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாறிவிடுகிறது. மாறியாகவேண்டும். அதற்கான பல தேவைகள் காலப்போக்கில் உருவாகிக்கொண்டே இருக்கும்.

வியப்பு என்னவென்றால், அதேபோல மொழியின் உச்சரிப்பும் மாறிவிடுகிறது என்பதே. தமிழ் மொழியின் உச்சரிப்பு மாறியிருப்பதை சினிமாக்களை கண்டாலே உணரலாம். பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்டால் இன்னும் துல்லியமாக உணரலாம். பழைய சங்கீதக்காரர்கள், தலைவர்களின் சொற்பொழிவுகளை இன்று கேட்டால் அவை காலத்தின் வேறொரு கரையில் ஒலிப்பவையாகப் படுகின்றன.

நூறாண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் மென்மையாக, சம்ஸ்கிருத எழுத்துக்களான ஹ ஷ போன்றவை துல்லியமாக ஒலிப்பவையாக உள்ளது. அதன்பின் ஓங்கிய உச்சரிப்பும், வல்லினம் மிகுந்த ஓசையும் உருவாகி வந்தன. காரணம் வானொலி அறிவிப்புகள் மற்றும் மேடைப்பேச்சு ஆகியவை என நான் ஊகிக்கிறேன். அழுத்தமாகச் சொல்லவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தது. அவை பொதுப்பேச்சை பாதித்தன.

சென்ற முப்பதாண்டுகளில் தமிழ் உச்சரிப்பு மீண்டும் மென்மையாகியிருக்கிறது. ஆங்கிலத்திற்குரிய மென்மை இது. ஆங்கில உச்சரிப்பை இளமையிலேயே பள்ளிகளில் கற்பிக்கிறார்கள். தமிழ் அந்த உச்சரிப்பில் சென்றமைகிறது. சொன்னான் என்னும் சொல் தமிழில் இருபதுகளில் ஷொன்னான் என்றும், எண்பதுகளில் ச்சொன்னான் என்றும் இன்று ஸொன்னான் என்றும் ஒலிக்கிறது.

எல்லா காலத்திலும் ஓர் உச்சரிப்பு ‘எலைட்’ ஆனது என கருதப்படுகிறது. உயர்குடி, உயர்தளத்திற்குரியது என. [எல்லா மொழிகளிலும் அப்படித்தான்] மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். அதுவே பொதுப்போகாக ஆகிறது. இன்று  ஆங்கில உச்சரிப்புடன் பேசுவது படித்தவர், நாகரீகமானவர் என்னும் சித்திரத்தை அளிக்கிறதென கருதப்படுகிறது.

ஆகவே மொழியின் மாற்றங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதன் சாராம்சமான கலையிலக்கியம், சிந்தனைகள், சொல்வளம் ஆகியவை அழியாமலிருக்கின்றனவா , தொடர்ந்து கற்கப்படுகின்றனவா என்று தான் பார்ப்பேன். எனில் அம்மொழி வாழ்கிறது. இலக்கணப்பிடிவாதம் மொழிக்கு எதிரான ஒரு பழமைவாத மனநிலை. கலையிலக்கியங்கள், சிந்தனைகளில் ஆர்வமோ அறிதலோ இல்லாதவர்களின் செயல்பாடு அது.அவர்கள் மொழியை தேங்கவைப்பவர்கள், அழிப்பவர்கள்.

தமிழில் புள்ளி அடையாளங்கள் ஆங்கிலம் வழியாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்தமைந்தவை. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் உருவாக்கிய பாடநூல்கள் வழியாகவும்; நாளிதழ்களின் செய்திமொழியாக்கங்கள் வழியாகவும் அவை அறிமுகமாகி பரவலாயின.

ஆனாலும் இலக்கணவாதிகள் பலர் அவற்றை நூறாண்டுகள் வரை ஏற்காமலிருந்தனர். தமிழுக்கு அவை ஒவ்வாதன என கருதினர். அத்தகையவர்கள் எண்பதுகளிலும் தங்கள் இதழ்களில் முற்றுப்புள்ளிகளைக்கூட பயன்படுத்தவில்லை. நான் அவர்களின் இதழ்களில் அன்று எழுதியிருக்கிறேன்.

இந்தப் புள்ளிஅடையாளங்களை போடுவதில் தமிழில் பெரிய சிக்கல் உள்ளது. ஆங்கில மொழி கூட்டுச் சொற்றொடர்கள் அமைக்க ஏற்றது. ஆகவே அரைப்புள்ளி, கால்புள்ளி போட்டு எழுதிக்கொண்டே செல்லலாம். சொற்றொடர்களில் குழப்பம் வராது. தமிழ்ச்சொற்றொடர்களில் எழுவாயில் தொடங்கி பயனிலையில் முடிவதுபோல ஒரு வட்ட அமைப்பு இன்றியமையாதது. இல்லையேல் பொருட்குழப்பம் அமையும். ஆகவே கால்புள்ளி அரைப்புள்ளிகளை போட்டு சொற்றொடர்களை நீட்டிச்செல்ல முடியாது.

