நான் காசியில் இருந்த போது ஒன்றுணர்ந்தேன். காசி என்பது கவியின் நகரம். கவி பாடி இசை மீட்கும் நகரம் அது. ஒரு தெருவில் நடந்து சென்றால் நான்கு இசை வகுப்புகள் நடத்தும் மையம் உள்ளது. பாட்டிசை கேட்காமல் எந்த ஒரு தெருவிலும் நாம் நடக்க முடியாது.
ஒவ்வொரு பாணனும் பாடி திரியும் நகரம் அது. ஒவ்வொரு கவியும் தன் பாட்டை எழுதி பாடிய நகரம் அது. வரலாறு நெடுக அது தான் நிகழ்ந்திருக்கிறது.
வேதம் முதலில் பாடப்பட்டது காசியில் தான். ஆதிசங்கரர் தன் பல பாடலை இங்கே தான் இயற்றியுள்ளார். ஆதிசங்கரரின் மொத்த வாழ்க்கையும் காசியில் தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் காசி பஞ்சகத்தில் காசியை பற்றி “ஐம்பூதங்களின் ஒளியாய் இருப்பவள் அன்னை பார்வதி. அவள் உடலின் ஆன்மாவாக வீற்றிருப்பவர் சிவன். சிவன் என்னும் ஆன்மாவின் உண்மையான புறவடிவம் காசி மாநகரம் என்கிறார். உடலே காசி நகரம். மூவுலகத்திலும் நிறைந்து விளங்கும் அன்னையாகிய கங்கை (என்னுள் இலங்கும்) உயர்ந்த அறிவு.” என்கிறார். இந்நகரைக் கொண்டு மொத்த பிரபஞ்ச தரிசனத்தையும் தன் காசி பஞ்சகத்தில் விளக்குகிறார்.
அதற்கு நேர் தென்திசையில் தென்காசியில் அமர்ந்துக் கொண்டு இதே மரபை பாடும் கவியாகவே விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கும் போது அவர் தெரிகிறார். இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்துக் கொண்டு வேதம் பாடியதையும், ஆதி சங்கரர் பாடியதையும் நவீன கவிதையில் பாடியவர் விக்ரமாதித்யன் என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஆதிசங்கரரின் பாடலுக்கு நிகரான கவிதையாக விக்ரமாதித்யனின் அன்னபூரனி கவிதையை வாசித்தேன்,
அன்னபூரணி
இங்கில்லாவிடினும்
அங்கெங்காவது
வீசிக்கொண்டே காற்று
இந்நாட்டில்
பொய்த்திருந்தாலும்
பெய்து கொண்டிருக்கும் பருவமழை
இவ்வடுப்புகள்
இன்றெரியாது போயினும்
எங்கெங்கோ அடுப்புகளில் தீ
இவ்வயல்கள்
இப்போது தீய்வுகண்டிருந்தாலும்
வரையாது வகைதோகையாய் வழங்கும் பூமி
சூரியசந்திரர்கள்
வளையவளைய
வந்தபடியேயிருக்கும் வானம்
அன்றுமின்றும் இனியுமென்றென்றும்
ஐம்பூதங்களின் தயவிலேதான்
ஆதிநாதன் ஸ்வரூபங்கள்
***
ஆனால் ஆதிசங்கரர் நம்மை இட்டு செல்லும் தத்துவ ஞானித்திலிருந்து விக்ரமாதித்யன் சற்று விலகுகிறார். அதுவே ஆதிசங்கரரை தத்துவ ஞானியாகவும், விக்ரமாதித்யனை கவியாகவும் நாம் பார்க்க காரணமாகிறது என்று நினைக்கிறேன். ஆதிசங்கரர் தன் பாடல்கள் கொண்டு பிரபஞ்ச உண்மையை நிறுவ முயல்கிறார். அதனைக் கொண்டு தான் அடைந்த தரிசனத்தை விளக்குறார்.
விக்கி அண்ணாச்சி நடைமுறை தரிசனத்தை பகடி செய்கிறார். ஒரு துளி கூட்டலான எள்ளல் தான் நவீன கவிதையின் முன்னகர்வோ என அவர் கவிதைகளைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. மேலுள்ள கவிதையில் அதன் சாயல் தெரிகிறது.
ஆனால் அவை வெறும் பகடிகளாய் மட்டும் அமைவதில்லை. அவர் கவிதை அதன் வழியாக வேறொரு ஆழம் நோக்கி செல்பவை.
