அன்புள்ள ஜெ
அடிக்கடி இலக்கியச் சூழலில் வம்பர்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். சமீபத்தில் ஒரு நிகழ்வு. ஒரு நண்பன் பயங்கர உற்சாகத்துடன் சொன்னான். “நாலுநாளா ஃபேஸ்புக்லே —க்கு செம மாத்து… அடிச்சு துவைச்சிட்டாங்க”
எனக்கு அந்த தன்னம்பிக்கை மிக்க சிரிப்பு எரிச்சலை அளித்தது. “ரொம்ப அடிச்சிட்டாங்களா?” என்றேன்
“செம அடி…” என்றார் “சின்னபின்னமாக்கிட்டானுக”
“சரி, அடிவாங்கினவரு என்ன பண்றார்? அப்டியே உடைனுசு போயிருப்பாரே? உசிரோடத்தான் இருக்காரா?”
நான் நக்கலடிப்பது தெரிந்து அமைதியாகிவிட்டான்.
“ஏண்டா, நீங்க பத்துபேரு ஃபேஸ்புக்லே ஒருத்தனை தாறுமாறா திட்டினா அவனுக்கு என்ன? அவன் பாட்டுக்கு அவன் வேலையை கவனிக்கப்போறான். நீங்க நாலஞ்சுநாள் சலம்பிட்டு அடுத்த ஆளை புடிச்சுக்குவீங்க..உங்களுக்கு வேற வேலையில்லைன்னு அர்த்தம்” என்றேன்
அவனுக்கு சுருக்கென்று இருந்திருக்கவேண்டும். “அதெல்லாமில்ல. ஒப்பீனியன் உண்டாக்கிறோமில்ல?”என்றான்
“யாருக்கு? அந்த எழுத்தாளர படிக்கிறவங்க அவங்களே ஒப்பீனியன உருவாக்கிக்கிறாங்க. படிக்காதவங்க என்ன நினைச்சா அவருக்கு என்ன? படிக்கிறவன் படிக்காத முட்டாக்கும்பல் சலம்புறத பாத்து அபிப்பிராயத்த மாத்திக்குவானா என்ன?”
அவன் என்னென்னவோ சொல்ல ஆரம்பித்தான். நான் கடைசியாகச் சொன்னேன். “உங்களுக்கு மனச்சிக்கல். அதுக்காக யாரையாவது புடிச்சு வசைபாடிட்டிருக்கீங்க. அப்பப்ப உங்களுக்கு யாராவது மாட்டுறாங்க. நீங்க இங்க கிடந்து காள் காள்னு கத்துறது உங்களுக்கு மட்டும்தான் கேக்கும். ஒருத்தர் குசுவ இன்னொருத்தர் மோந்து பாத்துட்டு சந்தோஷப்படுறீங்க…அவ்ளவுதான்”
நட்பே முறிந்துவிட்டது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தேன்.
அருண்குமார்
அன்புள்ள ஜெ
இந்த இணைய வம்பர்களைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்கள் இதை வாசிக்கப்போவதில்லை. வாசித்தாலும் உறைக்காது. ஏனென்றால் அவர்களால் அந்த வசையும் கூச்சலும்தான் முடியும்.
ஆனால் இலக்கியவாசகர்களுக்கு ஒரு செய்தியை ஆழமாகச் சொல்கிறீர்கள். அந்த அரசியல்சழக்கர்களுக்கும் அறிவியக்கத்துக்கும் சமப்ந்தமில்லை. அவர்களுடன் எந்தவகையிலும் அறிவியக்கவாதி உரையாட முடியாது. அவர்களை பொருட்படுத்தவே கூடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று சேர்ந்திருக்கிறது என்று இன்றைக்குப் பேசும் இளைஞர்களைக் கவனித்தால் தெரிகிறது.
நான் கண்டுகொண்ட இரண்டு விஷயங்கள். ஒன்று, இந்தக்கும்பல் எப்போதாவது ஏதாவது இலக்கியவாதி பற்றி ஒருவரியாவது பாராட்டிச் சொல்லியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எந்த நூலையாவது படித்து நாலு வரி எழுதியிருக்கிறார்களா? ஆனால் அத்தனை எழுத்தாளர்களையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் யார்?
இன்னொன்று, சிறுபான்மையினர் பற்றி. இதைச்சொன்னால் சங்கி முத்திரை விழும். ஆகவே முதலிலேயே சங்கிகளின் காழ்ப்பை பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவர்கள் அரசியல் மனநோயாளிகள். ஆனால் இந்துக்களில் அவர்கள் பத்துசதவீதம்கூட இருக்க மாட்டார்கள். மிச்சமிருப்பவர்கள்தான் இலக்கிய வாசகர்கள். இங்கே அத்தனை பேருக்கும் அவர்கள்தான் வாசகர்கள்
ஆனால் சிறுபான்மையினரில் அனேகமாக அத்தனைபேருமே மதவாதக்கோணத்தில் மட்டும்தான் யோசிப்பார்கள். அரசியல், இலக்கியம் எதுவானாலும் அவர்களின் மதவெறி மட்டும்தான் வெளிப்படும். அவர்களுக்கு கலையோ இலக்கியமோ அழகியலோ ஒன்றுமே புரியாது. விதிவிலக்காக இணையத்தில் ஒருவர்கூட இதுவரை என் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் முற்போக்கு பேசுவார்கள். திராவிட அரசியல் பேசுவார்கள். தமிழ்த்தேசியம் பேசுவார்கள். அதெல்லாமே தங்கள் மதவாதத்தை மறைப்பதற்கான பாவலாக்கள்.
மிகச்சின்ன வயசிலேயே கடுமையான பிரச்சாரம் வழியாக இவர்களுக்குள் மதப்பற்று ஊட்டப்பட்டுவிடுகிறது. அது மாற்றுமதம் மீதான காழ்ப்பாக ஆகிறது. கடைசிவரை அதுதான் இவர்களின் சிந்தனைகளை ஆள்கிறது. அதைவிட்டு வெளியே செல்லவே முடிவதில்லை. இத்தனை முற்போக்கு பேசும் சிறுபான்மைக் கும்பலில் இருந்து அவர்களின் மதம் பற்றி ஒரு சிறு விமர்சனத்தை நீங்கள் பார்க்கமுடியாது. சரி, மதவாதம் பற்றியோ மதஅடிப்படைவாதம் பற்றியோகூட ஒரு வரி முனக மாட்டார்கள்.
மிகப்பெரிய சாபம் இது என்று படுகிறது. பத்துவயதுக்குள் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறெந்த சிந்தனையும் உள்ளே போகமுடியாமல் மூடப்பட்ட மண்டைகள். இந்துக்களில் பிராமணர்களுக்கு பிராமண மேட்டிமைவாதம் இப்படி சின்னவயசிலே புகுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன். எவ்வ்ளவு படித்தாலும் என்ன சிந்தித்தாலும் அடிப்படையான மனநிலை மதக்காழ்ப்பு மட்டும்தான்.
இந்தக்கும்பல்தான் இணையத்தில் உச்சகட்ட காழ்ப்பை கக்கிக்கொண்டிருக்கிறது
அர்விந்த்குமார் எம்