அதேபோல பலவகையான மொழியியல்புகள் தமிழுக்கு உண்டு. அவை குறைபாடுகள் அல்ல, மொழியின் தனித்தன்மைகள். ஆகவே இன்னொரு மொழியின் சொற்றொடர் அமைப்பை அப்படியே தமிழுக்கு கொண்டுவரலாகாது. சோதனைகள் செய்யலாம், தமிழ்ச் சொற்றொடர்களை மாற்றலாம். ஆனால் தமிழின் ஒலியழகும், சொற்றொடரின் அடிப்படைகளும் சிதையாமல் அதைச் செய்யவேண்டும்.

தமிழ் புனைவெழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாகச் சொற்றொடர் அமைப்பில் பல பயிற்சிகளை, முன்தாவல்களைச் செய்து வருகிறது. சில முயற்சிகள் பிழையானவை என்பதை மறுப்பதற்கில்லை. மொழியாக்கங்கள் வழியாக விசித்திர விளைவுகளும் உருவாகியிருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகளின் வழியாகவே மொழி முன்னகர்கிறது. வாழும் மொழி தன் இயல்கைகளின் இறுதி எல்லைகளில் முட்டித் ததும்பிக் கொண்டிருக்கும்

இது ஒருபக்கம் என்றால் ஒற்றெழுத்துக்கள் மறுபக்கச் சிக்கல். ஒற்றெழுத்துக்கள் நமக்கு பழந்தமிழில் இருந்து வந்தவை. பழந்தமிழ் என்பது செய்யுளால் ஆனது. உரைநடை அன்று இல்லை. இருந்தாலும் அது ஒருவகை செய்யுள்நடையே. நவீன அச்சுத் தொழில்நுட்பமே தமிழில் உரைநடையை உருவாக்கியது. ஆகவே உரைநடைக்குரிய தனி இலக்கணம் தேவையாக ஆயிற்று. அவற்றை உருவாக்கிய முன்னோடிகள் ஒற்றுக்களை என்ன செய்வதென திணறினர். இன்றும் அந்த திணறல் நீடிக்கிறது.

வல்லினம் மிகும் இடங்களில் எல்லாம் ஒற்று போடுவதென்பது இயந்திரத்தனமான புரிதல். அப்படித்தான் இன்றும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்றுப்போடுவது’ என எழுதுவார்கள். ஒற்று போடுவதற்கும் ஒற்றுப்போடுவதற்கும் இடையே மாபெரும் பொருள்வேறுபாடு உண்டு. அதை புறவயமாக வரையறை செய்வது கடினம். எழுதுபவனே முடிவு செய்யவேண்டும்.

சொல்லிப்பார்க்கவேண்டும், உச்சரிப்பில் அழுத்தம் இருந்தால் ஒற்று போடுவது அவசியம் என்பது ஓர் எளிய புரிதல். இரண்டு சொற்கள் ஒரே சொல்லாக இணைந்து பொருள் அளிக்குமென்றால் ஒற்று தேவை என்பது இன்னொரு புரிதல். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்று தேவை’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டியதில்லை. ஆனால் ’ஒற்றுத்தேவையை சமாளிக்கவேண்டும்’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டிய தேவை உண்டு.

மூன்றாவதாக ஒரு சிக்கல் உண்டு. சொற்களைப் பிரிக்கலாமா? இந்தியாவின் பழமையான மொழியிலக்கணங்கள் எல்லாமே சொற்புணர்ச்சிக்கான நெறிகளை முன்வைப்பவை. சொற்களை சேர்த்து ஒற்றைச் சொல்லாக எழுதுவதும் சொல்வதும் பழைய மொழியின் இயல்புகள்.

சம்ஸ்கிருதம் இன்றும் அவ்வாறே செயல்படுகிறது. ஆகவே அது புழக்கத்திற்கு அரிய மொழியாக போல உள்ளது. இன்று சம்ஸ்கிருதச் சொல்லாட்சி கண்டேன். பரோக்ஷாபரோக்ஷாலங்காரிதம். [மறைமுகமாகவும், மறைமுகமல்லாமலும் சொல்லப்பட்ட அழகு கொண்டது]. பழகிவிட்டால் வாசித்துக்கொண்டே செல்வோம். ஆனால் இவ்வகைச் சொல்லாட்சி நவீன மொழிக்குரியதல்ல. பண்டைய தமிழ் உரைகளைக் கண்டால் இப்படித்தான் தமிழிலும் எழுதியிருக்கிறார்கள் என்று அறியலாம். ‘தத்தமூர்திகளிலேறித்தனித்துப்புகுங்காலை’ என உ.வே.சா சீவகசிந்தாமணி உரையில் எழுதுகிறார்.