நாம் வரலாறு தோறும் நமக்கான நெறி நூலை, சமய நூலை இயற்றிக் கொண்டே இருக்கிறோம். அதனைப் பற்றிக் கொண்டே நாம் நம் சிறு வாழ்வை கடத்துகிறோம். ஆனால் அதற்கு மேலே எப்போதும் ஒன்று உண்டு என்பதை காண மறந்து விடுகிறோம். அந்த மேலான ஒன்றைக் காண்பதற்கு மரபறிந்த கவிஞனின் கண் வேண்டும் என ”காந்திமதி” கவிதை சொல்கிறது.
காந்திமதி
முத்தொள்ளாயிரமே போதுமென்றான்
பித்தன்
திருமந்தரமே மதியென்றான்
சித்தன்
குற்றாலக்குறவஞ்சிதான் பிடிக்குமென்றான்
கோமகன்
சிலப்பதிகாரம்தான் விருப்பமென்றான்
தென்னவன்
சங்கம்தான்
சாலவும் நன்றென்றான் அத்தன்
நெல்லையப்பரிடம் சொல்லி
சிரித்துக்கொண்டாள் காந்திமதி
***
கவிதைப் பட்டறையில் விக்ரமாதித்யன் அரங்கில் (https://tamililakkiyakavithaigal.wordpress.com/2021/09/27/185/) கவிஞர் லட்சுமி மணிவண்ணன் பேசிய போது சொன்னார். விக்கி அண்ணாச்சியை நாம் நவீன கவிஞராக அணுகினால் அவர் நமக்கு தருவதற்கு ஒன்றுமில்லை. மாறாக மரபு கவிதையின் நீட்சியாக தான் அவரை பார்க்க வேண்டுமென்று.
அது விக்ரமாதித்யன் கவிதைக்கு ஒரு முகவுரை தான் என்றாலும், அதன் பின் விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கும் போது லட்சுமி மணிவண்ணன் சொல்லிய வரி உண்மை உண்மை எனச் சொல்லிக் கொண்டே கவிதைகளை வாசிக்க தோன்றுகிறது.
நம் பக்தி மரபில் தோன்றிய பாடல்கள், ”நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என தேவாரமும், திருவாசகமும் ஒருபுறம் பாடப்பட்டால் மறுபுறம் சிவனை சக்தியின் காலின் கீழ் படுத்திருப்பவராக சாக்த/தாந்தரீக மரபில் சித்தரிக்கப்படுகிறார். சித்தர் பாட்டில் பல இடங்களில் சிவனுக்கு இணையாக நின்று சித்தர்கள் சிவனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி பல தரப்புகள் கொண்டே நம் பிரதான தெய்வங்களாக விஷ்ணு, சிவன், பிரம்மன் எல்லோரும் உருவாகி வந்திருக்கின்றனர். ஒவ்வொரு தரப்பில் இருந்தும் துதி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இதில் விக்ரமாதித்யனை சாக்த மரபின் நீட்சியாக சொல்லலாம் என்றே அவரது பல கவிதைகள் சொல்கின்றன. சித்தர் மரபிலும் நான் உண்டு என சில கவிதையில் சொல்கிறார்.
சதாசிவா சதாசிவா
சதா எப்படி சிவனாகவே (இருக்கிறாய்)
நடராஜா நடராஜா
இமைப்பொழுதும் இடைவெளியின்றி எவ்வண்ணம் நடம்
***
சாமி மலையேறி
எங்கே போகும்
தேவி மடியில்
விழுந்து கிடக்கும்
***
நீலத்தை சூடிக்கொண்டது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சலை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்து கொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.
***
பெருந்தெய்வங்களை விட சிறுதெய்வங்கள் என்றால் நமக்கு ஒரு படி கூடுதல் அணுக்கம் தான். சுடலைமாடனுடன் சேர்ந்து சுருட்டு பிடிக்கவும், சங்கிலி பூதத்தான் உடன் சேர்ந்து படையல் உண்ணவும் நமக்கு அனுமதி உண்டு. அதே உரிமையை சிறுதெய்வங்களும் நம்மிடம் எடுத்துக் கொள்ளும். அதனை விக்ரமாதித்யன் வரிகளில் சொன்னால்,
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது
***
சிறுதெய்வங்கள்
வலுத்தால்
பெருந்தெய்வம்
***
எனக்கும்
என் தெய்வத்துக்குமிடையேயான
வழக்கு
முதன் முதலில்
கோழிதான் கேட்டது
கஷ்டப்படுத்தவில்லை வேறே
பிறகு பிறகு
கடாய் வெட்ட சொல்லியது
குறைவைக்கவில்லை அதையும்
இப்பொழுது
என்னையே பலியிட வேண்டும் என்கிறது
எங்கே ஒளிந்துகொள்ள .
