கேளாச்சங்கீதம்
அன்புநிறை ஜெ,
கேளாச்சங்கீதம் மீண்டும் ஒரு நீலம் என்று தோன்றியது.
கூர்மையாகிக் குவிந்துவிட்ட நினைவென்னும் மந்திரம். ஹ்ருதயஸ்திதியில் நெஞ்சமெல்லாம் பரவிவிட்ட கைவிஷம். வேடனும் இரையும் மாட்டிக்கொண்டு விடும் பூட்டு. – என்று ஒவ்வொன்றும் அதை நினைவுறுத்தியது. ஒற்றை மலரில் பூக்காடு விரியவும், இசையும் பூக்களுமாய் மதுர மதுரமாக இனித்து, விடுதலை கோராமலேயே நின்றவள் ராதை. ‘இவனக்காட்டிலும் எட்டுவயசு மூப்பு’ ஆம் அவளுக்கும் அப்படித்தான் என்றெண்ணிக்கொண்டேன். அல்லது நீலத்தில் ஊறித்திளைத்த பிறகு அதுவே கைவிஷம் ஆகிவிடுகிறது போலும்.
முள்நுனியில் பனித்துளி என்றாலும் எவ்வளவு கொடுத்து வைத்தவன் இந்த மனிதப் பிறவி என்று தோன்றியது. நடுங்கி உதிர்வதன் முன்னர் தான் கண்ட வெளியை, கதிரை, விண்ணை சில கணங்களேனும் தன்னுள் ஏந்திக்கொள்ளும் வரம் கொண்ட பனித்துளி. அவனுக்கு தேனை அறிவதற்கும் அடைவதற்கும் அதிலேயே இனித்து இனித்து மரிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
“எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு”. உடல் தொடாத வரைதான் அமுதம் அமுதமாக நீடிக்க முடியும். உடல் தொட்ட எதுவும் மலமாகி வெளியேற்றப் பட வேண்டியதாகிறது. உடல் தீண்டாத அமுதம் ஒன்றினால் ஒருவன் முழுக்க மதுரமாக முடியுமென்றால் அப்படிப்பட்ட கைவிஷத்துக்கு நீல அவுரி ஏதுமில்லை.
மிக்க அன்புடன்
சுபா
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் கதையை சுருக்கமாக என் குடும்பச் சூழலில் சொன்னேன். அப்போதுதான் இந்த நிகழ்வு எங்கள் குடும்பத்திலேயே எப்படியெல்லாம் நடந்திருக்கிறது, எத்தனை இளைஞர்களை அழித்திருக்கிறது என்று தெரிந்தது. இது என்ன என்றே தெரியவில்லை. இது இந்தியாவின் மூளைசார்ந்த ஏதாவது சிக்கலா? இல்லை இது உலகம் முழுக்க உள்ளதா? ஆச்சரியமான கதை.
ஆர்.ராம்குமார்
அன்புள்ள ஜெ
கதே எழுதிய Sorrows of young Werther என்னும் சின்ன நாவல் காதலின் துயரம் என்ற பெயரில் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. சட்டென்று கேளாச்சங்கீதமும் அதுவும் ஒன்றுதானே என்று தோன்றிவிட்டது. விளக்கமுடியாத பித்துபோல எழும் காதல், அப்படியே அதிலேயே முழுகி அழிதல். அந்த அழிவின் பேரின்பம். அதுதானே இந்தக்கதையும். இது ஒரு மானுடக்கதை இல்லையா?
ஆர்.ஸ்ரீனிவாஸ்