புழக்கத்திலுள்ள மொழிகளெல்லாம் இந்தக் கூட்டுத்தன்மையை தவிர்க்க போராடிக்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நவீன மொழி தனித்தனிச் சொற்களால் ஆனது. மலையாளம் கன்னடம் எல்லாம் அதன்பொருட்டு பலகாலமாக முயல்கின்றன. தமிழ்மொழிக்கு இயல்பாகவே பொருட்குழப்பம் இல்லாமல் தனிச்சொற்களாக பிரியும் தன்மை உண்டு. அது நமக்கு இருக்கும் நல்வாய்ப்பு.

’நமக்கிருக்கும்’ என எழுதலாம். ஆனால் அதற்கு ஒரு தனியான ஒலித்தேவை இருக்கவேண்டும். இல்லையேல் நமக்கு இருக்கும் என எழுதுவதே சரியானது. ஏனென்றால் வருங்காலத்தில் உருவாகும் தானியங்கி மொழியாளுகைக்கு அதுவே உகந்தது. ’நமக்கிருக்கும்’ என்பது ஒரு சொல், ’நமக்கில்லாத’ என்பது இன்னொரு சொல் என்றால் மொழியில் சொற்கள் பல மடங்கு பெருகுகின்றன. ’நமக்கு’ ’இருக்கும்’ ’நமக்கு’ ’இல்லாத’ என பிரித்துக்கொண்டால் அவை மூன்று சொற்கள்தான்.

ஆகவே சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். புள்ளிக்குறியீடுகளை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டும். வியப்புக்குறி மேற்கோள்குறி போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். காற்புள்ளி அரைப்புள்ளியை தேவையென்றால் மட்டுமே போடவேண்டும். ஒற்றெழுத்துக்களை தவிர்ப்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். சொற்கள் இணையவேண்டும் என்றால், செவியில் ஒலியழுத்தம் விழவேண்டும் என்றால் மட்டுமே ஒற்றுகளை போடவேண்டும். சொற்களை கூடுமானவரை பிரித்தே எழுதவேண்டும். சொற்களின் இணைவு ஒரு சிறப்பான பொருள்கோடலுக்கு தேவை என்றால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.

’இப்படி எழுதினால் அப்படி படித்துவிடுவார்களே’ என்று பிலாக்காணம் ஆரம்பிப்பவர்கள் உண்டு. எழுதப்படுவனவற்றை மாற்றிப் பொருள்கொண்டு மேதாவி மாதிரி பேசுவது தமிழ்ச்சூழலுக்கு உரிய மடமைகளில் ஒன்று. அவ்வண்ணம் பேசுபவர்கள் தமிழறிந்தோர் அல்ல, பெரும்பாலும் அறைகுறைகள். எந்த சொற்றொடரையும் அப்படி மாற்றிப் பொருள்கொள்ள இயலும்.

மொழியின் எழுத்துவடிவில் இருந்து பொருள் எடுத்துக்கொள்வதற்கு ஒரு சமூகப்பழக்கம் உண்டு. ஒரு பொதுப்புரிதல் அது. அதற்குள் ஒவ்வொரு ஆசிரியனும் , ஒவ்வொரு நூலும் வாசகனுடன் கொள்ளும் உரையாடல் வழியாக ஒரு புரிதல்களம் உருவாகிறது. அந்த பொருட்களங்களில்தான் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருட்கோடல் நிகழ்கிறது.

அந்த புரிதல்களத்துக்கு வெளியே இருந்து ஒருவர் வந்து  ‘நான் இப்படி பொருள் கொண்டால் என்ன செய்வாய் ?” என்று கேட்டால் ‘உனக்கு இங்கே என்ன வேலை, வெளியே போடா’ என்பதே பதிலாக இருக்க முடியும்.

ஜெ

பிகு: இவை என் மொழிக்கொள்கைகள். ஆனால் என் நூல்களும் என் தளமும் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருப்பவை அல்ல. அவை வெவ்வேறு நண்பர்களால் மெய்ப்புநோக்கப் படுபவை. அவர்களின் பார்வைக்கேற்ப அவை மாற்றப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக மீண்டும் திருத்தும் நேரம் எனக்கில்லை. எழுதியவற்றை மீண்டும் வாசிப்பது எனக்கு கடினமானது. என் உள்ளம் முன்னால் பாய்ந்துகொண்டே இருப்பது.

முந்தைய கட்டுரைகாதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
அடுத்த கட்டுரைஇந்தியஞானம், மதிப்புரை