***
மேலுள்ள கவிதைகளில் தென்படும் ஒரு வகை உரிமைக்கோரல் என்றால் கீழுள்ள சங்கிலி பூதத்தான் கவிதையில் அந்த அணுக்கம் நம் வாழ்வின் ஒரு துளியோடு ஒட்டி நிற்கிறது. சிறு வயதில் நாம் எப்போது சிறுதெய்வங்களை பயந்தே பார்த்திருப்போம். அப்படி தான் அவை முதன்முதலில் நமக்கு வந்து சேரும். ஒரு கட்டத்தில் அவை பயம் தாண்டிய காவல் தெய்வங்களாக ஆகும். இறுதியில் காவலுக்கும் மேலொன்றாக,
சங்கிலி பூதத்தான்
சின்னஞ்சிறு வயதிலேயே தெரியும்
சங்கிலிபூதத்தாரை
பள்ளிக்கூடம்
போகிற வழி
பயபக்தியுடன் கும்பிட்டுக்கொண்டிருப்பார்கள்
ஜனங்கள்
நகரின் காவல்தெய்வம் இல்லையா
அவன்
இருக்காதா
பின்னே
விவரம் தெரிவதற்குள்ளேயே
வர நேரிட்டது ஊரைவிட்டு
எனினும் சங்கிலிபூதத்தான்
கூடவே இருக்கிறானென எண்ணம்
இன்றும் அந்தப் பக்கம் செல்கையில்
நின்று வழிபடுவதுதான்
அவனுக்கு நிச்சயம்
அடையாளம் தெரியாமலிராது
கோபப்படமாட்டாள்
பாவப்பட்டுக் கொள்வான்
இங்கேயே இருக்க முடிந்திருந்தால்
இப்படியெல்லாம் ஆகியிருக்கமாட்டானென்று
நினைத்துக் கொள்ளலாம்
சங்கிலிபூதத்தான் உடன் இருக்கிறபோது
சண்டமாருதம் போலத்தான் சாகும்வரையிலும்
ராஜாத்தி
***
நான் இந்நாட்களில் தேடி வாசித்தது விக்கி அண்ணாச்சி தென்படும் மேற்சொன்ன வகை மரபு கவிதைகளில் தான். “பாரதி சென்றான் விக்ரமாதித்யன் வந்தான்” என விக்ரமாதித்யனின் வாக்கியம் போல் நம் மரபு கவிதையில் பாரதியின் நீட்சி தான் விக்ரமாதித்யன் எனப் பல கவிதைகள் சொல்கின்றன. இதனை ’ஆகாயகங்கை’ கவிதையில் அவரே சொல்கிறார்,
”யாருக்காக எதற்காக
மகாகவியின் வழித்தோன்றல் நான்
உன்னிடம் பேசியென்ன புண்ணியம்” என்று.
இப்போது நான் காசிக்கு சென்ற போது பாரதி காசியில் தங்கி வேதம் படித்த வீட்டை பார்த்து வந்தேன். அங்கு தான் பாரதி ஒன்பது, பத்தாம் வகுப்பை படித்திருக்கிறார். அங்கு தான் சுதேசம் மீதான ஆர்வம் பாரதிக்கு துளிர்விட தொடங்கியது. அங்கு தான் பல செய்யுள்களை பாடியுள்ளார். அவர் அமர்ந்து பாடிய, “வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்” சிவமடம் வீட்டினுள் அமைந்த கோவிலைப் பார்த்தேன். அந்த கவிதைக்கு இணையான கவிதையாக விக்ரமாதித்யனின் அபிராமி கவிதையை சொல்லலாம். இதில் ஒருபடி மேல் கொஞ்சல் உள்ளது எனத் தோன்றுகிறது.
அபிராமி
செண்பகம்தான்
நிரம்பவும் பிடித்தம்
மல்லி வேண்டாமென்பதில்லை
அதுக்காக
பிச்சிதான்
மிக இஷ்டம்
முல்லைக்கு
மறுப்பொன்றுமில்லை
மனோரஞ்சிதம்தான்
வெகுவாக விருப்பம்
ரோஜா சூடிக்கொள்வதும்
சம்மதமே
அபிராமி மனம்போல்
அவள் வாழ்வு
***
விக்ரமாதித்யனை சித்தர் மரபின் நீட்சியாக நான் சொல்ல காரணம் அவர் கவிதையில் தென்படும் சடங்குக்கு எதிரான நக்கலும், நையாண்டியும் ஆக கூட இருக்கலாம். பூஜைகள் வெறும் சடங்காகி போனதை அவர் கண்டிக்கிறார். சிறு கேலி மூலம் அதனை கடந்து செல்கிறார். இந்த திருவளர்த்தான் எப்பவும் சில்லென்று பூக்கும் சிறுநெருஞ்சிக் காடு என்கிறார். இத்தனை சமயம், சடங்கு என அனைத்தையும் பின்பற்றி ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் போன எல்லா சித்தாந்தங்களுக்கும் மேலானது எதுவுமற்று வாழும் பூர்வகுடியின் சித்தாந்தம் என்கிறார்.
