கல்குருத்து கடிதங்கள்-9

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

கல்குருத்து சிறுகதை வாசிக்க வாசிக்க அம்மி மற்றும் குழவிக்கல்லுடன் பாட்டாவும், கிழவியும் எவ்வளவு ஒன்றிப்போகிறார்கள் என்றுதான் தோன்றியது. கதையின் மையமாக நான்கு பகுதிகள் ஒன்று அம்மிக்கல் குழவிக்கல், இரண்டாவது பாட்டாவும் கிழவியும், மூன்றாவது கண்ணப்பனும் அழகம்மையும் நான்காவது மாடும் கன்றும் இடையே தாணுமலாயன் தம்பதியையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அந்த பழைய அம்மிகல்தான் பாட்டாவும் கிழவியும் குடும்பத்தை சுமந்து ஓடி ஓடி கல்லும் தேய்நத கதை. புதிதாக வரும் அம்மிக்கல் புதிதாக திருமணம் செய்து வரும் கண்ணப்பன் அழகம்மை தம்பதியைக் குறிப்பது பளபளப்புடன் இனி குடும்பத்தை நடத்தப்போகும் தம்பதியினர். அம்மிக்கும் குழவிக்கும் இருக்கும் அன்னோன்யம் போன்றது பசுமாட்டிற்கும் அதன் கன்றுக்கும் இருக்கும் அன்னோன்யம் போன்றது அம்மியும் குழவியும் பேசும் மௌன மொழி போன்றது பாட்டாவும் கிழவியும் பேசிக்கொள்வது அம்மிக்கல்லுக்கு மேலே குழவிக்கல் சம்மந்தமில்லாமல் பொருத்தம் இல்லாமல் இருப்பது போல் தோன்றும். அவ்வாறுதான் பாட்டாவும் கிழவியும் பேசிக்கொள்வது. ஆனால் அவர்களிடமிருக்கும் அன்னோன்யம் அம்மியும் குழவியும் சேர்ந்து அரைத்துத்தந்த சுக்குப்பொடி போன்றது. இரண்டறக் கலந்தது. புது கல்லில் நீலம் பாரித்துவிட்டதா எனக் காத்திருப்பது போன்று மரணத்திற்கு காத்திருக்கும் பழைய அம்மிக்கல்லும் குழவியும் பாட்டாவும் கிழவியும் சித்திரம் மனதில் அப்படியே இருக்கிறது.

புதிது வந்ததும் பழையது தேவையில்லை குடும்பத்திற்கு அவ்வாறுதான் இவர்களும் ஒரு இடைசெருகல் போல் தெரிகிறார்கள் குடும்பத்தில். ஆனால் பசும்பாலில் இருந்து கறந்துவந்த புதுமணத்துடன் கசப்புடன் குடிக்கும் காபி போன்று பாட்டாவும் கிழவியிடமிருந்தும்தான் அழகம்மை புதுப்பொலிவு பெறுகிறாள். புதுப்பால் காபி கசப்பதுடன் மணமாக இருப்பது போன்று இவர்கள் இருப்பது கசப்பாக இருந்தாலும் அதை அவள் பாராமாக எடுப்பதில்லை. வயதானவர்கள் அந்த பழைய அம்மிகல்லும் குழவியும் போன்றவர்கள் அவர்களைத் தொடும்போது பச்சைக்குழந்தை மீது கைவைத்துவிட்டோமா என்றுதான் தோன்றும். அந்தளவு குழைந்து போனவர்கள். அம்மியும் குழவியும் போல் இந்தப் பாட்டாவும் கிழவியும் போல் இணைப்பிரியாமல் இருக்கதான் திருமணத்தில் அம்மி மிதிக்கும் சடங்கு இருக்கிறது போலும். கதை முழுவதும் ஊடும்பாவுமாக பொறுத்தி மிக ஆர்வமாக வாசிக்கத் தூண்டியுள்ளீர்கள். அருமையான கதைக்கு நன்றி.

 

அன்புடன்

ரா. பாலசுந்தர்

 

அன்புள்ள ஜெ

கல்குருத்து கதை முழுக்க வந்துகொண்டே இருக்கும் தாய்மையின் சித்திரங்கள் அழகானவை. அவை தான் கதைக்கு இன்னொரு இடத்தை அளிக்கின்றன. கல்லுக்குள் அம்மி இருப்பதுபோல அழகம்மைக்குள் மூன்று குழந்தைகள் இருப்பதை காளியம்மை சொல்கிறாள். அம்மை எந்த கல்லோ அதானே பிள்ளைக்கும் என்கிறாள்.  பால்குடிக்கும் கன்றுகுட்டி ‘பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது. பசு கண்சொக்கி குட்டியை நக்கிக்கொண்டிருந்தது’ என்ற வரி அழகமையின் மனம் ஏன் மாறுகிறது, ஏன் எல்லாவற்றையும் கனிவுடன் பார்க்க ஆரம்பிக்கிறாள் என்பதற்கான சான்று

சம்பத்குமார்

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து கடிதம் 6

கல்குருத்து கடிதம் 7

கல்குருத்து கடிதம் 8

முந்தைய கட்டுரைஓராயிரம் பார்வை.. ஜா.தீபா
அடுத்த கட்டுரைவியனுலகு வதியும் பெருமலர்- கடிதங்கள்