கோயிலுக்கு
வாசல் நான்கு
சன்னிதி இரண்டு
சுயம்புலிங்கம்
சொல்ல ஒரு விசேஷம்
அம்மன்
அழகு சுமந்தவள்
ஐந்து கால
பூஜை நைவேத்யம்
பள்ளியறையில்
பாலும் பழமும்
ஸ்தல விருக்ஷம் பிரகாரம்
நந்தவனம் பொற்றாமரைக் குளம்
வசந்தோற்சவம் தேரோட்டம்
நவராத்திரி சிவராத்திரி
பட்டர் சொல்லும் மந்திரம்
ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்
சேர்த்துவைத்த சொத்து
வந்துசேரும் குத்தகை
ஆகமம் ஆசாரம்
தவறாத நியமம்
தெய்வமும்
ஐதிகத்தில் வாழும்
***
திருவளர்த்தான்
தள்ளிப்போட்டுக்கொண்டே
வந்தான்
தவிர்த்துக்கொண்டே
போனான்
விரதமிருப்பதுபோலவே
இருந்தான்
வேறுவேறு மார்க்கத்தில்
திருப்பிக்கொண்டிருந்தான்
எல்லாம் ஒரேநாளில்
ஷணச் சித்தத்தில் முறிந்தது
மறுபடியும்
தன்னிலைக்கு
மீண்டும்
பழையபடிக்கு
சில்லென்று பூத்த
சிறுநெருஞ்சிக் காடு
***
எதுவுமற்று
வடக்கேயிருந்து
வேதாந்தம்
தெற்கில்
சைவசித்தாந்தம்
கிழக்கே
தாவோயிஸம்
மேற்குலகில்
மார்க்ஸியத்திலிருந்து என்னென்னவோ
எதுவுமற்று
வாழ்கிறார்கள் பூர்வகுடிகள்
***
இப்படி தெய்வங்களோடு, சமயங்களோடும் உரையாடும் லைசென்ஸ் நாம் பாரதிக்கு பிறகு விக்ரமாதித்யன் என்னும் விக்கி அண்ணாச்சிக்கு தான் கொடுத்திருக்கிறோம். அந்நிலை என்பது சித்தன் என்றான கவிஞனின் நிலை. அந்த சித்த கவிஞனின் போக்கை அவர் வரிகளில் வினவினால், “நதியின் போக்கு நற்போக்கா முற்போக்கா பாப்பா” என்றால். அத்தனை உறுதியாக அதனை வரையறுத்து சொல்லிவிட முடியாது. ஆனால் தன் வாழ்நாளெல்லாம் அந்த காந்தமதி அம்மனை மட்டுமே பாடி நின்ற இந்த பெருங்கவிஞனுக்கு,
இன்னும் என்ன வேண்டும்
“இனி ஒரு துன்பமில்லை
ஒரு சோகமில்லை
வரும் இன்பநிலை
வெகுதூரமில்லை.”
***
இந்த வகை விக்ரமாதித்யன் கவிதைகளை மட்டுமே வாசிக்கும் போது என் மனதில் அவர் கவிதையின் ஒரு சித்திரம் எழுகிறது. அவரின் கவிதை உலகம் அருபமான தெய்வங்களால் தான் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. அந்த தெய்வத்தின் பொருட்டே அவர் கவிதை ஒவ்வொன்றும் நிகழ்ந்திருக்கிறது. அந்த தெய்வத்தை பாடி நிற்கும் பாணனாகவே கவிஞர் விக்ரமாதித்யன் நினைவு கூறப்படுவார் என்று தோன்றுகிறது. வேத காலம் முதல் கபீர், பாரதி வரை காசி மாநகரில் பாடி நின்ற பெருங் கவிஞர்கள் போல் தென்காசி நகரில் பாடிய கவி விக்ரமாதித்யன் என்றே அவர் நினைவில் நிற்பார்.
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் சித்த கவிஞர் விக்ரமாதித்யன் தாள்பணிந்த வணக்கங்கள்.
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.